Published:Updated:

யார் ராஜா? யார் சிப்பாய்? - பா.ஜ.க செஸ்!

யார் ராஜா? யார் சிப்பாய்?
பிரீமியம் ஸ்டோரி
யார் ராஜா? யார் சிப்பாய்?

‘இதென்ன அவ்வளவு முக்கியமான பிரச்னையா... டைம் இல்லைனு சொல்லிடுங்க. இன்னொரு நாள் பார்க்கலாம்’ என்று சொன்னதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

யார் ராஜா? யார் சிப்பாய்? - பா.ஜ.க செஸ்!

‘இதென்ன அவ்வளவு முக்கியமான பிரச்னையா... டைம் இல்லைனு சொல்லிடுங்க. இன்னொரு நாள் பார்க்கலாம்’ என்று சொன்னதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

Published:Updated:
யார் ராஜா? யார் சிப்பாய்?
பிரீமியம் ஸ்டோரி
யார் ராஜா? யார் சிப்பாய்?

சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகப் பிரமாண்டமாகத் தொடங்கவிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பலருக்கும் அழைப்பிதழ் வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த செஸ் போட்டிக்கான வேலைகள் மும்முரமாகியிருக்கும் நிலையில், அ.தி.மு.க-வுக்குள்ளும் செஸ் ஆட்டம் பரபரக்கிறது. அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தன் ஆதரவாளர்களுக்கு வருமான வரித்துறை கொடுக்கும் நெருக்கடிகளால் திணறிப்போயிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவைக் காரணமாகவைத்து, பா.ஜ.க மேலிடத்தைச் சமாதானப்படுத்த டெல்லிக்குப் பறந்தவர், போன வேகத்தில் திரும்பியிருக்கிறார். “டெல்லியில் எடப்பாடிக்கு ஆதரவான சிக்னல் கிடைக்கவில்லை என்பதே எங்களுக்கான பாசிட்டிவ் சிக்னல்தான்” என்று குதூகலிக்கிறது பன்னீர்செல்வம் தரப்பு. அ.தி.மு.க-வுக்குள் பா.ஜ.க ஆடும் இந்த செஸ் விளையாட்டில் இதுவரை இல்லாத அளவுக்குச் சூடேறியிருக்கிறது!

‘நேர்ந்ததெல்லாம் அவமானம்தான்!’

ஜூலை 11 பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்றபோதே, அவருக்குச் சிக்கல்கள் தொடங்கிவிட்டன. பட்டாபிஷேகம் ஒருபக்கம் நடந்த வேளையில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர், எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபர் செய்யாதுரை ஆகியோரின் இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இந்த ரெய்டு தாக்குதல் அதோடு நிற்கவில்லை. மதுரையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமான அன்னை பாரத், எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனங்கள்மீது ரெய்டுகள் பாய்ந்தன. மதுரைச் சோதனையில், கணக்கில் வராத 165 கோடி ரூபாய் பணம், 14 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை தவிர, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோரை சி.பி.ஐ விசாரிக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இப்படி ரெய்டுகளும் விசாரணைகளும் தன் தரப்பின்மீது இறுகுவதால், டெல்லியைச் சமாதானப்படுத்த முடிவெடுத்தார் எடப்பாடி. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்ள எடப்பாடிக்கு அழைப்பிதழும் வந்து சேர்ந்தது. ‘சகல பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் டெல்லிக்குப் போன எடப்பாடிக்கு நேர்ந்ததெல்லாம் அவமானம்தான்’ என்கிறார்கள் அவருடன் பயணித்தவர்கள்.

யார் ராஜா? யார் சிப்பாய்? - பா.ஜ.க செஸ்!

கண்டுகொள்ளாத பிரதமர்... கதவடைத்த அமித் ஷா!

இது தொடர்பாக எடப்பாடியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “டெல்லி பயணத்தை அரை மனதோடுதான் ஒப்புக்கொண்டார் எடப்பாடி. ‘எதற்கெடுத்தாலும் அவர்களிடம் போய் நின்றால், தொண்டர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்’ என்றார். ஆனால், முன்னாள் அமைச்சர்கள்மீது அடுத்தடுத்து ரெய்டு நடைபெறுவதால், ஆதரவாளர்களிடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்க அவர் பயணப்பட வேண்டியதாகிவிட்டது. தொடக்கத்தில், முர்மு பதவியேற்பு விழாவையெல்லாம் முடித்துவிட்டு சென்னை திரும்பத்தான் திட்டமிடப்பட்டது. ஐந்து நாள்கள் டெல்லி புரோகிராம் போடப்பட்டு, சென்னையில் நடைபெறவிருந்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தைக்கூட ஜூலை 27-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். ஜூலை 23-ம் தேதி, ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் மோடியைச் சந்திக்க ஐந்து நிமிடங்கள் எடப்பாடிக்கு ஒதுக்கப்பட்டன. பன்னீரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்குக்கூட அழைப்பிதழ் அனுப்பப்படாததால், நாங்களும் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், நடந்தது எல்லாமே ‘உல்டா.’

அசோகா ஹோட்டலில் நடந்த அந்த விழாவில், இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பதவியேற்றதால் தனக்கு பிரதமர் வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்த்தார் எடப்பாடி. கட்சிரீதியிலான கோரிக்கைகளைத் தன் பெயரிலான லெட்டர் பேடில் எழுதி மோடியிடம் கொடுக்க வைத்திருந்தார். ஆனால், எதையும் மோடி கண்டுகொள்ளவில்லை. எடப்பாடி கொடுத்த லெட்டரைப் பிரித்துக்கூடப் பார்க்காமல் அதை அவரிடமே கொடுத்த பிரதமர், ‘நீங்கள் அமித் ஷாவிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று அண்ணாமலையைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். 40 செகண்ட்கூட இந்தச் சந்திப்பு நீடிக்கவில்லை. இதில் எடப்பாடி டோட்டல் அப்செட்.

‘கவலைப்படாதீங்கண்ணா, அமித் ஜி-யைப் பார்த்துப் பேசிடலாம்’ என்று அண்ணாமலை சமாதானம் செய்தபோது, ‘நீங்க அவர்கிட்ட டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டுச் சொல்லுங்க’ என்று கடுகடுப்புடன் கூறிவிட்டு தமிழ்நாடு இல்லத்துக்குத் திரும்பினார் எடப்பாடி. அன்றிரவு 9 மணியாகியும் அண்ணாமலையிடமிருந்து அழைப்பேதும் வரவில்லை. வேலுமணி மூலமாக அண்ணாமலையை போனில் பிடித்த எடப்பாடி, ‘முதல் பொதுக்குழுக் கூட்டம் நினைச்ச மாதிரி நடக்கலை. அவ்வளவு டென்ஷனிலும், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கேட்டு நீங்க நேரம் கேட்டபோது, நான் உங்களைச் சந்திச்சேன். உங்க தேவைக்கு எங்களைப் பயன்படுத்திக்கறீங்க. இதெல்லாம் ரொம்ப தப்புங்க...’ என்று வெடித்துவிட்டார். உடனே, ‘அண்ணா... கொஞ்சம் பொறுங்க. நான் அமித் ஜி ஆபீஸ்ல பேசிட்டுத்தான் இருக்கேன். அவர் ரொம்ப பிஸியா இருக்கார். எப்படியும் காலைக்குள்ள அப்பாயின்ட்மென்ட் கிடைச்சுடும்’ என்று அண்ணாமலையிடமிருந்து சமாதான பதில் வந்தது. ஆனால், ஜூலை 24-ம் தேதி காலை 8 மணி வரை

அமித் ஷாவின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. அமித் ஷா அலுவலகத்திலிருந்து, ‘இதென்ன அவ்வளவு முக்கியமான பிரச்னையா... டைம் இல்லைனு சொல்லிடுங்க. இன்னொரு நாள் பார்க்கலாம்’ என்று சொன்னதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அமித் ஷாவின் வீட்டுக் கதவடைக்கப்பட்டதும் உச்சகட்ட டென்ஷனாகிவிட்டார் எடப்பாடி. அண்ணாமலையும் போனை எடுக்காததால், உடனே சென்னைக்கு டிக்கெட் போடச் சொன்னார்.

விரிசலில் கூட்டணி... டென்ஷனான எடப்பாடி, குஷியான பன்னீர்!

ஆனால் வேலுமணி, ‘கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்ணே. வயித்துவலி நமக்குத்தான். அவங்களுக்கு இல்லை...’ என்று சொல்லவும், ‘இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது. நம்ம கட்சி வேலையை ஒழுங்கா பார்த்தாலே போதும். யாரையும் பார்க்கத் தேவையில்லை. யாரை நம்பியும் நாம கட்சி நடத்தலை. அழைப்பிதழுக்கு மதிப்பு கொடுத்து, வந்தோம். பிரதமரையும் பார்த்தாச்சு. எதுவா இருந்தாலும், ஊர்ல பார்த்துக்கலாம். பிரதமர் 28-ம் தேதி சென்னை வரும்போது பேசிக்கலாம்’ என்று ரொம்பவே டென்ஷனாகப் பேசினார். அதற்கு மேல் அங்கு இருக்க யாருக்குமே விருப்பமில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, எடப்பாடியின் நேரமறிந்து அவரைச் சந்திக்கக் காத்திருந்தது பா.ஜ.க தரப்பு. சீட் குறைவாகக் கொடுத்தாலும், எந்த இடத்திலும் அவர்களை எடப்பாடி உதாசீனப்படுத்தியதில்லை. ஆனால், ‘ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர் சந்திக்க நேரம் கேட்டும், 20 நிமிடங்கள்கூட கொடுக்க மனம் வரவில்லையென்றால், அந்தக் கூட்டணி எதற்கு?’ என்கிற கோபம் அ.தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. இந்த விரிசல் அதிகரித்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறுவதற்கான சூழல் அதிகம்” என்றனர்.

இதற்கிடையே, டெல்லியில் நடைபெற்ற விஷயங்களை ஒன்றுவிடாமல் அந்தச் சமயத்தில் மருத்துவமனையிலிருந்த பன்னீருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார், எடப்பாடியுடன் பயணித்த வழக்கறிஞர்கள் டீமில் இருந்த ஒருவர். ‘எடப்பாடி புறக்கணிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், பன்னீர் ரொம்பவே குஷியாகிவிட்டார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். டெல்லியிலிருந்து பன்னீரிடம் பேசியவர்கள், `நெடுஞ்சாலைத்

துறையில் 4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எடப்பாடிமீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவருக்குச் சிக்கல் வரப்போவது உறுதி’ என்கிற தகவலைச் சொன்ன பிறகுதான், ‘வீட்டுக்குக் கிளம்பலாம்ப்பா. போட்டிப் பொதுக்குழு ஏற்பாட்டைப் பார்க்கணும்’ என்று உற்சாகத்தோடு டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார் பன்னீர். டிஸ்சார்ஜ் ஆன வேகத்திலேயே, 14 மாவட்டச் செயலாளர்களைப் புதிதாக நியமித்து அவரிடமிருந்து அறிவிப்பும் வெளியானது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கமும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரைக் கட்சியிலிருந்தே நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பன்னீர்.

யார் ராஜா? யார் சிப்பாய்? - பா.ஜ.க செஸ்!

‘அடுத்தகட்ட வேலைகளைத் தீவிரப்படுத்துங்கள்!’

இது குறித்து பன்னீர் தரப்பில் சிலரிடம் பேசினோம். “அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை இருந்தபோது, கட்சியிலிருந்து சுமார் 800 பேருக்கு மேல் நீக்கப்பட்டனர். இவர்களில் பாதிப் பேர் பன்னீரின் ஆதரவாளர்கள்தான். அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பன்னீர். டெல்லியிலிருந்து எங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. அதனால்தான், புதிய நிர்வாகிகள் நியமனத்தை வேகப்படுத்தியிருக்கிறோம்.

மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி, மாநில அளவில் பிரமாண்டப் பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். சசிகலாவில் தொடங்கி, அன்வர் ராஜா, பெங்களூர் புகழேந்தி எனக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் அண்ணனுக்கு ஆதரவாக நிற்கப்போகிறார்கள். ஊராட்சிச் செயலாளர், தொகுதிச் செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை, கட்சியிலிருந்து எடுத்ததால் பலர் அதிருப்தியில் இருந்தனர். அந்தப் பொறுப்புகளை மீண்டும் கொண்டுவரப்போவதாக பன்னீர் அறிவித்திருக்கிறார். ரெய்டு தீவிரமாவதால், இப்போதே பல முன்னாள் அமைச்சர்கள் எங்களோடு பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னைக்கு வரும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் பன்னீர். அந்தச் சந்திப்பு நிகழும்போது, அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்திருக்கும்” என்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரத்தை வைத்து, ‘செஸ்’ ஆட ஆரம்பித்திருக்கிறது பா.ஜ.க. எடப்பாடி நேரம் கேட்டு அமித் ஷா மறுத்த அதேநாளில், உடல்நலத்தை விசாரிப்பதுபோல மத்திய அமைச்சர் ஒருவர் பன்னீரிடம் பேசி, ‘அடுத்தகட்ட வேலைகளைத் தீவிரப்படுத்துங்கள்’ என்றாராம். இது எடப்பாடி முகாமை ஏகத்துக்கும் உஷ்ணமாக்கியிருக்கிறது.

“பா.ஜ.க-வின் இரண்டாம் தர அரசியல் எடுபடாது!”

எடப்பாடிக்கு மிக நெருக்கமான கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர் ஒருவர், “தேவையில்லாமல் எங்கள் கட்சி விவகாரங்களுக்குள் மூக்கை நுழைக்கும் வேலையைச் செய்துவருகிறது பா.ஜ.க. ஒருபுறம், ‘அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை’ என்று சொல்லிக்கொண்டே, மறுபுறம் பன்னீர் மூலமாகக் குழப்பத்தை விளைவிக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபடுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில், பத்து மாநிலங்களில் பா.ஜ.க-வினர் எப்படி ஜனநாயகத்துக்கு விரோதமாகக் குழப்பங்களையும், சூழ்ச்சிகளையும் செய்து ஆட்சிக்கு வந்தார்களோ... எப்படிப் பல கட்சிகளை உடைத்து நாசம் செய்தார்களோ... அதே மாதிரி தமிழ்நாட்டில் எங்கள் கட்சிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சியை உடைத்து, எங்கள் வீழ்ச்சியில் அவர்கள் வளர்ந்துவிடலாம் என நினைக்கிறார்கள். இது மிகக் கீழ்மையான, இரண்டாம்தர அரசியல். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவர்களின் உதவி எங்களுக்குத் தேவையில்லை. அவர்கள் குட்டையைக் குழப்பாமல் இருந்தாலே, எங்கள் பிரச்னைகளை நாங்கள் சரிசெய்துகொள்வோம்.

சொல்லப்போனால், எங்களை நம்பித்தான் பா.ஜ.க இருக்கிறதே தவிர, அவர்களை நம்பி நாங்கள் இல்லை. அட்ரஸே இல்லாமல் இருந்த பா.ஜ.க-வுக்கு, நான்கு எம்.எல்.ஏ-க்கள் கிடைத்தது எங்களால்தான். தேர்தல் சமயத்தில், ‘இரட்டை இலை ஆதரவு பெற்ற சின்னம் தாமரை’ என வாய்விட்டுப் பிரசாரம் செய்ததெல்லாம் அவர்களுக்கு மறந்துபோய்விட்டதுபோல... இன்னும் தமிழ்நாட்டில் வெகுமக்கள் ஆதரவில்லாத கட்சியாகத்தான் இருக்கிறது பா.ஜ.க. அதை அவர்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்திருக்கிற ஒரு கட்சியிடம், கோடிக்கணக்கில் தொண்டர்களுள்ள ஒரு கட்சியிடம் இவர்கள் சித்து வேலைகள் பலிக்காது. ஆட்சி, அதிகாரம், ஆணவத்தோடு நடந்து கொண்டவர்களுக்கெல்லாம் தக்க பாடத்தைத் தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்; இனியும் கற்றுக் கொடுப்பார்கள். அ.தி.மு.க பேரியக்கத்தால் பல்வேறு பதவிகளை அனுபவித்து, கட்சியால் வளர்ந்த பன்னீரும் இது புரியாமல் அவர்களின் தயவைத் தேடுகிறார். பன்னீரை அவர்கள் வளர்த்துவிடப்போவதில்லை; அவர்கள் அவரை ஒரு பொம்மைபோல வைத்து விளையாடுகிறார்கள். இது பன்னீருக்குப் புரியவில்லை’’ என்றார் சூடாக.

ஜூலை 25-ம் தேதி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், “தி.மு.க-வுக்குச் சரியான எதிரி அ.தி.மு.க-தான். ‘நாங்கள்தான் மாற்று’ என்று சொல்பவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடம்” என்று செல்லூர் ராஜூ பா.ஜ.க-வுக்கு எதிராக மறைமுகமாக வெடித்துத் தீர்த்திருக்கிறார். இதே மனநிலைதான் அ.தி.மு.க-வின் பெரும்பாலான நிர்வாகிகளிடம் ஏற்பட்டிருக்கிறது. ஜூலை 28-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்திக்க எடப்பாடி, பன்னீர் இருவருமே நேரம் கேட்டிருக்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு யார் எம்.பி பதவிகளைப் பெற்றுத் தருவார்களோ, அவர்களை ராஜாவாக்கவும் இயலாதவர்களைச் சிப்பாய் ஆக்கவும் பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஒலிம்பியாட்டில் ‘செஸ்’ ஆட்டம் தொடங்கும்போது, பா.ஜ.க - அ.தி.மு.க செஸ் ஆட்டத்தில் ஒரு ரவுண்ட் முடிவுக்கு வந்திருக்கலாம்!