
கட்சி அவங்க குடும்பச் சொத்துனு ஆகிடுச்சு... இதுல உதயாவைக் கொண்டுவந்தா என்ன, செந்தாமரையைக் கொண்டுவந்தா என்ன...
‘அமைச்சரவை மாற்றம்’ என்கிற தகவல், சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் அனலடித்தது. ‘உதயநிதி அமைச்சராவது எப்போது?’ என்கிற கேள்விக்கான விடையாகத்தான் அந்தத் தகவலைக் கோட்டை வட்டாரத்தில் பார்த்தனர். ஆனால், டிசம்பர் 26-ம் தேதி கோவையில் நடைபெற்ற தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, “அமைச்சர் பொறுப்பு போன்ற எந்தப் பொறுப்பின் மீதும் எனக்கு ஆசை இல்லை” என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகப் பேசினார். ‘அது முற்றுப்புள்ளி அல்ல, தொடக்கப்புள்ளி’ என்கிறார்கள் விவரமறிந்த தி.மு.க புள்ளிகள். உதயநிதியின் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்க முதல்வரின் மனைவி துர்கா பரபரக்கும் நிலையில், தி.மு.க சீனியர்கள் சங்கடத்தில் பொருமுகிறார்கள்; உறவுகளுக்குள் புகைச்சல் எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில், ‘பட்டாபிஷேகம் எப்போது... அதன் பின்னணியில் என்ன நடக்கிறது?’ என்று விசாரணையில் இறங்கினோம்!
அன்பில் ஆரம்பித்த ‘அமைச்சர்’ கோஷம்!
‘அமைச்சர் உதயநிதி’ என்கிற விவகாரம் ஒன்றும் புதிதல்ல. தி.மு.க ஆட்சி அமைந்தபோதே பலராலும் எதிர்பார்க்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இப்போது, இந்த விவகாரம் மீண்டும் வேகப்படுத்தப்படுவதற்குக் காரணம், துர்கா ஸ்டாலினின் அவசரம்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நம்மிடம் பேசிய தென்மாவட்ட அமைச்சர் ஒருவர், ‘‘கருணாநிதி முதல்வர் பதவியைப் பிடித்தபோது அவருடைய வயது 44. ஆனால், தன்னுடைய 68-வது வயதில்தான் அரியணை ஏறியிருக்கிறார் ஸ்டாலின். ஆட்சி, கட்சி என்கிற இரண்டு பொறுப்புகளையும் இப்போது ஒருசேரச் சுமப்பது ஸ்டாலினுக்குக் கடினமாகவே இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். இதனால், மகன் உதயநிதியை இப்போதே முன்னிறுத்த நினைக்கிறார் துர்கா ஸ்டாலின்’’ என்றார்.
தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்தபோது, கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களை ஆழம்பார்க்க, ஆற்காடு வீராசாமியை வைத்து, தனது கருத்தைப் பொதுவெளியில் வெளியிட வைப்பார். அந்தக் கருத்துக்கு வரும் ரியாக்ஷன்களைப் பொறுத்து, அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வார் கருணாநிதி. அந்த வகையில்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலம் ஆழம் பார்த்துள்ளதாம் முதல்வரின் குடும்பம். உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதற்கு முன்பாக, இது குறித்து முதல்வரின் வீட்டில் பலத்த ஆலோசனை நடந்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதையொட்டியே, திருவல்லிக்கேணியில் நடந்த உதயநிதியின் பிறந்தநாள் விழாவில் பேசிய அன்பில் மகேஷ், “உதயநிதி அமைச்சராக வர வேண்டும். உயர் பொறுப்புக்கு வந்தால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றிருக்கிறார். அன்பிலை வழிமொழிந்து மூத்த அமைச்சர் கே.என்.நேருவும் உதயநிதி பட்டாபிஷேகத்துக்கு வாழ்த்துப் பா பாட... அதிரி புதிரி ஆகியிருக்கிறது அறிவாலயம்.

தூபம் போடும் துர்கா... அதே இளைஞரணி ரூட்!
தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “தலைவர் வீட்டுக்கு எப்போ போனாலும் சரி, ‘தம்பியை வெச்சு ஒரு கூட்டம் போடக் கூடாதா?’ என்று தூபம் போடுகிறார் துர்கா ஸ்டாலின். கட்சிக்குள் உதயநிதிக்குச் செல்வாக்கு வளர வேண்டும் என்கிற எண்ணம் துர்காவுக்கு ரொம்பவே இருக்கிறது. இன்றைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் குடும்பத்திடம் செல்வாக்காக இருப்பதற்குப் பிரதான காரணமே இதுதான். கரூர் மாவட்டத்தில், உதயநிதியை முன்வைத்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை அவர் நடத்தியதுதான், துர்காவின் குட் புக்கில் செந்தில் பாலாஜியை இடம்பெறச் செய்தது. அதிகார பீடத்துடன் உறவாட நினைப்பவர்கள், உதயநிதியை புரொமோட் செய்தால்தான் கட்சிக்குள் பலம்பெற முடியுமென்பதால், இப்போது அந்த ரூட்டைப் பலரும் எடுத்திருக்கிறார்கள்.
கட்சி மேலிடத்திலிருந்து, தி.மு.க இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளுக்குச் சமீபத்தில் ஒரு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது... மாவட்டவாரியாகக் கூட்டத்தை நடத்தி, அதில் ‘உதயநிதி அமைச்சராக வேண்டும்’ என்கிற தீர்மானத்தை நிறைவேற்றச் சொல்லி. அதன்படி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்தது. கூட்டத்தில் பேசிய தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், ‘அண்ணன் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்கிற எங்களின் கோரிக்கையைத் தலைமையிடம் வலியுறுத்துங்கள்’ என்று சிறப்பு விருந்தினர் தயாநிதி மாறனிடம் கூறியிருக்கிறார். அதற்கு தயாநிதியும், ‘கண்டிப்பாகச் சொல்கிறேன்’ என்று தன் பங்குக்கு வழிமொழிந்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆரம்பித்த இந்த யுக்தி, அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவிருக்கிறது.
1996-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ-வாக ஸ்டாலின் இருந்தார். அப்போது நடந்த தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், நடராஜன் என்கிற நிர்வாகி ஒருவர் எழுந்து, ‘உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலினை மேயராக நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். பின்னர் அதைத் தீர்மானமாகவும் நிறைவேற்றினார்கள். அந்தக் கருத்து தமிழகம் முழுவதும் ‘பரவலாக்கப்பட்டு’, சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு ஸ்டாலின் முன்மொழியப்பட்டார். அதே பாணியில், இப்போது உதயநிதி அமைச்சராக வேண்டும் என்கிற கோஷத்தை இளைஞரணி மூலம் எழுப்பியுள்ளார்கள். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதில் தலைமை தயக்கம் காட்டுவதற்கு ஒன்றுமில்லை. சில கட்சி சீனியர்களும், பொதுமக்களும் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது. அவர்களின் ஒத்துழைப்பு உதயநிதிக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதால்தான், ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடுத்துவைக்கிறது முதல்வரின் குடும்பம்” என்றனர்.

சங்கடத்தில் சீனியர்கள்!
எல்லாம் சுமுகமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்றால், ‘உதயநிதிக்கு மகுடம் சூட்டுவதில் ஏன் தாமதம்?’ என்று விசாரித்தோம். நீண்ட முயற்சிக்குப் பிறகு, நம்மிடம் பேசினார் முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர். “கட்சி அவங்க குடும்பச் சொத்துனு ஆகிடுச்சு... இதுல உதயாவைக் கொண்டுவந்தா என்ன, செந்தாமரையைக் கொண்டுவந்தா என்ன... ஆனா, இதுவரைக்கும் கட்சிக்காக உழைச்சவங்களுக்கு என்ன மரியாதை செய்யப்பட்டிருக்குங்கறது
தான் சீனியர்களோட கேள்வி. கட்சிப் பொருளாளரான டி.ஆர் பாலு, ‘மூணு முறை என் மகன் ராஜா, மன்னார்குடி எம்.எல்.ஏ-வா ஜெயிச்சுருக்கான். இந்த முறை அமைச்சரவையில இடம் கொடுங்க’னு கேட்டபோது, ‘நீங்க நாடாளுமன்ற தி.மு.க தலைவரா இருக்கீங்க. கட்சியிலும் பொறுப்பில் இருக்கீங்க. உங்க மகனுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தா நல்லா இருக்காது’ என்று மறுத்து விட்டது மேலிடம். இப்போது முதன்முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கும் உதயநிதியை அமைச்சராக்கணும்னு சொல்றாங்க. டி.ஆர்.பாலு கடுப்பாவாரா... மாட்டாரா?
2021 தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டில் ஜெயிச்சவர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. அவரை எதிர்த்து போட்டி யிட்ட எல்லாரும் டெபாசிட் இழந்தாங்க. ஆனாலும், அமைச்சரவையில் டம்மியான துறை ஒதுக்கப்பட்ட வருத்தத்தில்தான் இருக்கிறார். எப்படியும் கெளரவமான துறையை சீக்கிரமாக ஒதுக்குவாங்கனு இன்னும் காத்துக்கிட்டிருக்கார். ஆனால், ‘உங்க மகன் செந்தில்குமாரும் எம்.எல்.ஏ., நீங்களும் பவர்ஃபுல் அமைச்சர் என்றால் சரியாக இருக்காது’னு தட்டிக்கழிக்கிறது தலைமை. இப்போ, உதயநிதிக்கு மகுடம் சூட்டப்போறோம்னு சொன்னா பெரியசாமியோட மனநிலை என்னவாக இருக்கும்?
இந்த விவகாரத்துல இதுவரைக்கும் துரை முருகன் எந்தக் கருத்தும் வெளிப்படையா சொல்லலை. ஆனா, தனக்கு நெருக்கமானவங்ககிட்ட, ‘தலைவருக்குப் பிறகு தளபதியைத் தலைவராக ஏத்துக்குற மனப்பக்குவம் எனக்கு வந்தது. ஆனா, இப்போ உதயா தம்பியை தலைவர் இடத்துக்கு உயர்த்தப் பார்க்கும்போது, அதை எப்படி என்னால் ஏத்துக்க முடியும்னு தெரியலை’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். இப்படிப் பல சீனியர்களும் சங்கடத்தில் பொருமுகிறார்கள்.
புகைச்சலில் உறவுகள்!
கட்சியில் சார்பு அணிகள் பல இருந்தாலும், தலைவர், பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகள்தான் தி.மு.க-வில் அதிகாரம் மிக்கவை. சற்குண பாண்டியன் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு, கனிமொழிக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்தது அவர் தரப்பு. ஆனால், அந்தப் பதவி கிடைக்கவில்லை. மகளிரணிச் செயலாளர் என்கிற பதவியில் இருந்தாலும், கட்சியின் முக்கிய முடிவுகளில் கனிமொழியின் வாய்ஸ் எடுபடுவதில்லை. இந்த நிலையில், இளைஞரணிச் செயலாளராக இருக்கும் உதயநிதி, தனது அணிக்குள் இளம்பெண்கள் அணியைப் புதிதாக உருவாக்கத் திட்டமிட்டார். இதில் கடுப்பான கனிமொழி தரப்பு, ‘அப்படி ஓர் அணியை உருவாக்க முடிவெடுத்தால், மகளிரணிப் பொறுப்புகூட வேண்டாம்’ என்று முதல்வரிடம் வருத்தத்துடன் முறையிட்டிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில், ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்தினார் கனிமொழி. இப்போது, மீண்டும் அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டபோது, உதயநிதி தரப்பு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. ‘டெல்லி தொடர்புகளை டி.ஆர்.பாலுவும் சபரீசனும் கவனிக்கிறார்கள். மாநிலத்துக்குள் உதயநிதியை வளர்க்கிறார்கள். ஆனால், தூத்துக்குடி எம்.பி தொகுதிக்குள் மட்டுமே கனிமொழியை அரசியல் செய்ய வைத்துவிட்டனர்’ என்று புகைச்சலில் இருக்கிறது அவர் தரப்பு.
மற்றொரு புறம் புகைச்சலில் இருந்த மு.க.அழகிரியைச் சரிக்கட்ட, அவரின் மகன் துரை தயாநிதிக்கு, உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு மாணவரணியில் ஒரு பொறுப்பை வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில், கோவை கூட்டத்தில் பேசிய உதயநிதி, ‘எனக்கு அமைச்சர் பதவிமீது நாட்டமில்லை’ என்றார். 2018-ம் ஆண்டு, இதேபோல ‘தலைவரின் தொண்டனாகவே தி.மு.க-வில் இருப்பேன்’ என்று பேசினார். அடுத்த சில மாதங்களிலேயே இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு அவருக்கு அளிக்கப்
பட்டது. இப்போது, ‘அமைச்சர் பதவி வேண்டாம்’ என்கிறார். விரைவில் அதுவும் கிடைத்துவிடும். வேண்டாம் என்பதெல்லாம் தனக்கு ஆசையில்லை என்பதாகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதாகவும் காட்டத்தான். ஒருகாலத்தில் முதல்வர் கருணாநிதியைச் சுற்றி நூற்றுக்கும் குறையாத குடும்ப பவர் சென்டர்கள் இருப்பார்கள். ஒரு விஷயத்தில் முடிவெடுக்கப் பல இடையூறுகள் ஏற்படும். இப்போது அப்படியல்ல. முதல்வர் குடும்பத்தில் கைவிரலளவு நபர்கள் மட்டுமேதான் பவர் சென்டர்களாக இருக்கிறார்கள். அதனால், நாளைக்கே ‘உதயநிதிதான் முதல்வர்’ என்றாலும், யாரும் எதிர்த்து பேசப்போவதில்லை. இந்த நாடகமெல்லாம் அதிருப்தியிலிருக்கும் கட்சி சீனியர்களைச் சரிக்கட்டத்தான்” என்றார் விலாவாரியாக.

பலி ஆடு யார்... பட்டாபிஷேகம் எப்போது?
சங்கடங்கள், புகைச்சல்கள் என ஒருபக்கம் இருந்தாலும், உதயநிதியை அமைச்சராக்கும் முஸ்தீபுகளில் தீவிரமாகியிருக்கிறார் துர்கா ஸ்டாலின். இதற்காக, ஜாதகரீதியிலான பலன்கள் சரிபார்ப்பு, நேர்த்திக்கடன் வகையறாக்கள் தீவிரமடைந்திருக்கின்றன. தற்போது ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்துக்கான ஷூட்டிங்கை முடித்திருக்கும் உதயநிதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகும் படத்தை மே மாதத்துக்குள் முடித்துக் கொடுக்கவிருக்கிறாராம். படத்தின் சூட்டிங் முடிந்த கையோடு, மே மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. அந்த நேரத்தில், அமைச்சரவைக்குள் உதயநிதியைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாம் முதல்வரின் குடும்பம்.
தற்போது தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இருக்கிறார்கள். மொத்த எம்.எல்.ஏ-க்களில் 15 சதவிகிதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும். அந்த அடிப்படையில், உதயநிதி அமைச்சராக வேண்டுமென்றால், ஓர் அமைச்சர் பதவியைத் துறந்தாக வேண்டும். ‘அந்த பலி ஆடு யார்?’ என்கிற கேள்விதான், கட்சிக்குள் புதிய பட்டிமன்றத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது. சங்கடத்தில் இருக்கும் சில சீனியர் அமைச்சர்கள், ‘‘உதயநிதிக்காக இவ்வளவு தூரம் போராடும் அன்பில் மகேஷ், தன்னுடைய அமைச்சர் பதவியை அவருக்காக விட்டுக்கொடுப்பாரா?’’ என்று நக்கலாகக் கேட்கிறார்கள்.
நம்மிடம் பேசிய முதல்வர் குடும்பப் பிரமுகர்கள் சிலர், “உள்ளாட்சித்துறை, நகர்ப்புற வீட்டு வசதித்துறை, இளைஞர் நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை ஆகியவை உதயநிதிக்காகப் பரிசீலிக்கப்படுகின்றன. உள்ளாட்சித்துறையில் அதிகமாக மத்திய அரசின் நிதி கையாளப்படுவதால், தொடக்கத்திலேயே டெல்லியின் பார்வையில் பட வேண்டாமென்று நினைக்கிறது முதல்வரின் குடும்பம். கண்ணை உறுத்தாத துறையை முதலில் ஒதுக்கிக்கொண்டு, அமைச்சரான ஓர் ஆண்டில் அவரைத் துணை முதல்வர் ஆக்குவதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘கட்சிக்குள் தன் கணவருக்கு எழுந்த எதிர்ப்புபோல, மகனுக்கு எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது’ என்று உஷாராகவே செயல்படுகிறார் துர்கா. பட்டாபிஷேகத்துக்கான நாள் வெகு தொலைவில் இல்லை” என்றனர்.
சங்கடங்களுக்கும் புகைச்சலுக்கும் நடுவே திட்டமிடப்படும் பட்டாபிஷேகம், கழகத்துக்குள் கலகங்களை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி!