சமூகம்
Published:Updated:

காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு... பிரேமலதாவின் புத்தாண்டுத் திட்டம்!

விஜயகாந்த், பிரேமலதா
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயகாந்த், பிரேமலதா

`ரெண்டு ஆட்டுல ஊட்டுற குட்டி, திண்டாட்டத்துலதான் போகும்’ என்பது மாதிரி ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி பேசி நம்பகத்தன்மையைக் கெடுத்துவிட்டார்கள்

`தேர்தலுக்குத் தேர்தல் தேய்ந்து, வாக்கு சதவிகிதத்தையும் பறிகொடுத்துவிட்ட தே.மு.தி.க., சமீபகாலமாக தமிழக அரசியல் ‘சீன்’-லேயே இல்லை. மற்ற கட்சிகளெல்லாம் மக்களவைத் தேர்தலுக்காக இப்போதே களமாடத் தொடங்கிவிட்டாலும், தே.மு.தி.க-வின் பக்கமோ அமைதியோ அமைதி. விஜயகாந்த் பெயரில் சமூக வலைதளங்களில் வரும் அறிக்கைகளைத் தாண்டி கட்சியில் எந்த அசைவும் இல்லை.

இந்த நிலையில், தே.மு.தி.க-வின் தற்போதைய நிலை, எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்த விசாரணையில் இறங்கினோம்!

காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு... பிரேமலதாவின் புத்தாண்டுத் திட்டம்!

`அலுவலகமா `சந்திரமுகி’ பட அரண்மனையா?’

தே.மு.தி.க தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேடு சாலை, மக்கள் கூட்டம், வாகனங்கள் சத்தம் என பரபரத்துக்கிடக்க... கட்சி அலுவலகத்திலோ மயான அமைதி. கட்டடச் சுவர்களில் வரையப்பட்டிருந்த விஜயகாந்த்தின் ஓவியங்கள் சாயமிழந்து, உதிர்ந்து கட்சியின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தன. சீலிங் பல்புகள் அணைக்கப்பட்டு, பகலிலும் இருண்டுபோய், ஆளரவமின்றி கிடந்த கட்சி அலுவலகம், ‘சந்திரமுகி’ படத்தின் அரண்மனையை ஞாபகப்படுத்தியது.

பலமுறை குரல் கொடுத்தும், கைகளால் தட்டி ஓசை எழுப்பியும் கேட்பார் யாருமில்லை. மாடி அறையில் சிறிது வெளிச்சம் வர அங்கு நுழைந்தோம். ‘சந்திரமுகி’யில் தனியே வெள்ளையடிக்கும் கோவாலு கணக்காக `ஒரேயொருத்தர்’ கணினியில் வேகமாகத் தட்டச்சு செய்துகொண்டிருந்தார். கட்சி நிர்வாகி என நினைத்து நாம் பேச, ``உட்கட்சித் தேர்தல்ல தேர் வானவங்க பெயர்ப் பட்டியலை டைப் பண்ண வந்த பார்ட் டைம் டேட்டா என்ட்ரி ஆளு சார் நானு... சீக்கிரமே நானும் கிளம்பிவிடுவேன்” என்றார்.

காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு... பிரேமலதாவின் புத்தாண்டுத் திட்டம்!

`கேப்டன் ஒருத்தருக்காகத்தான் கட்சியில் இருக்கிறோம்!’

அலுவலகத்தைவிட்டு வெளியில் வந்த பிறகு, தே.மு.தி.க-வின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிலரிடம் அலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினோம். ``கேப்டனுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோதே, கட்சியில் உயிரோட்டம் இல்லாமல் போய்விட்டது. அதன் பிறகு, ‘அண்ணியார்’ பொறுப்புக்கு வந்து, கூட்டணி விஷயத்தில் எடுத்த முடிவெல்லாம் தப்பாகப் போய்விட்டன. `ரெண்டு ஆட்டுல ஊட்டுற குட்டி, திண்டாட்டத்துலதான் போகும்’ என்பது மாதிரி ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி பேசி நம்பகத்தன்மையைக் கெடுத்துவிட்டார்கள். தனித்து நின்று 8%, 10% வாக்கு வாங்கிய கட்சி இப்போது தொண்டர்களின் அதிருப்தி, நிர்வாகிகளின் துரோகம், தவறான கூட்டணி, கேப்டனின் உடல்நிலை போன்ற காரணங்களால் 0.4%-க்கும் கீழே போய், கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. பாதியில் வந்து சேர்ந்தவர்களெல்லாம், இனிமே இங்கே எதுவும் தேறாது என்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டார்கள். ஆனால், ரசிகர் மன்ற ஆட்கள் மட்டும் உறுதியோடு இருக்கிறோம். அதுவும் கேப்டன் ஒருத்தருக்காகத்தான்” என விரக்தி கலந்த குரலில் விசுவாசத்தைக் காட்டினர்.

காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு... பிரேமலதாவின் புத்தாண்டுத் திட்டம்!

`தலைமைக் கழகத் தேர்தலுக்குப் பிறகு எல்லாம் மாறும்!’

கட்சியின் நிலை குறித்து தே.மு.தி.க துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் பேசினோம். ``தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு நிகராக எல்லா இடங்களிலும் தே.மு.தி.க-வுக்கான கிளை, பூத் கமிட்டிகள் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. போஸ்டர், பேனர்களெல்லாம் விலையேறிப்போய்விட்டதாலும், கட்சித் தொண்டர்கள் வேலை, குடும்பத்தைப் பார்ப்பதில் கவனம் செலுத்துவதாலும் தே.மு.தி.க-வில் செயல்பாடுகளே இல்லாததுபோல வெளியில் தெரிகிறது. தற்போது கட்சியை மீண்டும் வலுப்படுத்தும்விதமாக, 79 மாவட்டங்களுக்கும் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை வரை அனைத்துப் பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து, மாவட்டவாரியாக அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறோம்.

மீதமிருப்பது தலைமைக் கழகத் தேர்தல்தான். தலைவர், பொதுச்செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர், கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் நான்கு துணைச் செயலாளர்கள் என மொத்தம் ஒன்பது பதவிகளுக்கான தலைமைக் கழகத் தேர்தல், புத்தாண்டுக்குப் பிறகு நடத்தப்படும். அதன் பிறகு, பொதுக்குழு கூட்டி முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார். `யாருக்கெல்லாம் பதவி வழங்க வாய்ப்பிருக்கிறது?’ என்ற கேள்விக்கு,``அதை தலைவர் விஜயகாந்த்தான் முடிவுசெய்வார். ஆனால், தம்பிக்கு (விஜய பிரபாகரன்) பதவி வழங்குவது உறுதி” என முடித்துக்கொண்டார்.

காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு... பிரேமலதாவின் புத்தாண்டுத் திட்டம்!

களமிறங்கும் வாரிசு!

புதிய பதவிகள் குறித்து தே.மு.தி.க மேல்மட்டத்தில் விசாரித்தோம். ``நிறுவனத் தலைவர் பதவி எப்போதுமே விஜயகாந்த்திடம் இருக்கும். பொதுச்செயலாளர் அல்லது செயல் தலைவர் பொறுப்பை பிரேமலதா ஏற்பார். பொருளாளர் பதவி சுதீஷுக்குக் கொடுக்கப்படலாம். மகன் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், `போதிய அனுபவம் இல்லை; கேப்டனின் மகன் என்ற பொறுப்பே போதும்’ எனக் கூறி அவர் தயக்கம்காட்டிவந்தார். கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்ட அனுபவத்தாலும், அங்கு கிடைக்கும் வரவேற்பாலும் உற்சாகம் அடைந்திருக்கும் அவர், இப்போது பதவியை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார். மேலும், தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க என முக்கியக் கட்சிகளெல்லாம் தொடர்ச்சியாக வாரிசுகளைக் களமிறக்கியிருக்கும் இந்தச் சூழலில் இவருக்குப் பதவி கொடுத்தால் பெரிதாக விமர்சனம் வராது என பிரேமலதாவும் கருதுகிறார். எனவே, மாநிலம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து, இளைஞர்களைப் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கும் வகையில் விஜய பிரபாகரனுக்கு ‘மாநில இளைஞரணித் தலைவர்’ பதவி கொடுக்கப்படவிருக்கிறது” என்றனர்.

காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு... பிரேமலதாவின் புத்தாண்டுத் திட்டம்!

மேலும், “புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே `தே.மு.தி.க 2.0’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறார் பிரேமலதா. 2023-ம் ஆண்டு, மார்ச் முதல் 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தமிழ்நாடு முழுவதும் தனது மகன் விஜய பிரபாகரனுடன் `மக்கள் சந்திப்புப் பயணம்’ மேற்கொள்ளவிருக்கிறார். நான்கு மண்டலங்களிலும் மாநாடுகளை நடத்தும் திட்டமும் இருக்கிறது. கூட்டத்தைக் திரட்டி, தே.மு.தி.க-வுக்கு இன்னமும் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று காட்டினால்தான், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க போன்ற கட்சிகளின் கூட்டணிப் பார்வை தங்கள்மீது விழும் என்பதாலேயே இந்த ஏற்பாடு” என்கிறார்கள்!

கூட்டணிக்கு தே.மு.தி.க தயாராகலாம். அதைச் சேர்த்துக்கொள்ள யார் முன்வருவார்கள் என்பதே கேள்வி!