Published:Updated:

ஆட்சி... கட்சி... குடும்பம்... சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

மோடி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி, ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின். தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, மோடி கலந்துகொண்ட முதல் அரசு விழா என்பதால், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

ஆட்சி... கட்சி... குடும்பம்... சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

முதல்வர் ஸ்டாலின். தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, மோடி கலந்துகொண்ட முதல் அரசு விழா என்பதால், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

Published:Updated:
மோடி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி, ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே ஆட்சி, கட்சி, குடும்பம் என்கிற மூன்று விஷயங்கள் சார்ந்தும் முதல்வர் ஸ்டாலினுக்குப் பிரச்னைகள் வரிசைகட்டின. ‘பா.ஜ.க-விடம் தி.மு.க பணிந்துவிட்டது’ என விமர்சனங்கள் எழுந்தன. கட்சியிலும், ‘தொண்டர்களின் குமுறல்கள்’ அறிவாலயத்துக்குக் கடிதங்களாகப் படையெடுத்தன. போலவே, ‘முக்கியத்துவம் தரப்படவில்லை’ என முதல்வரின் ரத்த உறவுகளுக்குள் புகைச்சல் உண்டானது. “இவை அத்தனையையும், கடந்த ஒரு வாரத்தில் நடந்த சில நிகழ்வுகள் மூலம் சரிக்கட்டியிருக்கிறார் ஸ்டாலின்” என்கிற அரசியல் பார்வையாளர்கள். “முதல்வரின் இந்தச் ‘சமாளிப்பு அரசியல்’ தொடர்ந்து எடுபடுமா?” என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார்கள்!

அரசியல்ரீதியாக சமீபத்தில் ஸ்டாலின் எதிர்கொண்ட பெரும் சவாலே, பா.ஜ.க-விடம் கருத்தியல்ரீதியாகப் பணிந்துபோவதாக எழுந்த விமர்சனம்தான். காலம் காலமாகத் தாங்கள் எதிர்த்துவந்த புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தடுமாறி, `அதிலுள்ள நல்ல விஷயங்களை ஏற்போம்’ என்றது, தருமை ஆதீனப் பல்லக்கு விவகாரத்தில் பல்டி அடித்தது, பசுமடம் கட்டுவதற்கு ஆவடியில் இடம் பார்த்தது, இந்து முன்னணியிடமிருந்து எதிர்ப்பு வந்ததும் ஆம்பூர் பிரியாணி திருவிழாவை ஒத்திவைத்தது என அடுத்தடுத்த நிகழ்வுகளால் இந்த விமர்சனம் வலுத்தது. ‘இந்த விஷயத்தில் மொத்தமாக, எல்லோருக்குமாக பதில் சொல்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதித்தான், மோடியை மேடையில் வைத்துக்கொண்டே `திராவிட மாடல்’ குறித்து ஸ்டாலின் வகுப்பெடுத்தது’ என்கிறார்கள்.

ஆட்சி... கட்சி... குடும்பம்... சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

மோடிக்கு டியூஷன்... சரிக்கட்டிய ஸ்டாலின்!

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், “சித்தாந்தரீதியாக பா.ஜ.க-விடம் தி.மு.க பணிந்துபோய்விட்டதாக எழுந்த கருத்துகளால், முதல்வர் ‘ஜெர்க்’ ஆனது நிஜம். பா.ஜ.க எதிர்ப்பு உணர்வால், 15 சதவிகிதமிருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளும், மோடியை விரும்பாத வாக்குகளும் தி.மு.க-வுக்கு 2019, 2021 தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் கைகொடுத்துள்ளன. அந்த வாக்குகள் தடம்புரண்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். சுயமரியாதை, மாநிலச் சுயாட்சிக் கருத்துகள் வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில், பா.ஜ.க என்ன ஸ்டன்ட் அடித்தாலும், குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு மேல் அந்தக் கட்சியால் வளர முடியாது. கிராமம்தோறும் கிளைக்கழகம் வளர்த்திருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க-விடம் கட்டமைப்பும் இல்லை. அதேநேரத்தில், அ.தி.மு.க-விடம் அந்தக் கட்டமைப்பு இருக்கிறது. தமிழக அரசியலில் அ.தி.மு.க வீழ்ந்து, பா.ஜ.க எழும்பட்சத்தில், அது தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் பா.ஜ.க-வின் போராட்டங்கள், கோரிக்கைகளுக்கு மெளனத்தை மறைமுக அனுமதியாக அளித்தது தி.மு.க அரசு. ஆனால், அது ஒரு கட்டத்தில் தி.மு.க-வுக்கே ரிவர்ஸ் தாக்குதலாக மாறிவிட்டது. ‘முதல்வரின் குடும்ப முதலீடுகளை டெல்லி தோண்டுவதால், பா.ஜ.க-வின் போராட்டங்களுக்கு ஆளும்தரப்பு அடிபணிந்துவிட்டதாக’க் கட்சிக்குள்ளேயே பேச்சு எழுந்தது.

இதைச் சரிக்கட்டுவதற்காக, மே 26-ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா மேடையைப் பயன்படுத்திக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, மோடி கலந்துகொண்ட முதல் அரசு விழா என்பதால், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. நிகழ்ச்சியில், பிரதமர் முன்னிலையிலேயே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ எனப் பலமுறை ஸ்டாலின் குறிப்பிட்டதும் அரங்கில் பலத்த கரவொலி எழுந்தது. ‘சுகாதார கட்டமைப்பு, கல்வித்தரம், மனிதவள மேம்பாடு, பெண்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எனச் சமூகநீதியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. அனைத்தையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சிதான் திராவிட மாடல் ஆட்சி’ என முதல்வர் ஆங்கிலத்தில் வகுப்பெடுத்ததும், பிரதமரின் முகத்தில் ஈ ஆடவில்லை. தேசிய அளவில் தமிழ்நாட்டின் வரிவருவாய்ப் பங்களிப்பு குறித்தும், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்தும் தமிழில் உரையாற்றிய ஸ்டாலின், ‘நிலுவைத் தொகையை வழங்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ‘தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்’ என்று பிரதமரிடம் அவர் வைத்த கோரிக்கை, தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நீட் தேர்வு, மொழி, ஜி.எஸ்.டி., கச்சத்தீவு எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தான் ஆற்றிய 16 நிமிட உரையில், ‘நான் பா.ஜ.க-விடம் பணிந்துபோகவில்லை. பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டே, அவர்களுக்கு எதிராகப் பேசுகிறேன் பார்’ என உணர்த்திவிட்டார் ஸ்டாலின். இதன் மூலமாக, பா.ஜ.க-வை முன்வைத்து தி.மு.க ஆட்சிமீது எழுந்த விமர்சனங்கள் உடைந்துபோயின. இனி முதல்வர் குடும்பத்தின்மீது வருமான வரி, அமலாக்கப் பிரிவு சோதனை நடந்தாலும், அரசியல்ரீதியாக அது தி.மு.க-வுக்குச் சாதகமாகவே மாறும். கடந்த ஒரு வருடமாகத் தமிழக பா.ஜ.க கட்டியமைத்து வந்த பிம்பத்தை, ஒரே ஒரு மேடைப் பேச்சில் உடைத்து எறிந்துவிட்டார் ஸ்டாலின்” என்றனர்.

ஆட்சி... கட்சி... குடும்பம்... சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

‘சமூகநீதி’ பாராட்டு... வெங்கைய நாயுடு அழைப்புப் பின்னணி!

மோடியின் நிகழ்ச்சியில் ஸ்டாலின் வெடித்த வெடியால், தமிழ்நாடு பா.ஜ.க-வினர் உஷ்ணமானதுதான் மிச்சம். முதல்வரின் ஜி.எஸ்.டி நிலுவைக் குற்றச்சாட்டுகளுக்கு நீண்டதொரு விளக்கம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடமிருந்து வந்தது. இதற்கிடையே, மே 28-ம் தேதி நடைபெற்ற கருணாநிதி சிலைத் திறப்புவிழாவில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்பதற்குக் கடும் முட்டுக்கட்டைபோட்டிருக்கிறது பா.ஜ.க. “நம் பிரதமரை அவதூறு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்தால், தி.மு.க-விடம் பா.ஜ.க அடிபணிந்துபோய்விட்டதாக தி.மு.க-வினர் பேசுவார்கள். நிகழ்ச்சிக்கு வராதீர்கள்” என வெங்கைய நாயுடுவுக்கு, தமிழ்நாடு பா.ஜ.க-விலிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதையெல்லாம் மீறி, சிலைத் திறப்புவிழாவில் அவர் பங்கேற்றது பா.ஜ.க-வினருக்கே பேரதிர்ச்சி.

ஆட்சி... கட்சி... குடும்பம்... சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “கலைஞர் சிலைத் திறப்பு விழாவுக்கு, வெங்கைய நாயுடுவை அழைத்ததைக் கட்சிக்குள்ளேயே சில சீனியர்கள் விரும்பவில்லை. ‘ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன்’ என நாடாளுமன்றத்திலேயே முழக்கமிட்ட வெங்கைய நாயுடுவை அழைக்கக் கூடாது என சீனியர்கள் பொருமினார்கள். ஆனால், மோடிக்கும் வெங்கைய நாயுடுவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின், நாயுடுவை விழாவுக்கு அழைத்தார். தான் அழைக்கப்பட்ட நோக்கத்தை கனகச்சிதமாக வெங்கைய நாயுடுவும் நிறைவேற்றிவிட்டார்.

விழாவில் பேசிய வெங்கைய நாயுடு, ‘ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சமூகநீதிக்காகப் பாடுபட்டவர் கருணாநிதி. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது பார்வைக்குச் சமமானது. பார்வை இழந்தால் எப்படி எதுவும் தெரியாதோ, அது போன்ற நிலையே தாய்மொழியை இழந்தால் ஏற்படும். பிற மொழிகளைக் கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது’ என்று மொழி அரசியலையும், கருணாநிதிக்குச் சமூகநீதி பாராட்டையும் முன்வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, ‘நீங்கள் இந்தியாவின் சக்தி வாய்ந்த முதல்வர்களில் ஒருவர்’ என ஸ்டாலினை நாயுடு புகழ்ந்தது அரசியல் சரவெடி. ஒருபக்கம் மோடியை விமர்சித்து சிறுபான்மையினரை குஷிப்படுத்தியும், மறுபுறம் நாயுடுவின் வார்த்தைகளால் தன் ஆட்சிமீது புகழ்மாலைகளைச் சூட்டிக்கொண்டும், ஆட்சி மீதான விமர்சனங்களைச் சரிக்கட்டிக்கொண்டார் ஸ்டாலின்” என்றனர் விரிவாக.

ஆட்சி... கட்சி... குடும்பம்... சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

குடும்பச் சிக்கலுக்கு மருந்து!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடந்த கருணாநிதி சிலைத் திறப்புவிழா, அரசியல் தாண்டி, குடும்பத்துக்குள் நிலவிய மனக் கசப்புகளுக்கு மருந்திடும் இடமாகவும் மாறியது. முதல்வரின் குடும்பப் பிரமுகர்கள் சிலர், “தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஸ்டாலினின் ரத்த உறவுகள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டதாகக் குடும்பத்துக்குள்ளேயே குமுறல் எழுந்தது. குறிப்பாக, செல்வி, தமிழரசு ஆகியோரின் குடும்பத்தினர் பெரும் ஆதங்கத்தில் இருந்தனர். கழக மகளிரணிக்குள் உதயநிதி ஸ்டாலின் குழப்பத்தை விளைவிப்பதாக கனிமொழியும் வருத்தத்தில் இருந்தார். இதற்கெல்லாம், விழா அரங்கிலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். ராஜாத்தி அம்மாள், செல்வம், இயக்குநர் அமிர்தம் ஆகியோரை விழா அரங்கில் தனக்கருகே அமரவைத்தும், கனிமொழி, செல்வி, தயாநிதி மாறனுக்கு முக்கியத்துவம் அளித்தும் குடும்பப் பிரச்னைகளைச் சரிக்கட்டிக்கொண்டார் ஸ்டாலின். இதனால், குடும்பத்துக்குள் நிலவிய மனமாச்சர்யங்கள் கொஞ்சம் மறைந்துபோயிருக்கின்றன” என்றனர்.

கருணாநிதி சிலைத் திறப்புவிழா ஒரு குடும்ப நிகழ்வாகவே இருந்தது. கனிமொழி, செல்வி, தமிழரசு ஆகியோர் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டனர். உதயநிதி, கனிமொழியுடன் தயாநிதி மாறன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டார். குரூப் போட்டோ எடுக்கும்போது கனிமொழி இல்லாததைப் பார்த்த வெங்கைய நாயுடு, கனிமொழியை அழைக்கவும், “பக்கத்துல வந்து நில்லும்மா” என்றார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கனிமொழி, மாறன், உதயநிதி ஆகியோருக்கு முன்னால் ஸ்பெஷல் இருக்கை அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பின்னால்தான் ரஜினி, ப.சிதம்பரம், அமைச்சர்கள் என பிரபலங்கள் அமரவைக்கப்பட்டனர். இந்த நிகழ்வில், தன் மனைவி, மகள், மருமகன் எனத் தன் குடும்பத்தினரை ஸ்டாலின் அழைத்து வரவில்லை. வருத்தத்திலிருந்த ரத்த உறவுகளைச் சரிக்கட்டும்விதமாகச் சிலைத் திறப்புவிழாவை அமைத்துக்கொண்டார் ஸ்டாலின்.

ஆட்சி... கட்சி... குடும்பம்... சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

“தொண்டர்களை சந்தோஷமாக வெச்சுக்கணும்!”

ஆட்சி, குடும்பத்துக்கு அடுத்ததாக, கட்சிக்குள் நிலவிய குமுறலையும் ஸ்டாலின் சமாதானம் செய்துவிட்டார் என்பதுதான் தி.மு.க-வுக்குள் ‘ஹாட்’ செய்தியாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. மே 28-ம் தேதி, அறிவாலயத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “மாவட்டச் செயலாளர்களும், எம்.எல்.ஏ-க்களும்கூட கட்சித் தொண்டர்களின் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. ஓராண்டிலேயே கடைநிலை நிர்வாகிகளும், தொண்டர்களும் மனம் நொந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. தொண்டர்கள் சந்தோஷமாக இருந்தால்தான், கட்சி நன்றாக இருக்கும். அதற்கான பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. தேர்தலில் உங்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் பிரசாரம் செய்யப்போகிறவர்கள் அவர்கள்தான். அவர்களை மறந்துவிடாதீர்கள்” என்றிருக்கிறார். ஸ்டாலினின் இந்தக் காரசாரப் பேச்சு கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து, ‘கடைநிலை நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பலனடையவில்லை. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களே மேலும் மேலும் பலனடைகிறார்கள்’ என்கிற குமுறல் கட்சிக்குள் இருந்தது. கோரிக்கைக் கடிதங்களுடன் கோட்டைக்கு வரும் கட்சிக்காரர்களிடம், ‘எங்ககிட்ட கொடுத்து என்னப்பா ஆகப்போகுது... எல்லாமே மேலிடம் முடிவு செய்யறதுதான். கையெழுத்து போடுறதைத் தவிர வேறெந்த அதிகாரமும் எங்களுக்கு இல்லை’ என்று அமைச்சர்கள் சிலர் சொல்லிவந்தனர். அதற்கெல்லாம் செக் வைத்திருக்கிறார் ஸ்டாலின். தொண்டர்கள், கடைநிலை நிர்வாகிகள் மீது பரிவோடு மா.செ-க்கள் கூட்டத்தில் பேசியதன் மூலமாக, ‘தொண்டர்களுக்கு ஏதாவது உதவுங்கள் என நான் சொல்லிவிட்டேன். நீங்கள் பலன் அடையாததற்கு அமைச்சர்களும், மா.செ-க்களும், எம்.எல்.ஏ-க்களும்தான் காரணம். நான் அல்ல’ எனப் பந்தைக் கட்சி நிர்வாகிகள் பக்கம் திருப்பியிருக்கிறார் ஸ்டாலின்’’ என்றார்கள்.

‘மேலோட்டமாகப் பார்த்தால், எல்லாப் பிரச்னைகளையும் ஸ்டாலின் சரிசெய்துவிட்டதாக ஒரு பிம்பம் கிடைக்கும். ஆனால், உண்மையில் பிரச்னைகள் நீறுபூத்த நெருப்பாக அப்படியேதான் இருக்கின்றன’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஆட்சி... கட்சி... குடும்பம்... சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

சரிக்கட்டினாரா ஸ்டாலின்?

“தி.மு.க ஒன்றிய, பகுதிச் செயலாளர்களுக்கு டாஸ்மாக் பார் மூலமாகத்தான் பெருமளவு வருமானம் கிடைத்துவந்தது. அது ஒரு முக்கிய அமைச்சர் தலையீட்டால் பெருமளவு தடைப்பட்டுவிட்டது. ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலமாக வரும் சிறு சிறு டெண்டர்கள் மூலமாகக் கட்சிக்காரர்கள் பலனடைந்தனர். அதுவும் இப்போது கிடைப்பதில்லை. டிரான்ஸ்ஃபர், வேலை வாய்ப்புகள்கூட கிடைப்பதில்லை. தேர்தலில் உழைத்த பலருக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம்கூட இன்னும் வழங்கப்படவில்லை. இதையெல்லாம் முறையிட வருபவர்களிடம் காதுகொடுத்துக் கேட்க அறிவாலயத்தில் தலைவர் அனுமதி கொடுப்பதில்லை. பிறகு, தொண்டர்கள் எங்கே சமாதானம் ஆவார்கள்?

குடும்பத்துக்குள் நிலவும் பிரச்னைகளை, சிலைத் திறப்புவிழா மூலமாகச் சரிக்கட்ட முயன்றார் ஸ்டாலின். ஆனால், வெறும் வார்த்தைகளால் மருந்து தடவினால், ஆறக்கூடிய காயமா அது... ‘அப்பா இருந்திருந்தா எங்க நிலைமை இப்படித்தான் இருக்குமா?’ என்கிற கொந்தளிப்பு ரத்த உறவுகள் பலரிடம் இருக்கிறது. இதைச் சரிக்கட்ட அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும், கனிமொழிக்கும் கட்சியின் அதிகார அமைப்பில் ஸ்டாலினால் பதவி கொடுக்க முடியுமா?

45-வது ஜி.எஸ்.டி கூட்டம் நடந்தபோது, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. ‘மதுரையில் வளைகாப்பு நிகழ்ச்சி இருந்தது’ என்று விளக்கமளித்தார் அவர். கூட்டத்தில் பேசவேண்டியதை, பிரதமர் முன்னிலையில் பேசுவதால் என்ன பயன்... அரசியல்ரீதியாக இது சத்தத்தைக் கிளப்புமே தவிர, ஆக்கபூர்வமாக தமிழ்நாட்டுக்குக் கிடைக்கப் போவது ஏதுமில்லை. மத்திய, மாநில மோதலாக இது விஸ்வரூபமடைந்தால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான்” என்றனர் முதல்வருக்கு நெருக்கமான புள்ளிகள்.

“கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளால், ஆட்சி, கட்சி, குடும்பம் என தன்னைச் சுற்றியிருந்த விமர்சனங்களை ஓரளவு சமாளித்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. இவை மூன்றிலிருந்தும் இனிமேல்தான் சூறாவளிகளே கிளம்பும்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism