Published:Updated:

“அது போன மாசம்!” - அந்தர்பல்டி தி.மு.க

கே.என்.நேரு - எ.வ.வேலு - செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
கே.என்.நேரு - எ.வ.வேலு - செந்தில் பாலாஜி

நெடுஞ்சாலையில் மட்டுமல்ல, டாஸ்மாக்கிலும் தி.மு.க பல்டி அடித்துவருக்கிறது. மே 7, 2020-ல் ஊரடங்கு காலத்திலும் மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது.

“அது போன மாசம்!” - அந்தர்பல்டி தி.மு.க

நெடுஞ்சாலையில் மட்டுமல்ல, டாஸ்மாக்கிலும் தி.மு.க பல்டி அடித்துவருக்கிறது. மே 7, 2020-ல் ஊரடங்கு காலத்திலும் மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது.

Published:Updated:
கே.என்.நேரு - எ.வ.வேலு - செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
கே.என்.நேரு - எ.வ.வேலு - செந்தில் பாலாஜி

நடிகர் வடிவேலு ஒரு படத்தில், “அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்” என்று வார்த்தைகளால் விளையாடி எதிரியிடமிருந்து தப்பிக்கப் பார்ப்பார். அதுபோலவே, தி.மு.க-வும் கடந்தகாலங்களில் தாங்கள் பேசிய வார்த்தைகள், கொடுத்த வாக்குறுதிகளை மறந்து, கொள்கை முடிவுகளில் ‘அந்தர்பல்டி’ அடிப்பது தொடர்கதையாகிவருகிறது. கேட்டால், ‘அது போன மாசம்...’ என்கிறரீதியில்தான் விளக்கங்கள் வரு கின்றன. ஆட்சிக்கு வந்த 13 மாதங்களில், சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் தொடங்கி, கோவை சூயஸ் குடிநீர்த் திட்டம் வரையில் பல்டி மேல் பல்டி அடித்திருக்கிறது தி.மு.க அரசு!

“எட்டுவழிச் சாலைத் திட்டம்...” அந்தர்பல்டி வேலு!

அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது, சென்னை யிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலத்துக்கு 277 கி.மீ தொலைவுக்கு எட்டுவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய பா.ஜ.க அரசும் தீர்மானித்தது. இந்தத் திட்டத்துக்காகச் சுமார் 7,000 விவசாயிகளிடமிருந்து 6,978 ஏக்கர் நிலங் களைக் கையகப்படுத்தும் பணியைத் தீவிரப் படுத்தியது மாநில அரசு. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த விவகாரம் சட்டமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது, ‘சாலைகள் அமைப்பதற்கு தி.மு.க எதிரியல்ல. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு, பிரச்னையைத் தீர்த்துவிட்டு சாலை போடுங்கள்’ என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். திட்டத்துக்கு அனுமதி யளிக்கவேண்டி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் 2019-ல் மேல்முறையீடு செய்த போது, ‘சேலம் எட்டுவழிச் சாலை விவகாரத்தில், மீண்டும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கப் பட்டிருக்கிறது. முரட்டுத்தனத்தின் மூலம் அடக்கிவிடலாம் என்பதைக் கைவிட்டுவிட்டு, மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்’ என்று நீண்ட யோசனையைச் சொல்லியிருந்தார் ஸ்டாலின். உச்ச நீதிமன்றத்தில் எட்டுவழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற உத்தரவு வந்தபோது, ‘இந்தத் தீர்ப்பு ஏமாற்ற மளிக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவான கருத்து களை அ.தி.மு.க அரசு எடுத்துவைக்கவில்லை’ என்று ஓர் அறிக்கையையும் வெளியிட்டார் ஸ்டாலின். இறுதியாக, 2021 தி.மு.க தேர்தல் அறிக்கையில், 43-வது வாக்குறுதியாக ‘எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது’ என்று உறுதியளிக்கப்பட்டது. இப்படி, எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகத் தொடர் கருத்து களைப் பதிவுசெய்து, எதிர்த்துவந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ரூட்டை மாற்றிவிட்டது. சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் அமைச்சர் எ.வ.வேலு, ‘எட்டுவழிச் சாலை போடக் கூடாது என்று தி.மு.க எந்தக் காலத்திலும் சொல்லவே இல்லை’ என அடித்திருக்கும் அந்தர்பல்டி ‘ஜம்போ சர்க்கஸ்’ வீரர்களுக்கே சவாலாக அமைந்திருக்கிறது.

எ.வ.வேலு, துரைமுருகன், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, பொன்முடி
எ.வ.வேலு, துரைமுருகன், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, பொன்முடி

23 பர்சன்ட் கமிஷன்... அன்றே உடைத்த துரைமுருகன்!

நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலர், “சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கெனவே மூன்று தேசிய நெடுஞ்சாலை கள் உள்ளன. நான்காவதாக, வாணியம்பாடி யிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப் பட்டினம் வழியாக சேலத்துக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 179-ஏ பணிகளும் நிறைவடைந்து விட்டன. இத்தகைய சூழலில், ஐந்தாவதாக இந்தச் சாலை தேவையில்லை. ஆனாலும், எட்டுவழிச் சாலைத் திட்டத்தை தி.மு.க அரசு மீண்டும் கையில் எடுத்திருப்பதன் மர்மம்தான் புரியவில்லை” என்கிறார்கள்.

அந்த மர்மத்துக்கான விடையை அப்போதே தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் உடைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், திரு.வி.க.நகரில் ஜூன் 30, 2018-ல் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய துரை முருகன், “சேலத்துல மாம்பழத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. கோயம்புத்தூர் மாதிரி ‘இண்டஸ்ட்ரீஸ்’ கிடையாது. அப்புறம் எதுக்கு 10,000 கோடி ரூபாய்ல ரோடு... ஏன்னா, 23 பர்சன்ட் கமிஷனுக்காகத்தான் இந்த ரோடு போடுறாங்க. இது கிடைச்சா போதாதா... அப்புறம் அரசியல் என்ன, மந்திரி பதவி என்ன, செட்டில் தான்” என்று எடப்பாடியை விளாசி எடுத்தார். அன்று துரைமுருகன் வீசிய அம்புகள், அப்படியே இன்று திரும்பி தி.மு.க-வைப் பதம் பார்க்கின்றன.

நம்மிடம் பேசிய ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர் ராஜன், “எ.வ.வேலு சொல்வது முற்றிலும் பொய். தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், விவசாயி களுக்கு எதிரான இந்தத் திட்டம் நிறைவேற்றப் படாது என்றுதான் கூறியிருந்தது. அதேபோல, முதல்வராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி யைச் சந்தித்தார் ஸ்டாலின். இந்தச் சந்திப்பில், `எட்டுவழிச் சாலையைக் கைவிட வேண்டும்’ என்கிற கோரிக்கையை முதல்வர் வைத்ததாக தி.மு.க-வினர் தெரிவித்தனர். `எட்டுவழிச் சாலையைக் கைவிட வேண்டும்’ என்பதுதான் தி.மு.க -வின் நிலைப்பாடு. ஒன்றிய அரசின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அப்போதைய அ.தி.மு.க அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த துணிந்த தால்தான், `அடிமை அரசு’ என ஸ்டாலினே அப்போது விமர்சித்தார். அதேபோல இன்றைக்கு, ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து எ.வ.வேலு பேசுகிறார். ‘எட்டுவழிச் சாலை விவகாரத்தில், தி.மு.க என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது’ என்பதை முதல்வர் ஸ்டாலின் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார் ஆவேசமாக.

சுந்தர் ராஜன்
சுந்தர் ராஜன்

வீதியில் போராடும் மக்கள்... திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்!

நெடுஞ்சாலையில் மட்டுமல்ல, டாஸ்மாக்கிலும் தி.மு.க பல்டி அடித்துவருக்கிறது. மே 7, 2020-ல் ஊரடங்கு காலத்திலும் மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புச்சட்டை அணிந்து, கையில் ‘அடித்தட்டு மக்களுக்கு ஐந்தா யிரம் கொடு... ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு?’ என்கிற பதாகைகளை ஏந்தியபடி, தனது இல்லத்தின் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் ஸ்டாலின். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக, இப்படிப் போராட்டங்களை நடத்திய தி.மு.க., இப்போது பல இடங்களில் மக்கள் போராட்டங் களையும் கடந்து, கடைகளைத் திறந்துவருகிறது. ‘தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 45 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கிறோம். புதிதாக எந்தக் கடையையும் திறக்கவில்லை’ என்று விளக்க மளித்திருக்கிறார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘எண்ணிக்கை கணக்கைவைத்து அவர் லாஜிக் பேசுகிறார். ஆனால், மக்களின் விருப்பத்துக்கு எதிராக டாஸ்மாக் கடைகளைப் புதுப்புது இடங்களுக்கு இடம் மாற்றிக் கொண்டுவருகிறார்கள்’ என்று ஆதங்கப்படுகிறார்கள் மக்கள்.

மார்ச் 2022-ல், ‘டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும். மக்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடையையும் திறக்க அனுமதிக்கக் கூடாது’ என்கிற அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு நேர்மாறாக நிகழ்வுகள் நடக்கின்றன.

ராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில், மேல்நிலைப்பள்ளியின் அருகிலேயே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 24-ம் தேதி, சுமார் 50 பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். சென்னை வேளச்சேரி புவனேஸ்வரி நகரில், 521 என்ற எண் கொண்ட கடை வேறு இடத்திலிருந்து அங்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புவனேஸ்வரி நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், கலால் ஆணையரிடமும் மனு அளித்த பிறகும்கூட கடை திறக்கப் பட்டிருக்கிறது.

நம்மிடம் பேசிய புவனேஸ்வரி நகர் குடியிருப்புச் சங்கத் தலைவர் சேகர், “இந்தக் குடியிருப்புப் பகுதி யில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கே டாஸ்மாக் கடை இருப்பதால், இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் நடமாடுவதே சிரமமாகிவிடுகிறது. புதிய அரசாணையை மையமாகவைத்து, மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தோம். ஆனால், எதிர்ப்பையும் மீறி கடையைத் திறந்திருக்கிறார்கள். அப்புறம் எதற்கு அந்த அரசாணையைப் போட்டார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் பயந்ததுபோல தினந்தோறும் குடிகாரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை” என்றார்.

மின் கட்டணம் முதல் சூயஸ் திட்டம் வரை... பல்டி மேல் பல்டி!

2018-ம் ஆண்டு புதிய மின் இணைப்பு, மீட்டர் பாக்ஸ் இடமாற்றம் ஆகியவற்றுக்குக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதற்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்தது. 2020-ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் தாறுமாறாக எகிறியபோது, வீடுதோறும் கறுப்புக்கொடி பறக்கவிடும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது தி.மு.க. இப்படி மின்கட்டணத்துக்கு எதிராகத் தொடர் குரல் கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை 52 சதவிகிதம் உயர்த்தினர். மேலும், டிஜிட்டல் மீட்டருக்கும், எதிர்காலத்தில் பொருத்தத் திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் மீட்டருக்கும் வாடகை வசூலிக்கத் தீர்மானித்திருப்பதாக, பொதுமக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

2018-ல் 25 சதவிகிதமாக இருந்த சொத்து வரியை 50 சதவிகிதம் வரை உயர்த்தியது அ.தி.மு.க அரசு. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், ‘இது சொத்து வரி உயர்வா அல்லது சொத்து அபகரிப்பா?’ என்று சீறினார். தி.மு.க தேர்தல் அறிக்கையில், 487-வது வாக்குறுதியாக, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரை சொத்து வரி அதிகரிக்கப் பட மாட்டாது’ என வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக முடித்த கையோடு சொத்து வரியை 150 சதவிகிதம் உயர்த்தி விட்டனர். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பதிலளித்தார் துறையின் அமைச்சரான கே.என்.நேரு.

நேருவின் பல்டி அதோடு நிற்கவில்லை. கோவை மாநகராட்சிக்குக் குடிநீர் வழங்கும் 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தம், சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்துக்கு 26 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தின. கோவை மாவட்டத்துக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை யில்கூட, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சூயஸ் திட்டத்தை ரத்துசெய்வோம்’ என்று உறுதி யளிக்கப்பட்டது. ஆனால், அரியணை ஏறியவுடன், ‘சூயஸ் திட்டத்தை ரத்துசெய்யும் எண்ணமில்லை’ என்று பல்டியடித்தார் அமைச்சர் நேரு. கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டில், ‘சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம் தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அது போன மாசம்!” - அந்தர்பல்டி தி.மு.க

ஆறு பேர் விடுதலை... குரல் எங்கே போனது?

தி.மு.க-வின் பல்டிகள் இத்தோடு நிற்கவில்லை. புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்கு எதிராகக் கடும் எதிர்ப்பைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறது தி.மு.க. சமீபத்தில், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டால், மாணவர்கள் போராட வேண்டும்” என்று பேசினார். அமைச்ச ரின் வீராவேசமெல்லாம் மேடைக்கு மட்டும்தான் என்பதை, ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னைக்கு வந்திருந்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் போட்டுடைத்துவிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு எழுத்துபூர்வமாகப் பதிவு செய்யவில்லை” என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், “சிறையில் இருக்கும் ஏழு பேரையும் சட்டப் பிரிவு 161-ன்படி தமிழ்நாடு அரசே விடுதலை செய்யலாம்” என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க குரல் எழுப்பியது. ‘இப்போது அந்தக் குரல் எங்கே போனது?’ என்கிற கேள்வியைத் தமிழ் உணர்வாளர்கள் எழுப்புகிறார்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், “பேரறிவாளன் தொடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசு உறுதுணையாக நின்றது உண்மைதான். அதேபோல, பேரறிவாளன் விடுதலையானவுடனேயே ஆறு பேர் விடுதலை குறித்து, காணொளிக் காட்சி வழியாகக் கூட்ட மெல்லாம் நடத்தினார் முதல்வர். ஆனால், அதில் அடுத்தகட்ட நகர்வு ஏதுமில்லை. பேரறிவாளனுக்குக் கிடைத்ததுபோல, சிறையிலிருக்கும் இதர ஆறு பேருக்கும் நிதி உதவியோ, மற்ற ஆதரவோ கிடைக்கவில்லை. ‘சட்டப்படி தமிழ்நாடு அரசே விடுதலை செய்யலாம்’ என்று கடந்த காலங்களில் தி.மு.க கூறியதை நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றனர்.

சுதாரித்துக்கொள்வாரா ஸ்டாலின்?

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது தி.மு.க அரசு. மக்களிடம் கருத்து கேட்கப் புறப்பட்டுச் சென்ற சமூகச் செயற்பாட்டாளர்களைப் பிடித்து, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து விடுவித்திருக்கிறது காஞ்சிபுரம் காவல்துறை. டெல்டாவில் ஓ.என்.ஜி.சி கிணறுகள் தோண்ட எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., இப்போது அதே இடங்களில் ஓ.என்.ஜி.சி-க்கு அனுமதி யளித்திருக்கிறது.

``எதிர்க்கட்சியாக இருந்தபோது, கமிஷனுக் காகவே இந்தத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்ற தி.மு.க., இன்று அந்தத் திட்டங்களை நிறைவேற்றத் துடிப்பதன் நோக்கம் என்ன?’’ என்று கேள்வியெழுப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த திட்டங் கள், ஆதரவளித்த மக்கள் போராட்டங்கள் எனப் பல விஷயங்களில் இப்போது ரூட்டை மாற்றி யிருக்கிறது தி.மு.க. இதற்கெல்லாம் ‘நிர்வாக நடவடிக்கைகள்’ என்று சால்ஜாப்பு காரணங்களைக் கூறி தி.மு.க தப்பிவிட முடியாது. எதிர்க்கட்சியாக தி.மு.க முன்னெடுத்த விஷயங்களால் ஈர்க்கப் பட்டுத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்; அரியணையில் ஏற்றியிருக்கிறார்கள். அந்தக் கொள்கைகளுக்கு முரணாக, தொடர் அந்தர்பல்டி அடித்துக்கொண்டிருப்பது, மக்களிடம் நகைப்பை மட்டுமல்ல, வெறுப்பையும் உண்டாக்கும். சுதாரித்துக்கொள்வாரா முதல்வர்?