Published:Updated:

தி.மு.க ஆட்சி மீதான விமர்சனங்களை மறைக்கவே ரெய்டு நடத்துகிறார்கள்! - கடுகடுக்கும் எதிர்க்கட்சிகள்

ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டு

தி.மு.க அமைச்சர்கள் பலர்மீது ஊழல் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன.

தி.மு.க ஆட்சி மீதான விமர்சனங்களை மறைக்கவே ரெய்டு நடத்துகிறார்கள்! - கடுகடுக்கும் எதிர்க்கட்சிகள்

தி.மு.க அமைச்சர்கள் பலர்மீது ஊழல் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன.

Published:Updated:
ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டு

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டு மாதங்களில், ஆறு முன்னாள் அமைச்சர்கள், இரண்டு எம்.எல்.ஏ-க்கள் என எட்டு பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடைபெற்றுள்ளன. அ.தி.மு.க-வின் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரில் தொடங்கிய ரெய்டு நடவடிக்கைகள், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கோவிந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் என நீண்டுகொண்டிருக்கிறது!

“பொங்கல் தொகுப்பு வழங்கியதில் நடந்த குளறுபடிகள் மற்றும் 500 கோடி ரூபாய் ஊழலால், ஆளும் அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரிலிருந்து தப்பிக்கவும், ஆட்சி நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தி.மு.க அடைந்த தோல்வியைச் சமாளிக்கவும் முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்துகிறார்கள்” என அ.தி.மு.க., பா.ஜ.க தலைவர்கள் இந்த ரெய்டுகள் குறித்து விமர்சிக்கின்றனர். “உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். ஊழல் செய்தவர்கள் இந்த ரெய்டுகளுக்கு ஆளாகித்தான் ஆக வேண்டும். எல்லாம் சட்டப்படி, ஆதாரத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது” என ரெய்டுகளுக்கு தி.மு.க தரப்பில் விளக்கம் சொல்கிறார்கள்.

தி.மு.க ஆட்சி மீதான விமர்சனங்களை மறைக்கவே ரெய்டு நடத்துகிறார்கள்! - கடுகடுக்கும் எதிர்க்கட்சிகள்

மற்றொருபுறம், ரெய்டு நடக்கும் இடங்களில் அறுசுவை உணவு கொடுப்பது தொடங்கி, கட்சி நிர்வாகிகளெல்லாம் ஒன்றாக இணைந்து ‘ரெய்டு’ ஆலோசனை நடத்துவது என அதை ஜாலியாக எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ ஒரு படி மேலே சென்று “எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை என் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம்” என அழைப்பு விடுத்திருக்கிறார்.

“யதேச்சதிகாரத்தோடு நடந்துகொள்கிறது தி.மு.க!”

இந்த ரெய்டுகள் குறித்து, அ.தி.மு.க சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரையிடம் பேசினோம். “தி.மு.க அமைச்சர்கள் பலர்மீது ஊழல் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன. அவற்றின்மீது யாருடைய கவனமும் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ரெய்டுகளை ஏவி யதேச்சதிகாரத்தோடு நடந்துகொண்டிருக்கிறது தி.மு.க அரசு. ரெய்டுகள் முடிந்ததும், மிகப்பெரிய அளவில் பணத்தைக் கைப்பற்றியதாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகள் என்றால், ஏன் அவற்றைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப் போகிறார்கள்? வெறும் ஆறு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டிய வழக்கில், எட்டு தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியைத் தேடியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இவையனைத்தும் பழிவாங்கும் நோக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன என்பது தெரிகிறது. விடிந்ததும் சைக்கிள் ஓட்டுவது, நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குவது, பொழுது அடைந்தால் விழாவில் பங்கேற்பது, ஆட்சிமீது விமர்சனங்கள் எழும்போது அதை மறைக்க எதிர்க்கட்சியினர்மீது ரெய்டு நடத்துவது என யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதைக்கேற்ப நடித்துக்கொண்டிருக்கும் முதல்வரின் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்படி அ.தி.மு.க எதிர்கொள்ளும்” என்றார்.

இன்பதுரை
இன்பதுரை

தி.மு.க அரசு நடத்தும் தொடர் ரெய்டுகள் குறித்து பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம். “முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துகிறோம் என்ற பெயரில் செலவுக்கு வைத்திருக்கும் பணம், வீட்டிலுள்ள குத்துவிளக்கு, சந்தனக் கும்பா மற்றும் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளைக் கணக்கில் எழுதி, ‘கட்டுக்கட்டாகப் பணம், கிலோக் கணக்கில் தங்கம், வெள்ளி கைப்பற்றப்பட்டன’ எனச் சொல்வது வெற்று விளம்பரத்துக்காகத்தான். தி.மு.க நடத்திய ஒவ்வொரு ரெய்டின் பின்னணியிலும் தங்கள்மீதான ஏதாவதொரு குற்றச்சாட்டைத் திசைதிருப்பும் நோக்கம் இருந்திருக்கிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்மீது நடத்தப்பட்ட ரெய்டு, அரியலூர் மாணவியின் தற்கொலை விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார்.

இராஜீவ்காந்தி
இராஜீவ்காந்தி

“முன்னாள் முதல்வர், துணை முதல்வர்மீதும் புகார் இருக்கிறது!”

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இரா.இராஜீவ் காந்தியிடம் பேசினோம். “ஊழல் செய்ததாக, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, அரசுப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் முதல்வர், துணை முதல்வர் தொடங்கி அனைத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதும் புகார் இருக்கிறது. எல்லோரும் கூட்டுச் சேர்ந்துதானே எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள் எனும்போது, ஒருவருக்கொருவர் ஆதரவு சொல்லிக்கொள்வது இயல்புதானே... இந்தப் புகாரையெல்லாம் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்ததிலிருந்தே கூறிவருகிறோம். எனவே, ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தி.மு.க இப்படி நடந்துகொள்கிறது என்று சொல்வது அரசியல் தெளிவின்மை. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஆவணங்களைத் திரட்டி, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தப்பிச் செல்லும் குற்றவாளியாக இருந்தால் மட்டுமே ராஜேந்திர பாலாஜிபோல கைதுசெய்யப்படுவார்கள். இதுதான் சட்டம் சொல்கிறது. சட்டப்படியான நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுப்பதால், ஒருசிலர் எதிர்பார்க்கும் கைது நடவடிக்கையை அரசு இன்னும் எடுக்காமல் இருக்கிறது” என விளக்கமளித்தார்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதில் பாரபட்சமிருக்கக் கூடாது. அதேபோல, ரெய்டுகள் அடுத்தகட்ட நடவடிக்கை இல்லாமல் வேடிக்கையாகிவிடவும் கூடாது!