Published:Updated:

என்ன செய்யப்போகின்றன இந்தக் கமிட்டிகள்?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா எனத் தொடர் பிரச்னைகளால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.

என்ன செய்யப்போகின்றன இந்தக் கமிட்டிகள்?

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா எனத் தொடர் பிரச்னைகளால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்
சரியாக கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த நேரத்தில் பொறுப்பேற்றது ஸ்டாலின் தலைமையிலான அரசு. இன்னொரு பக்கம், தமிழக அரசின் கடன் 4.85 லட்சம் கோடியாக உயர்ந்து மிரட்டியது. 4,000 ரூபாய் கொரோனா நிவாரணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் மதிப்பூதியம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்றெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். இக்கட்டான சூழலில் தற்போதிருக்கும் நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் ஆலோசனைகள் வழங்கவும் அடுத்தடுத்து நிபுணர் குழுக்களை அமைத்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தின் முக்கியச் செயற்பாட்டாளர்கள், நிபுணர்கள் அடங்கிய அந்தக் குழுக்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பார்க்கலாம்.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை இயற்றுவோம்’ என்று வாக்குறுதி அளித்திருந்தது தி.மு.க. கொரோனாவால் பிளஸ் டூ தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, நீட் தேர்வை நடத்துவதில் மட்டும் விடாப்பிடியாக இருந்தது. நீட் நடக்குமா, நடக்காதா என்று மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த சூழலில், கடந்த 5 ஆண்டுகளில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் முதல்வர். டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மைசூர் ஜே.எஸ்.எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்த்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் சிறப்புப்பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்குநர், கூடுதல் இயக்குநர் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்கள். ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இந்தக்குழு பொதுமக்களிடம் கருத்துகளைக் கோரியது. 89,342 பேர் கருத்து தெரிவித்தார்கள். இந்தச்சூழலில், பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இந்தக்குழுவின் நியமனம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 165 பக்க அறிக்கையை இந்தக்குழு முதல்வரிடம் வழங்கியது. 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் ‘நீட் வேண்டாம்’ என்றே கருத்து தெரிவித்ததாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன். குழுவின் அறிக்கையை வைத்து அரசு என்ன செய்யும் என்பது இந்தக் கூட்டத்தொடரில் தெரியலாம்.

கொரோனா டாஸ்க் போர்ஸ்

கொரோனா இரண்டாம் அலை சற்று ஓய்ந்து இயல்பு திரும்பத் தொடங்கிய தருணத்தில், மூன்றாம் அலை வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆராயவும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் டாஸ்க் போர்ஸ் ஒன்றை அமைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தக்குழுவுக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவன இயக்குநர் டாக்டர் மனோஜ் முரேகர், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் தொற்றுநோயியல் துறை மருத்துவர் ஜெயபிரகாஷ் முலியில் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பலரும் இந்தக்குழுவில் அமர்த்தப்பட்டார்கள்.

மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், தொண்டு நிறுவனங்களிடம் ஆலோசித்து, தொடர்ந்து சந்திப்புகளை நடத்திய இந்தக்குழு, மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்காக 33 செயல்திட்டங்களை வகுத்து அரசுக்கு அளித்துள்ளது. இவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்களை வாரத்துக்கு ஒருமுறை இந்தக்குழு கண்காணிக்கிறது. தலைமைச் செயலாளரும் சுகாதாரத்துறைச் செயலாளரும் அடிக்கடி ஆய்வு செய்கிறார்கள். இந்தக்குழு அளித்த 50 சதவிகித செயல்திட்டங்களை சுகாதாரத்துறை செயல்படுத்திவிட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் மீதமிருக்கும் செயல்திட்டங்களும் முழுமையடைந்துவிடும் என்கிறார்கள் குழுவில் உள்ளவர்கள். குறிப்பிட்ட இடைவெளியில் இந்தக்குழுவின் கூட்டம் நடந்துவருகிறது.

என்ன செய்யப்போகின்றன இந்தக் கமிட்டிகள்?

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான குழு

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா எனத் தொடர் பிரச்னைகளால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். இந்த நிறுவனங்களை மீட்கவும் மேம்படுத்தவும் ஒரு குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவித்திருந்தது தமிழக அரசு. அதன்படி தமிழகத் தொழில்துறையின் முன்னாள் செயலாளரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுந்தரதேவன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் ஸ்டாலின். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் உறுப்பினர் பிந்து ஆனந்த், SIDBI வங்கியின் முன்னாள் தலைவர் என்.பாலசுப்பிரமணியம், ஏற்றுமதிக் கூட்டமைப்புக் கழகத்தின் மண்டலத் தலைவர் இஸ்ரா அகமது ஆகியோர் இந்தக்குழுவின் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். நிதித்துறை, தொழில்துறைச் செயலர்களும் இந்தக்குழுவில் உள்ளார்கள்.

தற்போது தொழில்துறை சார்ந்த அமைப்புகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறது இந்தக்குழு. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்கிறார்கள் இந்தக்குழுவில் உள்ளவர்கள்.

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு

மனிதவளத்தை முழுமையாகப் பயன்படுத்தி வளர்ச்சியை எட்டுவதற்கு ஆலோசனைகளை வழங்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன், ராஞ்சி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜீன் ட்ரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் மூவரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்தக் குழு நியமனம் தேசிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த மூவரும் நேரடியாக மத்திய அரசோடு முரண்பட்டு நின்றவர்கள். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த காலத்தில் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தவர் ரகுராம் ராஜன். அரவிந்த் சுப்பிரமணியன் அசோகா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில், மத்திய அரசை விமர்சித்த பிரதாப் பானு மேத்தா பதவி விலக நேர்ந்தது. பிரதாப்புக்கு ஆதரவாக தானும் பதவி விலகி எதிர்ப்பைப் பதிவு செய்தார் அரவிந்த். நாராயணன் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். ஜீன் ட்ரெஸ் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலத்தில் பொருளாதார ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் வர முக்கியக்காரணம் இவர்தான். எஸ்தர் டஃப்ளோ இந்தியாவில் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து வறுமை ஒழிப்பு தொடர்பாகப் பல நூல்களை எழுதியவர்.

இந்தக்குழு பொருளாதாரம், சமூகக் கொள்கைகள், சமூகநீதி, மனிதவள மேம்பாடு, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை வழங்குதல், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு, நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளை முதல்வருக்கு வழங்கும். இக்குழுவின் முதல் கூட்டம் ஜூலை முதல் வாரம் காணொலி மூலம் நடந்துள்ளது.

மாநில கொள்கை வளர்ச்சிக்குழு

1971-ம் ஆண்டு கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் இந்தக்குழு மாநிலத்தின் வளர்ச்சி குறித்த பரிந்துரைகளை வழங்கும். 2020-ல் இது, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பது, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குவது, கொள்கை ஒத்திசைவை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். ஸ்டாலின் முதல்வரானதும் இந்தக்குழுவை மாற்றியமைத்தார். குழுவின் துணைத்தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசன், பகுதி நேர உறுப்பினர்களாக பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.தீனபந்து, எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொருவருக்கும் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தக்குழு அடிக்கடி கூடி விவாதிக்கிறது. துறைவாரியாக ஆய்வுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. அமைச்சர்கள், துறை உயர் அதிகாரிகள் தங்கள் துறையில் இதுவரை நடந்த, நடக்கவுள்ள செயல்திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்களுக்கு விளக்குகிறார்கள். குழு உறுப்பினர்களும் ஆலோசனை சொல்கிறார்கள். ஆக்கபூர்வமாகச் செயல்பட்டுவருகிறது இந்தக்குழு.

பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவல் சாரா கல்விக்குழு

1962 முதல் தமிழ்நாடு பாடநூல் கழகம், பாடப்புத்தகம் சாராத பல அரிய நூல்களைப் பதிப்பித்துவருகிறது. இடைப்பட்ட காலங்களில் படிப்படியாக பதிப்பிக்கும் பணி தேங்கிவிட்டது. புதிய பாடத்திட்ட உருவாக்கப்பணிகள் நடந்தபோது, பாடநூல் கழகத்தின் பதிப்பித்தல் பணியையும் மீட்டுருவாக்கம் செய்யத் திட்டமிட்டது பள்ளிக்கல்வித்துறை. எந்தெந்த நூல்களை மீண்டும் பதிப்பிப்பது, எப்படிப் பதிப்பிப்பது என்றெல்லாம் ஆலோசனை வழங்க அலுவல் சாரா கல்விக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி, ஒடிஷா முதல்வரின் சிறப்பு ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஆராய்ச்சியாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, மொழிபெயர்ப்பாளர் வ.கீதா, கல்வியாளர் ச.மாடசாமி, கல்வியாளர் ஆயிஷா நடராஜன். பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, ஜி.எஸ்.டி அதிகாரி பூ.கொ.சரவணன் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். பாடத்திட்ட உருவாக்கம் முடிந்தபிறகு இந்தக்குழு கூட்டப்படவில்லை. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அலுவல்சாரா கல்விக்குழுவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும், பேராசிரியர் வீ.அரசுவும் சேர்க்கப்பட்டார்கள். இக்குழுவின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், குழுவிலிருந்த சிலர் வெளியேற விரும்புவதாகக் கடிதம் அனுப்பினார்கள். அதனால், இந்தக்குழுவையே மொத்தமாக மாற்றி அமைக்கவிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஸ்டாலின் ஆட்சியில் பல குழுக்கள் போடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஆரம்பமே. இந்தக் குழுக்களின் மூலம் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டால் இன்னமுமே பாராட்டலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism