
பிற அணிகளில் மூத்த நிர்வாகிகளுக்கு கௌரவ அடிப்படையில் மாவட்ட அளவில் அணித் தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளை வழங்கச் சொல்லியிருக்கிறார்கள்.
உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்திருக்கும் தி.மு.க., சார்பு அணிகளுக்கான மாநில நிர்வாகிகள் நியமனத்தையும் முடித்திருக்கிறது. அடுத்தது அணிகளுக்கான மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்தான் பாக்கி. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை கிளைக் கழகம் வரை ஒவ்வோர் அணிக்கும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கும், அணிகளின் மாநிலச் செயலாளர்களுக்கும் தலைமையிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலைக் கணக்கில்கொண்டே இந்த உத்தரவு. நிர்வாகிகள் நியமனத்தில் தி.மு.க தலைமை சொன்ன அறிவுரைகள் என்னென்ன... அதைச் செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்று விசாரணையில் இறங்கினோம்...
நியமன விதிமுறைகள்!
இது குறித்து நம்மிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ஒருவர், “புதிதாக உருவாக்கப்பட்ட பதவிகளையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 15,000 கழகப் பதவிகள் காலியாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் நிரப்பச் சொல்லி தலைமை உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான நெறிமுறைகளையும் கட்சி வெளியிட்டிருக்கிறது. மாநகர்களில் இளைஞரணி, மகளிரணி, தொழில்நுட்பப் பிரிவு, மாணவரணி போன்றவற்றில் பகுதி தொடங்கி பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதேநேரத்தில் மருத்துவ அணிக்கு மாவட்டம், தொகுதி அளவில் மட்டுமே நிர்வாகிகளை நியமித்தால் போதுமானது என்றும், இளைஞர், தொழில்நுட்ப அணிகளுக்கு மாவட்ட அளவில் தலைவர்களை நியமிக்கத் தேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்த ரண்டு அணிகளிலும் நியமிக்கப்படுவோரின் வயதையும், சமூக வலைதளச் செயல்பாடுகளையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்கள். இனிவரும் தேர்தல்களில் சமூக வலைதளம்தான் முக்கியப் பிரசார ஊடகம் எனத் தலைமை நினைப்பதாலேயே இந்த உத்தரவு.

பிற அணிகளில் மூத்த நிர்வாகிகளுக்கு கௌரவ அடிப்படையில் மாவட்ட அளவில் அணித் தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளை வழங்கச் சொல்லியிருக்கிறார்கள். அனைத்து அணிகளும் மாநகராட்சி, பகுதி, நகராட்சி அளவில் ஓர் அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டும். பேரூராட்சி என்றால் மூன்று துணை அமைப்பாளர்களை நியமிக்க வேண்டும். சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தேவையற்ற பிரச்னையைத் தவிர்க்க மாநகராட்சி, பகுதி, வட்டத்தில் ஓர் அமைப்பாளர், தலா ஒரே ஒரு துணை அமைப்பாளரை நியமித்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த நியமனங்களைச் செய்யும்போது, கட்சியில் புதிதாக இணைந்தவர்கள், மாவட்டத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். இவை எல்லாவற்றையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும் எனச் சொன்ன தலைமை, ‘இவர்களுக்குப் பொதுக்குழுவில் இடமில்லை’ எனச் சொல்லி இறுதியில் ஓர் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது” என்றார்.
சோர்வைக் களையும் யுக்தி!
“தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு ஆகிறது. மக்கள்கூட திருப்தியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், கட்சி நிர்வாகிகள் பலர் இன்னமும் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். அதுவும் தேர்தல் வெற்றிக்காக மாடாக உழைத்த கீழ்மட்ட நிர்வாகிகள் எந்தப் பலனையும் அனுபவிக்காமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது பதவிக்கு வரலாம் என்றால், கூட்டுறவுத் தேர்தலைக்கூட நடத்த முடியாமல் தவிக்கிறது அரசு. மாவட்ட, ஒன்றியத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டவர்கள், பதவி இழந்தவர்கள் கூட்டம் வேறு. இதெல்லாம், நீண்ட நாள்களாகக் கட்சியில் பணியாற்றுபவர்கள், புதிதாகக் கட்சியில் இணைந்தவர்கள், தி.மு.க என்ற அடையாளத்தோடு சமூக வலைதளத்தில் இயங்குபவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் சோர்வை ஏற்படுத்திவிட்டது.
இப்படியே தொடர்ந்தால் அது நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அதைச் சரிசெய்யவே இந்த நியமன அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தலைமை. இந்த நியமனங்களின் மூலம் சோர்வில் இருப்பவர்களை ஓரளவு சமாதானப்படுத்திவிடலாம் என நினைக்கிறது. இது தவிர, தி.மு.க மீது சமூக வலைதளத்தில் எழும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கவும், தகுந்த விளக்கமளிக்கவும் மாநிலம் முழுவதும் சுமார் 6,000 பேரைக்கொண்ட புதிய குழுவை ஏற்படுத்தியிருக்கிறது தலைமை” என்கிறார்கள் உள் விவகாரங்களை அறிந்தோர்.
“எந்தப் பயனும் இல்லை!”
நியமனங்கள் செய்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
“புதிய நியமனங்களுக்கு மக்களவைத் தேர்தல்தான் முக்கியக் காரணம். ஒன்றியத்தைத் தாண்டி பூத் வரையில் நிர்வாகிகளை நியமிக்கும்போது, வெறும் கட்சிக்காரன் என்பதைத் தாண்டி நிர்வாகி என்ற அந்தஸ்துடன் உற்சாகமாக வேலை செய்வான் என்பது தலைமையின் கணக்கு. மேலும், இதன் மூலம் தலைமைக் கழகத் தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் மனக் கசப்பில் இருந்தவர்களையும், சமூகரீதியில் பிரதிநிதித்துவம் இல்லை என வருத்தத்தில் இருந்தவர்களையும் சமாதானப்படுத்த முடியும் என நினைக்கிறது. எல்லாம் சரிதான். ஆனால், இந்த நியமனங்களை மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைத்திருப்பதால், அவர்கள் தங்கள் ஆட்களை நியமித்து, தங்கள் கோஷ்டியை வலுப்படுத்தவே இது பயன்படும். அதுமட்டுமல்ல இந்த நியமனங்கள் அனைத்தும் எந்த அதிகாரமும் அற்ற, பெயரளவிலான பதவிகள்தான். அ.தி.மு.க-வில் நிர்வாகிகள் மட்டும் சுமார் நான்கு லட்சம் பேர் இருப்பார்கள். அங்கே, யாரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு கட்சிப் பொறுப்பில் இருக்கிறேன் எனச் சொல்லிக்கொள்வார்கள். தி.மு.க-விலும் இனி அப்படிச் சொல்லிக்கொள்ள முடியும். மற்றபடி இந்தப் பொறுப்புகளால் எந்தப் பயனும் இல்லை. இந்த நியமனங்களால் கட்சிக்காரர்கள் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என்றார் விரிவாக.
“சார்பு அணியில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., எம்.பி ஆக்கப்படும் விகிதம் தி.மு.க-வுடன் ஒப்பிட்டால் அ.தி.மு.க-வில் அதிகம். அத்தகைய உத்தரவாதம் அளிக்கப்படாமல், தொடர்ந்து மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் கைகாட்டும் ஆட்களே உழைக்காமல் பதவியும் பலனும் பெற முடியும் என்றிருந்தால், ஸ்டாலினின் கணக்கு எடுபடாமல் போய்விடும்’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.