Published:Updated:

புதுச்சேரியில் முடிவுக்கு வருகிறதா தேசிய ஜனநாயக கூட்டணி?

ரங்கசாமி
பிரீமியம் ஸ்டோரி
ரங்கசாமி

கூட்டணியில் இருக்கும்போது நாம் அப்படி முடிவெடுக்க முடியாது. மேலும் கட்சித் தலைமையிடம் முதல்வருக்கு நல்ல உறவு இருக்கிறது

புதுச்சேரியில் முடிவுக்கு வருகிறதா தேசிய ஜனநாயக கூட்டணி?

கூட்டணியில் இருக்கும்போது நாம் அப்படி முடிவெடுக்க முடியாது. மேலும் கட்சித் தலைமையிடம் முதல்வருக்கு நல்ல உறவு இருக்கிறது

Published:Updated:
ரங்கசாமி
பிரீமியம் ஸ்டோரி
ரங்கசாமி

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதன் மூலம், அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது!

ஆளும் கூட்டணியில் விரிசல்!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. ரங்கசாமி முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததும், துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் முக்கிய இலாகாக்களுடன் இரண்டு அமைச்சர் பதவிகளையும் கேட்டது பா.ஜ.க. துணை முதல்வர் பதவிக்குக் கைவிரித்த முதல்வர் ரங்கசாமி, மற்ற இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். ஆனால், உப்புச்சப்பில்லாத இலாகாக்களைத் தங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக பா.ஜ.க அதிருப்தியடைந்தது.

பிறகு, தன்னிடமிருக்கும் வெறும் ஆறு எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது என்பதை உணர்ந்தது பா.ஜ.க. எனவே, மாநில அரசின் பரிந்துரையின்றி ஆளுநர் மூலம் மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக்கொண்டது. அத்துடன் வாரியத் தலைவர் பதவி வாக்குறுதியுடன் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், சிவசங்கரன், அங்காளன் போன்றவர்களை இழுத்து, சட்டப்பேரவையில் தனது பலத்தைக் கூட்டிக்கொண்டது.

ரங்கசாமி
ரங்கசாமி

இதையடுத்து தங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கும், ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களுக்கும் முதல்வர் ரங்கசாமியிடம் வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டது பா.ஜ.க. ஆனால், அனைத்து வாரியங்களும் நஷ்டத்தில் இருப்பதாகக் கைவிரித்த முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க-வின் கோரிக்கையைத் தொடர்ந்து புறக்கணித்துவருகிறார். இதையடுத்து சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார், முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து மீண்டும் வாரியத் தலைவர் பதவிகள் தொடர்பாகப் பேசினார். அப்போதும், ‘பார்க்கலாம்’ என்ற ஒற்றை வார்த்தையில் அந்த உரையாடலை முடித்திருக் கிறார் ரங்கசாமி. இதில் கடுப்பான பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள், வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியைக் காட்ட முடிவெடுத்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், “மதுபான ஆலை அனுமதி வழங்கிய விவகாரத்தில், கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது” என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினர்.

கொந்தளித்த எம்.எல்.ஏ-க்கள்!

இந்த நிலையில், கடந்த 19-9-2022 அன்று சட்டப்பேரவை வளாகத்தில், பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. அதில் சபாநாயகர் செல்வத்துடன், மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதனும் கலந்துகொண்டார். கூட்டம் ஆரம்பித்த சில விநாடிகளிலேயே, “முதல்வர் ரங்கசாமி கூட்டணி தர்மத்தையும் மதிக்கவில்லை; நம்மையும் மதிக்கவில்லை. மத்திய அரசிடமிருந்து நாம்தான் நிதி பெற்றுத் தருகிறோம். ஆனால், கூட்டணியில் இருக்கும் நம் எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் எந்த நலத்திட்டப் பணிகளும் நடப்பதில்லை. நம் தொகுதிகளைத் திட்டமிட்டே புறக் கணிக்கிறார்கள். ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தொகுதிகளில் மட்டும் அனைத்துப் பணிகளும் நடக்கின்றன.

புதுச்சேரியில் முடிவுக்கு வருகிறதா தேசிய ஜனநாயக கூட்டணி?

எதிர்க்கட்சியான தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், அவர்களுக்கு மட்டும் கார் வாங்கிக் கொடுத்திருக் கிறார்கள். என்.ஆர்.காங்கிரஸுக்குக் கூட்டணிக் கட்சி நாமா அல்லது தி.மு.க-வா... ஏனாம் தொகுதியில் நம் ஆதரவு எம்.எல்.ஏ-வுக்குக் கொடுக்கவேண்டிய அலுவலகத்தை, மல்லாடி கிருஷ்ணா ராவுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் நாம் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும்... என்.ஆர்.காங்கிரஸுக்கு நாம் கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்வோம்” என்று எம்.எல்.ஏ-க்கள் கொந்தளிக்க, பெரும்பாலான வர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அப்போது குறுக்கிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், “கூட்டணியில் இருக்கும்போது நாம் அப்படி முடிவெடுக்க முடியாது. மேலும் கட்சித் தலைமையிடம் முதல்வருக்கு நல்ல உறவு இருக்கிறது” என்று கூறியிருக்கின்றனர். அதற்கு, “இங்கு நடக்கும் எதையும் கட்சித் தலைமையிடம் ஆளுநர் தமிழிசை கூறாததுதான் அதற்குக் காரணம். முதல்வருடன் நெருக்கம் காட்டும் அவரை மாற்ற வேண்டும்” என்று கொதித் திருக்கிறார்கள் எம்.எல்.ஏ-க்கள். அதையடுத்து, “நாம் அனைவரும் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவிடம் குறைகளைக் கூறுவோம்” என்று சமாதானப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் நமச்சிவாயம். செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், “இது வழக்கமான கூட்டம்தான். மக்கள் பணிகள் தொடர்பா கப் பேசினோம்” என்று சமாளித்துவிட்டுச் சென்றார் நமச்சிவாயம்.

சாமிநாதன் -  செல்வம்
சாமிநாதன் - செல்வம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஒருவர், “நாங்கள் இல்லையென்றாலும், ஆறு தி.மு.க எம்.எல்.ஏ-க்களையும், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ-க்களையும் வைத்து ஆட்சியை அமைத்துவிடலாம் என்று எங்களுக்கு உணர்த்த நினைக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அதனால்தான் அவர்கள் தொகுதியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து எங்களிடம் வரத் தயாராக இருக்கும் ஏழு எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சியில் அமர்வோம்” என்றார்.

`புதுச்சேரி அரசியல் களம் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூடேற ஆரம்பித்திருக்கிறது. எனவே, இனி அதிரடித் திருப்பங்களை எதிர்பார்க்கலாம்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!