அலசல்
Published:Updated:

அமைச்சர்களுக்கு வார்னிங்... அதிருப்தியில் நிர்வாகிகள்... டென்ஷனில் ஸ்டாலின்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டுவிழாவை தி.மு.க இந்த வருடம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்’ என்கிற தீர்மானத்தை வாசிக்கும்போதே நிர்வாகிகளின் முகத்தில் ஈயாடவில்லை.

‘உதயநிதி பட்டாபிஷேகம், மாவட்டச் செயலாளர்கள் - அமைச்சர்கள் செய்யும் ‘ஸ்வீட் பாக்ஸ்’ தகராறுகள், உட்கட்சிப் பஞ்சாயத்துகள்...’ என்று பெரும் எதிர்பார்ப்பு அலைகளோடு டிசம்பர் 18-ம் தேதி கூட்டப்பட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலினின் வாள்வீச்சால் அதிருப்தியோடு கலைந்துபோயிருக்கிறது. கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு வார்னிங் விட்டதோடு, கழக நிர்வாகிகளுக்கு ஏகப்பட்ட பொறுப்புச் சுமைகளையும் ஏற்றிவைத்திருக்கிறார் ஸ்டாலின். “ஏற்கெனவே செலவு கழுத்தை நெரிக்குது. இதுல இது வேறயா?” என்று அதிருப்தியில் புலம்புகிறார்கள் நிர்வாகிகள். ‘பரபரப்பாகக் கூட்டப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?’ என தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். கலவையான செய்திகளைக் கொட்டினார்கள்!

அமைச்சர்களுக்கு வார்னிங்... அதிருப்தியில் நிர்வாகிகள்... டென்ஷனில் ஸ்டாலின்!

‘பொருள்’ இல்லாத கூட்டம்... குறுக்கால் ஓடிய அன்பில் மகேஷ்!

நம்மிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், “வழக்கமாக தி.மு.க கூட்டங்கள் கூட்டப்படும் போதெல்லாம், எதற்காக அந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது என்கிற ‘பொருள்’ அழைப்பிதழிலேயே இருக்கும். ஆனால், டிசம்பர் 18 கூட்டத்துக்கு அப்படி எந்தப் பொருளும் இடம்பெறவில்லை. இதைவைத்தே, ‘உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் கூட்டம் நடைபெறுகிறது’ என்கிற பரபரப்பு எழுந்தது. போதாத குறைக்கு, ‘கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்க முன்மொழியுங்கள். அவர் தலைமையில்தான் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நடைபெற வேண்டுமெனச் சொல்லுங்கள்...’ என்று கழக நிர்வாகிகளிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பு கேன்வாஸ் செய்தது. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த சிலரிடம், ‘சின்னவருக்கு சப்போர்ட் பண்ணி உங்களை மாதிரி மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவங்க பேசுனாத்தான் தலைவரே யோசிப்பாரு. மைக் கிடைச்சவுடனே சின்னவரைப் புகழ்ந்து பேசுங்க’ என்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே இந்த அலப்பறை ஆரம்பித்துவிட்டதால், கட்சி சீனியர்கள் டென்ஷனானார்கள்.

‘தன் மகனை அமைச்சராக்கணும்னு தலைவர் உத்தரவு போட்டா யார் மீறப்போறாங்க? என்னமோ இவரு முன்னெடுத்துத்தான் உதயநிதிக்குப் பதவி வாங்கித் தரப்போற மாதிரி ஏன் அன்பில் மகேஷ் குறுக்காலயும் மறுக்காலயும் ஓடிக்கிட்டு இருக்காரு’ என்று சீனியர்கள் முகம் சுளித்தனர். இந்தத் தகவலெல்லாம் தலைமைக்குப் போனவுடன், ‘பேராசிரியர் நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, உள்ளாட்சித் தேர்தல். இது மூன்றும்தான் சப்ஜெக்ட். வேறு எதைப் பற்றியும் பேசக் கூடாது’ என்ற கறார் உத்தரவு தலைமையிலிருந்து வந்தது. இதனால், கூட்டத்தில் உதயநிதி குறித்து ஒருவரும் வாய் திறக்கவில்லை” என்றனர்.

சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் நடைபெறும் முக்கியக் கூட்டமென்பதால், மாலை 5:30 மணிக்கே பெரும்பாலான நிர்வாகிகள் கலைஞர் அரங்கத்துக்கு வந்துவிட்டனர். நிர்வாகிகளின் கார் பார்க்கிங் செய்வதற்கு இடமில்லாததால், மாநகராட்சிக்காக ஹயாத் ஓட்டல் ஒதுக்கிய ஓ.எஸ்.ஆர் நிலத்தில் கார்கள் பார்க் செய்யப்பட்டன. சரியாக மாலை 5:43-க்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டத்துக்கு வந்தார். அவர் உள்ளே சென்ற பிறகுதான் அமைச்சர்கள் சக்கரபாணி, ரகுபதி இருவரும் அரக்கப் பறக்க அரங்கத்துக்குள் தாமதமாக நுழைந்தார்கள். உதயநிதி, அன்பில் மகேஷ், தாயகம் கவி ஆகியோர் கூட்டத்தின் கடைசியில் அமர்ந்திருந்தனர்.

அமைச்சர்களுக்கு வார்னிங்... அதிருப்தியில் நிர்வாகிகள்... டென்ஷனில் ஸ்டாலின்!

“தெருவுலதான் நிக்கணும்...” - அதிருப்தியில் நிர்வாகிகள்!

ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தவை குறித்து, தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்ததாக, செய்தித் தொடர்புத்துறைச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டுவிழாவை தி.மு.க இந்த வருடம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்’ என்கிற தீர்மானத்தை வாசிக்கும்போதே நிர்வாகிகளின் முகத்தில் ஈயாடவில்லை. ‘அடுத்த ஒரு வருஷத்துக்குத் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்துங்க. ஒவ்வொரு மாவட்டத்துலேயும் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவலை அறிவாலயத்துக்கு அனுப்பிவைக்கணும்’ என்று இளங்கோவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, நிர்வாகிகளிடம் அனல் பற்றிக்கொண்டது. ‘ஏற்கெனவே கட்சி செலவு கழுத்தை நெரிக்குது. இதுல ஓராண்டுக்கு விழா நடத்தணுமாமே... தெருவுலதான் நிக்கணும்போல’ என்று அதிருப்தியில் தங்களுக்குள் கடுகடுத்துக் கொண்டனர். அடுத்ததாக துரைமுருகன் மைக் பிடித்தார்.

கடந்த சில வாரங்களாகவே முதல்வர் ஸ்டாலின் மீது துரைமுருகன் அப்செட்டில் இருந்தார். பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் இணைப்பு விழாவுக்குத் தன்னை அழைக்காதது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் சந்திப்பின்போது தன்னை உடன் வைத்திருக்காதது என முதல்வர்மீது அவருக்குச் சில வருத்தங்கள் இருந்தன. ‘தம்பி இப்படி பண்ணிருச்சே...’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம்கூட புலம்பியிருந்தார். இந்தச் சூழலில்தான், சில தினங்களுக்கு முன்பாக, திடீரென முதல்வர் ஸ்டாலினிடமிருந்து அவருக்கு அழைப்பு சென்றிருக்கிறது. ‘ஆட்சிக்கே நீங்கதானே மூத்தவர். மனசுல எதுவும் வெச்சுக்காதீங்க’ என்று முதல்வர் சொன்னதும், உச்சி குளிர்ந்திருக்கிறார் துரைமுருகன். அதன் வெளிப்பாடாக, ‘அண்ணா, கலைஞருக்குப் பிறகு தம்பியைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்’ என்று ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலினைப் புகழ்மழையால் நனைத்துவிட்டார். இந்தக் கூட்டத்தில், ‘ஸ்டாலினின் சட்டமன்ற உரை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூல் குறித்துச் சிறிது நேரம் ஆ.ராசா உறையாற்றி அமர்ந்த பிறகு, இறுதியாகப் பேச எழுந்தார் ஸ்டாலின். முதல்வரின் முகத்தில் டென்ஷன் ரேகைகள் படர்ந்திருந்தன.

அமைச்சர்களுக்கு வார்னிங்... அதிருப்தியில் நிர்வாகிகள்... டென்ஷனில் ஸ்டாலின்!

“குத்திட்டாங்க தலைவரே...” - டென்ஷனான ஸ்டாலின்!

முதல்வர் டென்ஷனுக்குக் காரணமில்லாமல் இல்லை. ‘சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, நல்லாட்சி நிர்வாகம்’ என்கிற வகையில், மற்ற மாநில முதல்வர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ விரும்புகிறார் அவர். ஆனால், அதில் மண்ணை அள்ளிப்போடும்விதமாக, சில நிர்வாகிகள் செய்யும் அடாவடிதான் அவரை டென்ஷனாக்கியிருக்கிறது. ஆலோசனைக் கூட்டம் நடந்த டிசம்பர் 18-ம் தேதி காலை, மேல்மருவத்தூரில் ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தைத் தொடங்கிவைக்க சென்னையிலிருந்து பயணமானார் முதல்வர். தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில், சிலர் முதல்வரை வரவேற்க தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே காத்திருந்தனர். அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குச் சமீபத்தில் வந்த தாம்பரம் நாராயணன் என்பவரும் அங்கே வந்திருக்கிறார். அவரிடம், ‘நீ ஏன் இங்கே வந்தே... எங்ககூட சரிசமமா நிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டியா?’ என்று கேட்டுவிட்டு, எஸ்.ஆர்.ராஜாவுடன் வந்திருந்தவர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். தாக்கியவர்களில் ராஜாவின் மைத்துனர் காமராஜும் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸ் தலையிட்டு, தாம்பரம் நாராயணனைச் சற்றுத் தொலைவுக்கு அழைத்துச் சென்று தனியாக நிற்கவைத்துள்ளனர். அந்தச் சமயம், முதல்வரின் கான்வாயும் வந்துவிட்டது.

நேராக தாம்பரம் நாராயணன் அருகே காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் ஸ்டாலின், ‘என்ன நடந்தது?’ என்று கேட்டிருக்கிறார். முதல்வருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்ததால்தான், நேராக தாம்பரம் நாராயணனிடம் காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். முதல்வரின் கேள்விக்கு, ‘என்னைக் குத்திட்டாங்க தலைவரே!’ என்று தாம்பரம் நாராயணன் பதிலளிக்கவும், டென்ஷனான ஸ்டாலின், ‘எல்லாம் தெரியும். சரி, நான் பார்த்துக்குறேன்’ என்று சொல்லிவிட்டு மேல்மருவத்தூர் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீஸ் புகார் ஏதும் பதிவாகவில்லை என்றாலும், அறிவாலயத்தில் ஒரு புகார் பதிவாகியிருக்கிறது. எஸ்.ஆர்.ராஜா தரப்பு செய்த அடாவடியால் டென்ஷனிலிருந்த ஸ்டாலின், ஆலோசனைக் கூட்டத்தில் மைக் பிடித்தவுடன் கட்சி நிர்வாகிகளை விளாசி எடுத்துவிட்டார். ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 40 நிமிடங்களுக்கு மேலாக ஸ்டாலினே பேசியிருக்கிறார். அப்படியென்றால், எந்த அளவுக்கு அர்ச்சனை விழுந்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்” என்ற அந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள், ஸ்டாலின் பேசியது குறித்தும் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“மூன்றாவது முறை மன்னிக்க மாட்டேன்...” - அமைச்சர்களுக்கு வார்னிங்!

“ஸ்டாலின் பேசும்போது, ‘234 சட்டமன்றத் தொகுதியிலும் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் தி.மு.க உறுப்பினர்களாக இருக்கணும். அந்த அளவுக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கணும். குறிப்பாக, இளைஞரணி, மகளிரணிக்கு முக்கியத்துவம் கொடுங்க. நீதிமன்ற உத்தரவு காரணமாக, இனியும் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட முடியாது. 2022, பிப்ரவரி மாதம் உள்ளாட்சித் தேர்தல் வந்துவிடும். ‘கட்சி மேலிடமே தேர்தலைப் பார்த்துக்கும்’னு யாரும் அமைதியாக இருக்கக் கூடாது. எல்லாருமே தேர்தல் பணியில முழுமையாக இறங்கணும்.

நம்ம அரசு மேல மக்களுக்கு மரியாதை இருக்கு. அந்த மரியாதையைக் காப்பாத்திக்கணும். கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மேல புகார்கள் வந்துக்கிட்டேயிருக்கு. ஒரு முறை இரு முறை அழைச்சுப் பேசுவேன். மூன்றாவது முறையும் புகார் வந்ததுன்னா நடவடிக்கை நிச்சயம். தேவையில்லாத சர்ச்சையை உண்டாக்காதீங்க. நான் நல்ல முதல்வர் எனப் பெயரெடுத்துட்டேன். என்னை நான் ‘ப்ரூவ்’ பண்ணிட்டேன். நீங்களும் நல்ல மக்கள் பிரதிநிதிகளாகப் பெயரெடுக்கணும். உங்க இடத்துக்கு அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ-க்களாகவும் வருவதற்கு நிறைய பேர் ஆசைப்படுறாங்க. தப்பு செய்யற ஒவ்வொரு முறையும் நான் மன்னிக்க மாட்டேன். புரிஞ்சுக்கோங்க... தூக்கி வீசவும் நான் தயங்க மாட்டேன்’ என்று விளாசி எடுத்துவிட்டார். இதைக் கேட்டதும் பல அமைச்சர்களின் முகமே கருகிச் சுருங்கிவிட்டது. ‘வேறு யாராவது பேசுகிறீர்களா?’ என்று ஆர்.எஸ்.பாரதி கேட்டதும், தேனி மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் மட்டும் எழுந்தார்.

‘தங்களுக்குச் சாதகமாக வார்டுகளை அ.தி.மு.க-வினர் மறுவரையறை செய்திருக்கிறார்கள். உள்ளாட்சி அளவில் அ.தி.மு.க ஆதரவு அதிகாரிகளே இப்போதும் பதவியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் சிக்கலாகிவிடும்’ என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, ‘தேர்தலைத் தள்ளி வைப்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை. மறுவரையறைக்கு நேரமும் இல்லை. ஏற்கெனவே விருப்ப மனுக்கள் வாங்கியாச்சு. பிப்ரவரி மாசம் தேர்தல் நடத்துவதுதான் ஒரே வழி’ என்று விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். டிசம்பர் 25-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கவுள்ளனர். அதைப் பொறுத்துத்தான் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட சில டெல்டா எம்.எல்.ஏ-க்கள், “ஆட்சி அமைந்த பிறகு இப்போதுதான் தலைவரோட தனியாகப் பேசுவதற்கு வாய்ப்பு வந்தது. எங்க பகுதியில அமைச்சர்களும் இல்லை. கட்சி நிர்வாகிகள் வருமானத்துக்கான வழியும் இல்லை. இதுல தேர்தல் வைத்தால் செலவு எங்கேயிருந்து செய்வது? தலைவர்கிட்ட இதையெல்லாம் சொல்ல முடியலையே” என்று சீனியர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு வார்னிங்... அதிருப்தியில் நிர்வாகிகள்... டென்ஷனில் ஸ்டாலின்!

கூட்ட முடிவில், “பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு, தலைவர் வெளியிட்ட புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று அறிவிக்கப்பட, இருந்த பணத்தையெல்லாம் கொடுத்துவிட்டு புத்தகச் சுமையோடு கிளம்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள். அப்போது, “உறுப்பினர் படிவங்களையும் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறியவுடன், டென்ஷனாகியிருக்கிறது நிர்வாகிகள் தரப்பு. “எது எதுக்கெல்லாம்தான் காசு வாங்குவீங்க?” என்று அவர்கள் ஆதங்கப்பட, படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன. “பத்து பைசா சம்பாதிக்க முடிய மாட்டேங்குதுனு நிலைமையைச் சொல்ல இங்கே வந்தா... இருக்கிறதையும் புடுங்கிக்கிட்டு அனுப்புறாங்களே...” எனப் புலம்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள். இந்த ஆதங்கம், வருத்தத்தையெல்லாம் கேட்கும் மனநிலையில் முதல்வர் இல்லை. ‘சிறந்த நிர்வாகியாக தேசிய அளவில் முன்னேறத் துடிக்கும் தன்னை, தன் கட்சிக்காரர்களே கீழே தள்ளிவிடுவார்களோ’ என்று கடும் டென்ஷனில் இருக்கிறாராம்.

கூட்டம் முடிந்து திரும்பியவர்களிடம் ஸ்டாலினின் டென்ஷன்தான் பேசுபொருளாக இருந்தது. திரைப்படங்களில், எம்.ஜி.ஆர் மூன்றாவது அடிக்குப் பிறகு எதிரியைத் திருப்பி அடித்துவிடுவார். அதே ஸ்டைலில், ‘மூன்றாவது முறை மன்னிக்க மாட்டேன்... மூன்றாவது முறை மன்னிக்க மாட்டேன்’ என்று ஸ்டாலின் ரொம்ப நாளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், தவறிழைக்கும் கட்சி நிர்வாகிகளோ வழக்கம்போலச் செய்வதைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ‘தலைவர் சொல்லும் அந்த மூன்றாவது முறை எப்போதான் வரும்?’ என்று கொஞ்சம் நக்கலாகவே கேட்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள்!

எதிர்பார்ப்புகளும், அதிருப்திகளும், டென்ஷனும் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை!

****

கூட்டணிக் கட்சிகளுக்கு கல்தா!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலின்போது, கூட்டணிக் கட்சிகளுக்குப் பெரிய அளவில் சீட் பங்கீடு அளிக்க வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கிறதாம் அறிவாலயம். நம்மிடம் பேசிய தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர், “ஆளுங் கட்சியாக மக்களிடம் தி.மு.க-வுக்குச் செல்வாக்கு இருப்பதால், கூட்டணிக் கட்சிகளின் தயவு இப்போது தேவையில்லை. நட்பின் அடிப்படையில் அவர்களுக்கு சீட் ஒதுக்கலாம் என்கிற மனநிலையில்தான் தலைமை இருக்கிறது. ‘கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய சீட்களை மாவட்டச் செயலாளர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம்’ என்று தலைமையில் கூறிவிட்டனர். இதன்படி, கவுன்சிலர் சீட்கள் மட்டுமே ஓரிரு இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படும். ‘தி.மு.க ஒத்துழைப்பில் இரண்டு மாநகராட்சி மேயர் பதவியாவது கிடைக்கும்’ என்ற காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு பலனளிக்க வாய்ப்பில்லை” என்றார்.