Published:Updated:

நடையைக்கட்டும் தொண்டர்கள்... வேடிக்கை பார்க்கும் பிரேமலதா?

விஜயகாந்த், பிரேமலதா
பிரீமியம் ஸ்டோரி
விஜயகாந்த், பிரேமலதா

கட்சி ஆரம்பிச்ச காலத்துல இருந்த மாதிரி, `மக்கள் செல்வாக்கு ஆஹா ஓஹோனு இன்னமும் இருக்கு’ன்னு அண்ணி நம்பிக்கிட்டிருக்காங்க.

நடையைக்கட்டும் தொண்டர்கள்... வேடிக்கை பார்க்கும் பிரேமலதா?

கட்சி ஆரம்பிச்ச காலத்துல இருந்த மாதிரி, `மக்கள் செல்வாக்கு ஆஹா ஓஹோனு இன்னமும் இருக்கு’ன்னு அண்ணி நம்பிக்கிட்டிருக்காங்க.

Published:Updated:
விஜயகாந்த், பிரேமலதா
பிரீமியம் ஸ்டோரி
விஜயகாந்த், பிரேமலதா

`தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி நாங்கள்தான்’ எனப் பெரிய கட்சிகள் முதல் சட்டமன்றத்தில் தங்கள் கணக்கையே தொடங்காத சிறிய கட்சிகள் வரை மல்லுக்கட்டும் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது தமிழ்நாட்டு மக்களுக்கு. ஆனால், கட்சி தொடங்கி சில ஆண்டுகளிலேயே எதிர்க்கட்சியாக விறுவிறுவென உச்சத்தை எட்டிய கட்சி தே.மு.தி.க. அதே வேகத்தில் அடுத்தடுத்து தோல்விகளைக் கண்டபோதும், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் கட்சியைவிட்டு வெளியேறியபோதும், விஜயகாந்தின் ரசிகர்கள் ஆணிவேராக இருந்து கட்சியைப் பாதுகாத்துவந்தனர். ஆனால், தீவிர விஜயகாந்த் ரசிகர்களும், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் இப்போது கட்சியைவிட்டு விலகி மாற்றுக் கட்சிகளுக்கு நடையைக் கட்ட ஆரம்பித்திருப்பது தே.மு.தி.க வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது!

பிரேமலதா
பிரேமலதா

தே.மு.தி.க தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தபோதே, அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். கட்சியின் அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளராக இருந்த சுந்தர்ராஜன், எம்.எல்.ஏ-க்களாக இருந்த நடிகர் அருண் பாண்டியன், மாஃபா பாண்டியராஜன், சந்திரக்குமார், சேலம் பார்த்திபன் என முன்னணி நிர்வாகிகள் பலர் வெவ்வேறு காலகட்டங்களில் கட்சியிலிருந்து விலகியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்புகூட மாநில மாணவரணிச் செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால் உள்ளிட்டோர் வெளியேறினர். முன்னணி நிர்வாகிகள் வெளியேறும்போதெல்லாம், `பதவிக்காக வந்தவர்கள் விலகிப்போகிறார்கள். கேப்டனின் உண்மையான தொண்டர்கள் கட்சியில் அப்படியே இருக்கிறார்கள்’ என விமர்சிப்பார் பொருளாளர் பிரேமலதா. ஆனால், இப்போது கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களும்கூட விரக்தியாகக் கட்சியைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ‘இதையும் வழக்கம்போல வெறுமனே வேடிக்கை பார்க்கத்தான் போகிறாரா பிரேமலதா?’ என்று கொதிக்கிறார்கள் அதிருப்தியிலிருக்கும் தே.மு.தி.க-வினர்.

இது குறித்து, நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், ``2021 சட்டமன்றத் தேர்தலாகட்டும், அதற்கடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தல்களாகட்டும்... கட்சியிலிருந்து எங்களுக்கு எந்த உதவியும் செய்யப்படலை. விருப்ப மனுவுக்கு மட்டும் பணம் வசூலிச்சுக்கறவங்க, பிரசாரத்துக்குக்கூட வர்றது இல்லை. எல்லா இடத்துக்கும் பிரசாரத்துக்கு வரணும்னு நாங்க சொல்லலை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல சில முக்கியமான இடங்களுக்காவது அண்ணியாரோ, முக்கிய நிர்வாகிகளோ வந்திருக்கணும். நாங்களே பணம் செலவழிச்சு... நாங்களே எங்களுக்காக பிரசாரம் செஞ்சு... தேர்தல் முடிவுகளும் படுமோசமா வந்து... தொண்டர்கள் கடுமையா சோர்ந்துபோயிட்டாங்க. மாவட்டச் செயலாளர்கள்கிட்ட இது குறித்து கீழ்மட்ட நிர்வாகிகள் புகார் செஞ்சா, `கேப்டனுக்காகக் கட்சியில இருந்தா இருங்க. இல்லைன்னா வேற கட்சிக்குப் போய்க்கோங்க. கட்சித் தலைமை எங்ககிட்டயும் இதைத்தான் சொல்றாங்க’னு சொல்றாங்க.

கட்சி தொடர்ச்சியா பல தேர்தல்கள்ல தோல்வியைச் சந்திச்சபோதும்... எம்.எல்.ஏ-க்கள், முக்கிய நிர்வாகிகள்னு பலர் கட்சியைவிட்டுப் போனபோதும்கூட கேப்டனுக்காகப் பலர் கட்சியில இருந்தாங்க. ஆனா, இப்போ அந்த அடிமட்டத் தொண்டர்கள், கீழ்மட்ட நிர்வாகிகளும்கூட கட்சியைவிட்டு கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க. கட்சியில எந்தப் பொறுப்புலயும் இல்லாத, கேப்டனோட மகன் விஜய பிரபாகரன், அவரோட சொந்தத் தேவைக்காக ஏற்காட்டுக்குப் போனாகூட அதுக்குக் கட்சி நிர்வாகிகள் செலவு செஞ்சு வரவேற்பு கொடுக்க வேண்டியிருக்கு. காசு ஒருபக்கம் போனாக்கூட போயிட்டுப்போகுது. எங்க பிரச்னை என்ன, ஏதுன்னு கேக்குறதில்லை. நம்பிக்கையா நாலு வார்த்தைகளைக் கட்சித் தலைமை பேசுறதில்லை.

கட்சி ஆரம்பிச்ச காலத்துல இருந்த மாதிரி, `மக்கள் செல்வாக்கு ஆஹா ஓஹோனு இன்னமும் இருக்கு’ன்னு அண்ணி நம்பிக்கிட்டிருக்காங்க. உதயநிதி பாணியில, கேப்டன் பையன் சண்முகப்பாண்டியனை சினிமாவுல பெரிய ஸ்டாராக்கி, அதன் மூலமா கட்சியை வளர்த்துடலாம்னு பகல் கனவு காணுறாங்க. அவர் என்னைக்கு ஸ்டாராகி... என்னைக்குக் கட்சியை வளர்த்து... கட்சியில எல்லாம் டயர்டாகிட்டாங்க. அண்ணியாரே பல நிர்வாகிகளை ‘நீங்க போய் தி.மு.க-வுல சேர்ந்துக்கோங்க’னு சொன்னதாகவும் தகவல் வருது. எந்த நம்பிக்கையில இனி இந்தக் கட்சியில இருக்க முடியும் சொல்லுங்க?’’ என்கிறார்கள் வருத்தமாக.

விஜயகாந்த், பிரேமலதா
விஜயகாந்த், பிரேமலதா

சமீபத்தில், சேலம் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் பலர், அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி அ.தி.மு.க-வில் இணைந்திருக்கின்றனர். அவர்களிடம் பேசினோம். ``எங்க பணமும் போயி... எங்க உழைப்பும் போயி... கடைசியாத்தான் இந்த முடிவை எடுத்திருக்கோம். கட்சி மாறினாலும்கூட கேப்டனை இன்னும் வாழும் கடவுளாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கோம். கேப்டன் ஆக்டிவ்வா இருந்த காலத்துல அவரைப் பார்க்கப் போயி, அவர்கிட்டயே பஸ்ஸுக்குக் காசெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம். ஆனா, கட்சியில இப்போ நிலைமையே வேற. ஒரு காலத்துல தே.மு.தி.க-வோட கோட்டையா இருந்த சேலம் மாவட்டத்துல, இப்போ ஒட்டுமொத்தமாவே 300 நிர்வாகிகள்கூட இருக்க மாட்டாங்க. சமீபத்துலகூட மாவட்டத் துணைச் செயலாளர் பொறுப்புல இருந்தவர், பா.ஜ.க-வுல போய் இணைஞ்சுட்டாரு. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல 60 வார்டுல நிறுத்தக்கூட கட்சியில ஆள் இல்லை. தே.மு.தி.க-வுல இருக்கும்போது, கட்சித் தொண்டர்களைக் `கூட்டத்துக்கு வாங்கப்பா’ன்னு கூப்பிட்டா, ‘அட ஏன்ணே நேரத்தை வீணாக்கிட்டு’னு கடந்து போயிடுவாங்க. `வாங்க கட்சி மாறலாம்’னு கூப்பிட்டவுடனே, எல்லா நிர்வாகிகளும் வந்துட்டாங்க. இன்னும் பலர் அ.தி.மு.க-வுல சேர்றதுக்கு பேச்சுவார்த்தைகள் நடந்துக்கிட்டு இருக்கு. கட்சி எப்படிப் போனாலும் பரவாயில்லை, தான் கட்சியோட பொதுச்செயலாளர் ஆகணும். பையன் விஜய பிரபாகரனை இளைஞரணிப் பொறுப்புக்குக் கொண்டுவந்துடணுங்கிறது மட்டும்தான் அண்ணியோட நினைப்பா இருக்கு. ஆனா, கட்சியில யாருமே இல்லாம, அந்தப் பொறுப்புக்கு இவங்களெல்லாம் வந்து என்ன பண்ணப்போறாங்கன்னு தெரியலை’’ என்றார்கள்.

இந்த விவகாரம் குறித்து, தே.மு.தி.க துணைப் பொதுச்செயலாளர், பார்த்தசாரதியிடம் பேசினோம். ``எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் மாற்றுக் கட்சிகளில் இணையவில்லை. எங்கள் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் இணைந்துவருகிறார்கள். கட்சியின் உண்மையான தொண்டன் கட்சியைவிட்டு ஒருபோதும் போக மாட்டான். கட்சியின், நகர, ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் தலைமைக் கழகத்தில் நடந்துவருகிறது. நிர்வாகிகள் எல்லோரும் மிகவும் உற்சாகமாகக் கலந்துகொள்கிறார்கள்’’ என்றார்.

நமக்கும் அவர்களைப் பார்க்க வேண்டும்போலிருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism