Published:Updated:

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

- பஞ்சர் பா.ஜ.க... தேங்கிய தே.மு.தி.க... தளராத கமல்

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

- பஞ்சர் பா.ஜ.க... தேங்கிய தே.மு.தி.க... தளராத கமல்

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி
‘படையப்பா’ படத்தில் ஒரு காட்சி... ரஜினியிடம் நைச்சியமாகப் பேசி அவரது பூர்வீக நிலத்தை விற்கச் சம்மதிக்கவைத்துவிடுவார்கள் உறவினர்கள் சிலர். பத்திரத்தில் ரஜினி கையெழுத்திடும் கடைசி நொடியில் புயல் காற்று வீசும். பத்திர பேப்பர்கள் காற்றில் பறந்து போகும்... ஜன்னல் திரைச் சீலைகள் அலைபாயும். சுவரில் மாட்டியிருக்கும் தந்தையின் படம் படபடத்து அரைகுறையாகத் தொங்கும். ‘படையப்பா... வேண்டாம்’ என்பார் ரஜினியின் அம்மா. எல்லோரும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் கடைசி நொடியில் கையெழுத்து போடாமல் அப்படியே நிறுத்திவிடுவார் ரஜினி. அதன் பிறகு படத்தில் வேண்டுமானால் ரஜினிக்கு கிரானைட் புதையல் கிடைத்திருக்கலாம். ஆனால், நிஜத்தில் ரஜினியைவைத்து மிகப்பெரிய ‘புதையலை’ எதிர்பார்த்திருந்த பலரது கனவுகளை குழிதோண்டிப் புதைத்திருக்கிறார் ரஜினி. இன்னும் சிலருக்கோ ஹேப்பி... சிலருக்கு ரிலாக்ஸ்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஜினியைவைத்து தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என்று மெயின் ஸ்கிரிப்ட்டை தயார் செய்திருந்த பா.ஜ.க-வுக்குத்தான் இதில் பெரிய அடி. தங்கள் திட்டம் தவிடுபொடியானதில் பதறிப் போயிருக்கிறது பா.ஜ.க. அந்தக் கட்சி மட்டுமல்ல... பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் கூட்டல் கழித்தல் கணக்குகளும் பூஜ்ஜியத்தில் வந்து நிற்கின்றன. “ரஜினி முடிவின் தாக்கமென்ன?” என்பது குறித்து அரசியல் வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம்.

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

பஞ்சரான பா.ஜ.க

“ரஜினியின் முடிவால் பெரும் சறுக்கலைச் சந்தித்திருப்பது பா.ஜ.க-தான். திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை வளர்த்தெடுக்க முற்பட்டவர்கள், இருக்கும் அரசியல் ஆதரவைக் காப்பாற்றிக்கொள்ளவே திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இப்போது ரஜினியைவைத்து அரசியல் களத்தை வலுவாக்கிக்கொண்டால், 2026-ல் மொத்த தமிழக அரசியல் களத்தையும் கைப்பற்றிவிடலாம்; திராவிடக் கட்சிகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம் என்று கணக்கு போட்டது டெல்லி. இதற்காக மோடி, அமித் ஷா தொடங்கி தமிழகத்தில் மாநில பா.ஜ.க தலைவர்கள், ஆடிட்டர் குருமூர்த்தி என ஒரு பெரும் படையே களமிறங்கி காய்நகர்த்தினார்கள். ரஜினியின் முடிவால் முட்டுச்சந்தில் பஞ்சராகி நிற்கிறது பா.ஜ.க-வின் வண்டி. ரஜினியின் இந்த முடிவுக்குப் பிறகு, அ.தி.மு.க மீதான அணுகுமுறையில் பா.ஜ.க-விடம் மாற்றம் தெரிகிறது. ஆனாலும்,

ஏற்கெனவே பா.ஜ.க-வை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ரஜினியின் முடிவுக்குப் பிறகு, ‘இது திராவிட மண். முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் எங்களுடன் பயணிக்கலாம். அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி’ என்று பா.ஜ.க-வுக்கு நேரடியாகவே செக் வைத்திருக்கிறார். ரஜினி மூலமாக அ.தி.மு.க-வை உடைப்பதற்கு பா.ஜ.க போட்டிருந்த திட்டங்களும் தவிடுபொடியாகி விட்டன. ‘ரஜினியைவைத்து ஆட்டம் காட்டுவார்களோ’ என்கிற கலக்கத்தில்தான் இதுநாள்வரை அ.தி.மு.க தலைவர்கள் நடுங்கிப் போயிருந்தார்கள். இப்போது ரூட் க்ளியர் என்பதால், இனியும் ஆளும்தரப்புமீது வருமான வரித்துறை ரெய்டுகளைத் தொடர்ந்தால், பா.ஜ.க-வை அரசியல்ரீதியாகவும் சித்தாந்தரீதியாகவும் திருப்பியடிக்கவும் அ.தி.மு.க தரப்பு தயாராகிவிட்டது. இப்போது, அந்தக் கட்சி அ.தி.மு.க-வின் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியைத் தொடர வேண்டும் அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும். அதேசமயம், பா.ஜ.க தலைமையில் மூன்றாம் அணியும் எடுபடாது; அதற்கு யாரும் துணிந்து வருவார்களா என்பதும் தெரியவில்லை. இன்னொரு பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தி.மு.க-வுடனான கூட்டணிக்கு வாய்ப்புகளும் தென்படவில்லை” என்கிறார்கள் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை உன்னிப்பாக கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

பரிதவிக்கும் பா.ம.க

ரஜினியின் ‘கதம் கதம்’ அறிவிப்பால் பஞ்சராகியிருப்பது பா.ம.க-தான். இது குறித்துப் பேசியவர்கள், ``2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குவங்கியை வைத்துக்கொண்டு, ரஜினி அரசியலுக்குள் நுழைந்துவிட்டால், கூட்டணி பேரத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது தைலாபுரம் தோட்டம். ரஜினியிடம் சென்றுவிடுவதாக மிரட்டியே

அ.தி.மு.க கூட்டணியில் விரும்பிய எண்ணிக்கையில் சீட்டுகளைப் பெறலாம் என்று மருத்துவர் ராமதாஸ் திட்டமிட்டிருந்தார். அதேசமயத்தில், தி.மு.க-விலுள்ள பெரிய தலைவர் மூலமாகவும் மறைமுகமாக அறிவாலயத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திவந்தனர். தனக்கான தேவை அதிகரித்திருப்பதாக ராமதாஸ் கருதியதால்தான், ‘வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு’ போராட்டத்தைக் கையில் எடுத்தார். ‘ரஜினி வந்துவிடுவார், நாம் இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது’ என்கிற தைரியத்தில், தருமபுரியில் தி.மு.க எம்.பி செந்தில்குமாரிடம் நேரடியாக மோதியது பா.ம.க. சேலத்துக்குப் பிரசாரம் செய்யவந்த தயாநிதி மாறன், ‘பேரம் பேசுவதற்காக இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் ராமதாஸ்’ என்று கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து, அவர் கார்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையெல்லாம் அறிவாலயம் ரசிக்கவில்லை.

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பிரசாரக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கவந்த அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோரிடம், ‘முதலில் எங்களது இட ஒதுக்கீடு போராட்டத்துக்குத் தீர்வு ஏற்படுத்திவிட்டு வாருங்கள். பிறகு உங்கள் மேடை ஏறுகிறோம்’ என்று பத்து நிமிடங்களில் பேசி அனுப்பிவைத்தார் ராமதாஸ். பா.ம.க-வைத் தவிர வேறு எந்தக் கூட்டணிக் கட்சியையும் அ.தி.மு.க அழைக்கவில்லை என்பதிலிருந்தே, தனக்கான தேவை இன்றியமையாதது என்கிற மிதப்பிலிருந்தது தைலாபுரம். இதற்கு ஒரே காரணம் ரஜினி. இப்போது, அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி அறிவித்திருப்பதால் ‘லாக்’ ஆகிவிட்டனர். ‘20 சதவிகித இட ஒதுக்கீடு’ விவகாரத்தில் நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதை ஏற்காத ராமதாஸ், ‘இது காலம் தாழ்த்தும் அறிவிப்பு. அரசின் முடிவு ஏமாற்றமளிக்கிறது’ என்று நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆக, தங்கள் இட ஒதுக்கீடு கோரிக்கையை அ.தி.மு.க ஏற்காதவரை, அந்தக் கட்சியுடன் பா.ம.க கூட்டணி அமைக்க முடியாது. இதையும்மீறி எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ராமதாஸ் ஏற்றுக்கொண்டால், ‘கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு பேரத்தை முடித்துக்கொண்டார்’ என்று வன்னியர்கள் மத்தியில் அதிருப்தி எழும். இதற்கு ராமதாஸ் தயாராக இல்லை. ரஜினியுடன் சென்றுவிடுவோம் என்று மிரட்டி, எடப்பாடியைப் பணியவைக்கவும் முடியாது. சீட் பேரத்தை உயர்த்தவும் வாய்ப்பில்லை. தி.மு.க-வும் கதவைச் சாத்திவிட்டது. எக்கச்சக்க சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். ஒன்று, அ.தி.மு.க கொடுப்பதை ஏற்க வேண்டும் அல்லது தனித்துச் செல்ல வேண்டும். மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் அருகியிருக்கின்றன” என்றனர்.

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

தேங்கிய தே.மு.தி.க

விஜயகாந்தின் உடல்நிலை, கட்சிமாறும் நிர்வாகிகள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கெனவே தேய்பிறையிலிருந்த தே.மு.தி.க., ரஜினி என்கிற பெளர்ணமிக்காகக் காத்திருந்தது. ஆனால், அமாவாசை வந்ததுதான் மிச்சம். இது குறித்துப் பேசிய அரசியல் பார்வையாளர்கள், ‘‘ரஜினியின் அரசியல் வருகையை மனதில் வைத்துக்கொண்டுதான் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘நாங்கள் நினைத்தால் மூன்றாவது அணி அமைப்போம்’ என்று கிச்சுகிச்சு மூட்டினார். போதாதென்று டிசம்பர் 13-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘41 தொகுதிகள் தரும் கட்சியுடன்தான் கூட்டணி’ என்று பிரமிக்கச் செய்தார் பிரேமலதா. கேட்கும் எண்ணிக்கையில் அ.தி.மு.க சீட் ஒதுக்கவில்லை என்றால், ரஜினி அல்லது தி.மு.க-வுடன் செல்வது என்ற யோசனையில் இருந்தார்கள். கூட்டணிக்காக தி.மு.க-வின் வாரிசுப் பிரமுகர் ஒருவரிடமும் தே.மு.தி.க தலைமையிலிருந்தே சிலர் பேசியிருந்தார்கள். வெறும் மூன்று சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளையே தே.மு.தி.க வைத்திருந்தாலும், ரஜினியின் அரசியல் வருகையால், தங்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் என்று அந்தக் கட்சித் தலைமை கருதியது. இந்த தைரியத்தில்தான், அ.தி.மு.க-வுடன் உரசல் போக்கையும் கடைப்பிடித்தனர். கடைசியில் இவர்கள் ஆசையிலும் வெந்நீர் ஊற்றிவிட்டார் ரஜினி.

ஜனவரியில் நடக்கவிருக்கும் தே.மு.தி.க பொதுக்குழு, செயற்குழுவில் கூட்டணி குறித்து அறிவிக்கவிருக்கிறார் விஜயகாந்த். அப்போது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக்கொண்டு, அவர்கள் தரும் சீட்களை பெற்றுக்கொள்வதே அந்தக் கட்சிக்கான வாய்ப்பாக இருக்க முடியும். ஏற்கெனவே விஜயகாந்தின் உடல்நிலையால் கட்சி பலவீனம் அடைந்திருக்கும் நிலையில், தொண்டர்களும் நிர்வாகிகளும் சோர்ந்துபோயிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் சிறிதும் பெரிதுமாக அந்தக் கட்சி நிர்வாகிகள் மாற்றுக்கட்சியில் இணைந்துவருகிறார்கள். வடசென்னை தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் மதிவாணன் தி.மு.க-வில் இணைந்துவிட்டார். திக்குத் தெரியாமல் தேங்கியிருக்கிறது கட்சி” என்றார்கள்.

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

தளராத கமல்

திரைத்துறையில் இருவேறு ஆளுமைகளாக பரிணமித்தாலும், தேர்தல் களத்தில் ரஜினியுடன் சேர்ந்தே களமாடலாம் என்கிற ஆசையிலிருந்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். அதேநேரத்தில், ‘பா.ஜ.க முகமாக வரும் ரஜினியுடன் கரம் கோத்தால், அது மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணாக அமைந்துவிடும்’ என்று ஆலோசகர்கள் அளித்த ஆலோசனையும் கமலை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. இப்போது, ரஜினியின் முடிவால் தெம்பாகியிருக்கிறாராம் கமல்.

இது குறித்து நம்மிடம் பேசிய ம.நீ.ம நிர்வாகிகள் சிலர், “பா.ஜ.க-வின் குரலாக ஆன்மிக அரசியலை ரஜினி முன்னெடுத்ததுதான் கமலுக்கு நெருடலை ஏற்படுத்தியது. இப்போது அந்த நெருடல் நீங்கிவிட்டது. புதுக்கோட்டையில் பிரசாரம் செய்யச் சென்ற கமல் மனம் தளராமல், ‘நண்பர் என்கிற முறையில் நிச்சயமாக ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்’ என்றார். சென்னைக்குத் திரும்பியதும் ரஜினியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிப்பதுடன், தனது அரசியல் பயணத்துக்கும் ஆதரவு கேட்பார். தவிர, ரஜினி மக்கள் மன்றம் மூலம் 68,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரஜினி தனக்கு ஆதரவளித்தால், இந்த பூத் கமிட்டிகளையும் வசப்படுத்திவிட முடியும் என்பது எங்கள் தலைவரின் திட்டம். அதற்கான முயற்சியில் தளராமல் ஈடுபட்டுள்ளார் அவர்” என்றார்கள்.

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

இதுபோக, ரஜினியுடன் கூட்டணி அமைக்கப் போவதில் நம்பிக்கையாக இருந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரனும் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டுவிட்டார். ‘ரஜினியின் வரவால் அ.தி.மு.க-வின் வாக்குகளில் பெரும் சரிவு ஏற்படும்; அதன் மூலம் தன்னுடைய ‘கிராஃப்பை’ ஏற்றிக்கொள்ளலாம்’ என்று திட்டமிட்டிருந்தவரின் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. குக்கர் சின்னம் கிடைத்து விட்டதால், தனித்துப் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் தினகரன். இன்னொரு பக்கம் ‘மராட்டியனா... மானத்தமிழனா?’ என்று போர்ப் பிரகடனம் அறிவித்த சீமானும் தன் ரூட்டை மாற்றிக்கொண்டு, ‘தமிழரா... திராவிடரா?’ என்று தி.மு.க-வைத் தாக்க ஆரம்பித்திருக்கிறார்.

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

எடப்பாடி ஹேப்பி... ஸ்டாலின் ரிலாக்ஸ்!

இவர்கள் இப்படியென்றால்... பிரதான கழகங்களில் இன்ப ரேகைகள் தென்படுகின்றன. அ.தி.மு.க முகாமில் ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ என்று சொல்லாததுதான் பாக்கி. பொதுவாகவே அரசியல் வட்டாரத்தில் முதல்வர் பழனிசாமியை ‘லக்கி மேன்’ என்பார்கள். செங்கோட்டையனுக்குச் செல்ல வேண்டிய முதல்வர் பொறுப்பு அவரைத் தேடிவந்தது. தண்ணீர் பஞ்சம் ஏற்படாதவாறு மழை காப்பாற்றியது. சி.ஏ.ஏ போராட்டம் நெருக்கடி கொடுத்தபோது, கொரோனா பரவி போராட்டத்தை முடக்கியது. ரெய்டுகள், ஊழல் புகார்கள் காலைச் சுற்றினாலும் அவரை எந்த ஆபத்தும் நேரடியாக நெருங்கவில்லை. இப்போது, ரஜினியின் அறிவிப்பால் மீண்டும் ஒரு ஜாக்பாட் எடப்பாடிக்கு அடித்திருக்கிறது.

குறிப்பாக, பா.ஜ.க-வின் குடைச்சல் குறையலாம். கூட்டணிக் கட்சிகளும் சத்தமில்லாமல் அடங்கிப்போக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. ‘நாம் சொல்வதைத்தான் இனி பா.ஜ.க கேட்க வேண்டும். பெரியண்ணன் வேலையை இனி பார்க்க முடியாது’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னாராம் எடப்பாடி. இனி, முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக்கொள்வதைவைத்து மட்டும்தான் கூட்டணிக் கட்சிகள் அ.தி.மு.க-வை நெருக்க முடியும். அதற்கும் கே.பி.முனுசாமி, ‘இருந்தால் இருங்கள்... இல்லையேல் வெளியேறுங்கள்’ என்று தீர்க்கமாக தெரிவித்து விட்டதால் ஹேப்பியாக இருக்கிறார் எடப்பாடி.

ரஜினியின் அரசியல் என்ட்ரியால் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் குடைச்சலைச் சந்தித்துவந்தார். ஒருபக்கம் அழகிரி தரும் அரசியல் சரவெடிகள், மற்றொருபுறம் அதிருப்தியிலிருக்கும் தி.மு.க நிர்வாகிகள் ரஜினி பக்கம் ஓடிவிடுவார்களோ என்கிற கலக்கம் எனத் தூங்காத இரவுகளை ஸ்டாலின் கடந்ததுதான் அதிகம். இப்போது, ரிலாக்ஸாக இருக்கிறாராம் ஸ்டாலின். ‘கட்சியிலிருந்து இனி யாரும் கழன்றுகொள்ளப்போவதில்லை. அழகிரி தனி இயக்கம் ஆரம்பித்தாலும் ரஜினி இல்லாததால், அது எடுபடாது’ என்று திடமாக நம்புகிறாராம்.

‘அரசியலுக்கு நான் வரவில்லை’ என்ற ரஜினியின் ஒற்றை அறிவிப்பு, பல்வேறு கட்சிகளின் கூட்டணிக் கணக்குகளையே தலைகீழாகத் திருப்பிப்போட்டிருக்கிறது. பா.ஜ.க-வின் அடுத்த காய்நகர்த்தல்களையொட்டி இனி அடுத்த திருப்பம் அரங்கேறலாம். ஆனால், ரஜினி இல்லாமல் அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism