Published:Updated:

கஜானா காலி! - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை

கஜானா காலி! - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

பத்தாண்டுகளுக்குப் பிறகு, சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியாக வந்தமர்ந்திருக்கும் தி.மு.க மீது மொத்தப் பார்வையும் குவிந்திருக்கிறது. ‘தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றுமா?’ என்கிற எதிர்பார்ப்பு மக்களிடமும், ’அதற்கான நிதியை எங்கேயிருந்து திரட்டுவார்கள்?’ என்கிற பதற்றம் அதிகாரிகளிடமும் தொற்றிக்கொண்டிருக்கிறது. இரண்டு புள்ளியையும் இணைக்கும் கோடாக, வெள்ளை அறிக்கை ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது ஆளுங்கட்சி. ’’இந்த அறிக்கை மூலமாக ‘கஜானா காலி’ என்ற அஸ்திரத்தை எய்து, அ.தி.மு.க தரப்பை நிலைகுலையச் செய்யவும் தி.மு.க திட்டமிட்டிருக்கிறது’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஜூன் 21-ம் தேதி, சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் வாசித்த உரை, இந்த அஸ்திரத்தின் ஆரம்பப்புள்ளிதான் என்கிறது கோட்டை வட்டாரம்.

கஜானா காலி! - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை

கஜானா காலி!

ஆளுநர் வாசித்த உரையில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களுக்கு இடமிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்தக் கவர்ச்சிகரமான அறிவிப்பும் இடம்பெறவிலலை. குறிப்பாக, நிதி சம்பந்தமான அறிவிப்புகளை நாசுக்காகத் தவிர்த்துள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. ஆளுநர் உரையின் பெரும்பகுதி கடந்தகால ஆட்சியில் ஒவ்வொரு துறைவாரியாக ஏற்பட்ட சறுக்கல்களையும், அதைக் களைவதற்கு தி.மு.க எடுத்துவைத்திருக்கும் திட்டத்தையும் முன்வைப்பதாகவே இருந்தது. ஒருவகையில், ‘இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டம்தான்’ என்கிறார்கள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “தி.மு.க அரசு பதவியேற்ற பிறகு நிதித்துறை அமைச்சர், நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதை அதிகாரிகள் சில தரவுகளுடன் எடுத்துக் கூறினர். தி.மு.க வாக்குறுதி அளித்திருந்த திட்டங்களைச் செயலாக்குவதற்குப் போதிய நிதி கையிருப்பில் இல்லை. கிட்டத்தட்ட ‘கஜானா காலி’ என்பதே அதிகாரிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதனால், பெரும் செலவுகளை ஏற்படுத்தும் திட்டங்களைத் தற்போது ஒத்திவைத்துவிட்டு, அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். ஆனால், ‘சொன்னதைச் செய்யாமல் காலம் தாழ்த்துவது அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும்’ என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டதும், அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடலாம் என அதிகாரிகள் சிலர் ஆலோசனை அளித்தனர். அதை முதல்வர் ஏற்றார்.

வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை!

வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் தி.மு.க-வுக்கு இரண்டு லாபங்கள் இருப்பதாக முதல்வர் கருதுகிறார். ஒன்று, ‘கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின் லட்சணத்தால் கஜானா கையிருப்பு இவ்வளவுதான். பணம் சேர்ந்த பிறகு வாக்குறுதியளித்த திட்டங்களை நிறைவேற்றுகிறோம்’ என்று வெளிப்படையாகக் கூறிவிடலாம். எதிர்பார்ப்பிலிருக்கும் பொதுமக்கள் இதைப் பார்த்து, ‘நிதிநிலை மோசமானதற்கு

அ.தி.மு.க-தான் காரணமெனப் பாய்வார்கள்’ என்பது முதல்வரின் கணக்கு. இரண்டாவது, வெள்ளை அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் எந்தக் கூச்சலும் போட முடியாது. இருப்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கடந்த ஆட்சியில், குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டும் தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றின் செலவுத் தொகைகளிலும் முரண்பாடுகள் இருந்துள்ளன. இத்தனை சிக்கல்களை வைத்துக்கொண்டு பட்ஜெட்டைத் தயார்செய்தால், அது தங்களுக்குப் பாதகமாகவே முடியும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முதல்வரிடம் கூறியுள்ளார்.

‘தமிழக அரசுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்திவைத்துள்ளது என்கிற விவரம் மக்களுக்குத் தெரியட்டுமே’ என்று பழனிவேல் தியாகராஜன் கூறியதை முதல்வரும் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகுதான் தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி கோட்டையில் மும்முரமானது. ஸ்டாலினின் இந்த ‘அதிரடி அட்டாக்’ உண்மையிலேயே அ.தி.மு.க-வுக்குப் பெரும் சவால்தான். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் கடன்சுமை நான்கரை லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. ‘இதற்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை, கடந்த ஆட்சியின் கையாலாகாத்தனம்தான் காரணம்’ என்பதை இந்த அறிக்கை மூலம் காட்ட நினைக்கிறார்கள். இந்த அறிக்கைக்கான அஸ்திவாரத்தை ஆளுநர் உரையிலேயே போட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆளுநர் உரையில், ‘தமிழ்நாட்டின் நிதிநிலை கவலைக்குரியதாக இருக்கும் இச்சூழ்நிலையில், மாநிலத்தின் கடன்சுமையைக் குறைக்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் அரசு முழு கவனம் செலுத்தும். மாநிலத்தின் நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது” என்றார் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம், “வாக்குறுதி அளித்திருந்தபடி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எப்போது குறைப்பீர்கள்?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “குறைப்போம்னு சொன்னோம்... தேதி சொன்னோமா?” என எகத்தாளம் தூக்கலாக பதிலளித்தார் பழனிவேல் தியாகராஜன். அவரது துடுக்குத்தனமான கருத்துக்கு தி.மு.க-வுக்குள்ளேயே கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அதேசமயம், “அவர் ஏன் குறைக்க முடியாது என்று சொன்னார் என்பதற்கான விளக்கம், வெள்ளை அறிக்கையில் வெட்ட வெளிச்சமாகும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கஜானா காலி! - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை

நிதிக்காக நிபுணர்குழு!

தி.மு.க அரசு தயாரித்து அளித்திருக்கும் ஆளுநர் உரையில், அனைவரின் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் எகிறச் செய்திருப்பது ‘நிதி ஆலோசனைக்குழு’ பற்றிய அறிவிப்புதான்.

அ.தி.மு.க ஆட்சியில் நிதிநிலை அதளபாதாளத்துக்குச் சென்றபோது, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழனிவேல் தியாகராஜன், ‘நிதிநிலையை மேம்படுத்த ஒரு நிதி ஆலோசனைக்குழுவை அமையுங்கள்’ என்று சட்டமன்றத்தில் பேசினார். அந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க அரசு அப்போது செவிசாய்க்கவில்லை. அதை இப்போது செய்திருக்கிறது தி.மு.க.

தி.மு.க அறிவித்திருக்கும் முதல்வரின் நிதி ஆலோசனைக்குழுவில் உலக புகழ்பெற்ற பொருளாதார ஆலோசகர் எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர் ஜீன் ட்ரெஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ரகுராம் ராஜன் ஏற்கெனவே மத்திய அரசின் நிதிக் கொள்கையை நேரடியாக விமர்சித்தவர். அரவிந்த் சுப்பிரமணியன், தன் பதவிக்காலம் முடியும் முன்பே மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அரசு அவரது கருத்துகளைப் புறக்கணித்துவந்ததே, ராஜினாமாவுக்கான காரணமாக அப்போது பரபரப்பானது. இப்படி பா.ஜ.க அரசுக்குச் சிக்கலை உண்டுபண்ணியவர்களை முதல்வரின் ஆலோசகர்களாகத் தமிழக அரசு நியமித்திருப்பது மத்திய அரசுக்கும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். `ஏற்கெனவே, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், இந்த ஐவர் குழுவினர் என்ன பாடுபடுத்தப் போகிறார்களோ?’ என்கிற கலக்கம் டெல்லியை உலுக்க ஆரம்பித்துவிட்டதாக நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் நிதித்துறையின் மூத்த அதிகாரிகள்.

கஜானா காலி! - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை

நீட்... எழுவர் விடுதலை?

‘நீட் தேர்வு ரத்து பற்றிய அறிவிப்பு கவர்னர் உரையில் இல்லை’ என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசித்திருக்கிறார். ‘நீட் விவகாரத்தில் இனி சட்டரீதியான நடவடிக்கை மட்டுமே சாத்தியம். சட்டசபையில் தீர்மானம் போட்டு அனுப்பினாலும் பலன் இல்லை’ என்று சட்ட நிபுணர்கள் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால் நீட் விவகாரத்தை எப்படிக் கையாளுவது என்கிற திணறல் தி.மு.க அரசிடம் இருப்பதால், ஏ.கே.ராஜன் குழுவைக் காரணம் காட்டி இந்த விவகாரத்தை இப்போது தள்ளிப்போட நினைக்கிறதாம். அதேபோல, ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில், தமிழக ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பிய தீர்மானம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சட்டரீதியாக இதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை என்றாலும், நடைமுறைச் சிக்கல் இருப்பதால், இப்போதைக்கு இந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வர இயலாமல் தடுமாறுகிறது தமிழக அரசு.

மத்திய அரசுக்கு செக் வைக்கும் விதத்தில் சில அறிவிப்புகளும் சட்டசபைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்கிறார்கள் தி.மு.க உறுப்பினர்கள் சிலர். மத்திய உள்துறை அமைச்சகம் சி.ஏ.ஏ சட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளதாம். இதற்கு இந்தியாவில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. தற்போது, சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர தி.மு.க அரசு முடிவெடுத்துள்ளது என்கிறார்கள். அத்துடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க முடிவெடுத்துள்ளதாம். “சி.ஏ.ஏ சட்டத்தைத் தமிழகத்துக்குள் அனுமதிக்க முடியாது” என்கிற அறிவிப்பை முதல்வரே வெளியிடுவார் என்கிறார்கள் தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள்.

ஆளுநர் உரை மீதான விவாதங்கள் மற்றும் பதில் உரைகளோடு ஜூன் 24-ம் தேதியுடன் சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. அதன் பிறகு, ஜூலை 1-ம் தேதி, முதல் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தை நடத்த முதலில் அரசு தீர்மானித்ததாம். ஆனால், வெள்ளை அறிக்கையை வெளியிட்டுவிட்டு பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தலாம் என்று இப்போது முடிவெடுத்துள்ளார்களாம். ஜூலை இரண்டாவது வாரம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. ஓர் அரசு எப்படிப் பயணிக்கப்போகிறது என்பதற்கான கலங்கரை விளக்கம்தான் ஆளுநர் உரை. அந்த ஆளுநர் உரையிலேயே கடந்தகால ஆட்சியின் பொருளாதார அவலங்களைத் தோலுரிக்கும் அம்பை எய்திருக்கிறார் ஸ்டாலின். வெள்ளை அறிக்கை வெடி யாரையெல்லாம் பதம் பார்க்கப்போகிறது என்பது ஜூலையில் தெரிந்துவிடும்!

*****

கஜானா காலி! - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை

முதல்நாள் சட்டமன்ற சுவாரஸ்யங்கள்!

சட்டமன்றத்துக்குள் 9:55 மணிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், எதிர் வரிசையிலிருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வணக்கம்வைத்துவிட்டு அமர்ந்தார். ஓ.பி.எஸ் அருகில் அமர்ந்திருந்த வேலுமணி பக்கம் அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

கூட்டத்தொடருக்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டிருந்தது. முதல்வர் உட்பட அனைவரின் வெப்பநிலையையும் கவனித்த பிறகே, அவர்கள் அவைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரது டேபிளிலும் சானிடைஸரும் மாஸ்க்குகளும் வைக்கப்பட்டிருந்தன.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு இரண்டு முறை டீ வழங்கப்பட்டும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு டீ வழங்கப்படவில்லை. இதை கவனித்த ஸ்டாலின் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்ட, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் டீ வழங்கப்பட்டது.

வழக்கமாக ஆளுநர் உரை மதியம் 12:30 மணிவரை நீண்டுகொண்டே போகும். இம்முறை, துறைவாரியாக புல்லட் பாயின்ட்டுகளை மட்டும் பேசிவிட்டு ஆளுநர் 11:42 மணிக்கே அமர்ந்துவிட்டார். ஆளுநர் உரை தயாரிப்புப் பணியிலிருந்த அதிகாரிகளிடம், ‘உரை சுருக்கமாக இருந்தால் போதும்’ என ஸ்டாலின் சொல்லியிருந்ததே காரணம் என்கிறார்கள்.

கலைவாணர் அரங்கத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் ரிலாக்ஸ் மூடிலேயே இருந்தார்கள். சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சிறிது நேரம் வந்திருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். அரங்கத்துக்கு வெளியில் நின்றிருந்த போலீஸார்தான் நிழலுக்கு ஒதுங்க இடமில்லாமல் வெயிலில் காய்ந்தனர்.

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள்தான் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக விஜயதரணி நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக முன்வரிசையில் செல்வப்பெருந்தகை அமர்ந்திருந்தார். அந்த இடத்தில் அமர ஆசைப்பட்ட விஜயதரணிக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கியிருந்தார்கள். முதல் வரிசையை அவ்வப்போது ஏக்கமாக எட்டிப் பார்த்தபடி இருந்தார் விஜயதரணி.

ஆளுநர் உரை வைபவம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்திக்க அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் வந்தனர். அப்போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீரிடம், “அண்ணே, நீங்க பேசுங்கண்ணே” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதற்கு பன்னீர் “நீங்களே பேசுங்க...” என்று கூறவும், தயாராக எழுதிவைத்திருந்த பாயின்ட்டுகளைச் செய்தியாளர்களிடம் அடுக்க ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி. ஓர் ஓரமாக நின்றிருந்த கழக எம்.எல்.ஏ-க்கள் சிலர், “எடப்பாடி ஏற்கெனவே தயாராத்தான் வந்திருக்காரு. சும்மாக்காச்சுக்கும்தான் பன்னீரைப் பேசச் சொல்லியிருக்காரு” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னாலேயே கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, பாஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் ‘உங்கள் துறை தொடர்பாக இப்போது எந்தப் பணியும் இல்லை. தேவைப்படும்போது மட்டும் வந்தால் போதும்’ என்று சொல்லிவிட்டதால், ‘எதுக்குப்பா டெஸ்ட் எடுக்கச் சொன்னீங்க?’ என நொந்துகொண்டது அதிகாரிகள் வட்டாரம்.

****

லண்டன் பயணம்!

ஆண்டுக்கொரு முறை உடல்நலப் பரிசோதனைக்காக லண்டன் செல்வது ஸ்டாலினின் வழக்கம். கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டன் செல்வது தள்ளிப்போயிருக்கிறது. ஜூலை மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன், ஸ்டாலின் லண்டன் செல்லவிருப்பதாகச் சொல்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். இதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைத் தமிழக அரசு பெற்றிருக்கிறதாம். உடல் பரிசோதனைக்குச் செல்லும் ஸ்டாலின், லண்டனில் ஒரு வாரத்துக்கு மட்டுமே தங்குவது வழக்கம். இம்முறை

20 நாள்களுக்கு மேல் தங்க அவர் முடிவெடுத்திருப்பதால், இடைப்பட்ட காலத்தில் பரிசோதனையோடு, தொழில்முனைவோர்களையும் சந்திக்கும் திட்டத்தையும் அதிகாரிகள் தரப்பு இணைத்துள்ளதாம். முதலில் துர்கா ஸ்டாலின், ராஜா சங்கர், சபரீசன் உள்ளிட்டோர்தான் ஸ்டாலினுடன் லண்டன் பறக்க முடிவாகியிருந்ததாம். தற்போது தொழில்முனைவோர்களையும் சந்திக்க வேண்டியிருப்பதால், அதிகாரிகள் சிலரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism