Published:Updated:

எக்ஸ்ட்ரா லக்கேஜ்! - கழற்றிவிடப்படும் கட்சிகள்... தி.மு.க புதுக்கணக்கு

2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா இருந்தபோதே, தி.மு.க நேரடியாகப் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்தான் அதிக அளவில் தோல்வியடைந்திருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி
தமிழக சட்டசபைத் தேர்தல் வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது. தி.மு.க-வையும் அதன் தலைமையிலான கூட்டணியையும் நாடே உற்று கவனிக்கிறது. ஆனால், அதே கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமா என்று கேட்டால், கட்சியின் மூத்த நிர்வாகிகளே கமுக்கமாக தலையைக் குனிந்து கொள்கிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் இப்போது கூட்டணியிலிருக்கும் சில கட்சிகள் வெளியேறலாம்; வெளியேயிருக்கும் சில கட்சிகள் உள்ளே வரலாம். இணக்கமான கட்சிக் கொள்கை, நட்புணர்வு, நம்பகத் தன்மை, நியாய, தர்மங்கள் இவற்றைத் தாண்டி ‘லாப, நஷ்ட’க் கணக்குகளே நடப்பு அரசியலைத் தீர்மானிக் கின்றன. அந்தவகையில், தி.மு.க-வில் அநேகமாக, புத்தாண்டில் புதுக்கூட்டணி உருவாகலாம் என்பதே இப்போதைய நிலவரம்.

சமீபத்தில் வேலூர் அருகே ஓர் ஊராட்சியில், தடையை மீறி நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க-வின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், இதற்கான முதல் ‘அடி’யை எடுத்துவைத்திருக்கிறார். கூட்டணிக் கட்சிகளை மரியாதையில்லாமல் எடுத்தெறிந்து பேசிய அவரது பேச்சு, கூட்டணிக் கட்சியினர் மத்தியில் அனலாகக் கனன்றுகொண்டிருக்கிறது. “தி.மு.க கூட்டணியில இருக்கும் சில கட்சியினர், சீட்டு பத்தவில்லை என்று வெளியேறுவார்கள். அதேபோல, அங்கே இருக்கும் சிலர் தி.மு.க கூட்டணிக்கு வருவாங்க. இது சகஜம்தான்... அப்போதான் எவன் எவன் கூட இருக்கான்னு தெரியும்” என்று எகத்தாளமாகப் பேசியதைக் கண்டு தமிழகத்தின் மூத்த தலைவர்கள் பலரும் முகம் சுளித்தார்கள். தொடர்ந்து துரைமுருகன், தன் பேச்சுக்காக வருத்தம் தெரிவித்தார்தான். ஆனாலும், கட்சித் தலைமையின் மனவோட்டத்தைத்தான் துரைமுருகன் பிரதிபலித்தார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

இதற்கான அதிர்வுகளே கூட்டணித் தலைவர்களின் சுருக்கென்ற வார்த்தைகளாகவும் சமீபத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. “வரும் சட்டசபைத் தேர்தலில், தனிச் சின்னத்தில், தனித்தன்மையுடன் ம.தி.மு.க போட்டியிடும்” என்றார் வைகோ. “எங்கள் கட்சியின் அடையாளத்தை இழக்க மாட்டோம். தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” என்று சொல்லியிருக்கிறார் திருமாவளவன். “ஏணிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” என்றிருக்கிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ-வான அபுபக்கர். தி.மு.க-வில் கூட்டணியில் குஸ்தி தொடங்கிவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது.

எக்ஸ்ட்ரா லக்கேஜ்! - கழற்றிவிடப்படும் கட்சிகள்... தி.மு.க புதுக்கணக்கு

பிக் பிளான் ‘பி.கே’!

தி.மு.க-வுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கும் `ஐபேக்’ நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது தி.மு.க கூட்டணியில் தற்போதிருக்கும் கட்சிகளின் பலம், பலவீனங்கள் ஆராயப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற இடங்களையும், தோல்வியடைந்த இடங்களையும் பட்டியலிட்டு, அவற்றை அக்குவேறு ஆணிவேராக அலசி, புள்ளிவிவரங்களைக் கொட்டியிருக்கிறது ஐபேக் டீம். அதன்படி 2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா இருந்தபோதே, தி.மு.க நேரடியாகப் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்தான் அதிக அளவில் தோல்வியடைந்திருக்கிறது. `எனவே, வரும் தேர்தலில் 200 தொகுதிகள் வரை உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’ என்று சொன்ன ஐபேக், `தேசியக் கட்சிகளைத் தவிர, கூட்டணியிலுள்ள பிற கட்சிகளுக்கு தனிச்சின்னம் கிடையாது; அவர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறதாம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர், “கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், எட்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதனாலேயே தி.மு.க அப்போது ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில், ‘2019 நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் 18 சீட்களை மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கு ஒதுக்க முடியும்’ என்று எங்கள் கட்சித் தலைமை ஓப்பனாகச் சொல்லிவிட்டது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, ‘தி.மு.க கூட்டணியில் இருந்தால் போதும்; கொடுப்பதைக் கொடுக்கட்டும்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டது காங்கிரஸ். எனவே, இந்த முறை அந்தக் கட்சிக்கு அதிகம் போனால் 20 இடங்களைத் தாண்டி கிடைக்காது” என்றவர்கள், மற்ற பிராந்தியக் கட்சிகளின் நிலை குறித்தும் பகிர்ந்துகொண்டார்கள்.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

உள்ளே... வெளியே!

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்டவற்றை உதயசூரியன் சின்னத்தில் நிற்கவைத்தோம். திருமாவளவன் மட்டும் கடுமை காட்டியதால் வேறு சின்னத்தில் நின்றார். ஆனால், இந்த முறை அது நடக்காது. ‘விடுதலைச் சிறுத்தைகள் வேண்டாம்’ என்று கட்சிக்குள்ளேயே ஒருசாரார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக பா.ம.க-வை உள்ளே கொண்டுவந்து விடலாம் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. இன்றைய நிலையில் ம.தி.மு.க காணாமல்போன கட்சியாகவே மாறிவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அடையாளம் இழந்து விட்டன. எனவே, தேவையில்லாமல் இந்தக் கட்சிகளையெல்லாம் தூக்கிச் சுமக்க வேண்டுமா என்கிற எண்ணம் தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்குச் சம்மதித்தால் மட்டுமே அந்தக் கட்சிகள் தி.மு.க கூட்டணிக்குள் இருக்க முடியும். இல்லையென்றால் மேற்கண்ட கட்சிகளைக் கழற்றிவிடவும் தி.மு.க தயாராக இருக்கிறது” என்றார்கள்.

உதயநிதி
உதயநிதி

“வெண்ணெய் திரளும்போது சட்டியை உடைப்பதா?”

ஆனால், தி.மு.க-வில் சீனியர் தலைவர்கள் சிலர் இதையெல்லாம் முன்வைத்து, “தி.மு.க தலைமை தவறான முடிவுகளை எடுக்கிறது; இவையெல்லாம் சட்டமன்றத் தேர்தலில் பாதகமான முடிவுகளையே ஏற்படுத்தும்” என்று பதறுகிறார்கள். அவர்கள் கூறுகையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலில், ‘எப்படியும் நாம்தான் வெற்றிபெறுவோம்’ என்கிற மிதப்பிலிருந்தது தி.மு.க. அதனாலேயே தோல்வியடைந்தோம். இந்தமுறை அதையும் மிஞ்சிய மிதப்பில் இருக்கிறார்கள். சீனியர்களை கலந்தாலோசிப்பதில்லை; கிச்சன் கேபினெட்டும் உதயநிதியும் எடுக்கும் முடிவுகளே தன்னிச்சையாகச் செயல்படுத்தப்படுகின்றன.

ஓட்டு சதவிகிதத்தை வைத்து மட்டும் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் குறிப்பிட்ட தளங்களில் நற்பெயர் உண்டு. காங்கிரஸ் என்றால் மதச்சார்பின்மை. காங்கிரஸுக்கு சீட் கொடுக்காத தொகுதிகளில் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது. விடுதலைச் சிறுத்தைகளைக் கழற்றிவிட்டால், மாநிலம் முழுவதுமே பட்டியல் சமூக ஓட்டுகள் கிடைக்காது. விவசாயிகளுக்காகப் போராடியது, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள், மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் என்று வைகோவுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அந்த வகையில் டெல்டா, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அவர்களுக்கு கணிசமான ஓட்டு இருக்கிறது. ம.தி.மு.க-வைக் கழற்றிவிட்டால், அந்த ஓட்டுகள் கிடைக்காது.

இப்படி உடனிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை கணிக்கத் தவறுவது மட்டுமல்லாமல், எதிரியின் பலத்தையும் கட்சித் தலைமை கணிக்கத் தவறுகிறது. தி.மு.க-வை எப்படியேனும் அழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது பா.ஜ.க. மீண்டும் 2ஜி வழக்கு வேகமெடுத்துள்ளது. பழைய வழக்குகளையெல்லாம் தூசுதட்டி எடுத்து, ஸ்டாலினை முடக்க நினைக்கிறது பா.ஜ.க. கந்த சஷ்டிக் கவசம் தொடங்கி பெரியார் வரை தி.மு.க-வின் சித்தாத்தங்களைவைத்தே தி.மு.க-வின் கண்ணைக் குத்துகிறது அந்தக் கட்சி. இதையெல்லாம் முன்வைத்து சமூக வலைதளங்களில் தி.மு.க-வைக் கிண்டலடித்து தெறிக்கவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு, பதிலடி கொடுக்க தி.மு.க-வில் வலுவான தலைமை இல்லை. அ.தி.மு.க-வும் கரன்ஸியைக் கொட்டி எப்படியேனும் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று திட்டங்களை தீட்டிவருகிறது. எனவே, வரும் தேர்தலில் ‘போராடித்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் சொன்னதுபோல தி.மு.க-வின் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது. இப்படி இக்கட்டான நிலையில் தோழமைக் கட்சிகளைக் கழற்றிவிடுவதோ, உதாசீனப்படுத்துவதோ சரியான முடிவாக இருக்காது” என்றார்கள் வருத்தத்துடன்!

தி.மு.க புதுக்கணக்கு!

ஆனால், சீனியர்களின் கருத்துகளை கட்சித் தலைமை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. கூட்டணியிலிருந்து யாரைக் கழற்றிவிடுவது என்று திட்டமிடும் தி.மு.க, வரும் தேர்தலில் யாருடன் பயணிக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டுவருகிறது. இதுகுறித்தும் நம்மிடம் பேசியவர்கள், “தி.மு.க தலைமையின் முதல் சாய்ஸ் பா.ம.க. வட மாவட்டங்களில் சுமார் 40 தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக பா.ம.க இருக்கிறது. அவர்களை தி.மு.க கூட்டணிக்குள் கொண்டுவந்து 30 சீட்களை கொடுத்தாலும், அவர்களது சமூக செல்வாக்கால் தி.மு.க போட்டியிடும் மேலும் 30 தொகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைக்கும். இதைக் கணக்கு போட்டுத்தான் துரைமுருகன், ‘பா.ம.க-வை தள்ளிவைப்பது நமக்கு நல்லதல்ல’ என்று ஸ்டாலினிடம் தூபம் போட்டிருக்கிறார். தைலாபுரம் தரப்பிலும் தி.மு.க பக்கம் சாய்வதற்கான `மூவ்’கள் நடந்துவருகின்றன.

சென்னை அமைந்தகரையிலுள்ள வி.ஐ.பி ஒருவரின் வீட்டில் தே.மு.தி.க - தி.மு.க பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தே.மு.தி.க தரப்பில் 30 சீட்கள் வரை கேட்கப் பட்டது. அவர்களிடம், ‘2011-ம் ஆண்டு அல்ல இது. 2021-ம் ஆண்டு தேர்தல். உங்கள் கட்சியின் இன்றைய நிலைக்கேற்ப சீட் கேளுங்கள்’ என்று தி.மு.க-வின் வாரிசுப் பிரமுகர் கறாராகச் சொல்லியிருக்கிறார். இவை போக, மக்கள் நீதி மய்யமும் தி.மு.க பக்கம் சாயலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்கு விகிதத்தை மக்கள் நீதி மய்யம் பெற்றது. ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்றுதான் இத்தனை நாள்கள் அந்தக் கட்சி காத்திருந்தது. ஆனால், ரஜினி எந்த முடிவும் எடுக்காததால், ம.நீ.ம கட்சியினர் எங்களை நோக்கி வரும் வாய்ப்புகளே அதிகம்” என்றார்கள்.

முடிவெடுக்கும் வாரிசு!

மேற்கண்ட கூட்டணி முடிவுகள், சீட்களின் எண்ணிக்கை இவை அனைத்தையும் கவனிப்பது உதயநிதி தரப்புதான் என்கிறார்கள் உடன்பிறப்புகள். ‘ஐபேக்’ போன்றே தனியாக ஒரு டீமை வைத்திருக்கிறார் உதயநிதி. ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்குச் செல்வாக்கு உள்ளது, கூட்டணிக்கு எந்தத் தொகுதியை ஒதுக்கலாம், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற அனைத்து விவரங்களையும் அந்த டீமே பரிந்துரைக்கிறது. இப்போது கூட்டணிக் கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையிலும் உதயநிதி தரப்பே இறங்கி யிருக்கிறது. ம.தி.மு.க., வி.சி., கம்யூனிஸ்ட்களெல்லாம் எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்ற கருத்தை முன்வைத்ததும் உதயநிதி தரப்புதான் என்கிறார்கள்.

ஆனால், மேற்கண்ட கட்சிகளைக் கழற்றிவிடுவதில் ஸ்டாலினுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லையாம். “இத்தனை காலம் நாம் அழைத்தபோதெல்லாம் நம்முடன் போராட்டக்களத்துக்கு வந்தவர்களைக் கடைசி நேரத்தில் கழற்றிவிடுவது நன்றாக இருக்காது” என்று அவர் தரப்பில் சொல்லப்பட்டபோது, “டிசம்பர் மாதம் வரை இப்போதுள்ள கூட்டணியே நீடிக்கட்டும். அதன் பிறகு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், அவர்கள் நம்முடன் இருக்கட்டும். இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்ளட்டும்” என்று ஐபேக் டீமும் கிச்சன் கேபினெட்டும் ஒருமித்தக் குரலில் சொல்ல... ஸ்டாலினால் ஒன்றும் பேச முடியாமல் போய்விட்டது என்கிறார்கள்.

இளைஞரணிக்கு 50 தொகுதிகள்! - நிழல் முதல்வர் உதயநிதி

வரும் சட்டமன்றத் தேர்தலில், இளைஞரணியைச் சேர்ந்த 50 பேருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி நினைக்கிறார். தி.மு.க வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக அமர்ந்தாலும், நிழல் முதல்வராக உதயநிதியே செயல்படுவார் என்கிறார்கள். அமைச்சர்கள் யார் என்பது வரை கிச்சன் கேபினெட் தரப்பே முடிவெடுக்க வாய்ப்புள்ளது. தி.மு.க-வை அமைப்புரீதியாக பலப்படுத்தும் வேலைகளும் வேகமெடுத்துள்ளன. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கெல்லாம் பதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் வலுவாக உள்ள சமூகத்துக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது ஐபேக். அதன்படிதான், சமீபத்தில் வடமாவட்டங்களில் வன்னியர் களுக்குப் பதவிகளை வழங்கியது தி.மு.க. பட்டியல் சமூக ஓட்டுகளைக் குறிவைத்துத்தான் ஆ.ராசாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இன்னொரு பக்கம் தி.மு.க-வில் அதிகார மையமாக வலம்வரும் மாவட்டச் செயலாளர் களைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு, ‘ஒருவருக்கு ஒரு பதவி’ ஃபார்முலாவைக் கையில் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டச் செயலாளர்களுக்கு சீட் கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்

கிச்சன் கேபினட் ஆதிக்கம்!

தி.மு.க-வில் கருணாநிதி இருந்தவரை பல குடும்பங்களின் ஆதிக்கம் கட்சிக்குள் இருந்தது. ஆனால், இப்போது ஒற்றைக் குடும்பத்தின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது என்கிறார்கள். குறிப்பாக துர்காவின் ஆதிக்கத்துடன், அவர் உடன்பிறந்தவர்களின் அலப்பறைகளும் அதிகமாக இருக்கின்றனவாம். துர்காவின் தங்கை ஜெயந்தி சத்தமில்லாமல் அதிகார மையமாகவே மாறிவிட்டார். தேர்தலே இன்னும் வரவில்லை... வேட்பாளர் பட்டியலைத் தாண்டி, அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு பணி வரைக்கும் இவரது தரப்பினர் சென்றுவிட்டார்கள் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

புடவையாக இருந்தால்கூட இரண்டாகவே வாங்கும் பழக்கம் உடையவர் துர்கா. ஒன்று தனக்கும், மற்றொன்று தங்கைக்கும் என்பார். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம். இப்போது இந்தக் கூட்டணியில் தங்கையுடன், தி.நகரில் வசிக்கும் துர்காவின் அக்கா பார்வதியும் இணைந்துகொண்டிருக்கிறார். திருவெண்காடு சகோதரிகளின் அன்றாட திட்டங்களைக் கண்டு அரண்டுகிடக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

மாந்திரீகம் முதல் தாந்திரீகம் வரை!

துர்காவின் ஆன்மிக நம்பிக்கை அனைவரும் அறிந்தது. ஆனால், இப்போது ஆன்மிகத்தைத் தாண்டி தாந்திரீகம், மாந்திரீகம் என்று அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வதைப் பார்த்து ‘பேயறைந்தது’போல மிரள்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். சமீபத்தில் துர்கா தனது சொந்த ஊரான திருவெண்காட்டில் ஜோதிடர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். அவர், ‘சிறப்பு யாகம் ஒன்றைச் செய்தால் எல்லாம் கூடிவரும்’ என்று சொல்ல... யாகத்தை முடித்துக்கொண்டு, அவர் கொடுத்த இரண்டு பொருள்களை வீட்டுக்கு ‘பேக்’ செய்தார்கள். இப்போது ஸ்டாலின் படுக்கையறையில் வைக்கப்பட்டிருக்கின்றனவாம் அந்தப் பொருள்கள். அதேபோல் “டிசம்பர் மாதத்துக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்கச் சொல்லுங்கள். கறுப்பு ஆடைப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்” என்றெல்லாம் பிரசன்னம் பார்த்துச் சொன்னாராம் அந்த மாந்திரீகர்.

ஒருபக்கம் வடக்கிலிருந்து வந்திருக்கும் கார்ப்பரேட் டீம் கழகத்தின் கூட்டணியை முடிவுசெய்ய... இன்னொரு பக்கம் சாமியார்களும் மாந்திரீகர்களும் ‘பகுத்தறிவு’ கட்சியை வளர்க்க யாகம் நடத்துகிறார்கள். நல்லவேளை... இதையெல்லாம் பார்க்கும் துர்பாக்கியம் கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“வீறுநடை போடுகிறது கூட்டணி!” - ஸ்டாலின் ஆவேசம்

தி.மு.க கூட்டணியின் உரசல் அந்தக் கட்சியின் தலைமைக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. அதனாலேயே கூட்டணி குறித்து அக்டோபர் 12-ம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். அதன் சாராம்சம் இதுதான்... ``தி.மு.க தலைமையிலான கூட்டணி புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கூட்டணிக்குள்ளே, `ஏதாவது திருகு தாளங்களைச் செய்து சுமுகமான உறவைக் கெடுத்து, திசைதிருப்பிவிடலாம்’ என்ற சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருக்கின்றன. 200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க போட்டியிடப்போகிறது என்று அனுமானத்தை மையமாகவைத்து விவாதிக்கிறார்கள். தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்பதை அறிவிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே, `200 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடப்போகிறது’ என்ற அனுமானமும், அது தொடர்பான விவாதங்களும் தேவையற்றவை; உள்நோக்கம்கொண்டவை...” என்று நீள்கிறது அந்த அறிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு