Published:Updated:

ஒன்றிய தேர்தலில் உரசல்... அறிவாலயத்தில் அசெம்பிளாகும் உ.பி-க்கள்!

அண்ணா அறிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா அறிவாலயம்

இது ஒரு பெரிய இயக்கம். இப்போது மட்டுமல்ல, கட்சி தோன்றிய நாள் முதல் ஜனநாயக முறையில் உட்கட்சித் தேர்தலை நடத்திவருகிறோம்.

ஒன்றிய தேர்தலில் உரசல்... அறிவாலயத்தில் அசெம்பிளாகும் உ.பி-க்கள்!

இது ஒரு பெரிய இயக்கம். இப்போது மட்டுமல்ல, கட்சி தோன்றிய நாள் முதல் ஜனநாயக முறையில் உட்கட்சித் தேர்தலை நடத்திவருகிறோம்.

Published:Updated:
அண்ணா அறிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா அறிவாலயம்

தி.மு.க உட்கட்சித் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாடு முழுவதும் பிரச்னை வெடித்துவருகிறது. புகார்களுடன் கட்சி நிர்வாகிகள் தினம்தோறும் அறிவாலயத்தை முற்றுகையிடுகிறார்கள். தீர்வு சொல்லவேண்டிய தலைமையோ, சமாதானம் பேசி அனுப்பிவிடுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் உ.பி-க்கள்!

எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை உட்பட ஏராளமான பிரச்னைகள் இருந்தும், உட்கட்சித் தேர்தலைச் சுமுகமான முறையில் முடித்துவிட்டனர். ஆனால், ஆளுங்கட்சியான தி.மு.க-விலோ உட்கட்சித் தேர்தலில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகப் பிரச்னைகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது என்பது குறித்து அறிவாலய முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம், “கட்சி அமைப்புரீதியாக இருக்கும் 77 மாவட்டங்களிலும் இரண்டு முதல் மூன்று கோஷ்டிகள் வரை இருப்பது தலைமைக்குத் தெரியும். இருந்தபோதும், ஒரு ஒன்றியத்துக்கு ஒருவரைத்தான் ஒன்றியச் செயலாளராகத் தேர்வுசெய்ய முடியும். அதற்கான தேர்தல், கடந்த ஜூன் 9-ம் தேதி முதற்கட்டமாக நடந்து முடிந்தது. இன்னும் சில மாவட்டங்களில் முடியாமலும் இருக்கிறது. அ.தி.மு.க-வைப்போலவே இந்த முறை தி.மு.க-விலும், ‘புதிதாக ஒருவரை ஒன்றியச் செயலாளராகத் தேர்வுசெய்ய வேண்டாம், இருப்பவரையே தொடரச் செய்யுங்கள். அதிகப்படியான புகார்களுக்கு உள்ளானவர்களை மட்டும் மாற்றுங்கள்’ என்றுதான் மாவட்டச் செயலாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டது. அதன்படிதான், பல இடங்களில் 10 முதல் 15 ஆண்டுகள் ஒன்றியச் செயலாளராக இருப்பவர்களே தொடரவும் செய்கிறார்கள். எனினும், புகாருக்குள்ளானவர்களை மாற்றலாம் எனத் தலைமை சொல்லியிருந்தும், பல இடங்களில் மாற்றவில்லை என்பதும் பிரச்னையாகியிருக்கிறது. அது குறித்த புகார்களுடன் அறிவாலயத்துக்கு அனுதினமும் கட்சி நிர்வாகிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒன்றிய தேர்தலில் உரசல்... அறிவாலயத்தில் அசெம்பிளாகும் உ.பி-க்கள்!

பிரச்னைகள் குறித்து விசாரிக்க முதலில் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோரைக்கொண்ட குழுவைத் தலைமை அமைத்தது. அதில், ஆ.ராசாவுக்கும் நேருவுக்கும் இடையே ஏதோ பிரச்னை வெடிக்கவே, நேரு குழுவிலிருந்து கழன்றுகொண்டார். அமைச்சரவைப் பணிகள் இருப்பதாகக் கூறி தங்கம் தென்னரசுவும் வெளியேறினார். இதனால், ஆ.ராசாவுடன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ராஜ்ய சபா எம்.பி-யும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ ஆகியோரை நியமித்தது தலைமை. தற்போது அவர்கள்தான் புகார்களை விசாரித்துவருகிறார்கள்” என்று முன்னுரை கொடுத்தார்.

என்னவிதமான புகார்களைக் கொடுக்கிறார்கள் என்பதை அறிய அறிவாலயத்துக்கு விசிட் அடித்தோம். பல மாவட்டங்களிலிருந்தும் புகார்களோடு வந்திருந்த நிர்வாகிகளை, தொண்டர்களைப் பார்க்க முடிந்தது. தேனி மாவட்டத்தில் 30 ஆண்டுகளாகக் கட்சியில் பணியாற்றிவருபவராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜேந்திரன், “தேனி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் கம்பம் ராமகிருஷ்ணனிடம் கம்பம் ஒன்றியச் செயலாளர் பதவியை எனக்குக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன். ஆனால், வேறோருவருக்குக் கொடுத்துவிட்டார். அவரோ முழுக்க கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுவருகிறார். அவரைக் கட்சியினர் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், மாவட்டத்திலிருந்து மூத்த நிர்வாகிகள் புகாரளித்திருக்கிறோம். எங்கள் முன்னிலையிலேயே விசாரணைக்குழுவினர், புகாருக்குள்ளானவர்களிடம் விளக்கம் கேட்டு அதையும் குறித்துவைத்துக்கொண்டு, ‘நல்லது நடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்த கிளைக் கழகச் செயலாளர் தங்கவேலிடம் பேசியபோது, “அந்தியூர் எம்.எல்.ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆட்டம்தான் தாங்க முடியவில்லை. அவரே எல்லாப் பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும், எல்லாவிதமான கலெக்‌ஷனும் தனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டுவருகிறார். அந்தியூர் தி.மு.க நிர்வாகிகள் அத்தனை பேரும் தனக்குக் கீழ் அடிபணிந்து நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஏற்கெனவே 15 ஆண்டுகளாக வெங்கடாசலம்தான் ஒன்றியச் செயலாளராக இருந்தார். தற்போதும் அவரே மீண்டும் ஒன்றியச் செயலாளராகியிருக்கிறார். அவர் ஒன்றியப் பொறுப்புக்கு வருவது பிரச்னையல்ல, மற்றவர்களுக்கும் வழிவிடும் வகையில் அந்தியூர் ஒன்றியத்தை இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து மேலும் இருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. அதனால், தலைமையிடம் புகார் மனு கொடுத்திருக்கிறோம்” என்றார்.

இதுமட்டுமின்றி, ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் மீது அந்த மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து புகார் மனு அளித்துள்ளனர். அதேபோல், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான மகேஷ், மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மீது, முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் தரப்பினர் திரண்டுவந்து புகார் கொடுத்தனர். திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரான செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் நியமித்த சென்னிமலை மேற்கு ஒன்றியச் செயலாளர் ஒருவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டப் பஞ்சாயத்துகள் குறித்து கார்த்திகேய சிவசேனாபதி நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். இவை தவிர, தஞ்சாவூர், தருமபுரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் புகாரை அள்ளிக்கொண்டு வந்தனர்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

விசாரணைக்குழுவிலிருக்கும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் இது குறித்துக் கேட்டோம். “இது ஒரு பெரிய இயக்கம். இப்போது மட்டுமல்ல, கட்சி தோன்றிய நாள் முதல் ஜனநாயக முறையில் உட்கட்சித் தேர்தலை நடத்திவருகிறோம். அண்ணா காலம் முதல், கலைஞர், தளபதி காலமான இந்நாள் வரை தேர்தலில் பிரச்னை எழுவது வழக்கமான ஒன்றுதான். இது அண்ணன் - தம்பிகளுக்குள் நடக்கும் போராட்டம், உடனடியாகத் தீர்வு எட்டப்படும். வரக்கூடிய புகார்களை ஜனநாயக முறையில் விசாரிக்கிறோம். அதற்கு என்ன தீர்வோ அதைத் தலைமைக் கழகம் மூலம் கொடுத்துவிடுவோம். புகாரளிக்க வருபவர்கள் அனைவரும் செல்லும்போது திருப்தியாகத்தான் செல்கிறார்கள்” என்றார்.

அண்ணன் தம்பி சண்டை, அடிதடி வரை செல்லாமல் இருந்தால் சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism