Published:Updated:

கூட்டணி குஸ்தி... அழகிரி அட்டாக் - திணறும் ஸ்டாலின்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

வைகோவின் கடுப்பு! - ஷாக் கொடுத்த திருமா!

கூட்டணி குஸ்தி... அழகிரி அட்டாக் - திணறும் ஸ்டாலின்!

வைகோவின் கடுப்பு! - ஷாக் கொடுத்த திருமா!

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்
‘‘2021-ம் ஆண்டு பிறந்துள்ளது, தி.மு.க 200 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் ஆண்டாக இது இருக்கப்போகிறது’’ என்று புத்தாண்டில் புத்துணர்வோடு அறிக்கை வெளியிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், அடுத்தடுத்த தினங்களில் கூட்டணிக் கட்சிகள் ஒரு பக்கம் சீட் பேர குஸ்தியில் இறங்க, மறுபக்கம் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் அழகிரி அட்டாக் செய்ய... அலறிக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் முகாம்!

வைகோவின் கடுப்பு!

டிசம்பர் 26 அன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். இந்தச் சந்திப்பிலிருந்துதான் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய இருதரப்புக்கும் நெருக்கமானவர்கள், “ஸ்டாலின் - வைகோ சந்திப்பின்போது, தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சு எழுந்தது. ‘நாங்கள் குறைந்தது 10 முதல் 15 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட் கொடுத்தீர்கள். அத்துடன், உதயசூரியன் சின்னத்தில் நிற்கவைத்தீர்கள். இந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்றால், ம.தி.மு.க என்றொரு கட்சி இருப்பதற்கே அர்த்தமில்லை’ என்று வைகோ சற்று உருக்கமாகவே பேசினார். ஓரிரு நிமிடங்கள் எதுவுமே பேசாமல் மெளனமான ஸ்டாலின், ‘அண்ணே, அவ்வளவு சீட் தர முடியாது. நாங்கள் கொடுக்கும் சீட்களிலும் பாதிக்குப் பாதி தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளரை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்ல... டென்ஷனாகிவிட்டார் வைகோ. உடனே இருக்கையிலிருந்து எழுந்தவர், ‘சரி, இதைப் பற்றிப் பிறகு பேசலாம்’ என்று சொல்லிவிட்டு, கையோடு கொண்டுவந்திருந்த துண்டுச்சீட்டை ஸ்டாலினிடம் கொடுத்து, ‘இதில் 25 தொகுதிகள் இருக்கின்றன. இந்தப் பட்டியலிலிருந்து எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைத் தந்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

அறிவாலயத்திலிருந்து வந்த பிறகு அவரது முகமே சரியில்லை... நெருக்கமானவர்களை போனில் அழைத்த வைகோ, ‘இந்த முறையும் நமது சொந்தச் சின்னத்தில் போட்டியிட விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஏற்கெனவே கட்சியை வளர்க்கப் படாதபாடு படுகிறோம். இப்படிச் செய்தால், கட்சியே காணாமல் போய்விடும்’ என்று உணர்ச்சிவசப்பட்டி ருக்கிறார். எதிர்முனையில் சிலர் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகே, ‘ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டியிடும்’ என்று தடாலடியாக அறிவித்து அறிவாலயத்துக்கு ஷாக் கொடுத்தார் வைகோ. வரும் சட்டமன்றத் தேர்தலில் தன் மகன் துரை வையாபுரியை நிற்கவைக்கத் திட்டமிட்டிருக்கிறார் வைகோ. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், மகனின் அரசியல் எதிர்காலம் சிக்கலாகிவிடும் என்று வருத்தப்படுகிறார் வைகோ” என்றார்கள் விரிவாக.

கூட்டணி குஸ்தி... அழகிரி அட்டாக் - திணறும் ஸ்டாலின்!

ஷாக் கொடுத்த திருமா!

இன்னொரு பக்கம், பா.ம.க-வை காரணம் காட்டியே வி.சி.க-வைத் தங்கள் விருப்பத்துக்குக்கேற்ப இழுத்துக் கொண்டிருந்தது தி.மு.க. ஆனால், இன்றைய அரசியல் சூழலில் பா.ம.க., தி.மு.க கூட்டணிக்குள் வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இது பற்றி நம்மிடம் பேசியவர்கள், ‘‘வட மாவட்டங்களில் பா.ம.க-வுக்கு டஃப் கொடுக்க, தனது கட்சியின் தயவு தி.மு.க-வுக்குத் தேவை என்று கணக்கு போடுகிறார் திருமாவளவன். அதேநேரம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் கற்ற பாடத்தையும் அவர் மறக்கவில்லை. இரண்டு சீட்டைக் கொடுத்துவிட்டு, கட்சியின் தலைவரையே வேறு சின்னத்தில் நிற்கச் சொல்லி, தி.மு.க தலைவர்கள் கொடுத்த அழுத்தம் இன்னமும் அவரது மனதில் வடுவாக இருக்கிறது. இந்த முறை பத்துக்கும் அதிகமான தொகுதிகளை திருமாவளவன் எதிர்பார்க்கிறார். அதேசமயம், தனிச் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். இதற்கு வாய்ப்பாக அமைந்தது வைகோவின் அறிவிப்பு. அவரது அறிவிப்பு வந்தவுடனேயே திருமாவளவனும், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும்’ என்று அறிவித்துவிட்டார்’’ என்றார்கள்.

அடுத்தடுத்து கூட்டணியிலுள்ள கட்சிகள் இப்படி அறிவிப்பு வெளியிட்டது தி.மு.க தலைமைக்கு உண்மையில் ஷாக்தான். `கடைசி நேரத்தில் நடத்த வேண்டிய பேரத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்களே...’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டது கட்சித் தலைமை.

முறுக்கிக்கொண்ட முஸ்லிம் கட்சிகள்!

வைகோ, திருமா ஆகியோர் தனிச் சின்னம் குறித்து பேசிய அன்றே, ‘ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசியைவைத்து தி.மு.க மாநாடு நடத்தப்போகிறது’ என்கிற செய்தி வெளியாக, அந்தக் கூட்டணியிலுள்ள முஸ்லிம் லீக் மற்றும் த.மு.மு.க ஆகிய கட்சிகளும் கடுப்பாகிவிட்டன. ‘‘ஐந்து வருடங்களாக உங்களுடன் கஷ்டத்தில் பங்கேற்றது நாங்கள். நீங்கள் நடத்திய போராட்டங்களில் கைகோத்துச் செயல்பட்டது நாங்கள். ஆனால், கடைசியில் அடுத்த மாநிலத் தலைவருக்குக் கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறீர்களா?’’ என்று இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே துரைமுருகனிடம் போன் போட்டு வெடித்திருக்கிறார்கள். ஷாக்கான துரைமுருகன், இந்த விவகாரத்தை உடனடியாக ஸ்டாலினிடம் கொண்டு போயிருக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய சிறுபான்மைக் கட்சிகளின் நிர்வாகிகள் சிலர், ‘‘தி.மு.க சிறுபான்மைப் பிரிவு சார்பில் ஜனவரி 6-ம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘இதயங்களை இணைப்போம்’ என்ற பெயரில் மாநாடு நடக்கிறது. மாநாடு நடத்தும் பொறுப்பு தி.மு.க சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் மஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பத்து நாள்களுக்கு முன்பாகவே மஸ்தான், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரிடம் மாநாட்டுக்கான அழைப்பை விடுத்துவிட்டார். அதன் பிறகு ஜனவரி 1-ம் தேதி ஆந்திராவுக்குச் சென்று ஒவைசியைச் சந்தித்து, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் மஸ்தான். ஒவைசியும், ‘உங்கள் தலைவர் ஸ்டாலினை என்னிடம் பேசச் சொல்லுங்கள். நான் மாநாட்டுக்கு வருகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

ஆர்வக்கோளாறில் இந்த விவரங்களையெல்லாம் புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மஸ்தான் பதிவிட, மறு நிமிடமே சர்ச்சை வெடித்துவிட்டது. ‘ஒவைசிக்கு அழைப்பு’ என்பதைவிட, அவரை மட்டுமே வைத்து தி.மு.க மாநாட்டை நடத்தப்போகிறது என்று செய்தி பரவியது. இந்தத் தகவல்களெல்லாம் ஸ்டாலினின் கவனத்துக்கு வந்தவுடன், ‘இரண்டு முஸ்லிம் கட்சிகளிடமும் தி.மு.க தரப்பு நல்ல உறவில் இருக்கிறது. தேவையில்லாமல் ஒவைசியை அழைத்து உறவுக்குள் உரசலை ஏற்படுத்திவிட்டார் மஸ்தான்’ என்று கட்சி நிர்வாகிகளிடம் கடுகடுத்தவர், மஸ்தானைவைத்தே ‘ஒவைசியை மாநாட்டுக்கு அழைக்கவில்லை’ என்று அறிக்கையும் வெளியிடவைத்தார். மறுபுறம் ஒவைசியும், ‘மாநாட்டுக்கு நான் வருகிறேன் என்று சொல்லவில்லை. அவர்களாகவே அழைத்துவிட்டு இப்போது வர வேண்டாம் என்று சொல்கிறார்கள்’ என்று தனது கட்சியின் தமிழக நிர்வாகிகளிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்’’ என்றார்கள்.

தி.மு.க கூட்டணியில் இதுவரை அமைதியாக இருந்துவந்த ஐ.ஜே.கே கட்சியும், தங்கள் பங்குக்கு கம்பு சுற்றியுள்ளது. ‘ஆறு தொகுதிகளை எதிர்பார்க்கிறோம்’ என்று தடாலடியாக ஸ்டேட்மென்ட்விட்டு ஸ்டாலினைப் பதறவைத்திருக்கிறார் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து. ‘ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை மட்டுமே ஐ.ஜே.கே கட்சிக்கு ஒதுக்குவது’ என்று தி.மு.க திட்டமிட்டிருந்த நிலையில் ரவி பச்சமுத்துவின் இந்த ஸ்டேட்மென்ட் தி.மு.க-வுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். ‘‘கொடுப்பதை வாங்கிக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் நின்றால் கூட்டணியில் இருக்கட்டும். இல்லையென்றால் அவர்கள் வெளியே செல்லட்டும். எப்படியிருந்தாலும் தி.மு.க உறுப்பினராகவே பாரிவேந்தர் நாடாளுமன்றத்தில் தொடர முடியும்’’ என்று நக்கலாகச் சொல்கிறார்கள் தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகள்!

ஐபேக் அஸ்திரம்!

இத்தனை சர்ச்சைகள் தி.மு.க கூட்டணிக்குள் எழுவதற்கு முக்கியக் காரணமே ஐபேக் நிறுவனம்தான் என்று தி.மு.க-வினரே சொல்கிறார்கள். ‘‘ஆரம்பம் முதலே கூட்டணிக் கட்சிகளைக் கிள்ளுக்கீரையாகவே இந்த நிறுவனம் பார்த்துவருகிறது. சமீபத்தில் தலைவர் ஸ்டாலினிடம் ஒரு ரிப்போர்ட்டைக் கொடுத்தது ஐபேக். ‘எந்தெந்தத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டும்; அந்தத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சியில் யாரை நிறுத்தினால் சாதகமாக இருக்கும்; உதயசூரியன் நின்றால் பலம் என்ன?’ என்றெல்லாம் அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது, ‘நாம் கொடுக்கும் தொகுதியில்தான் கூட்டணிக் கட்சியினர் நிற்க வேண்டும்; நாம் சொல்பவர்களைத்தான் வேட்பாளராகவும் நிறுத்த வேண்டும்; அதற்கு மறுத்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்’ என்று தலைவருக்கு ஐபேக் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தத் தகவல் கூட்டணிக் கட்சிகளின் காதுக்கு எட்டிய பிறகே தி.மு.க-வுக்கு செக் வைக்கும் வேலைகளில் அந்தக் கட்சிகள் இறங்கியுள்ளன’’ என்கிறார்கள் இதன் உள்விவரம் அறிந்த உடன்பிறப்புகள்.

கூட்டணி குஸ்தி... அழகிரி அட்டாக் - திணறும் ஸ்டாலின்!

அழகிரி அட்டாக்!

கூட்டணிக் கட்சிகளின் குஸ்தி ஒருபக்கம் என்றால், மறுபக்கம் சொந்த அண்ணன் அழகிரியின் அட்டாக் ஸ்டாலினை மேலும் திணறவைத்திருக்கிறது என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள். ஜனவரி 3-ம் தேதி மதுரையில் அழகிரி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க தலைமையே எதிர்பார்க்காத வகையில், தொண்டர்கள் கூடினார்கள். கூட்டத்தில் “ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது. என் ஆதரவாளர்கள் ஸ்டாலினை முதல்வராக விட மாட்டார்கள்’’ என்று அழகிரி சீறியதும் ஸ்டாலினைக் கடுப்பாக்கியிருக்கிறது. அழகிரி மதுரையில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது கரூரில் பிரசாரம் செய்துகொண்டிருந்தார் ஸ்டாலின். அழகிரி கூட்டம் தொடங்கியதுமே மொத்த செய்தி சேனல்களும் மதுரைப் பக்கம் திரும்பியதும் ஸ்டாலினை யோசிக்க வைத்திருக்கிறதாம்!

‘‘திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றிபெறாமல் போயிருந்தால் அன்றைக்கு தி.மு.க-வின் ஆட்சியே கேள்விக்குறியாகியிருக்கும். ‘ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவியைத் தரலாமா?’ என்று கலைஞர் என்னிடம் கேட்டபோது ‘தாராளமாகக் கொடுங்கள்’ என்றேன். ‘கலைஞருக்குப் பிறகு தி.மு.க தலைவராக ஸ்டாலின் தொடர வேண்டும்’ என்று ஸ்டாலினிடமே கூறினேன். அப்படி இருக்கும்போது அவர் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ‘எப்போது கட்சியில் சேர்ப்பீர்கள்?’ என்று கலைஞரிடம் கேட்டேன். ‘இவர்களின் ஆட்டம் அடங்கட்டும்... பொறுத்திரு’ என்றார். இப்போது கலைஞரையே மறந்துவிட்டு கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது’’ என்று அதிரடியாகப் பேசினார் அழகிரி.

கூட்டணி குஸ்தி... அழகிரி அட்டாக் - திணறும் ஸ்டாலின்!

கூட்டத்தில் பேசியது குறைவுதான். கூட்டம் முடிந்த பிறகும் தன் ஆதரவாளர்களிடம் பேசிய அழகிரி, “கலைஞரின் இறுதி நிகழ்ச்சியில் அவரது உடலில் போர்த்தியிருந்த தேசியக்கொடியை தம்பி ஸ்டாலினிடம் கொடுக்கலாம் என்று கட்சி நிர்வாகிகள் என்னிடம் கேட்டபோது நான், ‘அவரிடமே கொடுங்கள்... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று மூத்த மகன் நிலையிலிருந்து விட்டுக்கொடுத்தேன். சில மாதங்களுக்கு முன்புகூட என் மகன் துரை தயாநிதி, ‘சித்தப்பா ஸ்டாலினை அப்பாவிடம் பேசச் சொல்லுங்கள்’ என்று உதயநிதியிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், ‘எல்லாம் கட்சித் தலைவர்தான் முடிவெடுப்பார்’ என்று பட்டும் படாமல் சொல்லி அனுப்பிவிட்டார் உதயநிதி. சபரீசனும் எனக்காகப் பரிந்து பேசியிருக்கிறார். அதற்காக, பல நாள்கள் அவரிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்திருக்கிறார் ஸ்டாலின். இனியும் நான் சும்மா இருக்க முடியாது” என்று தனது வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இதையடுத்து அழகிரியின் பிறந்தநாளான ஜனவரி 30-ம் தேதியன்று முக்கிய முடிவை அவர் அறிவிக்கலாம் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்!

எப்போதும் தேர்தல் நெருக்கத்தில்தான் கூட்டணிகளில் கலகம் வெடிக்கும். இந்தமுறை அதை முன்கூட்டியே எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் ஸ்டாலின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism