Published:Updated:

தொடர் ரெய்டு... டார்கெட் உதயநிதி!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

சினிமா வட்டாரத்தைக் கலங்கடித்திருக்கும் இந்த வருமான வரித்துறை ரெய்டின் பெரும் பகுதி, ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச் செழியனைத்தான் குறிவைத்திருக்கிறது.

தொடர் ரெய்டு... டார்கெட் உதயநிதி!

சினிமா வட்டாரத்தைக் கலங்கடித்திருக்கும் இந்த வருமான வரித்துறை ரெய்டின் பெரும் பகுதி, ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச் செழியனைத்தான் குறிவைத்திருக்கிறது.

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டிருக்கிறது. உயரதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேநேரத்தில், தமிழ் சினிமா உலகையே புரட்டிப்போட்டிருக்கின்றன வருமான வரித்துறையின் அடைமழை ரெய்டுகள். தயாரிப்பாளரும், சினிமா ஃபைனான்ஸியருமான அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில், மூன்றாவது நாளையும் தாண்டி ரெய்டுகள் தடதடக்கின்றன. தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணுவில் தொடங்கி, எஸ்.ஆர்.பிரபு வரை பலரும் ரெய்டு ரேடாரில் வந்திருக்கிறார்கள். “முதல்வர் கவனிக்கவேண்டிய ரெட் அலர்ட்டே இந்த ரெய்டுகள்தான். அவர் மகன் உதயநிதிதான் இந்த ரெய்டுகளின் பிரதான டார்கெட்” என்கிறார்கள் விவரமறிந்த சினிமா வட்டாரத்தினர். கோலிவுட்டில் என்னதான் நடக்கிறது... உதயநிதி ‘டார்கெட்’ செய்யப்படுவதன் பின்னணி என்ன... விவரமறிய கோடம்பாக்கத்தை வலம்வந்தோம். கிடைத்த தகவல்களெல்லாம் ‘பட்டாசு’ ரகம்!

உதயநிதி!
உதயநிதி!

அடுத்தடுத்த ரெய்டுகள்... சிக்கலில் அன்புச்செழியன்?

சினிமா வட்டாரத்தைக் கலங்கடித்திருக்கும் இந்த வருமான வரித்துறை ரெய்டின் பெரும் பகுதி, ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச் செழியனைத்தான் குறிவைத்திருக்கிறது. “தமிழ் சினிமாவுல அன்பு ஒரு முக்கியமான கை. கடந்த 20 வருஷத்துல கோலிவுட்ல வெளியான பெரும்பாலான படங்கள் இவர் ஃபைனான்ஸ்லதான் வெளியாகியிருக்கும். ஒரு போன் பண்ணினா போதும்... இரண்டு மணி நேரத்துல 50 கோடி ரூபாய்கூட ரெடி பண்ணித் தருவார் அன்பு. ஆனா, அதுக்கான ஆவணங்களை கச்சிதமாக வாங்கிவெச்சுக்குவார். சொன்ன நேரத்துல பணத்தைத் திருப்பிக் கொடுக்கலைன்னா, அன்புவிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது” என்கிறார்கள் மூத்த தயாரிப்பாளர்கள்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நெருக்கம், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியில் பதவி என அ.தி.மு.க பிரமுகராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டாலும், பல அரசியல் கட்சிகளிலும் அன்புவுக்கு நெருங்கிய நண்பர்கள் உண்டு. சமீபத்தில் நடந்து முடிந்த அவர் மகள் திருமணத்தில்கூட, முதல்வர் ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.பி.உதயகுமாரில் தொடங்கி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், போனி கபூர் வரை பிரபலங்கள் வாழ்த்துவதற்கு வரிசை கட்டினார்கள். செல்வாக்கின் உச்சத்தில் இருக்கும் அன்புவை இந்த ரெய்டில் குடைந்தெடுத்திருக்கிறது வருமான வரித்துறை.

ஐ.டி ரெய்டில் அன்பு சிக்குவது இது முதன்முறையல்ல. விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வெளியாவதற்குச் சில நாள்கள் முன்னதாக, செப்டம்பர் 2015-ல் அன்பு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. “லாட்டரி பணம் சினிமாவில் முதலீடு செய்யப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தவிர, `புலி’ படத்துக்கு அன்புச்செழியன் ஃபைனான்ஸ் செய்ததாகவும் சந்தேகம் எழுந்தது. அதனடிப்படையில் ரெய்டு நடத்தினோம்” என வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது காரணங்களை அடுக்கினார்கள். `பிகில்’ படம் வெளியான பிறகு, பிப்ரவரி 2020-ல் அன்புச்செழியன், ஏ.ஜி.எஸ் சினிமாஸ், நடிகர் விஜய் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அன்புவுக்குத் தொடர்புடைய 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இது போக, பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைக்கான ஆவணங்களும் சிக்கின. இந்த வழக்கே இன்னும் முடிவுறாத நிலையில், அடுத்த ரெய்டை ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி நடத்தியிருக்கிறது வருமான வரித்துறை.

அன்புச்செழியன்
அன்புச்செழியன்

கைமாறிய ‘விக்ரம்-2’ குறிவைத்த ஐ.டி!

கோலிவுட்டைக் குறிவைத்திருக்கும் இந்த ரெய்டுகள் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “வருமான வரித்துறை சோதனைக்குள்ளாகும் ஒருவர், முடக்கிவைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், ஆவணங்கள், விசாரணைகள் என அதிலிருந்து மீண்டு எழுவதற்கே ஒரு வருடமாகிவிடும். ஆனால், 2020-ல் ரெய்டுக்குள்ளான அன்புச்செழியன், அசராமல் அடுத்தடுத்து படங்களை விநியோகிக்க ஆரம்பித்தது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதிலும், `விக்ரம்-2’ திரைப்படம் தொடர்பான ஒரு ‘டீல்’தான் இந்த ரெய்டுக்கே அஸ்திவாரம்.

அன்புச்செழியனுக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில், தான் நடித்த ‘விக்ரம்-2’ திரைப்படத்துக்கான விநியோக உரிமையை அன்புச்செழியனிடம் வழங்கியிருக்கிறார் கமல். எல்லாம் முறையாகச் சட்டப்படிதான் நடந்திருக்கின்றன. `விக்ரம்-2’ படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கேட்டபோது, கமலுக்கும் அன்புச்செழியனுக்கும் இடையிலான கணக்கைத் தாங்கள் சரிசெய்வதாகச் சொல்லியிருக்கிறது ரெட் ஜெயன்ட் தரப்பு. இது போக, ஒரு பெரும் தொகையும் கைமாறியிருக்கிறது. தொடர்ச்சியாக, ‘பெரிய இடத்து குடும்பப் பணம், அன்புச்செழியன் வழியாக சினிமா வட்டாரத்தில் ஃபைனான்ஸ் செய்யப்படுகிறது. ஓடாத படங்கள் ஓடியதாகக் கணக்கு காட்டி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சி நடக்கிறது’ என்கிற `பகீர்’ தகவலும் வந்தது. இதன் பின்னரே, ரெய்டுக்கு நாள் குறித்தோம்.

அன்புச்செழியன் மட்டுமல்லாமல், அவரோடு வியாபாரரீதியாகத் தொடர்பிலிருந்த கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளோடு, டெல்லியிலிருந்து 35 அதிகாரிகள் வந்து இணைந்துகொண்டனர். மொத்தம் 42 இடங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ரெய்டு தொடங்கியது. அன்புச்செழியன், அவர் மகள் சுஷ்மிதா, அவர் தம்பி அழகர்சாமி ஆகியோரின் வீடுகள் ரெய்டுக்குள்ளாக்கப்பட்டன. நுங்கம்பாக்கத்திலுள்ள அழகர்சாமியின் வீட்டைத் திறப்பதற்கு அங்குள்ள பணியாளர்கள் மறுத்துவிட்டனர். ‘ரேகை வைத்தால் மட்டுமே கதவு திறக்கும்’ எனக் கதைகட்டினார்கள். ‘நீதிமன்ற உத்தரவைப் பெற்று, கதவை உடைத்து ரெய்டு நடத்துவோம்’ என்று நாங்கள் கடுமை காட்டிய பிறகே, சாவி எங்கிருந்தோ வந்து கதவு திறக்கப்பட்டது. புரசைவாக்கத்தில் அன்புச்செழியனின் நண்பர் ஒருவரிடமிருந்து 13 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

தொடர் ரெய்டு... டார்கெட் உதயநிதி!

தி.நகரிலுள்ள கலைப்புலி தாணுவின் அலுவலகத்திலிருந்து பல கடன் பத்திரங்கள்தான் கிடைத்தன. கோவையில் கந்தசாமி ஃபிலிம்ஸ் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான விநியோகஸ்தர்களான அருள்பதி, படூர் ரமேஷ் இடங்களையும் சல்லடையாக்கினோம். மூன்றாவது நாளாக ரெய்டு தொடர்ந்தாலும், எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை. ஆனால், சினிமாத்துறையில் உதயநிதி அண்ட் கோ எப்படி முதலீடு செய்கிறது, அன்புச்செழியன் அதில் என்ன செய்கிறார் என்பதற்குச் சில ரூட்டுகளைக் கண்டறிந்திருக்கிறோம். இந்த ரெய்டுகள் இதோடு முடியாது” என்றனர் விரிவாக.

டார்கெட் உதயநிதி... பின்னணி என்ன?

ரெய்டுக்குச் சென்ற பல இடங்களில் எதிர்பார்த்த அளவு பணம், ஆவணங்கள் ஏதும் சிக்காததால், அங்கேயே டேரா போட்டிருக்கிறது வருமான வரித்துறை அதிகாரிகள் படை. ரெய்டை முடித்துக்கொள்ளச் சொல்லி டெல்லியிலிருந்து மறு உத்தரவு வராததால், வேளா வேளைக்கு உணவை வரவழைத்துச் சாப்பிட்டுவிட்டு, சிறு காகிதம்கூட விடாமல் துருவினார்கள் அதிகாரிகள். ‘பிறகு எதற்காக நடந்தது ரெய்டு?’ கேள்விகளுடன் பா.ஜ.க வட்டாரத்தில் பேசினோம். “இந்த ரெய்டுக்கான டார்கெட்டே உதயநிதிதான்” என்று வெடியைக் கிள்ளியெறிந்தார்கள்.

மேற்கொண்டு நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் தலைவர்கள் சிலர், “தமிழ்நாட்டில் வெளியாகும் 60 சதவிகித திரைப்படங்கள் உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்தாலேயே வெளியிடப்படுகின்றன. பெரும்பாலான சினிமா தியேட்டர்களையும் உதயநிதி தரப்புதான் ‘கன்ட்ரோல்’ செய்கிறது. இன்று ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனத்திடம் சென்றால் படத்தை லாபத்தோடு விற்க முடிகிறது. ஆனால், நாளை அவர்கள் சொல்வதே விலை என்றாகிவிடும். தவிர, நேரடி ரிலீஸ் நடைமுறையால் `விநியோகஸ்தர்’ என்கிற கட்டமைப்பே கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறிக்கொண்டிருக்கிறது. திரைத்துறையை ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ கட்டுப்படுத்தும்விதம் மிக ஆபத்தான போக்கு. இதை, எங்களிடம் சில மூத்த தயாரிப்பாளர்கள் கூறி வருத்தப்பட்டனர்.

தவிர, உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் அளவுக்கு மீறிய வளர்ச்சியைக் கடந்த ஒரு வருடத்தில் அடைந்திருக்கிறது. ஜூன் 2022 வரை வெளியான 20 பெரிய பட்ஜெட் படங்களில், 16 படங்களை இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் ஏழு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் மட்டுமே 700 கோடி ரூபாய் என்கிறது சினிமா வட்டாரம். இந்த திடீர் வளர்ச்சி எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. உதயநிதித் தரப்பு இந்த விஷயத்தில் கொஞ்சம் சறுக்கினால்கூட, தி.மு.க-வின் இமேஜ் பெரிய அளவில் டேமேஜ் ஆகும். அதற்குத்தான் டார்கெட் வைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் அடுத்தடுத்து உதயநிதியும் கமலும் இணைவதன் வழியே, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யமும், தி.மு.க-வும் கரம்கோக்கத் தயாராகிவிட்டது தெரிகிறது. இந்த ரெய்டுகளால், கமலும் நிச்சயம் ஆட்டம்கண்டு போயிருப்பார். அவருக்கான ‘செக்’-கும் சேர்த்தே வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

தொடர் ரெய்டு... டார்கெட் உதயநிதி!

திருச்செந்தூரில் யாகம்... குடும்பத்தில் குடுமிப்பிடி!

இந்த ரெய்டுகள் சினித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முதல்வர் குடும்பத்துக்குள்ளும் சச்சரவைப் பற்றவைத்திருக்கிறது. ரெய்டு தொடங்கிய ஆகஸ்ட் 2-ம் தேதி, காலை 6 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்ற முதல்வரின் மருமகன் சபரீசன், 17 புரோகிதர்களை வைத்து ‘சத்ரு சம்ஹார லட்சார்ச்சன சர்வ நாச’ யாகத்தை நடத்தியிருக்கிறார். அவர் யாகம் நடத்துவதற்காக, திருச்செந்தூர் வள்ளிக்குகை பல மணி நேரம் மூடப்பட்டதால், சாமி கும்பிட வந்த பக்தர்கள் கடுப்பானார்கள். சபரீசனுக்கு நெருக்கமான லண்டன் வெங்கட், காசா கிராண்ட் செந்தில் குமார் ஆகியோரும் இந்த யாகத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த யாகத்துக்கான ஏற்பாட்டை, பா.ஜ.க பிரமுகர் மகேஷ் ஐயர் என்பவர் செய்திருந்ததுதான் இதில் ‘ஹைலைட்.’ விஷயம் லீக் ஆனவுடன், மகேஷ் ஐயரை ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாடு துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க.

நம்மிடம் பேசிய முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான மூத்த அமைச்சர் ஒருவர், “திருச்செந்தூரில் ‘சத்ரு சம்ஹார’ யாகத்தை மாப்பிள்ளை நடத்திய நேரத்தில், சரியாக ரெய்டும் நடந்ததால் திருமதி முதன்மை கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். எதிரிகளை வீழ்த்துவதற்காக நடத்தப்படும் இந்த யாகத்தில், எதிரியின் பெயரை பனை ஓலையில் எழுதி யாகக் குண்டத்தில் போடுவார்கள். யாகம் நடத்துபவர் தன் மனதுக்குள்ளும் எதிரியின் உருவத்தை நினைத்தபடி அவர் பெயரை உச்சரிக்க வேண்டும். யாகம் நடக்கும்போது, உதயநிதியை டார்கெட் செய்வதுபோல ரெய்டும் நடந்ததால், ‘யார் அழியணும்னு மாப்பிள்ளை யாகம் நடத்துறாரு?’ என்று கொதித்துவிட்டார் திருமதி முதன்மை. வீடு திரும்பிய மாப்பிள்ளை, ‘மாமாவோட உடல்நலனுக்காகவும், அவர் எதிரிகள் ஒழியணும்கிறதுக்காகவும்தான் யாகம் நடத்தினேன். என்னைக்காவது நான் கோயிலுக்குப் போய் பார்த்திருக்கீங்களா... அப்படியிருக்கும் நானே கோயிலுக்குப் போனது மாமாவுக்காகத்தான். என் மேலயே சந்தேகப்படுறீங்களே’ என்று நெக்குருக, முதல்வருக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ‘கட்சியைப் பார்க்குறதை விட்டுட்டு, நமக்கு இந்த சினிமா தொழில் தேவையா?’ என மகனிடம் வருத்தப்பட்டிருக்கிறார்” என்றார்.

சினித்துறையில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம், உதயநிதியைச் சிக்கவைக்க டெல்லி ‘டார்கெட்’ செய்திருக்கிறது. ‘எப்படியும் ரெட் ஜெயன்ட்டின் ஆட்டம் கோலிவுட்டில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஓயப்போவதில்லை. எனவே, ஆட்டம் சறுக்கும் சந்தர்ப்பத்துக்காக டெல்லியும், வருமான வரித்துறையும் பொறிவைத்துக் காத்திருக்கும்’ என்கிறார்கள். ஜெயிக்கப்போவது யார்?