அரசியல்
Published:Updated:

தொடர் தோல்விகள்... கொதிப்பில் நிர்வாகிகள்... பொதுச்செயலாளர் கனவில் பிரேமலதா!

பிரேமலதா விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரேமலதா விஜயகாந்த்

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சிலர் இது குறித்துப் பேசினார்கள். விஜயகாந்த் நிறுவனத் தலைவராக இருக்கிறார், நீங்கள் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என பிரேமலதாவிடம் சொன்னார்கள்.

கட்சி தொடங்கப்பட்டு, ஐந்தே ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக அமர்ந்து, அடுத்த ஐந்தாண்டுகளில் அதலபாதாளத்துக்குச் சென்ற கட்சி என்றால் அது தே.மு.தி.க மட்டும்தான்!

2011, 2016 சட்டமன்றத் தேர்தல்கள், 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்கள் எனத் தொடர்ச்சியாக நான்கு தேர்தல்களிலும் பெரிய எதிர்பார்ப்புக்குள்ளான கட்சி தே.மு.தி.க. ‘பழம் நழுவிக்கொண்டிருக்கிறது; பாலில் விழும்’ என்று கருணாநிதியே தே.மு.தி.க-வுடனான கூட்டணிக்குக் காத்திருந்த காலமெல்லாம் உண்டு. தற்போதைய நிலைமையோ தலைகீழ். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் தோல்வியை மட்டுமே கண்டுகொண்டிருக்கிறது தே.மு.தி.க. ‘நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முன்வராமல் கட்சியினர் பின்வாங்கிச் செல்கிறார்கள். இந்த நிலையிலும், கட்சியைப் பழையநிலைக்கு மீட்பதைப் பற்றிச் சிந்திக்காமல், பொதுச்செயலாளர் பதவியை நோக்கிக் காய்நகர்த்தி வருகிறார் பிரேமலதா’ என்று பொருமுகிறார்கள் விஜயகாந்தின் விசுவாசிகள்!

தொடர் தோல்விகள்... கொதிப்பில் நிர்வாகிகள்... பொதுச்செயலாளர் கனவில் பிரேமலதா!

“தோல்விக்குக் காரணம் பிரேமலதாதான்!”

இது குறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் சிலர், “2011-ல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றோம். அதே ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களைப் பெற்றோம். கட்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், என்றைக்கு விஜயகாந்தின் உடல்நிலை நலிவடைந்ததோ, அன்று முதல் கட்சியும் நலிவை நோக்கிச் சென்றது. இருந்தபோதும், கட்சியின் வாக்குவங்கியின் பலத்தால் தி.மு.க-விடமிருந்து 2014 நாடளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும், 2019 நாடளுமன்றத் தேர்தலிலும் கூட்டணிக்கான அழைப்பு வந்தது. முடிவெடுக்கும் இடத்திலிருந்த விஜயகாந்த்துக்கு முடியாமல் போகவே, மறைமுகமாகக் கட்சியின் கன்ட்ரோலைக் கையிலெடுத்துக்கொண்டார் பிரேமலதா. கட்சி நிர்வாகிகள் சிலர் தவறான தகவல்களை அவருக்குக் கொடுக்கவே, எக்குத்தப்பான முடிவுகளை எடுத்து கட்சியை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டார் பிரேமலதா. எந்தக் கட்சி, சட்டமன்றத்தில் எங்கள் கேப்டனை அவமானப்படுத்தியதோ, எந்தக் கட்சி தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களை அவர்கள் பக்கம் இழுத்ததோ, அதே அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தார். நிர்வாகிகள், தொண்டர்கள் என ஒருவருக்கும் இது பிடிக்கவில்லை.

2019-ல் பா.ஜ.க-அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே, குடும்பத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையிலான மனக்கசப்பால், பிரேமலதாவுக்குப் போட்டியாக ஒரு டீமை துரைமுருகன் இல்லத்துக்கு அனுப்பி, பேச்சுவார்த்தை நடத்தினார் சுதீஷ். இந்த இரட்டை மனநிலைதான் தே.மு.தி.க-வுக்கான சீட் ஒதுக்கீட்டைக் குறைத்தது. அதைத் தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுமே தே.மு.தி.க-வை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. காரணம், கட்சி தன் நம்பகத்தன்மையை இழந்ததுதான். தேவையின்றி அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, இருந்த கொஞ்சநஞ்சப் பெயரையும் கெடுத்துவிட்டார் பிரேமலதா. கட்சியை நடத்த ‘தேவையானது கிடைத்தால் போதும்’ என்று செயல்பட்ட பிரேமலதாவால்தான் தொடர்ச்சியாகத் தோல்வியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த வெறுப்பினால்தான் நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கட்சியைவிட்டு விலகிச் செல்கின்றனர்.

தொடர் தோல்விகள்... கொதிப்பில் நிர்வாகிகள்... பொதுச்செயலாளர் கனவில் பிரேமலதா!

“பொதுச்செயலாளர் பதவியைத் தனதாக்கிக்கொள்ளப் பார்க்கிறார்!”

விஜயகாந்த் எனும் பிம்பம்தான் கட்சியின் பலம், அவரை முன்னிறுத்தினால்தான் தொண்டர்கள் ஒன்றுகூடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்ட பிரேமலதா, 2022 புத்தாண்டு அன்று விஜயகாந்த்தை கோயம்பேடு தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தொண்டர்களையும் ஒன்றுகூட வைத்தார். அந்நிகழ்வில், சபரிமலைக்கு மாலைபோட்டிருக்கும் ஒரு நிர்வாகி, ‘இதோ... ஐயப்பனை நேரில் பார்த்துவிட்டேன்... இனி சபரிமலைக்குக்கூடப் போக வேண்டியதில்லை’ என்று கண்கலங்கினார். இதுதான், விஜயகாந்த் மீதான தொண்டர்களின் பாசத்துக்கு எடுத்துக்காட்டு. இப்படியான தொண்டர்களை இழப்பது கட்சிக்கு நல்லதல்ல. ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டும்போது, சிலரைக்கொண்டு “அண்ணி... நீங்களே கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்லவைக்கிறார். தற்போதும்கூட, அதற்கான ஏற்பாடுகளில்தான் ஈடுபட்டுவருகிறார்.

இரண்டு முறை தனித்தனியாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சி சோபிக்கவேயில்லை. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் நிர்வாகிகள் தயாரில்லை. ஆனால் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும் வகையில், பொதுச்செயலாளர் பதவியைத் தனதாக்கிக்கொள்ள முடிவெடுத்துவிட்டார் பிரேமலதா. விஜயகாந்த்தை நிறுவனத் தலைவராக மட்டும் வைத்துக்கொண்டு, கட்சியின் அறிக்கைகளை மட்டும் அவர் பெயரில் வெளியிட்டு, மற்றபடி முக்கிய முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொள்ள நினைக்கிறார் பிரேமலதா. முதலில் ‘செயல் தலைவர்’ என்ற பதவியை உருவாக்கி, அதில் அமரும் எண்ணத்தில்தான் இருந்தார். அது, தி.மு.க பாணியைப் பின்பற்றியதுபோலாகிவிடும் என்பதால், நேரடியாகப் பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற திட்டத்திலிருக்கிறார். பிரசார வலிமையோ, அனுசரித்துச் செல்லும் மனப்பாங்கோ இவருக்கு இல்லை. தலைவர் இருக்கும்போது, இவர் இப்படி முடிவெடுப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றனர்.

தே.மு.தி.க மாநிலத் துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது, “மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சிலர் இது குறித்துப் பேசினார்கள். விஜயகாந்த் நிறுவனத் தலைவராக இருக்கிறார், நீங்கள் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என பிரேமலதாவிடம் சொன்னார்கள். “அதற்கெல்லாம் இப்போது அவசரமில்லை” என்றார் பிரேமலதா. நீங்கள் சொன்னதெல்லாம் மாவட்டச் செயலாளர்களின் சொந்தக் கருத்துதானே தவிர, பிரேமலதாவின் கருத்தல்ல. கட்சியின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார் பிரேமலதா. மேலும், தலைவர் விஜயகாந்த்துக்குப் பேசவும் நடக்கவும் மட்டுமே சிரமமாக இருக்கிறதே தவிர, மற்றபடி நலமாகத்தான் இருக்கிறார். எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார், தினமும் செய்தி பார்க்கிறார், அதனால், தலைவர் முடிவுதான் இதில் இறுதியானது” என்றார்.

முரசை முறையாகக் கொட்டாவிட்டால், ஒலி எழாது என்பதை பிரேமலதா புரிந்துகொள்ள வேண்டும்!