
மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் இருந்தபோது, அமைப்புரீதியாகக் குறைந்தது 30 மாவட்டங்களிலாவது தேர்தல் நடைபெறும். வெற்றிபெற முடியாவிட்டாலும், தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பலரும் போட்டியிடுவார்கள்.
அதட்டல், உருட்டல், ஆர்ப்பாட்டம், சமாளிப்பு, மகிழ்ச்சி, அழுகை, சரணாகதி எனக் கலவையான உணர்ச்சிகளின் உச்சத்தில் ஒருவழியாக முடிந்திருக்கிறது தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல். அமைப்புரீதியாக இருக்கும் 72 மாவட்டங்களில், தென்காசி வடக்கு மாவட்டத்தைத் தவிர, இதர மாவட்டங்களுக்கு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. ஏழு பேர் புதிதாக மாவட்டச் செயலாளர் கிரீடத்தைப் பெற்றிருக்கிறார்கள். செப்டம்பர் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டதில் மட்டுமே 10 கோடி ரூபாய்க்கு மேல் கட்சிக்கு நிதி வந்திருப்பதாகச் சொல்கிறது அறிவாலய வட்டாரம். அதேநேரத்தில், “தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே தி.மு.க-வின் சட்டவிதிகள்தான் கடுமையானவை. அடிப்படை உறுப்பினர் ஒருவரை நீக்குவதாக இருந்தாலும்கூட, முறைப்படி விசாரணை நடத்தி, அதிகாரபூர்வ அறிவிப்பை ‘முரசொலி’யில் வெளியிட்டாக வேண்டும். ஆனால், இவ்வளவு பெரிய உட்கட்சித் தேர்தலை ஜனநாயகபூர்வமாக நடத்தாமல், கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து அனுப்பிவிட்டது கட்சித் தலைமை” என்று பொருமுகிறார்கள் தி.மு.க-வின் சீனியர்கள். இவ்வளவு குழப்பங்களுக்கும் கொதிப்புகளுக்கும் கரைவேட்டிகளின் கரங்களெல்லாம் இரண்டு பேரை மட்டுமே காரணமாகக் கைகாட்டுகின்றன. “கட்சிக்குள் யாரால் பிரச்னை, ஜனநாயகபூர்வமாகத் தேர்தல் நடந்ததா, புதிதாக ‘அமரவைக்கப்பட்டுள்ள’ மாவட்டச் செயலாளர்களின் பின்னணி என்ன?” விவரமறிய அறிவாலயத்தை வலம்வந்தோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் ‘பத்தாயிரம் வாலா’ பட்டாசு ரகம்!

“நடந்தது தேர்தலே அல்ல...” பொருமலில் சீனியர்கள்!
மாவட்டச் செயலாளர் மாற்றத்துக்கான அடிப்படைத் தரவுகளை, மூன்று மாதங்களுக்கு முன்பே ஒரு தனி டீம் களமிறங்கி, விசாரித்துச் சேகரித்திருக்கிறது. சிட்டிங் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல், உட்கட்சித் தேர்தல் நியமனங்கள், கட்சி உறுப்பினர்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும்விதம், பிற குற்றச்சாட்டுகள் எனச் சகல புகார்களையும் தனித் தனியாக ஆராய்ந்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனுக்கு நெருக்கமான ஒரு தனியார் நிறுவனத்தின் டீம்தான் இந்தப் பட்டியலைத் தயார் செய்ததாகக் கூறுகிறார்கள் தி.மு.க சீனியர்கள். “இந்த அறிக்கையின் அடிப்படையிலும், மாநில உளவுத்துறை அளித்த தனியோர் அறிக்கையின் அடிப்படையிலும்தான் மாவட்டச் செயலாளர் தேர்வு நடந்திருக்கிறது. அறிக்கையை ஆய்வுசெய்து, மாப்பிள்ளை சபரீசனும், முதல்வரின் மகன் உதயநிதியும்தான் மாவட்டச் செயலாளர் பட்டியலைத் தீர்மானித்திருக்கிறார்கள். சில மாவட்டங்களில் உதயநிதியைவிட மாப்பிள்ளையின் கை மேலோங்கியது. அதேசமயம், உதயநிதியும் தன் இருப்பை விட்டுக்கொடுக்காமல் முட்டிமோதியிருக்கிறார்” என்கிறார்கள் அவர்கள்.

தி.மு.க-வின் சீனியர் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் இருந்தபோது, அமைப்புரீதியாகக் குறைந்தது 30 மாவட்டங்களிலாவது தேர்தல் நடைபெறும். வெற்றிபெற முடியாவிட்டாலும், தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பலரும் போட்டியிடுவார்கள். போராட்டங்களைக் கடந்து தங்கள் பலத்தை நிரூபிக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கு, கட்சியினரிடையே ஒரு மதிப்பு இருந்தது. அதையெல்லாம், இந்த 15-வது உட்கட்சித் தேர்தலில் சிதைத்துவிட்டார்கள். இந்த உட்கட்சித் தேர்தல், கிளைக் கழகங்களில் பிப்ரவரி, 2020-ல் தொடங்கி, ஒன்றியம், பேரூர், பகுதி, மாவட்ட அமைப்புகள் வரை நடந்தது. கொரோனா காலகட்டம் என சால்ஜாப்பு கூறினாலும், சுதந்திரமாகவும் ஜனநாயகபூர்வமாகவும் தேர்தலை நடத்தாததால்தான், அதை முடிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. எந்த மாவட்டத்திலும் போட்டியில்லை. போட்டியிட மனு அளித்தவர்களையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து பேசி அனுப்பிவிட்டார்கள். நியமனங்கள்தான் செய்திருக்கிறார்களே தவிர, நடந்தது தேர்தல் அல்ல.

திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பூபதிக்கு பதிலாக, திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் நாசரின் வலதுகரமாக பூபதி இருந்ததை, திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் ரசிக்கவில்லை. தனக்கும் நாசருக்குமான பிரச்னையில் பூபதியைக் காவு வாங்கிவிட்டார் ராஜேந்திரன். ‘பூபதியை மாற்றினால் மட்டுமே திருவள்ளுர் மேற்கில் இதர கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பார்கள்’ என முதல்வர் குடும்பத்துடன் தனக்கிருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி சபரீசனிடம் ராஜேந்திரன் எடுத்துப் பேசவும், சந்திரனுக்கு யோகம் அடித்திருக்கிறது. பூபதியைச் சரிக்கட்ட, அவருக்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியை வழங்கியிருக்கிறார்கள்.
மருமகன் கோட்டாவில் மணிமகுடம்!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த செங்குட்டுவனை நீக்கிவிட்டு, அவர் இடத்துக்கு மதியழகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க-வில் இருக்கும் செல்வந்தர்களில் குறிப்பிடத்தக்கவர் மதியழகன். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து தி.மு.க-வில் இணைந்தவர். அப்படி வந்தபோதே, மருமகன் தரப்புக்கு பெரிய ‘ஸ்வீட் பாக்ஸை’ பார்சல் செய்துவிட்டுத்தான் இணைந்தார். கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தியின் சிபாரிசும் மதியழகனுக்கு இருந்ததால், மருமகன் கோட்டாவில் மதியழகனுக்கு மணிமகுடம் கிடைத்திருக்கிறது.
கோவையில் அமைப்புரீதியாக இருந்த ஐந்து மாவட்டங்களை, மூன்று மாவட்டங்களாகச் சுருக்கினார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிபாரிசில், கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக தளபதி முருகேசனுக்கும், கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக தொண்டாமுத்தூர் ரவிக்கும் பொறுப்பு கிடைத்திருக்கிறது. ‘நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வேண்டுமென்றால், நான் சொல்பவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க அனுமதிக்க வேண்டும்’ எனக் கட்சித் தலைமையிடமே நேரடியாகக் கேட்டுவிட்டார் செந்தில் பாலாஜி. அதன் பிறகுதான், அவர் விருப்பப்படி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், லோக்கலில் நான்கு பேருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிபோயிருப்பதால் எழும் எதிர்ப்புகளை, புதியவர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி.

தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் இன்பசேகரனுக்கு பதிலாக, அ.ம.மு.க-விலிருந்து வந்த முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனுக்கு, செந்தில் பாலாஜியின் சிபாரிசில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் இன்பசேகரனுக்கும் ஏழாம் பொருத்தம். தவிர, இன்பசேகரன் பொறுப்பிலிருந்த பென்னாகரம், பாலக்கோடு, அரூர் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றைக்கூட தி.மு.க வெல்லவில்லை. கட்சிரீதியாக இன்பசேகரனின் செயல்பாடுகளிலும் வேகமில்லை. மாவட்டத்துக்குள் அதிகமாக இருப்பதுமில்லை என்பதால் அவரைத் தூக்கியிருக்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிபாரிசுகளையெல்லாம் பரிசீலித்தது, ‘டிக்’ செய்தது மாப்பிள்ளைதான். ஏற்கெனவே, தருமபுரி மாவட்ட அரசியலில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தலையீடுகள் களைகட்டும். இதில், செந்தில் பாலாஜியும் புதிதாக ‘என்ட்ரி’ கொடுத்திருப்பதால், மாவட்ட தி.மு.க-வில் நெருப்பு ‘திகுதிகு’வெனப் பற்றியிருக்கிறது” என்றனர் விரிவாக.
ஓவர்டேக் செய்த உதயநிதி!
“முதல்வரின் மகன் உதயநிதியும் சும்மா இல்லை” என்கிறது அவருக்கு நெருக்கமான இளைஞரணி வட்டாரம். நம்மிடம் பேசிய அணியின் நிர்வாகிகள் சிலர், “நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த கே.எஸ்.மூர்த்தி நீக்கப்பட்டு, மாவட்ட இளைஞரணி நிர்வாகி மதுரா செந்தில் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியும் மூர்த்தியும் நெருங்கிய தொடர்பிலிருந்ததாக அறிவாலயத்துக்குப் புகார்கள் வந்தன. மதுரா செந்தில், வெப்படை செல்வராஜ், தங்கமணியை எதிர்த்து போட்டியிட்ட வெங்கடாசலம் எனப் பலரும் மாவட்டச் செயலாளருக்கான ரேஸில் இருந்தனர். மாப்பிள்ளை சபரீசனின் ஆதரவு வெங்கடாசலத்துக்குப் பரிபூரணமாக இருந்தது. ஆனாலும், மாப்பிள்ளையை ஓவர்டேக் செய்து, தன் ஆதரவாளரான மதுரா செந்திலுக்குப் பொறுப்பை வாங்கிக் கொடுத்துவிட்டார் உதயநிதி.
அறிவாலயத்தில் ஏக பஞ்சாயத்தை இழுத்தது தென்காசி வடக்கு மாவட்டத் தேர்தல்தான். தன் சொந்தக்காரர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியப் பதவிகளைத் தந்ததாக, மாவட்டப் பொறுப்பாளர் செல்லதுரை மீது புகார் இருக்கிறது. இது தொடர்பான விசாரணையின்போது, அமைச்சர் நேருவிடமே காரசாரமாகப் பேசிவிட்டார் செல்லதுரை. இருவருக்குமிடையே வார்த்தை தடித்து, ‘நீ எப்படிப் பதவியில இருக்கேன்னு பார்க்குறேன்’ என்று நேருவே வெப்பமாகும் அளவுக்கு நிலைமை போய்விட்டது. மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும் செல்லதுரைக்கும் ஒத்துப்போகவில்லை. அவரை மாவட்டப் பொறுப்பிலிருந்து எடுக்க வேண்டுமென்பதில் அமைச்சர்கள் இருவருமே தீவிரமாக இருக்கிறார்கள்.

“தீக்குளிப்பேன் தலைவரே!”
இதற்கிடையே, தி.மு.க-வைச் சேர்ந்த விஜய அமுதா என்பவர், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் தேர்தலை சென்னையில் நடத்துவதற்கு பதிலாக, தென்காசியில் வைத்து நடத்த வேண்டும் என்று சிவில் வழக்கு தாக்கல் செய்தார். ‘கட்சிக்கு எதிராகவே கேஸ் போட வெக்கிறீங்களா?’ எனத் தலைவர் ஸ்டாலினிடமிருந்தே போன் பறக்கவும், ‘எனக்கு எதிராகச் செயல்படுறவங்கதான் இதைச் செஞ்சுருக்காங்க. வழக்கை வாபஸ் பெறவெப்பேன். இல்லைன்னா... தீக்குளிப்பேன் தலைவரே’ என்று சரணாகதி அடைந்துவிட்டார் செல்லதுரை. ஆனாலும், அவருக்கான சிக்கல் தீரவில்லை. உதயநிதியின் ஆதரவோடு தென்காசி எம்.பி தனுஷ்குமார் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
‘விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான தனுஷ்குமார், தென்காசி பதவிக்கு எப்படிப் போட்டியிடலாம்... அவருக்கு இந்த மாவட்ட எம்.பி சீட் கொடுத்ததே தவறு. செல்லதுரையை மாற்றினால் போராட்டம் வெடிக்கும்’ என்று செல்லதுரையின் ஆதரவாளர்கள் அறிவாலயத்தில் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டதால், தென்காசி வடக்கு மாவட்ட முடிவு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உதயநிதியின் சிபாரிசு இருப்பதால், தனுஷ்குமாருக்கு யோகம் அடிக்கவே வாய்ப்பு அதிகம்” என்றனர்.
டிக் அடித்த இருவர்... தேர்தலா, நியமனமா?
அமைப்புரீதியாக இருக்கும் 72 மாவட்டங்களில், 64 தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மீண்டும் தங்கள் பதவியை வசப்படுத்தியிருக்கிறார்கள். ராமநாதபுரம் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திருநெல்வேலி கிழக்கு ஆவுடையப்பன், சென்னை வடகிழக்கு மாதவரம் சுதர்சனம், திருவள்ளூர் கிழக்கு டி.ஜே.கோவிந்தராஜன், திருப்பூர் வடக்கு செல்வராஜ், ஈரோடு வடக்கு நல்லசிவம் உள்ளிட்ட 15 மாவட்டச் செயலாளர்களுக்கு ‘வார்னிங்’ விடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நம்மிடம் பேசிய தி.மு.க-வின் சீனியர் தலைவர் ஒருவர், “மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தை, மாப்பிள்ளை சபரீசன், மகன் உதயநிதியுடன் கலந்து பேசி முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே ஒரு முடிவை எடுத்திருந்தார். ஆனாலும், ஜனநாயகப்படிதான் எல்லாமே நடப்பதுபோலக் காட்டிக்கொள்ள, கட்சி நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தது தலைமை. வேட்புமனு தாக்கல் செய்த ஒவ்வொருவரையும், அமைச்சர் கே.என்.நேரு அழைத்துப் பேசி சமாதானம் செய்தார். வழக்கமாக, கட்சி நிகழ்வுகளில் ஓர் ஒழுங்கு இருக்கும். இந்த முறை அது இல்லை. சென்னையில் வட்டச் செயலாளர் நியமனங்களே இன்னும் முழுமையடையாத நிலையில், எப்படி மாவட்டச் செயலாளர் தேர்தலை நடத்தினார்கள்?

புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில், சிட்டிங் மாவட்டப் பொறுப்பாளரும், அமைச்சருமான ரகுபதிக்கு எதிராக அமைச்சர் சிவ.மெய்யநாதன் மனுதாக்கல் செய்ய வந்தார். அவரை அழைத்துச் சமாதானம் பேசி அனுப்பிவிட்டார் நேரு. இதேபோலத்தான், ராமநாதபுரம், தென்காசி தெற்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு மாவட்டங்களிலும் கட்டப்பஞ்சாயத்து நடத்தியே தேர்தலை முடித்திருக்கிறார்கள். `தலைமை முடிவு பண்ணிருச்சு. இவர்தான் மாவட்டச் செயலாளர், மத்தவங்க ஒதுங்கிடுங்க’ என்று சொல்வதற்குப் பெயர்தான் தேர்தலா?
நிர்வாகிகள் நியமனம், மாற்றம் உட்பட எல்லாவற்றையும் முடிவுசெய்தது உதயநிதியும் சபரீசனும்தான். தங்களுக்கான ஆதரவு வட்டத்தை இப்போதே போட்டி போட்டுக்கொண்டு உருவாக்குகிறார்கள். அமைப்புத் தேர்தல் நடக்கும்போது, தன் தலையீடு இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே, ஸ்பெயின் சென்றுவிட்டார் சபரீசன். தேர்தல் முடிந்த பிறகுதான் ஊர் திரும்பினார். மகனின் படிப்பு விஷயம் என்ற காரணத்தைச் சொல்லிவிட்டு லண்டன் சென்ற உதயநிதி இன்னும் ஊர் திரும்பவில்லை.
இந்த மாவட்டச் செயலாளர் தேர்தலில், ‘வார்னிங்’ அளிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ‘எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்’ என்ற அறிவுறுத்தலோடுதான் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதிருந்தே மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, சபரீசனின் தனியார் ‘டீம்’ களமிறக்கப்பட்டிருக்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் அளிக்கப்போகும் ரிப்போர்ட்படி, புதிய மாற்றங்கள் வரலாம்” என்றார்.
ஊருக்கே மாநில சுயாட்சி, ஜனநாயகக் கருத்துகளைப் பாடமெடுக்கும் தி.மு.க-வில், அந்தக் கட்சியின் அமைப்புத் தேர்தலே ஜனநாயகப்படி நடக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. “வழக்கமாக 15 நாள்கள் இடைவெளியில்தான் கட்சிப் பொதுக்குழுவுக்கான அறிவிப்பு வெளிவரும். ஆனால், இந்த முறை அறிவிப்பு போதுமான கால இடைவெளியில் செய்யப்படவில்லை. எல்லாவற்றையும் சின்னவரும், மாப்பிள்ளையும் முடிவு பண்ணிவிட்டால், தேர்தல், பொதுக்குழுவெல்லாம் எதற்கு?” என்று ஆதங்கப்படுகிறார்கள் கட்சித் தொண்டர்கள். இந்த ஜனநாயகமற்ற நிலை நீடிப்பது, தி.மு.க போன்ற ஓர் இயக்கத்துக்கு அழகல்ல!