அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின் - தி.மு.க பொதுக்குழு X-RAY

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்த ஆற்காட்டார், தழுதழுத்த குரலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்படுவதாக அறிவித்தார்.

கனிமொழிக்கு மணிமகுடம், உதயநிதிக்கு முக்கியத்துவம், அமைச்சர்களின் அடாவடி நடவடிக்கைகள் எனப் பரபரப்புகளுக்கிடையே, மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கூட்டப்பட்ட தி.மு.க-வின் 15-வது பொதுக்குழு, ‘நவரசம்’ பொங்க நடந்து முடிந்திருக்கிறது. மகிழ்ச்சி, சோகம், ஏமாற்றம், கவலை, கோபம், அலட்சியம் என உணர்ச்சிகள் தாண்டவமாடிய இந்தப் பொதுக்குழுவில், முதல்வர் ஸ்டாலினின் பேச்சுத்தான் ‘ஹைலைட்.’ வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு அழுத்தமாகக் கொட்டுவைத்ததோடு, தன் மன வேதனைகளையும் வெளிப்படுத்தினார் ஸ்டாலின். அதை அவர்கள் கொஞ்சமும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, ‘தொடர்ந்து முதல்வர் மன்னித்துக் கொண்டேயிருக்க மாட்டார்’ என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சியிலிருக் கும்போது நடக்கும் முதல் பொதுக்குழு என்பதால், நொடிக்கு நொடி சுவாரஸ்யம் அரங்கேறியது!

கட்சிப் பொதுக்குழு... உதவிக்கு வந்த அதிகாரிகள்!

‘சென்னை அமைந்தகரையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், அக்டோபர் 9-ம் தேதி பொதுக்குழு நடைபெறும்’ என்கிற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, பொதுக்குழுவை யார் முன்னின்று நடத்துவது என்கிற போட்டி சென்னை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் வெடித்தது. அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முட்டிமோதிய நிலையில், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு உதயநிதியின் தீவிர ஆதரவாளரும், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான சிற்றரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் கட்சித் தலைமையால் பணிக்கப்பட்டார்.

என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின் - தி.மு.க பொதுக்குழு X-RAY

பொதுக்குழு நடந்த பள்ளி வளாகத்துக்கு, ஒரு வாரத்துக்கு முன்பே விசிட் அடித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், நிலத்தைச் சமன்படுத்துவதில் தொடங்கி பந்தல் அமைப்பது வரை வேண்டிய உதவிகளைச் செய்திருந்தனர். விழா நடந்த தினத்திலும், 60-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் அரசு அடையாள அட்டையுடன் பொதுக்குழுவில் வலம்வந்ததைப் பார்க்க முடிந்தது. பொதுக்குழு நடந்த முகப்பு, அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கம் வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. முகப்பில் ஸ்டாலின், உதயநிதியின் படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. அண்ணா, கருணாநிதியின் படம்கூட இல்லாததால், தி.மு.க தொண்டர்களிடம் முணுமுணுப்பு எழுந்தது. வந்தவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு தண்ணீர் பாட்டில் நிறுவனம்தான், தண்ணீர் சப்ளை செய்தது.

பள்ளியிலிருந்த கழிவறைகளைத்தான் பொதுக்குழுவுக்கு வந்தவர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 4,000 பேர் அழைக்கப்பட்டிருந்ததால், கழிவறை வசதி போதவில்லை. குறிப்பாகப் பெண்கள் ரொம்பவே அவதிப்பட்டனர். காலை 9 மணியிலிருந்து அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் வரிசையாக அரங்கத்துக்கு வரத் தொடங்கினார்கள். அமைச்சர்களுக்கென தனி வரிசை ஏதும் ஏற்பாடு செய்யப்படாததால், தாமதமாக வந்த அமைச்சர்களுக்கு இருக்கை கிடைக்கவில்லை. அமைச்சர் பெரியகருப்பன் அடித்துப் பிடித்து ஓரமாக ஒரு சீட்டில் அமர்ந்தார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட சீனியர்களுக்கும் பின்வரிசையில்தான் இடம் கிடைத்தது.

என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின் - தி.மு.க பொதுக்குழு X-RAY

“சின்னவருக்கு சேர் கொண்டு வாங்கப்பா..!”

9:30 மணிக்கு அரங்கத்துக்குள் நுழைந்தார் மகளிரணிச் செயலாளர் கனிமொழி. கட்சி சீனியர்கள், அமைச்சர்களைத் தேடிப் போய் வணக்கம் வைத்தார். அவரருகே சென்ற அமைச்சர் கீதா ஜீவன், ‘அக்கா வாழ்த்துகள்’ எனக் கூற, கனிமொழி அவரது காதுக்குள் ஏதோ சொல்ல, இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர். அப்போது அண்ணா அறிவாலயத்தில் உதவியாளராக இருக்கும் பெண் ஒருவர் கனிமொழியைக் கட்டியணைத்து, முத்தமிட்டு, தனது அன்பை வெளிப்படுத்தினார்.

கனிமொழியைச் சுற்றித் தொண்டர்கள் சூழ்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அந்த இடமே நெகிழ்ச்சியால் ததும்பியது. மிகச்சரியாக அந்தச் சமயத்தில், அரங்கத்துக்குள் நுழைந்தார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. முன்வரிசையில் காலியாக ‘பிளாஸ்டிக்’ இருக்கைகள் இருந்த நிலையில், அதில் அமராமல் நின்றுகொண்டேயிருந்தார் உதயநிதி. அதை கவனித்த தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, அருகிலிருந்த ஊழியரைப் பார்த்து, ‘சின்னவருக்கு சேர் கொண்டுவாங்கப்பா...’ என்றார். உடனே, மேடையில் போடப்பட்டிருந்த மர நாற்காலி ஒன்று கூட்டத்தின் தலைக்கு மேலே கைகள் மாற்றி மாற்றிக் கொண்டுவரப்பட்டது. மேடைக்கு எதிரே மையமாக அமர்ந்துகொண்டார் உதயநிதி. சீனியர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவரைத் தேடித் தேடி வந்து வணக்கம் வைத்தனர். பொதுக்குழுவில் நான்கு எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்திலுமே, உதயநிதியின் அசைவுகள்தான் காட்டப்பட்டனவே தவிர, இதர நிர்வாகிகள் பக்கம் கேமரா திரும்பவே இல்லை.

தேடி வந்த செருப்பு... பதற்றமடைந்த டி.ஆர்.பாலு!

பொதுக்குழு அரங்கத்துக்குள் முதல்வர் ஸ்டாலின் சரியாக 10:05 மணிக்கு என்ட்ரி கொடுத்தார். அவருடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மக்களவை எம்.பி டி.ஆர்.பாலு ஆகியோர் ஒன்றாக வந்தனர். பொதுக்குழு சரியாக 10:10 மணிக்குத் தொடங்கியது. ‘தலைவருக்கான தேர்தலை, ஆணையராக இருந்து ஆற்காடு வீராசாமி நடத்திக்கொடுப்பார்’ என ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார். வயது மூப்பு காரணமாக, ஓய்விலிருக்கும் ஆற்காட்டார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடை ஏறுவதால், கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.

சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்த ஆற்காட்டார், தழுதழுத்த குரலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்படுவதாக அறிவித்தார். அப்போது மேடை ஏறிய ஸ்டாலினை, தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். பின்னர் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் அறிவிக்கப்பட்டனர். மேடை ஏறும் முன்பு டி.ஆர்.பாலு, முரசொலி செல்வத்தைத் தேடிப்போய் காலில் விழுந்து வணங்கினார். மேடையிலிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் புகைப்படங்களுக்குத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த நேரத்தில், டி.ஆர்.பாலு தனது செருப்பை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். உடனே அவரது உதவியாளர் ஒருவர், செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டுவந்து பாலுவிடம் கொடுத்தார். இதை மேடையிலிருந்த நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பதற்றமடைந்த டி.ஆர்.பாலு, ‘நீ ஏம்ப்பா எடுத்துட்டு வர்றே... இருக்குற பிரச்னை புரியாம...’ என உதவியாளரைக் கடுகடுத்தார். ‘தினமும் செய்ய வெச்சுப்புட்டு திடீர்னு ஏம்ப்பா நீ கையில எடுக்குறேன்னு சொன்னா... அந்தத் தம்பி பழக்க தோஷத்துலதான எடுத்துட்டு வந்திருக்கு?’ எனத் தொண்டர்களே கமென்ட் அடித்தனர்.

என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின் - தி.மு.க பொதுக்குழு X-RAY

“சின்னவர் வெயிட் பண்றார்... சீக்கிரம் முடிங்க!”

தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைத் தொடர்ந்து, துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்படுபவர்களின் பெயரை ஸ்டாலின் அறிவித்தார். அப்போது, ‘டெல்லியில் ஒலிக்கக்கூடிய கர்ஜனை மொழி, கனிமொழி துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்’ என ஸ்டாலின் அறிவித்தபோது, ஓட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது. கரவொலிக்கு மத்தியில் மேடை ஏறிய கனிமொழிக்கு, கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். அடுத்ததாக, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் எ.வ.வேலுவும் பேசினார்கள். மதுரை மாநகர் வடக்குச் செயலாளராக இருந்த பொன்முத்துராமலிங்கம், தன் பதவி பறிபோன அதிருப்தியில் இருந்தார். அவரைச் சாந்தப்படுத்த, மேடையில் பேசச் சில நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

அடுத்து பேசுவதற்காக மைக் அருகே சென்றார் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி. அப்போது உதயநிதி மேடையேறவும், படபடப்புடன் பொங்கலூரார் அருகே சென்ற ஆர்.எஸ்.பாரதி, ‘அடுத்தது சின்னவர் பேசணும். வெயிட் பண்றார். சீக்கிரமா பேசி முடிங்க’ என்று அவசரப்படுத்தினார். வேறு வழியில்லாமல், ஓரிரு வார்த்தைகளுடன் பேச்சை முடித்துக்கொண்டார் பொங்கலூர் பழனிசாமி.

கனிமொழிக்கு வாழ்த்துக் கூறி பேச்சைத் தொடங்கிய உதயநிதி, ‘இளைஞரணியைப்போல கழகத்தில் இருக்கும் இதர 19 அணிகளுக்கும் இலக்கு கொடுக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து, இளைஞரணி செய்த பணிகளை உதயநிதி பட்டியலிடவும், இதர அணிகளின் நிர்வாகிகள் நெளியத் தொடங்கினார்கள். “நாம ஏதோ வேலையே பார்க்காத மாதிரில்ல, நமக்கு இலக்கு கொடுக்கணுங்கறார். தலைவர் பையன்கிற காரணத்துனால அவர் அணிக்கு வெளிச்சம் கிடைக்குது. நாம செய்யறதை முரசொலிலகூட ‘ஹைலைட்’ பண்ண மாட்டேங்குறாங்களே” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இடது கையால் சால்வை... முகம் கறுத்த கனிமொழி!

அடுத்ததாக கனிமொழி பேசினார். “அண்ணா... அப்பா இல்லாத இடத்தில் நான் உங்களை வைத்துப் பார்க்கிறேன். நீங்கள் எடுத்துவைக்கும் அடியில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் போராட்டங்களில் என அத்தனையிலும் உங்கள் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருக்கிறேன்” என உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். பேச்சை முடித்துவிட்டு, மேடையில் இருந்தவர்களுக்கு சால்வை கொடுக்கும்போது, டி.ஆர்.பாலுவுக்கும் சால்வை கொடுத்தார் கனிமொழி. ஆனால், பாலு மிக அலட்சியமாக இடது கையில் சால்வையை வாங்கி தன் உதவியாளரிடம் கொடுக்கவும், கனிமொழியின் முகமே கறுத்துவிட்டது. அப்செட்டாகி போனைக் கையிலெடுத்தவர், கூட்டம் முடியும் வரை போனிலேயே மூழ்கியிருந்தார்.

துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சில், பல உள் அர்த்தங்கள் தெறித்தன. “கடந்த காலங்களில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், பா.ஜ.க-வை தி.மு.க-தான் கட்டுப்படுத்தியது” எனப் பேசியது பலரது புருவத்தையும் உயர்த்தியது. அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றிபெறும்” என்றதும், “அப்போ, கூட்டணி கிடையாதா?” எனக் கட்சி நிர்வாகிகளிடையே திடீர் சலசலப்பு எழும்பியது.

சாதாரணமாகப் பேசும்போதே, நவரசங்களையும் முகத்தில் கொட்டும் துரைமுருகன், பொதுக்குழுவில் ஏகத்துக்கும் கொட்டிவிட்டார். தன் பேச்சை முடித்துவிட்டு, ஸ்டாலினுக்கு இரண்டு பேனாக்களைப் பரிசளித்தார். “இந்த பேனாக்கள் ரொம்ப ‘ரேர் கலெக்‌ஷன்.’ இனி, இதில்தான் நீங்க கையெழுத்து போடணும். வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளை வெளியிடணும்” என்றபடி, ஸ்டாலினின் சட்டைப் பையலிருந்த பேனாவை எடுத்துவிட்டு, புதிய பேனாக்களை வைத்தார். பொதுக்குழுவில், அயலக அணி, சுற்றுச்சூழல் அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகியவற்றில், கட்சியின் சட்டவிதிகளின்படி நான்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின் - தி.மு.க பொதுக்குழு X-RAY

என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின்!

பொதுக்குழுவின் இறுதியில் ஸ்டாலின் பேச எழுந்தபோது, அரங்கமே நிசப்தமாக இருந்தது. “சில சலசலப்புகளைத் தவிர உட்கட்சித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இரக்கத்தின் அடிப்படையில்கூட சிலருக்குப் பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். இதனால், புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை. வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வருந்த வேண்டாம். வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படவுமில்லை, அவர்கள் மறக்கப்படவுமில்லை.

தி.மு.க தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர்... மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப்போல இருக்கிறது என்னுடைய நிலைமை. மழையே பெய்யவில்லை என்றாலும், அதிகமாக மழை பெய்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். என்னை மேலும் துன்பப்படுத்துவதுபோல கழக நிர்வாகிகள், மூத்தவர்கள், அமைச்சர்கள் நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது... யாரிடம் சொல்வது... நாள்தோறும் காலையில், ‘நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கியிருக்கக் கூடாதே’ என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது. எனது உடம்பைப் பாருங்கள்... உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தர வேண்டும். சிறுமைப்படுத்தக் கூடாது. பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறையின் காரணமாகக் கழகம் பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது” என்று கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து வேதனைப்பட்டுப் பேசினார் ஸ்டாலின். குறிப்பாக, அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் செயல்பாடுகள் குறித்து மறைமுகமாகக் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உணர்ச்சிப் பிழம்பாகத் தன் வேதனையை முதல்வர் மேடையில் கொட்டிக் கொண்டிருக்கும்போது, மேடையிலிருந்த பொன்முடி, கீழேயிருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர், எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர். அமைச்சர்களின் சிரிப்பு, கட்சித் தொண்டர்களை முகம் சுளிக்க வைத்தது. “செய்த தவறை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. இனியும் முதல்வர் இந்த விஷயத்தை மென்மையாக டீல் செய்யக் கூடாது” என்றனர் பலரும்.

என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின் - தி.மு.க பொதுக்குழு X-RAY

“தி.மு.க பொதுக்குழு, பல விஷயங்களில் வழக்கமாகவும் சில விஷயங்களில் புதிதாகவும் நடந்து முடிந்திருக்கிறது. குறிப்பாக, பெரியார், அண்ணா, கலைஞர் பற்றி யாருமே பேசவில்லை. பெரும்பாலும் உதயநிதி புராணமாகவே இருந்தது. தமிழக அரசியலிலும், தமிழ்ச் சமூக மாற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்துவருவது தி.மு.க எனும் கட்சி. அதன் தலைவராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின், கட்சியின் லகானை இழுத்துப் பிடிக்கவேண்டிய நேரமிது. சமூகநீதி, மாநில சுயாட்சி, மொழியரசியல் எனக் கருத்தியல்ரீதியிலான அடிக்கட்டுமானத்தின் மீதுதான் கட்சி வலுவாக நின்றுகொண்டிருக்கிறது. தலைவர் இதில் தெளிவாக இருந்தாலும், அதைச் செயல்படுத்தும் அமைச்சர்கள், நிர்வாகிகள் தவறும்போது ஒட்டுமொத்த கட்சியின் பிம்பமும் சரிகிறது. தலைவர் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கிறார். அதைத் தவறு என்று சொல்லவில்லை. அரசியலில் மென்மைப் போக்கு ஓரளவுக்கு மேல் உதவாது என்பது அவருக்குப் புரிய வேண்டும்” என்றனர் சில முக்கிய தி.மு.க சீனியர்கள்.

அரவணைப்பும் கண்டிப்பும் தலைமையின் இரு பிரதான குணங்கள். தி.மு.க தலைவர், கட்சிக்குள் இரண்டாவது விஷயத்தை விரைந்து கைக்கொள்ள வேண்டும்!