Published:Updated:

சீறும் சீனியர்ஸ்... மாவட்ட குஸ்திகள்... அமைச்சர்கள் அதகளம்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

மின்சாரத்துறையை எதிர்பார்த்திருந்தார் ஐ.பெரியசாமி. ஆனால், தனக்குக் கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பட்டியல் வெளியானதும் டென்ஷனாகிவிட்டார்.

சீறும் சீனியர்ஸ்... மாவட்ட குஸ்திகள்... அமைச்சர்கள் அதகளம்!

மின்சாரத்துறையை எதிர்பார்த்திருந்தார் ஐ.பெரியசாமி. ஆனால், தனக்குக் கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பட்டியல் வெளியானதும் டென்ஷனாகிவிட்டார்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

‘ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்’ என்றொரு பழமொழி உண்டு. தேனிலவுக் காலத்தைக் கடந்து அன்றாடத்துக்குள் புகுந்திருக்கும் தி.மு.க., அமைச்சரவை சகாக்களாலேயே சச்சரவை எதிர்கொள்ள ஆரம்பித்திருக் கிறது. ஆட்சி அமைந்த ஐந்தாவது மாதத்திலேயே அமைச்சர்களுக்குள் ‘ஈகோ’ மோதல் வெடித்திருப்பது கோட்டையைக் கிடுகிடுக்கவைத்திருக்கிறது. ‘தன் கன்ட்ரோலில் இருக்கக்கூடிய நபர்களுக்கு மட்டும் வளமான துறைகளை ஒதுக்கிய ஸ்டாலின், தன்னால் கட்டுப்படுத்த முடியாத கட்சியின் சீனியர்களுக்கு ‘டம்மி’யான துறை களைப் பிரித்துக்கொடுத்தார்’ என்பது தி.மு.க சீனியர்களின் மனக்குமுறல். இந்தக் குமுறல் இப்போது எரிமலையாகப் புகையைக் கக்க ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அப்படி என்னதான் நடக்கிறது தி.மு.க அமைச்சரவையில்? கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். விவரங்களைக் கொட்டினார்கள்...

துரைமுருகன், ஐ.பெரியசாமி
துரைமுருகன், ஐ.பெரியசாமி

பொதுப்பணித்துறைக்குக் குறி... மல்லுக்கட்டும் துரைமுருகன்!

“தி.மு.க பொதுச்செயலாளராகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த இரண்டாமிடத்தில் அவை முன்னவராகவும் இருப்பவர் துரைமுருகன். கருணாநிதி காலத்திலேயே பொதுப்பணி உள்ளிட்ட வளமான துறைகளை கவனித்தவர். இந்தமுறையும் அதே துறைகளை எதிர்பார்த்தார். ஆனால், பொதுப்பணித்துறையின் கீழ் வரும் நீர்வளத்தைத் தனியாகப் பிரித்து அவருக்கு ஒதுக்க முடிவெடுத்தார் ஸ்டாலின். இது பிடிக்காத துரைமுருகன், ‘ஒன்றும் இல்லாத துறையை வெச்சுkகுறதுக்கு நான் சும்மாவே இருந்துட்டுப் போறேன்’ என்று தன் பாணியில் ஸ்டாலினிடம் கலக்கத்துடன் பேச, பிற்பாடு கனிமவளத்துறை கூடுதலாக துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டது. இப்போது நீர்வளத்துறையில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள்!

முன்பு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்தான் நீர்வளத்துறையும் இருந்தது. இரண்டுக்கும் ஒரே அதிகாரிகள்தான். இப்போது பொதுப்பணித்துறை தனியாகவும், நீர்வளத்துறை தனியாகவும் இருப்பதால் இரண்டு துறை அமைச்சர்களிடமும் அதிகாரிகள் ‘ரிப்போர்ட்’ செய்யவேண்டியிருக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒரு வேலை கொடுத்தால், துரைமுருகன் ஒரு வேலையைச் செய்யச் சொல்கிறார். இதனால் மூத்த அதிகாரிகளே நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். அதைத் தாண்டி ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. நீர்வளத்துறையில் ஒப்பந்தங்கள் வந்தாலும், அதனுடன் பொதுப்பணித்துறைப் பணிகளும் சேர்ந்து வருகின்றன. இதனால் இரண்டு அமைச்சர்களையும் சமாளிக்கவேண்டிய நிலை இருக்கிறதாம். இந்தக் குழப்பங்களுக்கு முடிவுகட்ட, ‘பொதுப்பணித்துறையை முழுவதுமாக எனக்குத் தாருங்கள்’ என்று தலைமையிடம் மல்லுக்கட்டுகிறார் துரைமுருகன்.

கே.என்.நேரு, அன்பில் மகேஷ்
கே.என்.நேரு, அன்பில் மகேஷ்

“துறையை மாற்றிக் கொடுங்க...” - குமுறும் ஐ.பி

கடந்த பத்தாண்டுகளில், தி.மு.க-வுக்கு அதிகம் செலவு செய்தவர்களில் ஒருவர் கே.என்.நேரு. ஆட்சி அமைந்தவுடன், முன்னாள் அமைச்சர் வேலுமணி வசமிருந்த துறைகள் அனைத்தும் தனக்கு வரும் என்று நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், உள்ளாட்சித்துறையைப் பிரித்து, நகராட்சி நிர்வாகத்தை மட்டும் நேருவுக்குக் கொடுத்துவிட்டார் ஸ்டாலின். ஊரக வளர்ச்சித்துறை பெரியகருப்பனுக்கு அளிக்கப்பட்டது. முழு அதிகாரத்தை எதிர்பார்த்த நேருவுக்கு, பாதி அதிகாரம்தான் கிடைத்திருக்கிறது. இதில் நேரு அப்செட்!

‘மத்திய அரசின் நிதிகள் அதிகமாக ஊரகப் பகுதிகளுக்கு வருவதால், எனது துறைக்கு எப்படி நிதி ஆதாரங்களைத் திரட்டுவது? இரண்டும் ஒன்றாக இருந்தால் மட்டுமே என்னால் சிறப்பாகச் செயல்பட முடியும்’ என்று முதல்வரிடம் முறையிட்டிருக்கிறார் நேரு.

தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

மற்றொரு சீனியர் அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வருவாய்த்துறை செட்டாகவில்லை. ‘பெயரில் மட்டும் வருவாய் இருந்தால் போதுமா, அதன் வருவாய் நிலை அதள பாதாளத்தில் அல்லவா இருக்கிறது’ என்று அங்கலாய்க்கிறார்கள் ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர்கள். இவர்கள் அனைவரை விடவும் உச்சகட்ட கடுப்பில் இருப்பது கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமிதான்.

மின்சாரத்துறையை எதிர்பார்த்திருந்தார் ஐ.பெரியசாமி. ஆனால், தனக்குக் கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பட்டியல் வெளியானதும் டென்ஷனாகிவிட்டார். மல்லுக்கட்டித்தான் அவரை ஆளுநர் மாளிகைக்குப் பதவியேற்க அழைத்துவந்தனர். ‘என் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணிக்கு உணவுத்துறையைக் கொடுத்துவிட்டு, எனக்கு கூட்டுறவுத்துறையை ஒதுக்கி இருக்கீங்களே... நியாயமா தலைவரே இது? எனக்குத் துறையை மாற்றிக் கொடுங்க...’ என்று ஸ்டாலினிடமே மனம் குமுறினார் ஐ.பி. ஆனால், ஸ்டாலினிடமிருந்து ‘நோ ரெஸ்பான்ஸ்.’ இந்த மனக் குமுறலில், துறைரீதியான ஃபைல்கள்கூட தேக்கமடைகின்றன. ‘இன்று கட்சிக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு வளமான இரண்டு துறைகளைக் கொடுத்துவிட்டு, எங்களை அம்போ என விட என்ன காரணம்?’ என்று சீறுகிறார்கள் சீனியர்கள். இந்தச் சீற்றம் அமைச்சரவைக்குள் மனக்கசப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது” என்றனர்.

சீறும் சீனியர்ஸ்... மாவட்ட குஸ்திகள்... அமைச்சர்கள் அதகளம்!

“ஓர் உறைக்குள் இரு கத்தி” - மாவட்டங்களில் குஸ்தி!

சீனியர்களுக்குத் துறைகள் ஒதுக்கியதில் பஞ்சாயத்து என்றால், மற்றொருபுறம் மாவட்டத்துக்கு மாவட்டம் அதிரித்துவரும் பஞ்சாயத்துகள் ஸ்டாலினுக்குப் பெரிய தலைவலியாக இருக்கின்றனவாம். அறிவாலயத்தின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “ஓர் உறைக்குள் இரண்டு கத்தி இருந்தாலே பிரச்னைதான். வருவாய்த்துறை ரீதியாக ராணிப்பேட்டை தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டாலும், கட்சியின் அமைப்புரீதியாக இன்னமும் ஒருங்கிணைந்த வேலூராகத்தான் இருக்கிறது. தான் சீனியர் என்பதால், அமைச்சர் காந்தியை துரைமுருகன் மதிப்பதே இல்லை. ‘வேலூர் மாவட்ட ஜமீன் மாதிரி துரைமுருகன் நடந்துகொள்கிறார். கட்சிக்காரங்களுக்கும் எதுவும் செய்யறதில்லை. செய்யணும்னு நினைக்குற காந்திக்கும் குடைச்சல் கொடுக்குறார்’ என்று ஏகத்துக்கும் புகார்ப் பட்டியல் வாசிக்கிறார்கள் காந்தியின் ஆதரவாளர்கள். அதற்கு துரைமுருகன் தரப்பு, ‘2019 நாடாளுமன்றத் தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஜெயிச்சுடக் கூடாதுன்னு காந்தி வேலை பார்த்தார். இப்பவும் அவர்தான் துரைக்கு எதிராகக் கட்சி நிர்வாகிகளிடம் சிண்டுமுடிகிறார்’ என்று குற்றம்சாட்டுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான உள்குத்து தகராறால், மாவட்ட தி.மு.க-வில் அனல் பறக்கிறது.

பொன்முடி, மஸ்தான்
பொன்முடி, மஸ்தான்

விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இடையே ‘பல்ஸ்’ சரியில்லை. ‘விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க-வில் எந்தக் கூட்டம் போட்டாலும், என்னைக் கேட்காமல் போடக் கூடாது’ என்று மஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கிறார் பொன்முடி. அதற்கு மஸ்தான் உடன்படவில்லை. ‘விழுப்புரம், கள்ளக்குறிச்சி இரண்டு மாவட்டங்களையும் தன்னோட கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார் பொன்முடி. இதற்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் புகழேந்தி வேண்டுமானால் உடன்படலாம். நான் அடிபணிய மாட்டேன்’ என்று திமிறி நிற்கிறார் மஸ்தான். இந்தத் தகராறை முதல்வர் ஸ்டாலினால்கூட சரிசெய்ய முடியவில்லை.

அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன்
அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன்

அமைச்சர்களுக்கு இடையே ஈகோ வார்!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - தங்கம் தென்னரசு இருவருமே வெளியில் அந்நியோன்யமாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருப்பது உண்மை தான். தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ராமச்சந்திரன் கொண்டுவந்ததை, மாவட்டத்திலிருக்கும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ரசிக்கவில்லை. இதனால் சாதிரீதியாக நிர்வாகிகள் இரு அமைச்சர்களிடமும் பிரிந்திருக்கிறார்கள். விருதுநகர் மாவட்ட அதிகாரத்தைத் தனி ஆவர்த்தனமாக ராமச்சந்திரன் ‘கன்ட்ரோல்’ செய்வது தங்கம் தென்னரசுவுக்குப் பிடிக்க வில்லை. பூசல் அதிகரித்த வண்ணமிருக்கிறது!

திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குமான முட்டல் மோதல் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ‘ஒன்மேன் ஆர்மி’யாக மலைக்கோட்டைக்குள் பவனிவந்த நேருவுக்கு, அன்பில் மகேஷின் வளர்ச்சி அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீனியரான நேருவை அனுசரித்துச் செல்லவேண்டிய மகேஷும் அப்படி நடந்துகொள்வதில்லை என்கிறார்கள்.

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தை அமைப்புரீதியாக இரண்டாகப் பிரித்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கிழக்கையும், அமைச்சர் சி.வி.கணேசனுக்கு மேற்கையும் அளித்திருக்கிறது அறிவாலயம். இதை எம்.ஆர்.கே ரசிக்கவில்லை. கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க-வில் இருக்கும் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் எம்.ஆர்.கே-வின் விசுவாசிகள்தான். இதனால், ஓர் ஒன்றியச் செயலாளரிடம்கூட கணேசனால் வேலைவாங்க முடியவில்லை. ‘மொத்த கடலூர் மாவட்ட தி.மு.க-வும் எம்.ஆர்.கே-வுக்கு எழுதிக் கொடுத்தாச்சு. பெயருக்குத்தான் கணேசன் அமைச்சர்... மாவட்ட அதிகாரம் முழுவதும் எம்.ஆர்.கே பாக்கெட்டில்தான்’ என்று பொருமுகிறது கணேசன் தரப்பு.

பன்னீர்செல்வம், கணேசன்
பன்னீர்செல்வம், கணேசன்

இதேபோல, தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவனுக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இடையேயான தகராறு, புதுக்கோட்டையில் அமைச்சர்கள் மெய்யநாதனுக்கும் ரகுபதி்க்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டி என அமைச்சர்களுக்குள் ‘ஈகோ’ யுத்தம் உச்சத்தில் இருக்கிறது. கட்சிக்காரர்கள் ஒருபக்கம் திண்டாடுகிறார்கள் என்றால், மறுபக்கம் ‘யார் சொல்வதைக் கேட்பது’ என்று புரியாமல் மாவட்ட அதிகாரிகள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்” என்றார் அந்த மூத்த நிர்வாகி.

உளவுத்துறை ‘ரிப்போர்ட்!’ - ஸ்டாலின் ‘ரேங்க் கார்டு’

இந்தக் குழப்பங்கள் காதுக்கு எட்டியவுடன், அமைச்சர்களைக் கண்காணித்து ரிப்போர்ட் அளிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாராம் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து தன் ரிப்போர்ட்டை முதல்வரிடம் கொடுத்திருக்கிறது உளவுத்துறை. அமைச்சர்களின் துறைரீதியிலான செயல்பாடு, மாவட்ட அரசியல், வசூல் புகார்கள் குறித்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த ரிப்போர்ட் குறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர், “சிறப்பாகச் செயல்படும் அமைச்சர்களில், முதல் மூன்று இடங்களில் அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் இருக்கிறார்கள். சரியாகச் செயல்பட முடியாமல் திணறும் அமைச்சர்கள் பட்டியலில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோரின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. கயல்விழியின் கணவர் செல்வராஜ்தான் ‘ஆக்டிங்’ அமைச்சராக வலம்வருவதாகப் புகார்கள் வந்ததால், அது குறித்தும் விசாரித்து முதல்வரிடம் அறிக்கை அளித்திருக்கிறோம்.

ரகுபதி, மெய்யநாதன்,
ரகுபதி, மெய்யநாதன்,

நாசரின் வாரிசுமீது தொடர்ச்சியாகச் சர்ச்சைகள் மூள்வதால், அது குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் ஒருவர் சமீபத்தில் நாசரைத் தன் வீட்டுக்கே அழைத்து, ‘இப்படியே போனால் உன் பதவியை யாராலும் காப்பாத்த முடியாது’ என்று எச்சரித்திருக்கிறார். அப்போதும் தன் சூழலை நாசர் சரிப்படுத்திக் கொள்ளவில்லை. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் துறைரீதியாக ‘ஆக்டிவ்’வாக இல்லை என்று ‘ரிப்போர்ட்’ அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் மீதும் சில புகார்கள் எழுந்ததால், அது குறித்தும் முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

அமைச்சர்கள் மத்தியில் நடக்கும் இந்த ஈகோ, பதவி பஞ்சாயத்துகளை அமைதியாக வேடிக்கை பார்க்கும் முதல்வர், உளவுத்துறையின் அறிக்கையின்படி ‘ரேங்க் கார்டு’ போட ஆரம்பித்திருக்கிறாராம். இதனடிப்படையில், அமைச்சரவையில் சில மாற்றங்களைக் கொண்டுவர அவர் தயாராவதாகக் கூறப்படுகிறது. முதல்வருக்கு மிக நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “ஒரு ஆண்டு முடிவதற்குள்ளேயே அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதல்வர் விரும்பவில்லை. அதேநேரத்தில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததாலும், சீனியர்கள் வருத்தத்தில் இருப்பதாலும் துறைகளை மாற்றிக் கொடுப்பது எனத் தீர்மானித்திருக்கிறார். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழலாம். குறிப்பாக திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சேகர் பாபு, கே.என்.நேரு உள்ளிட்டவர்களுக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்படலாம். பெரியகருப்பன், நாசர், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஆகியோர் வேறு துறைகளுக்கு மாற்றப்படலாம்” என்றார்.

அமைச்சரவையை மாற்றவும், மாவட்டப் பஞ்சாயத்துகளைத் தீர்க்கவும், சில அமைச்சர்களின் அதகளத்துக்கு முடிவுகட்டவும் முதல்வர் தயாராகிறார் என்பதே நமக்குக் கிடைக்கும் தகவல். வரப்போகும் மாற்றங்கள் தீர்வைக் கொண்டு வருமா... புதிய குழப்பங்களுக்கு வழிவகுக்குமா என்பது அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு தெரிந்துவிடும்!