Published:Updated:

‘மல்லுக்கட்டும் மாவட்டங்கள்!’ - தி.மு.க உட்கட்சித் தேர்தல்... உள்ளடிக் காட்சிகள்!

தி.மு.க உட்கட்சித் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க உட்கட்சித் தேர்தல்

ஓவியங்கள்: சுதிர்

‘மல்லுக்கட்டும் மாவட்டங்கள்!’ - தி.மு.க உட்கட்சித் தேர்தல்... உள்ளடிக் காட்சிகள்!

ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
தி.மு.க உட்கட்சித் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க உட்கட்சித் தேர்தல்

அ.தி.மு.க-வில் இரண்டு கட்டங்களாக உட்கட்சித் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் பரபரப்புகள் ஆரம்பமாகிவிட்டன. 16.03.22 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘உட்கட்சி... உதயநிதி... உள்குத்து... திகுதிகு தி.மு.க!’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதில், மாவட்டங்களுக்குள் நடக்கும் உள்குத்து அரசியலையும், கட்சிக்குள் உதயநிதிக்கான தளம் உருவாக்கப்படுவது குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். தற்போது முறைப்படி உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேரூர், நகரம், ஒன்றியம், மாவட்ட அமைப்புகளுக்குக் கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதால், களைகட்டியிருக்கிறது தி.மு.க. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளடிப் பஞ்சாயத்துகள் அனல் பறக்கின்றன. அது குறித்த விசாரணையில் இறங்கினோம், கிடைத்த தகவல்களெல்லாம் மல்லுக்கட்டு ரகம்!

ஏற்கெனவே, தி.மு.க-வில் கிராமப்புறக் கிளைச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் 2020 பிப்ரவரியில் முடிந்துவிட்டது. தற்போது, பேரூர், நகரம், மாநகரம் ஆகியவற்றுக்கான தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல்கள் மூலம் கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, ஒன்றியம், மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். அமைச்சர்கள் முதல் வார்டு கவுன்சிலர்கள் வரையாக, ஏறத்தாழ 10,000 அரசுப் பொறுப்புகளில் தி.மு.க-வினர் அமர்ந்திருக்கிறார்கள். அந்தப் பொறுப்புகள் கிடைக்கப்பெறாத கட்சியினரெல்லாம், கட்சிப் பொறுப்புகளையாவது வாங்கிவிட வேண்டும் என முட்டிமோதுகின்றனர். சில மாவட்டங்களில் கோஷ்டிப்பூசல் உச்சமடைந்து, தி.மு.க உட்கட்சித் தேர்தல் உக்கிரமடைந்துள்ளது.

‘மல்லுக்கட்டும் மாவட்டங்கள்!’ - தி.மு.க உட்கட்சித் தேர்தல்... உள்ளடிக் காட்சிகள்!

செந்தில் பெயரே மந்திரம்... கோவை கலாட்டா!

தி.மு.க உட்கட்சித் தேர்தல் தொடர்பாக, அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழ்நாட்டிலேயே உட்கட்சித் தேர்தல் பஞ்சாயத்துகள் அதிகமாக வெடித்திருப்பது கோவையில்தான். அமைப்புரீதியாக கோவையிலிருந்த மூன்று மாவட்டங்களை, சில மாதங்களுக்கு முன்பு ஐந்தாகப் பிரித்தனர். அப்படிப் பிரித்தும் கட்சிப் பணிகள் சரிவர நடைபெறவில்லை எனத் தலைமைக்கு அறிவுறுத்தியிருக்கிறார் கொங்கு மண்டலக் கட்சிப் பொறுப்பாளர் அமைச்சர் செந்தில் பாலாஜி. மீண்டும் மூன்று மாவட்டங்களாகக் கட்சி அமைப்பை மாற்றுவதற்கு அவர் ஆலோசனையும் அளித்திருக்கிறார். இந்த மாற்றத்தில், கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் வரதராஜனும், கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரனும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் அதிகம். ‘செந்தில் பாலாஜியுடன் இவர்கள் இருவரும் முட்டிக்கொள்வதால்தான் அவர்கள் கட்சிப் பதவிக்கு வேட்டு வரவிருக்கிறது. கோவையில் செந்தில் பாலாஜியின் பெயரை மந்திரமாக உச்சரிப்பவர்களுக்கே கட்சிப் பதவி கிடைக்கும் என்றாகிவிட்டது’ என்று புலம்புகிறார்கள் சீனியர் நிர்வாகிகள்.

இதற்கிடையே, மாவட்டப் பொறுப்பாளர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மருதமலை சேனாதிபதி, சிங்காநல்லூர் கார்த்திக் ஆகியோர் தங்களுக்குத் தெரிந்த ரூட் மூலமாகத் தலைமையை அணுகியிருக்கிறார்கள். மற்றவர்கள், செந்தில் பாலாஜியையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில், கரூர் ஆதிக்கத்துக்கு எதிராக கோவை சீனியர்களிடம் முணுமுணுப்பு அதிகரித்திருக்கிறது.

மாவட்டம் கேட்கும் கதிர் ஆனந்த்... கட்டையைப் போடும் நந்தகுமார்!

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த்துக்கும், வேலூர் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான நந்தகுமாருக்கும் இடையேயான மோதல், உட்கட்சித் தேர்தலிலும் எதிரொலிக்கிறது. வேலூர், காட்பாடி ஆகிய தொகுதிகளை இணைத்து, மாநகர மாவட்டச் செயலாளர் என்ற புதிய பொறுப்பைத் தனக்காக உருவாக்க, காய்நகர்த்துகிறார் கதிர் ஆனந்த். அதற்கு நந்தகுமார் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார். அதுமட்டுமல்லாமல், நந்தகுமாருக்கு எதிராக, சமூகரீதியாகவும் கொம்பு சீவிவருகிறார் கதிர். கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றியம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியம், குடியாத்தம் வடக்கு ஒன்றியம் என ஆறு ஒன்றியச் செயலாளர் பதவிகளை ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நந்தகுமார் அளித்திருப்பதால், கட்சிப் பதவி கிடைக்காத இதர சமூகத்தினர் கோபமடைந்திருக்கிறார்கள். இந்தக் கோபத்தில் மிளகாயைக் கிள்ளி எறிவதுபோல, அவர்களை நந்தகுமாருக்கு எதிராகத் தூண்டிவிடுகிறது கதிர் ஆனந்த் தரப்பு. இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த உள்ளடி அரசியலால், வேலூரில் வெப்பம் எகிறுகிறது” என்றனர்.

புறக்கணிக்கும் பொன்முடி... லட்சுமணனுக்கு அடிக்குமா லக்?

விழுப்புரத்திலும் உள்ளடிப் பிரச்னைகள் உச்சமடைந்திருக்கின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் தி.மு.க நிர்வாகிகள், “மத்திய மாவட்டப் பொறுப்பாளரான புகழேந்தியை நீக்கிவிட்டு, அந்தப் பதவியைப் பிடிக்க பொன்முடியின் மகன் கௌதமசிகாமணியும், விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனும் முட்டிமோதுகிறார்கள். அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தராததால்தான், அங்கிருந்து இடம் மாறி தி.மு.க-வுக்கு வந்தார் லட்சுமணன். அப்போதே, அவருக்குக் கட்சிப் பதவி உறுதியளிக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைத் தோற்கடித்து வெற்றிபெற்றார் லட்சுமணன். இதை எதிர்பார்க்காத பொன்முடியின் ஆதரவாளர்கள், லட்சுமணன் கட்சிக்குள் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். சமீபத்தில் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்ச்சியில், லட்சுமணனின் பெயரையும் படத்தையும் புறக்கணித்து, தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள் பொன்முடி ஆதரவாளர்கள். இந்தக் கோஷ்டி அரசியலைத் தாண்டி, கட்சிப் பொறுப்புக்கு லட்சுமணன் வருவது என்பது லக் அடித்தால்தான் உண்டு” என்றனர்.

மல்லுக்கட்டும் அன்பில் - நேரு... தஞ்சாவூரில் திருச்சி தவில்!

தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் நீலமேகம், அமைச்சர் அன்பில் மகேஸுக்கும்... மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், அமைச்சர் கே.என்.நேருவுக்கும் நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், அன்பில் மகேஸுக்கு செக் வைக்க நேருவின் சொல்படி நீலமேகத்தை ஓரங்கட்டும் வேலையை துரை.சந்திரசேகரன் செய்துவருகிறாராம்.

நம்மிடம் பேசினார்கள் அமைச்சர்கள் சிலர். “தஞ்சை மாநகரத்துக்குள் நீலமேகத்தின் ஆதரவாளர்களே பெரும்பாலும் பொறுப்பில் இருப்பதால் முறைப்படி தேர்தல் நடந்தால், நீலமேகம் தரப்பு வெற்றிபெற்றுவிடும். அதனால், நேரு மூலமாகத் தலைமையிடம் பேசி, பதவியை நியமனம் செய்வதற்கான முயற்சியை சந்திரசேகரன் செய்துவருகிறார். நீலமேகத்துக்கு எதிர்க்கோஷ்டியான மேயர் சண்.ராமநாதனை மாநகரச் செயலாளராகக் கொண்டுவருவதற்கு நேரு தரப்பு காய்நகர்த்துகிறது. இதற்கிடையே, துரை.சந்திரசேகரின் கட்சிப் பதவியைப் பறிக்க, அன்பில் மகேஸ் தரப்பு தீவிரமாகியிருக்கிறது. நீலமேகம் தரப்பு தன்னிடம் சரண்டராகியிருப்பதால், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி டெல்டா பகுதி முழுவதுக்குமாகத் தன்னுடைய அதிகாரத்தை விஸ்தரித்துக்கொள்ள தீவிரமாகியிருக்கிறது அன்பில் தரப்பு. தஞ்சாவூர் தேர்தல் திருவிழாவில், திருச்சி தவில் சத்தம்தான் காதைக் கிழிக்கிறது. சொந்த மாவட்டத்துக்குள் அடித்துக்கொள்ள முடியாத அமைச்சர்கள் இருவரும், தஞ்சையில் தங்கள் கொடியைப் பறக்கவிட மல்லுக்கட்டுவதால் டெல்டாவில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

‘மல்லுக்கட்டும் மாவட்டங்கள்!’ - தி.மு.க உட்கட்சித் தேர்தல்... உள்ளடிக் காட்சிகள்!

அப்பாவு - ஆவுடையப்பன் ஆட்டம் - சென்னைக்குப் படையெடுத்த நெல்லை...

நெல்லை மத்திய மாவட்டத்தில், தன்னுடைய ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை அளிக்கத் தீவிரமாகியிருக்கிறார் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப். இதில் டென்ஷனாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா ஆகியோர் புகார் வாசிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அறிவாலயத்துக்கே படையெடுத்து வரும் நிலை உருவானது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க-விலும் கோஷ்டி சண்டைக்குப் பஞ்சமில்லை. கிழக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு எதிராக, தற்போதைய சபாநாயகரான அப்பாவு வரிந்துகட்டிக்கொண்டு உள்ளடி வேலைகளைச் செய்கிறார். அப்பாவுக்கு ஆதரவாக நெல்லை எம்.பி-யான ஞானதிரவியம், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் எனப் பெரும் படையே இருப்பதால், இந்த அணியே பலமானதாக இருக்கிறது. ஆவுடையப்பன் ஆதரவாளர்கள் பலரையும் அப்பாவு தரப்பினர் தங்கள் அணிக்கு ஆதரவாக மாற்றிவிட்டதால், இந்த முறை உட்கட்சித் தேர்தல் அதிரிபுதிரியாகியிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை, தெற்கு மாவட்டச் செயலாளரான சிவபத்மநாதன் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் சுழல்கின்றன. குறிப்பாக, கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழியின் சீற்றத்தில் சிக்கியிருப்பதால், அவரது பதவி ஆட்டம்கண்டுபோயிருக்கிறது. ஆனாலும், தன் ஆதரவாளர்கள் அனைவரையும் பொறுப்புக்குக் கொண்டுவந்து மீண்டும் தானே மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்று தீவிரம் காட்டிவருகிறார் சிவபத்மநாபன். அவர் குட்டிக்கரணம் அடித்தாலும், இந்தமுறை அவர் கைகாட்டுபவர்கள் உட்கட்சித் தேர்தலில் வெற்றிபெறுவார்களா என்பது கேள்விக்குறியே!

செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு, அன்பின் மகேஷ், அப்பாவு
செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு, அன்பின் மகேஷ், அப்பாவு

அமைச்சர் Vs அமைச்சர்... புதுக்கோட்டை திகுதிகு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரச் செயலாளரும், நகர சேர்மனுமான ஆனந்த், அமைச்சர் மெய்யநாதன் ஆதரவுடன் நகரச் செயலாளர் பதவியை மீண்டும் பிடிக்க தீவிரம் காட்டிவருகிறார். இதற்கிடையே, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆசியோடு நகரச் செயலாளர் பதவிக்குக் குறிவைத்திருக்கிறார் முன்னாள் நகரச் செயலாளர் ராஜேந்திரன். ஏற்கெனவே, மாவட்ட அரசியலில் இரு அமைச்சர்களுக்கும் இடையில் அதிகாரப்போட்டி நிலவிவரும் நிலையில், இந்த நகரச் செயலாளர் ரேஸ், கட்சிக்குள் களேபரத்தை உருவாக்கியிருக்கிறது.

நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி. இவர், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியோடு நெருக்கம் காட்டினார், மேற்கு மாவட்டத்தில் வரும் பள்ளிபாளையம், திருச்செங்கோடு நகராட்சிகளில் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களை விடுத்து, தன்னிச்சையாக நின்ற தி.மு.க கவுன்சிலர்களை சேர்மனாக்கினார் என அவர்மீதான புகார்களை முன்வைத்து, அவர் பதவியைக் காலி செய்ய தலைக்கு மேல் பல கத்திகள் தொங்குகின்றன. இதைப் பயன்படுத்தி, பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் வெப்படை வி.செல்வராஜும், மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்திலும் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்கக் காய்நகர்த்திவருகிறார்கள்” என ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் மல்லுக்கட்டுக் காட்சிகளை விவரித்தார்கள் அந்த அமைச்சர்கள்.

கிச்சன் ரூட்... கிடைக்குமா பதவி?

டி.ஆர்.பி.ராஜாவின் தீவிர ஆதரவாளரான, மன்னார்குடி தி.மு.க நகரச் செயலாளர் வீரா.கணேசன் மீண்டும் அதே பதவியைப் பிடிக்க முயல்கிறார். அதேசமயம், நகரச் செயலாளர் பதவிக்கு, தன்னுடைய ஆதரவாளரான மீனாட்சி சூரியபிரகாஷைக் கொண்டுவர மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் விரும்புகிறார்.

“கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ் ராஜன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், நாகர்கோவில் மேயர் மகேஷ், மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் தனது மகனின் திருமணம் முடிந்த கையோடு, முதல்வரைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் சுரேஷ் ராஜன். இழந்த பதவியை மீண்டும் பிடிக்க, கிச்சன் கேபினெட் மூலம் சுரேஷ் ராஜன் காய்நகர்த்துகிறார். ஆனாலும், அவருக்குப் பதவி கிடைப்பது சந்தேகம்தான்” என்கிறார்கள் குமரி தி.மு.க நிர்வாகிகள்.

இந்த நிலையில் ‘கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை இரண்டாக உடைத்து, மாநகர் மாவட்டச் செயலாளராக மகேஷையும், புறநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டினையும் கொண்டுவர தலைமை முடிவுசெய்துள்ளதாக’த் தகவல் ஓடுகிறது.

மெய்யநாதன், ரகுபதி, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், சிவபத்மநாபன்
மெய்யநாதன், ரகுபதி, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், சிவபத்மநாபன்

யார் கைகளில் கன்ட்ரோல்? - குஸ்திபோடும் அமைச்சர்கள்!

தலைநகரான சென்னையில், உட்கட்சித் தேர்தலில் நடக்கும் குஸ்திகள் குறித்து அறிவாலய முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம், “இன்றைய நிலையில், அமைச்சர்கள் சேகர் பாபுவும், மா.சு-வும்தான் சென்னை தி.மு.க-வைக் கட்டி ஆள்கிறார்கள். சேகர் பாபுவின் மாவட்டத்தின் கீழ் ஆறு தொகுதிகளும், மா.சு-வுக்குக் கீழ் ஐந்து தொகுதிகளும் வருகின்றன. இவற்றைப் பிரிக்க இரண்டு அமைச்சர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தபோதும், துணை மேயர் மகேஷ்குமாரும், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷும், மா.சு-விடமிருக்கும் மாவட்டத்தைப் பிரித்துக் கொடுக்குமாறு அறிவாலயக் கதவைத் தட்டுகிறார்கள். இதன் பின்னணியில் சேகர் பாபு இருக்கக்கூடும் என மா.சு தரப்பு சந்தேகிக்கிறது. மாதவரம் சுதர்சனத்தைப் பதவியிலிருந்து காலிசெய்துவிட்டு, அந்தப் பதவியையும் தனது ஆதரவாளர்களுக்குக் கொடுத்து ஒட்டுமொத்த சென்னையையும் தன் கன்ட்ரோலில் கொண்டுவர சேகர் பாபு தரப்பு முயல்கிறது. இதனால், தனது மாவட்டத்தைப் பிரிப்பது என முடிவானால், சேகர் பாபுவின் மாவட்டத்தையும் உடைத்து, புதிய மாவட்டங்களை உருவாக்கி, புதியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று மா.சு தரப்பு மல்லுக்கு நிற்கிறது. இந்தக் களேபரங்களால் தலைநகரில் தீப்பொறி பறக்கிறது” என்று முடித்தார்.

இதுவரை நாம் பார்த்தவை ஒருசில சாம்பிள்கள்தான். இன்னும் பல மாவட்டங்களில் உட்கட்சித் தேர்தல் களம் உள்ளடிக் காட்சிகளால் ரணகளமாகிவருகிறது. மாவட்டச் செயலாளர்களுக்குள்ளும், அமைச்சர்களுக்குள்ளும், நிர்வாகிகளுக்குள்ளும் நடைபெற்றுவரும் இந்த மல்லுக்கட்டு அரசியலால் ‘பீஸ்ட் மோடு’க்கு மாறியிருக்கிறது தி.மு.க கூடாரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism