Published:Updated:

சீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல!

சீனாவை வெல்ல...
பிரீமியம் ஸ்டோரி
News
சீனாவை வெல்ல...

நம் ஊரில் ஒரு பொருளை உற்பத்தி செய்பவர், ‘தமிழ்நாட்டில் இதை எப்படி விற்கலாம்’ என்று யோசிப்பார். கொஞ்சம் பெரிதாக உற்பத்தி செய்பவர், ‘இந்தியா முழுக்க இதை எப்படிக் கொண்டு போகலாம்’ எனச் சிந்திப்பார்.

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினர் 20 பேரை சீனப் படையினர் கொன்ற நிமிடத்திலிருந்து, ‘சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்ற உணர்ச்சி முழக்கம் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள், வாட்ஸ்அப் குழுக்களில் வரிந்து கட்டிக்கொண்டு ஃபார்வர்டுகளை அனுப்புகிறார்கள். அவர்கள் கையில் இருப்பது சீன ஸ்மார்ட் போனாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆண்டுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் விற்பனை மதிப்புள்ள இந்திய ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில், அதிகம் விற்பனையாகும் டாப் ஐந்து போன்களில் நான்கு சீனத் தயாரிப்புகள்தான். ஷோமி, விவோ, ரியல்மீ, ஓப்போ ஆகியவற்றின் தயாரிப்புகளே அவை. ‘அமெரிக்க உருவாக்கம்’ என்று அப்பர் மிடில் கிளாஸ் பெருமையுடன் வாங்கும் ஆப்பிள் போன்களும் சீனாவிலேயே தயாராகின்றன.

லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் சுதேசி பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாத ஓர் உண்மை... இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாட்டில் சுமார் 60 சதவிகிதம் சீனாவிலிருந்து வரும் பொருள்கள்தான். கடந்த நிதியாண்டில் சுமார் 5.33 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்தோம். பெரும்பாலான கம்ப்யூட்டர்களின் மானிட்டர்கள், மதர் போர்டு, ஹார்டு டிஸ்க், கிராஃபிக் கார்டு என்று எல்லாமே சீன இறக்குமதியாக இருக்கும்.

டி.வி விவாதங்களிலும் சீனாவைப் புறக்கணித்துத் தற்சார்பு பெறுவது பற்றிப் பேசுகிறோம். இந்தியாவில் தற்போது விற்கப்படும் டி.வி-க்களில் சுமார் 54 சதவிகிதம் சீனத் தயாரிப்புகளே! அதிகம் விற்பனையாகும் 15 பிராண்ட் டி.வி-க்கள், சீனாவிலிருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் உருவாக்கப்படுபவைதான்! செட் டாப் பாக்ஸ், டிஷ் ஆன்டெனா என நாம் வீட்டில் டி.வி பார்ப்பதை சாத்தியமாக்கும் அத்தனை துணைக் கருவிகளும் சீனத் தயாரிப்புகள்தான். இதுதான் யதார்த்தம். ‘சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்று ஸ்டிக்கர்களும் பேனர்களும் நமக்கு லட்சக்கணக்கில் தேவைப்பட்டால், அவற்றை மிக மலிவான விலையில் அச்சிட்டுத் தர சீன நிறுவனங்களால் மட்டுமே முடியும். இந்தச் சூழலில் சீனப் பொருள்களைப் புறக்கணித்துவிட்டு நாம் வாழ முடியுமா? அந்தப் புறக்கணிப்பு சீனாவைப் பணிய வைக்குமா? யாருக்கு இழப்பு அதிகம்? ‘‘நிச்சயமாக இந்தியாவுக்கே இழப்பு அதிகம்’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

உற்பத்திச் செலவு அதிகமாகும்!

பொம்மைகள், டி.வி, பிளாஸ்டிக் அயிட்டங்கள் போன்றவைதான் நம் கண்ணெதிரே சீனத் தயாரிப்புகளாகத் தெரிகின்றன. ஆனால், இதுபோன்ற நுகர்வுப் பொருள்களைவிட உள்ளீட்டு மூலப் பொருள்களை நாம் அதிகம் இறக்குமதி செய்கிறோம். உதாரணமாக, வாகன உதிரி பாகங்கள். இந்தியாவின் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் உலக நாடுகள் பலவற்றுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இவற்றின் உதிரி பாகங்களில் 84 சதவிகிதம் சீனாவிலிருந்து வருகின்றன. அல்லது, சீன இயந்திரங்களை வைத்து இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன.

கொரோனா நேரத்தில் உலகத்துக்கே ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் இந்தியாவிலிருந்து போயின. இந்த மாத்திரையை நாம் செய்ய வேண்டும் என்றால், அதற்கான மூலப்பொருள் சீனாவிலிருந்து வர வேண்டும். இந்தியா ‘உலகின் ஃபார்மஸி’ என்று பெயர் வாங்கியுள்ளது. நம் நாட்டிலிருந்து அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை மருந்துகள் போகின்றன. இவற்றின் மூலப் பொருளுக்கு நாம் சீனாவைச் சார்ந்திருக்கிறோம். குறிப்பாக, ஆன்ட்டி பயாடிக் மருந்து களுக்கு 76 சதவிகித மூலப்பொருளை சீனாவிலிருந்தே வாங்குகிறோம். உயிர் காக்கும் மருந்துகளின் மூலப்பொருளில் 90 சதவிகிதம் சீனாவிலிருந்தே வருகிறது. ஸ்டெதாஸ்கோப் முதல் வென்டிலேட்டர் வரை மருத்துவ உபகரணங்களும் அங்கிருந்தே வருகின்றன.

சூரியசக்தி மின்சாரத்தில் இந்தியா மகத்தான முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்கான உபகரணங்கள் 84 சதவிகிதம் சீனாவிலிருந்தே வருகின்றன. இந்தியத் தயாரிப்பு மிகக் கொஞ்சமே!

‘இதற்கெல்லாம் மாற்று இல்லையா’ என்றால், இருக்கிறது. சில துறைகளில் உள்நாட்டுப் பொருள்களும் கிடைக்கின்றன. ஜப்பான், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வாங்கலாம். ஆனால், இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் கிடைக்காது. செலவும் 10 முதல் 70 சதவிகிதம் வரை அதிகமாகும்.

போட்டியிடும் வாய்ப்பை இழப்போம்!

உற்பத்திச் செலவு அதிகமாகும்போது, இயல்பாக ஒரு பொருளின் விலை உயரும். அதனால் இந்திய நிறுவனங்களின் வியாபார வாய்ப்பு குறையும். சர்வதேச சந்தையில் இதைவிடக் குறைவான விலைக்கு மாற்றுப் பொருள்கள் கிடைக்கும்போது, அங்கு போட்டியிட்டு விற்பனை செய்யும் வாய்ப்பை இந்தியா இழக்கும். சீனாவில் மலிவுவிலையில் கிடைக்கும் பொருளை அதிக விலை கொடுத்து இன்னொரு நாட்டில் வாங்கும்போது, நாம் இறக்குமதி செய்யும் மதிப்பும் அதிகமாகும். இதற்கு அதிக அந்நியச் செலாவணியை நாம் இழப்போம். இது நமது பொருளாதார நிலையை பலவீனமாக்கும்.

இந்தியாவின் அடித்தட்டு நுகர்வோர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர் என்று பல வீட்டு உபயோகப் பொருள்கள் விலை மலிவாகக் கிடைக்க சீனாவே காரணம். சீன இறக்குமதியை நிறுத்தினால், விலை அதிகமுள்ள மாற்றுப் பொருள்களை வசதி படைத்தவர்களால் வாங்க முடியும். எளிய மக்களுக்கு அவை கிடைக்காது.

உலகத்தின் தொழிற்சாலை!

நம் சென்னையில் ஒரு பொருளைத் தயாரிக்கிறோம். ஆனால், சீனாவின் ஏதோ ஒரு நகரத்தில் தயாராகி, அங்கிருந்து ரயிலிலோ லாரியிலோ துறைமுகத்துக்கு வந்து, கப்பலில் ஏற்றி இங்கு கொண்டுவரப்படும் பொருள் அதைவிட விலை குறைவாகக் கிடைப்பது எப்படி? இங்குதான் சீனாவை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் ஊரில் ஒரு பொருளை உற்பத்தி செய்பவர், ‘தமிழ்நாட்டில் இதை எப்படி விற்கலாம்’ என்று யோசிப்பார். கொஞ்சம் பெரிதாக உற்பத்தி செய்பவர், ‘இந்தியா முழுக்க இதை எப்படிக் கொண்டு போகலாம்’ எனச் சிந்திப்பார். ஆனால், சீனாவில் எந்த ஒரு பொருளையும் தயாரிக்கும் நிறுவனத்துக்கு, இந்த உலகமே ஒற்றை மார்க்கெட். ஆம், 800 கோடி மக்களையும் தன் சந்தையாக சீனா கருதுகிறது.

இந்த நிலைக்கு சீனா வருவதற்கு உலக நாடுகளே காரணம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சம்பளம் அதிகம். ஓர் அமெரிக்கர் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வாங்கிக்கொண்டு, அதைவிட அதிக வேலையை ஒரு சீனர் செய்வார். எனவே, மூளை உழைப்பு தேவைப்படும் சேவைத் துறைகளை மட்டும் தன் மண்ணில் வைத்துக்கொண்டு, உடல் உழைப்பு தேவைப்படும் தொழிற்சாலைகளை சீனாவுக்குத் தள்ளிவிட்டது அமெரிக்கா. ஐரோப்பிய நாடுகளும் இதையே செய்தன. ‘உலகத்தின் தொழிற்சாலை’ என்ற அடையாளத்தை சீனா பெற்றது.

சீனாவில் மனிதவளம் அதிகம், நிலமும் அதிகம். தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பற்றிக் கவலைப்படவில்லை சீன அரசு. பிரமாண்டத் தொழில் நகரங்கள் உருவாக்கப்பட்டன. எக்ஸ்பிரஸ் நெடுஞ் சாலைகள், புல்லட் ரயில்கள், துறைமுகங்கள் எனக் கட்டமைப்புகளை அரசு அதிவேகமாக அமைத்தது. தொழில் தொடங்க ஆரம்பத்தில் வெளிநாட்டு முதலீடு குவிந்தது. படிப்படியாக அரசும் வலிமையான வங்கிகளை உருவாக்கியது. குறைந்த வட்டியில் கடன் கொடுத்தது. மூலப் பொருள்களை எந்த நாட்டிலிருந்தும் எளிதாக இறக்குமதி செய்ய அரசு உதவியது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்குப் பயிற்சி தரப்பட்டது. உற்பத்தி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு அரசே நிறுவனங்களைத் தொடங்கியது.

சீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல!

சீனா உருவாக்கிய போட்டி மார்க்கெட்!

தொழில்நுட்பங்கள் அடிக்கடி மாறிவிடும் இன்றைய சூழலில், அதற்கு ஏற்ற வசதிகளைக் கொண்ட நிறுவனமே நிலைத்து நிற்கும். உதாரணமாக டி.வி-யில் எடுத்துக்கொண்டால், முதலில் எல்.சி.டி திரை வந்தது. அடுத்து எல்.இ.டி. இப்போது ஓ.எல்.இ.டி. இப்படித் தொழில்நுட்பம் மாறும்போது தன்னையும் மாற்றிக்கொண்டு புதுப்பொருள்களை உருவாக்கும் திறன் பெற்றதாக ஒரு நிறுவனம் இருக்க வேண்டும். சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு இருந்தால்தான் அது சாத்தியமாகும். இவ்வளவு முதலீடு போடுகிறவர்கள், ஆண்டுக்கு ஒரு கோடி டி.வி தயாரித்தால்தான் கட்டுப்படியாகும். சீனாவால் அது முடிகிறது.

உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்யும் விஷயத்திலும் அந்த நாடு கவனத்துடன் இருக்கிறது. இந்தியாவில் ஒரு டி.வி அசெம்பிள் செய்கிறார்கள் என்றால், அதில் அதிக விலையுள்ள உதிரிபாகங்கள் சீனாவிலிருந்து வந்தவையாக இருக்கும்.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருள்களைச் செய்துகொடுத்தபடி, ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா எனப் புதிய சந்தைகளைத் தனக்காக உருவாக்கியது. அமெரிக்காவின் ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்துக்கும் இணையாகத் தன் சாம்ராஜ்ஜியத்தையும் கட்டமைத்தது. அமெரிக்காவுக்கு அமேசான் என்றால், சீனாவுக்கு அலிபாபா. ஆப்பிளுக்கு இணையாக ஷோமியின் ரெட்மீ தயாரிப்புகள்.

சீனா எப்படி உலக சந்தையை அபகரிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இது... சீனா முதன்முதலில் அதிவேக புல்லட் ரயில் பாதையை உருவாக்கியபோது பிரான்ஸின் ஆல்ஸ்டம், ஜப்பானின் காவஸாகி, ஜெர்மனியின் சீமென்ஸ் மற்றும் பம்பார்டியர் நிறுவனங்கள் வந்தன. ரயில் பாதையையும் ரயில்களையும் உருவாக்கித் தந்தன. பெய்ஜிங் மற்றும் டியான்ஜின் நகரங்களுக்கு இடையே முதல் ரயில் 2008-ம் ஆண்டு ஓடியது.

அதற்குள் சி.ஆர்.ஆர்.சி என்ற பெயரில் சீன அரசே ஒரு ரயில் நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் துருக்கி மற்றும் ஸ்பெயினில் புல்லட் ரயில் திட்டங்கள் வந்தன. பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஜெர்மனி நிறுவனங்களைவிட மிகக் குறைந்த செலவில் அவற்றை உருவாக்கித் தர சீன நிறுவனம் முன்வந்தது. அத்துடன், ‘கடன் உதவியையும் எங்கள் நாட்டு வங்கிகள் செய்யும்’ என ஆசை காட்டியது. இன்று புல்லட் ரயில் கட்டமைப்பில் சீனா உலக அளவில் முன்னணியில் உள்ளது. சீனாவுக்கு அதைக் கற்றுத் தந்த நிறுவனங்கள் தடுமாறுகின்றன. இதுதான் சீனா.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் ஒரு பணக்காரர் ஒரு தொழிற்சாலை நிறுவுவதைவிட ஷாப்பிங் மால் கட்டுவதையே அதிகம் விரும்புகிறார். இதில் ரிஸ்க் குறைவு. போட்டிகள் குறைவு. லாபமும் உடனடியாகக் கிடைத்துவிடும். இந்தப் பொது மனநிலைதான் இந்தியாவை உற்பத்தித்துறையில் பின்தங்க வைத்துள்ளது. இதை மாற்ற அரசும் தொழில் நிறுவனங்களும் இணைந்து சில விஷயங்களைச் செய்ய வேண்டும்.

* ‘உழைப்போம், சம்பாதிப்போம், செலவு செய்வோம்’ என்று நுகர்வுக் கலாசாரம் உலகம் முழுக்க உச்சத்தில் இருக்கும் காலம் இது. எனவே, உலகச் சந்தையைக் குறிவைக்கும் இந்திய நிறுவனங்கள் உருவாக வேண்டும். எந்தெந்த துறையில் நம்மால் இதைச் செய்ய முடியும் என்று திட்டமிட வேண்டும்.

* துறைமுகங்களை ஒட்டி ஏற்றுமதி மண்டலங்களை உருவாக்கி, அங்கு இந்த நிறுவனங்களுக்கு அரசு வாய்ப்பளிக்க வேண்டும். 100 சதவிகித ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான கடன் விதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

* இந்தியாவில் அதிகம் விற்கும் சீனப் பொருள்களுக்கு மாற்றுத் தயாரிப்புகளை அதைவிடக் குறைந்த விலையில் உருவாக்கும் வழிகளை யோசிக்க வேண்டும்.

* ஆராய்ச்சித் துறைக்கான இந்தியாவின் செலவு மிகக் குறைவு. ஆராய்ச்சிகள் செய்யாத ஒரு தேசம், புதிய கருவிகளை உருவாக்க முடியாது. திறன் மேம்பாடு மற்றும் புதிய ஆராய்ச்சிகளுக்காக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை நிறைய செலவிட வேண்டும். நம் ஊர் கொழுக்கட்டை செய்வதற்கான அச்சை சீனா உருவாக்கும்போது நாம் எப்படி அவர்களுடன் போட்டி போட முடியும்? புதிய கருவிகளை உருவாக்கும் நாடுகளுக்கே புது மார்க்கெட்கள் கிடைக்கும்.

இதையெல்லாம் செய்ய சுமார் 20 ஆண்டுகள் பிடிக்கலாம். அந்த 20 ஆண்டுகளில் சீனா எந்த இடத்தில் இருக்கும் என்பதையும் யோசித்து நாம் திட்டமிட வேண்டும். சீனப் பொருள்களைப் புறக்கணிப்பதன் மூலம் நாம் சீனாவை வெல்ல முடியாது. சீனாவை வீழ்த்த இதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி.

உணர்ச்சி முழக்கங்கள்... உண்மை என்ன?

70 ஆண்டுகளுக்கு முன்பு ‘சுதேசி இந்தியா’ என்றார்கள். இப்போது ‘சுயசார்புள்ள இந்தியா’ என்ற முழக்கத்தை மோடி கண்டுபிடித்திருக்கிறார். வார்த்தைகள் மாறினாலும், வழக்கம் மாறவில்லை. ஆம், வெறுமனே முழக்கம் மட்டுமே செய்கிறோம். இன்றைய உலகச் சூழலில் எந்த நாடும் ‘தற்சார்பு’ என்று தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது.

சீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல!

காசு கொடுத்து வாங்கிய டி.வி-யை ரோட்டில் போட்டு உடைப்பதால் சீனாவுக்கு நஷ்டம் இல்லை. அவர்களுக்கு லாபம்தான். இன்னொரு டி.வி அதிகமாக விற்கும். ‘சீன உணவுகளைப் புறக்கணிப்போம்’ என்கிறார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே. இந்தியர் நடத்தும் நிறுவனத்தில், இந்திய விவசாய விளைபொருள்களை வாங்கி, இந்திய ஊழியர்கள் சமைத்துத் தருவதை ‘சீன உணவு’ என்று புறக்கணித்தால் யாருக்கு நஷ்டம்?

உலக அளவில் இதுபோன்ற பொருளாதாரப் புறக்கணிப்புகள் பெரிதாக வெற்றிபெற்றதில்லை. உணர்ச்சிகரமான முழக்கங்கள் நீண்ட காலம் நிலைக்காது. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் மனநிலையும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டமிடலும் மட்டுமே சீனாவுக்கு நிகராகவோ அதற்கும் மேலாகவோ இந்திய வர்த்தகத்தை நிலைநிறுத்தும். வெற்று முழக்கங்களுக்கும் சவால்களுக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்களுக்கு மேல் எந்த மதிப்புமில்லை.

அதிகரிக்கும் சீன முதலீடு!

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதைப் போலவே இந்திய நிறுவனங்களில் சீனா செய்யும் முதலீடும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இணைய வர்த்தகம் செய்யும் ஸ்நாப்டீல், ஓலா, ஸ்விக்கி, பே டிஎம், ஃபிளிப்கார்ட், பிக் பாஸ்கெட், ஸொமாடோ, ஓயோ, பைஜுஸ், டெல்ஹிவரி, ஹைக் போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம். இந்தியாவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பாதி, சீன முதலீட்டில்தான் இயங்குகின்றன. இப்படி இந்தியாவில் சீன நிறுவனங்களின் முதலீடு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் செய்யும் முதலீடு லாபமும் தரலாம்; சுத்தமாகக் கரைந்தும் போய்விடலாம். உதாரணமாக, பே டிஎம் இதுவரை 3,690 கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் இயங்குகிறது. ஃபிளிப்கார்ட்டின் நஷ்டம் 3,837 கோடி ரூபாய். எப்போது லாபம் வரும்? யாருக்கும் தெரியாது!

அதனால், இதில் முதலீடு செய்யும் ரிஸ்க்கை இந்திய நிறுவனங்கள் பலவும் எடுப்பதில்லை. சீனா துணிந்து செய்கிறது. இதேபோல இந்தியாவில் கட்டமைப்புப் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்துச் செய்யவும் சீன நிறுவனங்கள் வந்துவிட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்குகளைச் சீன மக்கள் வங்கி வாங்க முயன்றபோது மத்திய அரசு உஷாரானது. ‘இந்தியாவில் சீனாவின் நேரடி முதலீட்டுக்கு அனுமதி பெற வேண்டும்’ என விதிமுறை கொண்டுவந்தது. வழக்கம்போல் இதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

என்ன செய்யப் போகிறது இந்தியா?

‘‘சுமார் 500 வகை பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்த்துவிட்டு இந்தியாவில் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 5,31,000 கோடி ரூபாய்க்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை, இதன்மூலம் 98,265 கோடி ரூபாயாகக் குறைத்துவிட முடியும்’’ என்று அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு நம்பிக்கை தந்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் இப்போது இரண்டு வகை நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது. ஒன்று, அத்தியாவசியமில்லாத பொருள்களின் இறக்குமதிக்கு வரியை உயர்த்துவது. காலணிகள், ஃபர்னிச்சர்கள், டி.வி பாகங்கள், பொம்மைகள் என சுமார் 300 வகை பொருள்களை இந்தப் பட்டியலில் கொண்டுவந்து வரியை உயர்த்தப்போகிறது. இன்னொரு பக்கம், தரமற்ற பொருள்களின் இறக்குமதிக்கும் கடிவாளம் போடப் போகிறது. இந்த இரண்டுமே, சீனாவைக் குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள்.

இப்போது சீனாவிலிருந்து வரும் கன்டெய்னர்கள் அனைத்தையும் முழுமையாக சோதனை செய்யுமாறு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போயிருக்கிறது. முன்பு இப்படிப்பட்ட சோதனைகள் செய்யப்படுவது வழக்கம் இல்லை. பிரித்துப் பார்த்து சோதனை செய்யும்போது பொருள்களும் வீணாகும்; பொருள்களைத் துறைமுகத்திலிருந்து வெளியில் எடுக்கவும் காலதாமதம் ஆகும். சீனாவிலிருந்து பெருமளவில் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் சென்னைத் துறைமுகத்துக்கே வருகின்றன. இங்குதான் சோதனை இப்போது அதிகமாகியுள்ளது. இப்படி மறைமுக நெருக்கடி கொடுப்பதன் மூலம் சீன இறக்குமதியை மத்திய அரசு குறைக்க நினைக்கிறது. ஆனால், ‘இதனால் இந்தியாவில் தொழில் உற்பத்தி பாதிக்கப்படும்’ எனத் தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பஜாஜ் சொல்லும் ஐடியா!

இப்படிப்பட்ட சீனாவை எங்கு ஜெயிக்க வேண்டும்? பஜாஜ் நிறுவனத்தின் ராகுல் பஜாஜ் தங்கள் வெற்றிக் கதையைச் சொல்கிறார். இன்று உலகிலேயே அதிக இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. பஜாஜ், டி.வி.எஸ் மற்றும் ஹீரோ நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் சீன நிறுவனங்கள் சோர்ந்து போய்விட்டன. இந்த நிலையை அவர்கள் எப்படி எட்டினர்?

கடந்த 30 ஆண்டுகளாகவே வாகன ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்காக அவர்கள் கணிசமாகச் செலவு செய்தனர். புதுப்புது டெக்னாலஜிகளை உருவாக்கினர். கடந்த 2005-ம் ஆண்டு சீன நிறுவனங்கள் இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் விற்க வந்தன. இந்திய வாகனங்களைவிட 30 சதவிகிதம் விலை குறைவு. ஆனால், தரத்திலும் வடிவமைப்பிலும் இந்திய வாகனங்களுடன் அவற்றால் போட்டி போட முடியவில்லை. சீக்கிரமே அவை காணாமற்போயின.

சீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல!

அந்த நேரத்தில் ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் சீன வாகனங்களே அதிகம் விற்றன. ஜப்பானிய இரு சக்கர வாகனங்களை அங்கே வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்கினர். இந்திய நிறுவனங்கள் அங்கே கால் பதித்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. மார்க்கெட்டில் மூன்று வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, தரமாகவும் விலை அதிகமாகவும் இருக்கும் ஜப்பான் தயாரிப்பு. இரண்டு, விலை குறைவாகவும் தரமற்றும் உள்ள சீனத் தயாரிப்பு. மூன்று, தரமாகவும் சீனத் தயாரிப்பைவிட சற்றே விலை அதிகமாகவும் இருக்கும் இந்திய வாகனம். விரைவிலேயே இந்திய வாகனங்கள், பலரின் விருப்பத்துக்குரியவை ஆகின. சீன நிறுவனங்கள் தடுமாறிப் பின்வாங்கின. குறிப்பாக நைஜீரியா போன்ற நாடுகளில் டூ வீலர் டாக்சி அதிகம். அவர்கள் சீனத் தயாரிப்புகளைப் புறக்கணித்துவிட்டு இந்திய வாகனங்களை வாங்கினர்.

‘‘சீனாவிலிருந்து செய்யும் இறக்குமதியைப் புறக்கணித்தால் அவர்களுக்கு வலிக்காது. சீனா பல நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதியில் போட்டி போட்டு அந்த வியாபாரத்தை நாம் வசப்படுத்த வேண்டும். அதுதான் சீனாவை வெல்லும் வழி’’ என்கிறார் ராகுல் பஜாஜ்.

சீனாவுக்கே சாதகம்!

எல்லைப் பிரச்னையில் பகையாளியாக இருந்தாலும், இந்தியாவின் மிகப் பெரிய வியாபாரக் கூட்டாளியாக சீனா இருக்கிறது. ஆனால், இந்த வர்த்தகம் சீனாவுக்கே சாதகமாக இருக்கிறது.

இந்தியா அதிகம் இறக்குமதி செய்வது சீனாவிலிருந்துதான். 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 14.09 சதவிகிதம் அங்கிருந்தே வந்தது. இந்தியாவிலிருந்து பொருள்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது சீனா. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 5.33 சதவிகிதம் சீனாவுக்குப் போகிறது.

பண மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், 2018-19 நிதியாண்டில் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருள்களின் மதிப்பு 1,26,000 கோடி ரூபாய். சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருள்களின் மதிப்பு, சுமார் 5,31,000 கோடி ரூபாய். அதாவது ஏற்றுமதியைவிட இறக்குமதி நான்கரை மடங்கு அதிகம்.

ஒரு நாட்டுக்கு நாம் செய்யும் ஏற்றுமதியைவிட அங்கிருந்து வரும் இறக்குமதி அதிகமாக இருந்தால், அதை ‘வணிகப் பற்றாக்குறை’ என்பார்கள். இந்தியாவுக்கு சீனாவுடன் வணிகப் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. இதைச் சரிசெய்ய நம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும், அல்லது, இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இதில் இரண்டாவது வழியைத்தான் மத்திய அரசு பரிசீலிக்கிறது.

என்னதான் கணக்குகள் பெரிதாக இருந்தாலும், சீனாவின் கண்களிலிருந்து இதைப் பார்த்தால் சாதாரணம்தான். ஆம், சீனாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே இந்தியாவுக்கு வருகிறது. நாம் புறக்கணித்தாலும், அவர்களால் புது மார்க்கெட்டையோ, வேறு வழிகளையோ தேடிக்கொள்ள முடியும். ஆனால், சீனா இந்தியாவைப் புறக்கணித்தால் நாம் 5.33 சதவிகித ஏற்றுமதியை இழப்போம். எனவே, நமக்கே இழப்பு அதிகம்.

சீனா கண்டுபிடித்த பைபாஸ் ரூட்!

2017-ம் ஆண்டு டோக்லாம் எல்லைப் பிரச்னையில் இந்திய, சீன ராணுவங்கள் முட்டிக்கொண்டு நின்றன. அப்போதும் இதேபோல கோஷம் எழுந்தது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மன்ச், ‘சீனப்பொருள்களைப் புறக்கணிக்கும் ஆண்டாக’ அந்த ஆண்டை அறிவித்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இப்போது போலவே அப்போதும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது போலவே அப்போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், சீன நிறுவனங்கள் அப்போதே உஷாராகிவிட்டன. ஹாங்காங் நகரம் என்பது சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஒரு தனி நாடு போலவே உலகத்துடன் வர்த்தகம் செய்கிறது. பல சீன நிறுவனங்கள் அங்கு கிளையை ஆரம்பித்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தன. விளைவு... இந்தியாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 13-வது இடத்தில் இருந்தது ஹாங்காங். இப்போது ஆறாவது இடத்தில் இருக்கிறது.

சிங்கப்பூரில் எவரும் போய் நிறுவனம் தொடங்கலாம். அங்கும் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. சமீபத்தில் ஒரு சிங்கப்பூர் நிறுவனம், இந்தியாவில் 3,500 கோடி ரூபாய் முதலீட்டில் மொபைல் போன் உற்பத்தியைத் தொடங்க அனுமதி பெற்றது. உண்மையில் அது சீன நிறுவனம்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் இருக்கிறது. வியட்நாம், இலங்கை, வங்க தேசம், தென் கொரியா எனப் பல நாடுகளிலிருந்து குறிப்பிட்ட சில பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தால் வரி கிடையாது. சீன நிறுவனங்கள் அங்கும் போய் கால் பதித்து, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. வங்க தேசத்திலிருந்து ஜவுளிப்பொருள்களை இப்படித்தான் சீன நிறுவனங்கள் அனுப்பி வைக்கின்றன.

லாபம் பெறுவதற்காக இந்திய இடைத்தரகர்கள் இதற்குத் துணைபோகிறார்கள்.