Published:Updated:

டெல்லி அரசியல்... கோட்டை விடுகிறதா தி.மு.க?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

உங்களால் ஒரு அமைச்சரிடம்கூட நேரம் வாங்க முடியவில்லையா?” என்று எம்.பி-க்களிடம் கடுகடுத்துள்ளார்.

“நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகள் சார்பில் அழுத்தம் கொடுப்போம்” என்று முழங்குகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஆனால், டெல்லியில் தமிழக எம்.பி-க்கள் குழுவை இரண்டு வாரங்களாகச் சந்திக்காமல் பாராமுகம் காட்டிவருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதை முன்வைத்து, `மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளி தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல’ என்கிற குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

1951-ம் ஆண்டு, ‘கல்வி மற்றும் சமூகரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பளிக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்திய அரசியலமைப்புப் பிரிவு 15, 29(2) ஆகியவை தடுக்காது’ என்கிற இந்திய அரசியல் அமைப்பின் முதல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் குமாரசாமி ராஜா தலைமையில், தமிழக அமைச்சர்கள் குழு டெல்லிக்குச் சென்று பிரதமர் நேருவிடம் அழுத்தமான வாதங்களை வைத்த பிறகே இந்தச் சட்டத் திருத்தம் சாத்தியமானது. அப்போது மட்டுமல்ல... ‘அரசியல் தந்திர பூமி’ என்றழைக்கப்படும் டெல்லியின் அரசியல் அரங்கைப் பல நேரங்களில் அசைத்துப் பார்த்திருக்கிறது திராவிட இயக்கப் பிரதிநிதிகளின் வாதங்கள். குறிப்பாக அண்ணா, ஈ.வி.கே.சம்பத், நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், முரசொலி மாறன், வைகோ என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் தி.மு.க-வின் அரசியல் முகமாக டெல்லியில் தீவிரமாகச் செயல்பட்டார்கள். ஆனால், கடந்த பத்தாண்டுகளாகவே டெல்லியில் தி.மு.க எம்.பி-க்களின் குரல்கள் தேயத் தொடங்கிவிட்டன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

டெல்லி அரசியல்... கோட்டை விடுகிறதா தி.மு.க?

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக எம்.பி-க்கள் குழு அமித் ஷாவைச் சந்திக்க மூன்று முறை நேரம் கேட்டும், அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை உள்துறை அமைச்சகம். இந்தக்குழு முதலில் ஜனாதிபதியைத்தான் சந்திக்கத் திட்டமிட்டது. ஆனால், ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொள்ளச் சொன்ன பிறகே அமித் ஷாவைச் சந்திக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக ஒரு வாரத்துக்கு மேலாக முயற்சிகள் செய்தும் அமித் ஷா சந்திக்காததால், எம்.பி-க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அமித் ஷாவின் இந்தப் புறக்கணிப்பைக் கண்டித்து தமிழக முதல்வரும் அறிக்கை வெளியிட்டார். அதேசமயம், தி.மு.க கட்சிக்குள்ளேயும் இந்த விவகாரம் “டெல்லியில் அரசியல் செய்வதில் தி.மு.க எம்.பி-க்கள் தோல்வியடைந்துவிட்டனர்” என்கிறரீதியில் பெரிதாக வெடித்திருக்கிறது.

குறிப்பாக, அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினே, “உங்களால் ஒரு அமைச்சரிடம்கூட நேரம் வாங்க முடியவில்லையா?” என்று எம்.பி-க்களிடம் கடுகடுத்துள்ளார். இந்த விவகாரம் பற்றி கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்... “டெல்லியில் லாபி செய்வது சாதாரண விஷயமல்ல. சரளமான ஆங்கிலத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்தாலே, வட இந்தியத் தலைவர்களின் பார்வை நம் பக்கம் திரும்பும். அப்படித்தான் அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன், வைகோ ஆகியோர் செயல்பட்டார்கள். அன்றைக்குப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை ஒருமுறை வைகோ, “மிஸ்டர் ராஜீவ், எனக்கு பதில் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்” என்று கர்ஜித்தது நாடாளுமன்றத்தையே உலுக்கியது.

பிறகு கருணாநிதியால் டெல்லிக்கு அனுப்பப்பட்ட முரசொலி மாறன், தி.மு.க-வின் டெல்லி முகமாகவே மாறிப்போனார். அனைத்து தேசியக் கட்சித் தலைவர்களுடன் இணைக்கமான போக்கைக் கையாண்ட மாறன், தனது கட்சித் தலைமையால் மத்திய அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை, அந்தந்தத் துறையின் அமைச்சர்களையே நேரடியாகச் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்” என்றவர்கள், அதன் பிறகு தி.மு.க எம்.பி-க்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மந்தநிலை குறித்தும் விவரித்தார்கள்....

“ஆனால், காலப்போக்கில் டெல்லிக்குச் சென்ற தி.மு.க எம்.பி-க்கள் பலரும் அவர்கள் பேசும் விவகாரங்களில்கூட முழுமையான தரவுகள் இல்லாமல் தடுமாறினார்கள். மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.அழகிரி பல நாள்கள் நாடாளுமன்றத்துக்கே செல்லாமல் அவையின் மூத்தவர்கள் கண்டிப்புக்கு ஆளான நிலையெல்லாம் ஏற்பட்டது. இப்போது அமித் ஷா விவகாரத்தில் மட்டுமல்ல... ஏற்கெனவே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தி.மு.க எம்.பி-க்கள் சந்திக்க முயன்றபோதும், இதேபோல் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. தி.மு.க மீது எதிர்க்கட்சி என்கிற வகையிலும், சித்தாந்தரீதியாகவும் பா.ஜ.க வெறுப்பரசியல் செய்யலாம்தான்... அதேசமயம், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க-வை இந்த அளவுக்குப் புறக்கணிப்பது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகிறது. இனியேனும் டெல்லி அரசியலைக் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் வல்லமைகொண்டவர்களை தி.மு.க டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது” என்றார்கள்.

அதேசமயம், இதன் உள்விவகாரங்களை அறிந்தவர்களோ, “தி.மு.க தரப்பினர்மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருக்கின்றன. இன்னும் சில தி.மு.க முக்கியப்புள்ளிகளோ மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து தொழில் செய்கிறார்கள். அதனாலேயே டெல்லியில் தி.மு.க எம்.பி-க்களால் மத்திய அரசுக்கு எதிராகத் தீவிர அரசியல் செய்ய முடியவில்லை. இதேநிலை நீடித்தால், தமிழகத்தின் எந்தக் கோரிக்கையுமே டெல்லியில் எதிரொலிக்காது” என்றார்கள் எச்சரிக்கும் தொனியில்!

டெல்லியை நோக்கிக் கனவு காணும் கட்சிக்கு, டெல்லியில் அரசியல் செய்ய சரியான ஆளுமை இல்லையா அல்லது உட்கட்சிக் குழப்பங்கள்தான் இத்தனைக்கும் காரணமா என்பதே தி.மு.க தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது!