Published:Updated:

“இது எங்கள் பட்டியலே அல்ல!” - அலறித் துடிக்கும் ஐபேக்

தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க

முதியோர்கள்... விலைபோக வாய்ப்புள்ளவர்கள்... கிச்சன் கேபினெட் அடம்...

“இது எங்கள் பட்டியலே அல்ல!” - அலறித் துடிக்கும் ஐபேக்

முதியோர்கள்... விலைபோக வாய்ப்புள்ளவர்கள்... கிச்சன் கேபினெட் அடம்...

Published:Updated:
தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க

மார்ச் 12-ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலைப் பார்த்த தி.மு.க-வினருக்கும் ஐபேக் நிறுவனத்துக்கும் அதிர்ச்சியோ அதிர்ச்சி! ஐபேக் கொடுத்த பட்டியல் பெரும்பாலும் மாற்றப்பட்டிருந்தது. “நூறு சதவிகிதம் சீட் கிடைத்துவிடும்” என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தவர்களுக்குக்கூட ஏமாற்றமே மிஞ்சியது. ‘செய்ய வேண்டியதைச் செஞ்சும் ஏமாத்திட்டாங்களே!’ என்று உள்ளுக்குள் கொதித்துக்கிடக்கிறார்கள் சீட் கிடைக்காத தி.மு.க நிர்வாகிகள். என்னதான் நடந்தது? விசாரணையில் இறங்கினோம்.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் ஒருவர், “மைக்ரோ, மேக்ரோ சர்வெயிலன்ஸ், டேட்டா அனாலிசிஸ், ஸ்ட்ராட்டஜி உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தமான ஐபேக், வேட்பாளர் தேர்விலும் மூக்கை நுழைத்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் மூவர் பட்டியலைத் தயாரித்துக் கொடுத்தது. வேட்பாளர்களின் ப்ளஸ், மைனஸ் எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைத்தது. ‘எப்போதும் நாங்கதானே லிஸ்ட் கொடுப்போம், இப்ப என்ன நீங்க கொடுக்குறீங்க?” என்று ஐபேக்கிடம் கேள்வி எழுப்பிய மாவட்டச் செயலாளர்கள், அவர்கள் பங்குக்கு சிலரது பெயரையும், தனி ‘கவனிப்பை’யும் செய்தார்கள். இப்படி ஃபில்டர் செய்து கொடுக்கப்பட்ட மூன்று நபர்கள் பட்டியலில் பெரும்பாலான தொகுதிகளில் மூன்று நபர்களின் பெயருமே மிஸ்ஸிங். இதன் பின்னணியில் நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது” என்றார் இறுக்கமான முகத்துடன்!

“இது எங்கள் பட்டியலே அல்ல!” - அலறித் துடிக்கும் ஐபேக்

ஸ்டாலின் நியமித்த புது டீம்!

ஐபேக் சென்னை மையத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஐபேக் சார்பில் மாநிலத்தின் பல்வேறு ஊர்களிலும் பணிபுரிந்த நிர்வாகிகள், அவர்கள் தொடர்புடைய தி.மு.க கட்சி நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினருடனும் பேசினோம். “ஐபேக் பணியாளர்கள் சிலர் ஆங்காங்கே பணம் பெற்றுக்கொண்டு பட்டியலில் சிலரைச் சேர்த்தது குறித்து எங்களுக்கும் தகவல் வந்தது. அவர்களையெல்லாம் களையெடுத்து வருகிறோம். ஆனாலும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் நாங்கள் கொடுத்த பட்டியலை நம்பாமல், மாவட்டச் செயலாளர்களிடமும் தனியாக ஒரு பட்டியலைப் பெற்று இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆராய புது டீம் ஒன்றைக் களமிறக்கினார்.

அவர்களும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து, ஆய்வுசெய்து ஐபேக் பட்டியலில் சில திருத்தங்களை மட்டும் குறிப்பிட்டு ஃபைனல் லிஸ்ட்டைக் கொடுத்தனர். கூடவே, சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாக இரண்டு நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டனர். இதன் பிறகு சுமார் 70 சதவிகிதம், ஐபேக் பட்டியல்தான் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பெரும்பாலும் பழைய எம்.எல்.ஏ-க்களும், சுலபமாக எதிரணிக்குத் தாவிவிடும் பலவீனமான மனநிலை கொண்டவர்களும்தான் லிஸ்ட்டில் உள்ளனர்” என்றவர்கள் அது குறித்து உதாரணங்களுடன் விளக்கினார்கள்.

குதிரைப் பேரத்தில் விலைபோவார்களா?

“நாங்கள் ஆறு மாத காலம் களப்பணியாற்றி, பட்டியல் கொடுத்தோம். தவிர, இவர்களைத்தான் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டுமெனச் சொல்லவில்லை. சாய்ஸ் மட்டுமே கொடுத்தோம். ஆனால், எங்களது பட்டியலைப் பெரும்பாலும் புறக்கணித்துவிட்டார் ஸ்டாலின். நத்தம் - ஆண்டி அம்பலம், நெல்லை - வகாப், ராஜபாளையம் - தங்கபாண்டியன், விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டவர்கள் மீது கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது. இவர்களால் வெற்றிபெறவே முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அவர்கள் பெயரெல்லாம் பட்டியலில் இருக்கிறது.

ஆரம்பத்திலேயே நாங்கள் ஐ.பெரியசாமி, துரைமுருகன், சக்கரபாணி, நேரு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் உள்ளிட்ட சில சீனியர்களை விடுவிக்கச் சொன்னோம். கட்சி அமைப்புரீதியான மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் குறைந்தபட்சம் 50 இளைஞர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்றோம். எதுவும் நடக்கவில்லை. தற்போதைய பட்டியலில் இருக்கும் சுமார் 15 பேர் மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்கள். விளாத்திகுளம் ஜி.வி.மார்க்கண்டேயன் தி.மு.க-வுக்கு வந்து ஆறு மாதங்களே ஆகின்றன. சங்கரன்கோவில் ஈ.ராஜா மூன்றாண்டுகளுக்கு முன்புதான் ஜான்பாண்டியனின் கட்சியிலிருந்து வந்தார். இவரது ஊர் தென்காசி. அ.தி.மு.க வேட்பாளரும், அமைச்சருமான ராஜலட்சுமி, தனக்குப் போட்டியாக உள்ளூர் தி.மு.க நிர்வாகி போட்டியிட்டால் வெற்றிபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மறைமுகமாகக் காய்நகர்த்தி வெளியூர்க்காரரான ராஜாவை வேட்பாளர் பட்டியலில் புகுத்தச் செய்திருக்கிறார்.

கடலூர் அய்யப்பன் 2011-ல் தி.மு.க சீட் தரவில்லை என்பதால், அ.தி.மு.க-வுக்குச் சென்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் தி.மு.க-வுக்கு வந்தார். உடல்நிலையும் சரியில்லாதவர். யாருமே எதிர்பார்க்காத வகையில் அவருக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். திரு.வி.க.நகர் தொகுதியில் தாயகம் கவிக்கு பதிலாக, பகுதிச் செயலாளர் தமிழ் வேந்தனுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி சொன்னோம். இதுபோல, பல தொகுதிகளிலும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு பதிலாக உள்ளூரில் செல்வாக்கு பெற்ற நபர்களைப் பட்டியலில் குறிப்பிட்டிருந்தோம். எங்கள் லிஸ்ட் மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

“இது எங்கள் பட்டியலே அல்ல!” - அலறித் துடிக்கும் ஐபேக்

உதாரணத்துக்கு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விழுப்புரம் எம்.பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார். ஆனால், அதே ஆண்டு விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் நா.புகழேந்தி, 44,924 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ் செல்வனிடம் தோற்றுப்போனார். அப்போது அவரது தோல்விக்கு சொல்லப்பட்ட காரணமே ‘புகழேந்தி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்’ என்பதுதான். அப்போது புகழேந்தியை இங்கு பரிந்துரைத்ததே பொன்முடிதான். இப்போதும் பொன்முடியின் பரிந்துரையின் பேரிலேயே புகழேந்திக்கு விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை தேர்தல் முடிவுகளில் தி.மு.க பார்டரில் வெற்றிபெற்று, தொங்கு சட்டசபை அமையும்பட்சத்தில் மேற்கண்டவர்களில் பலரும் சுலபமாக குதிரைப் பேரத்தில் எதிரணிப் பக்கம் விலைபோக வாய்ப்பு இருக்கிறது.

‘இளைஞர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள்’ என்று நாங்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான கட்சி நிர்வாகிகளே வலியுறுத்திய நிலையில் 65 முதல் 70 வயதைக் கடந்த பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக் கிறது. ஈரோடு முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி, கம்பம் ராமகிருஷ்ணன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆவுடையப்பன் இவர்களெல்லாம் 65 வயதைத் தாண்டியவர்கள். ஒவ்வொருவருமே சுமார் ஆறு முதல் ஒன்பது முறை எம்.எல்.ஏ-க்களாக, தொடர்ந்து குறுநில மன்னர்கள்போல கோலோச்சிவருபவர்கள். இவர்களுக்கெல்லாம் சீட் கொடுத்திருப்பதால், ‘முதியோர் இல்லமா தி.மு.க?’ என்று கட்சியினரே கமென்ட் அடிக் கிறார்கள்” என்றவர்கள், பட்டியல் மாற்றத்தில் நடந்த லாபி பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள்...

அந்த 7 நாட்கள்!

“கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கி முடிந்த சுமார் ஏழு நாள்களில்தான் பட்டியலில் பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். சீனியர்கள் பலரும் மாவட்டச் செயலாளர்களால் வளைக்கப்பட்டுவிட்டார்கள். நாங்கள் ‘நிச்சய வெற்றி’ என்று குறிப்பிட்ட தொகுதிகளையும்கூட கூட்டணிக்குத் தாரைவார்த்துவிட்டனர். உதாரணத்துக்கு, பொதுக்குழு உறுப்பினரான சைதை மகேஷ்குமார் வேளச்சேரி தொகுதியைக் கேட்டிருந்தார். ஆனால், அவர் அங்கு வெற்றிபெற்றால், கட்சியில் தனக்குப் போட்டியாக வளர்ந்துவிடுவார் என்பதால், மா.சுப்பிரமணியனின் லாபியின் பேரில் வேளச்சேரியை காங்கிரஸுக்குத் தள்ளிவிட்டனர்.

எந்தவொரு மாநிலத்திலும் எங்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டதில்லை. நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களை மாற்றிவிட்டு, வெற்றிபெற முடியாதவர்களையும், வயதானவர்களையும், சுலபமாக விலை போகக்கூடியவர்களையும், சொந்தக் கட்சியிலேயே செல்வாக்கு இல்லாதவர்களையும் வேட்பாளர்களாக அறிவித்துவிட்டு, இவர்களை வெற்றிபெற வையுங்கள் என்று சொன்னால் எப்படி முடியும்? இது எங்கள் நிறுவனத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்தும். இந்த விஷயங்களையெல்லாம் மேற்கு வங்க தேர்தலில் பிஸியாக இருக்கும் பிரசாந்த் கிஷோரிடம் விளக்கிவிட்டோம்” என்றார்கள் விலாவாரியாக!

‘பேக் அப்’ சொல்லப்போகிறதா ஐபேக்... பொறுத்திருந்து பார்ப்போம்!

***

உள்ளடி வேலையில் கழகங்கள்... கலக்கத்தில் டம்மி வேட்பாளர்கள்!

ஐபேக் டீமின் புலம்பல் இப்படியென்றால், “அ.தி.மு.க-வின் அமைச்சர்களை எதிர்த்து வலுவான வேட்பாளர்களை நிறுத்தாமல் பலவீனமான ஆட்களை தி.மு.க களமிறக்கியிருக்கிறது; அதேபோல தி.மு.க-வின் வலுவான முன்னாள் அமைச்சர்கள் சிலர், தாங்கள் எளிதாக வெற்றிபெறும் வகையில் பா.ஜ.க மற்றும் பா.ம.க போட்டியிடும் தொகுதிகளை ரிசர்வ் செய்துகொண்டார்கள்” என்பதும் சொந்தக் கட்சியினரின் புலம்பலாக இருக்கிறது.

“பொதுவாக முன்னாள் அமைச்சர்கள் பலரும் வலுவான அமைச்சர்களை எதிர்த்துக் களமிறக்கப்படுவதே வழக்கம். அப்போதுதான் சரிக்குச் சரியாகச் செலவு செய்யவும், ஆட்கள் பலத்தைக் காட்டி டஃப் கொடுக்கவும் முடியும். ஆனால், தி.மு.க-வில் எல்லாமே தலைகீழ். ஒவ்வொரு மாவட்டத்திலும் சீனியர் தி.மு.க நிர்வாகிகள், அ.தி.மு.க அமைச்சர்களுடன் அண்டர் டீலிங் வைத்துக்கொண்டார்களோ எண்ணும் அளவுக்கு செல்வாக்கு குறைந்த கேண்டிடேட்களைப் போட்டு பாசத்தைப் பொழிந்திருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் போட்டியிடும் பவானி தொகுதியில், பவானி ஒன்றியச் செயலாளரான கே.பி.துரைராஜ் நிறுத்தப்பட்டிருக்கிறார். கோபிசெட்டிப் பாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக மணிமாறன் என்பவர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

துரைமுருகனுக்கும் அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் உள்ள தொடர்பை ஊரே அறியும். அதன்படி, துரைமுருகன் போட்டியிடும் காட்பாடியில் ராமுவை நிறுத்தி, தனது விசுவாசத்தைக் காட்டினார் வீரமணி. அதற்குப் பரிகாரமாக, வீரமணி களம்காணும் ஜோலார்பேட்டையில் தேவராஜியை நிறுத்தி நட்புக்கரத்தை வலுப்படுத்தியிருக்கிறார் துரைமுருகன். பொன்முடி போட்டியிடும் திருக்கோவிலூர் தொகுதியை பா.ஜ.க-வுக்குத் தள்ளிவிட்டார் அமைச்சர் சி.வி.சண்முகம். அதற்குப் பிரதிபலனாக, சி.வி.சண்முகம் போட்டியிடும் விழுப்புரம் தொகுதியில் டாக்டர் லட்சுமணன் என்பவரை நிறுத்தியிருக்கிறார் பொன்முடி. ஒருவேளை அமைச்சரை எதிர்த்து பொன்முடியே களமிறங்கியிருந்தால் இங்கு டஃப் கொடுத்திருக்கலாம்.

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் சம்பத்குமார், கே.பி.அன்பழகன் போட்டியிடும் பாலக்கோட்டில் முருகன், அமைச்சர் சரோஜா நிற்கும் ராசிபுரத்தில் மதிவேந்தன், அமைச்சர் தங்கமணி களம்காணும் குமாரபாளையத்தில் வெங்கடாசலம் என பல தொகுதிகளிலும் முன்னணி நிர்வாகிகள் பாதுகாப்பாக ஒதுங்கிக்கொண்டு பலம் குறைந்த வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில் அந்தக் கட்சி போட்டியிடும் திருவண்ணாமலை தொகுதியில், தான் போட்டியிடும்படி ஏற்பாடு செய்துக்கொண்டார் எ.வ.வேலு. பா.ம.க போட்டியிடும் தொகுதியான சேப்பாக்கத்தில் உதயநிதி நிற்கிறார். நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும் நத்தம் தொகுதியில் வயதான சிட்டிங் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம் நிறுத்தப்பட்டுள்ளார். திருச்சி கிழக்குத் தொகுதியில் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜையும், ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்துக்கு எதிராக ராமச்சந்திரனையும் நிறுத்தியுள்ளனர்” என்றார்கள் ஆதங்கத்துடன்!

“இது எங்கள் பட்டியலே அல்ல!” - அலறித் துடிக்கும் ஐபேக்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism