Published:Updated:

சுற்றலில்விட்ட டெல்லி... சுதி குறைந்த எடப்பாடி!

எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளரான பிறகு, பா.ஜ.க தலைவர்கள் தன்னை வாழ்த்துவார்கள் என எதிர்பார்த்தார் எடப்பாடி. ஆனால், யாரும் அது குறித்துப் பேசவேயில்லை.

சுற்றலில்விட்ட டெல்லி... சுதி குறைந்த எடப்பாடி!

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளரான பிறகு, பா.ஜ.க தலைவர்கள் தன்னை வாழ்த்துவார்கள் என எதிர்பார்த்தார் எடப்பாடி. ஆனால், யாரும் அது குறித்துப் பேசவேயில்லை.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா

புயல்கூட ஒரு வாரத்தில் கரையைக் கடந்துவிடும். ஆனால், அ.தி.மு.க விவகாரத்தில் வீசும் அரசியல் புயலோ எப்போது ஓயும் என யாருக்குமே தெரியவில்லை. நீதிமன்றத்தில் எடப்பாடிக்குச் சாதகமாக வந்த தீர்ப்புகள், பன்னீர் தரப்பின் பதிலடி வழக்குகள், பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சசிகலாவின் மேல்முறையீடு வழக்கு எனக் கட்சிக்குள் காட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. இந்தப் பரபரப்பான சூழலில்தான் டெல்லிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான அவரது சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள்தான் இப்போது கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கின்றன. பெங்களூரு சகலை, வருமான வரித்துறை ரெய்டு, சமரசத்துக்கான அழுத்தம் என `திகுதிகு’ காட்சிகளுடன் அரங்கேறியிருக்கும் இந்தச் சந்திப்பு குறித்து நாமும் விசாரித்தோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் பட்டாசு ரகம்!

சுற்றலில்விட்ட டெல்லி... சுதி குறைந்த எடப்பாடி!

40 சதவிகித கமிஷன்... கர்நாடகா குடைச்சல்!

எடப்பாடியின் இந்த டெல்லி பயணம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திப்பது எனத் தொடக்கத்தில் மூன்று நாள் பயணமாகத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், பிரதமர் நேரம் ஒதுக்க முடியாததால், அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு ஒரு நாள் பயணமாக ஊர் திரும்பியிருக்கிறார் எடப்பாடி. அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார்கள். அந்த 20 நிமிடச் சந்திப்பில், பெரும் பகுதி பெங்களூரு ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம் குறித்துத்தான் எடப்பாடி பேசியதாகக் கூறுகிறது பா.ஜ.க சீனியர்கள் வட்டாரம்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் தலைவர்கள் சிலர், “கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக, மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை அந்த மாநிலக் கட்டட ஒப்பந்ததாரர்கள் முன்வைத்துள்ளனர். கர்நாடக அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு, பா.ஜ.க தலைவர்களும் அதிகாரிகளும் 40 சதவிகித கமிஷன் கேட்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த கமிஷன் குற்றச்சாட்டு, பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசுக்குக் கடும் குடைச்சலாகியிருக்கிறது. பொம்மையின் படத்தோடு ‘PayCM’ என்கிற போஸ்டர்கள் பெங்களூரு முழுவதும் ஒட்டப்பட்டன. செப்டம்பர் 30-ம் தேதி தனது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, கர்நாடகாவுக்குள் வரும் ராகுல் காந்தி, 21 நாள்கள் கர்நாடகாவில் நடைப்பயணம் செய்யவிருக்கிறார். அப்போது, பா.ஜ.க-வுக்கு எதிரான பிரசாரத்தைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது காங்கிரஸ். பொம்மை அரசுக்கு எதிராக இந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டுத் தூண்டிவிடுவது காங்கிரஸ், எடியூரப்பா குடும்பம், கட்டட ஒப்பந்ததாரர்கள் ஆகிய மூன்று தரப்புதான்.

சுற்றலில்விட்ட டெல்லி... சுதி குறைந்த எடப்பாடி!

பெங்களூரு அஸ்திரம்... சிக்கலில் சகலை!

எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், டெல்லி அதைச் சட்டை செய்யவில்லை. இதில் எடியூரப்பா குடும்பம் டோட்டல் அப்செட். தேர்தல் நெருங்கும் வேளையில், லிங்காயத் சமூகத்தினரைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு பா.ஜ.க நாடாளுமன்றக் குழுவில் இடமளித்தது டெல்லி. ஆனால், அதற்குப் பிறகும் எடியூரப்பா குடும்பம் சமாதானமாகவில்லை. தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத பா.ஜ.க மேலிடத்துக்குப் பாடம் புகட்டத் தீர்மானித்தது. அவர்களின் திட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துகொண்டது. கட்டட ஒப்பந்ததாரர்கள் சிலரைக் கையிலெடுத்து, அவர்கள் மூலமாக 40 சதவிகித கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இங்கேதான் ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளே வருகிறார்.

எடப்பாடியின் சம்பந்தி வழி உறவினரான சந்திரகாந்த், ‘ராமலிங்கம் அண்ட் கோ’ என்கிற நிறுவனத்தின் பெயரில் பல்வேறு கட்டட ஒப்பந்தங்களைச் செய்துவருகிறார். எடப்பாடி மகன் மிதுனுக்கு, சந்திரகாந்த் சகலை முறை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில், நெடுஞ்சாலைத்துறையில் நடந்த பல்வேறு ஒப்பந்த முறைகேடுகளில் சந்திரகாந்தும் சம்பந்தப்பட்டிருப்பதாக தி.மு.க குற்றம் சாட்டியிருந்தது. இந்த சந்திரகாந்த்-தான், கர்நாடகா பா.ஜ.க அரசுக்கு எதிராக ஒப்பந்ததாரர்களை ஒருங்கிணைப்பதாக டெல்லி கருதுகிறது. இவர்களுக்கெல்லாம் செக் வைக்கும்விதமாக, எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நடந்த ஒப்பந்த முறைகேடு, பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதில் நிகழ்ந்த பல கோடி ரூபாய் முறைகேடு உள்ளிட்ட விஷயங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. லஞ்சம், பேரம் தொடர்பாக எடியூரப்பாவின் பேரன் சசிதரனும், சந்திரகாந்தும் பேசிக்கொள்ளும் ஓர் ஆடியோவும் லீக் ஆனது. எடியூரப்பா குடும்பம், ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளிட்ட ஒரு டஜன் பேர்மீது லோக் ஆயுக்தா போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இதில்தான், எடப்பாடி ஆட்டம் கண்டுவிட்டார்.

சந்திரகாந்த் - எடியூரப்பா
சந்திரகாந்த் - எடியூரப்பா

தொழில்ரீதியாக எடப்பாடியின் மகன் மிதுனுடன் சந்திரகாந்த் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். சில ‘உதவிகளும்’ செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களை லோக் ஆயுக்தா போலீஸார் எடுத்திருக்கிறார்கள். பெங்களூரில் நடக்கும் இந்த விசாரணை, சேலம் வரை நீள ஆரம்பித்திருக்கிறது. இதனால், தன் மகனுக்குச் சிக்கல் ஏதும் வந்துவிடக் கூடாதே எனப் பதறியடித்துக்கொண்டு ஓடினார் எடப்பாடி. அமித் ஷாவுடனான சந்திப்பில் இது குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார். ‘நாங்க உங்களுக்கு எதிரா எதுவுமே செய்யலை’ என்று எடப்பாடி சொன்னதை, அமித் ஷா அமைதியாகக் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் உத்தரவாதம் ஏதும் அளிக்கவில்லை. இதில், எடப்பாடி டோட்டல் அப்செட்” என்றனர் விரிவாக.

“எங்களையே அடிக்காதீங்க... அவங்களையும் கவனிங்க!”

தி.மு.க ஆட்சிக்கு எதிரான சில புகார்களையும் அமித் ஷாவிடம் பட்டியலிட்டிருக்கிறார்கள் அ.தி.மு.க தலைவர்கள். பொங்கல் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு நடந்ததாகத் தொடங்கியவர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை எனப் பல துறைகளில் முறைகேடுகள் நடப்பதாக 13 புகார்களை தி.மு.க அரசுக்கு எதிராக அளித்திருக்கிறார்கள்.

இது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அ.தி.மு.க தலைவர்களைக் குறிவைத்துத்தான் வருமான வரித்துறை சோதனைகள் நடந்திருக்கின்றன. முன்னாள் முதல்வர் எடப்பாடி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் குறிவைக்கப்பட்டனர். ஆனால், தி.மு.க சீனியர்களை மத்திய அரசு தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. இதையெல்லாம் அமித் ஷாவிடம் எடுத்துச்சொன்ன வேலுமணி, ‘தி.மு.க-காரங்க எவ்வளவோ தப்பு செய்யறாங்க. ஒரு டஜன் குற்றச்சாட்டுகளை நாங்களே இப்ப கொடுத்திருக்கோம். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பல புகார்களை தி.மு.க அரசுக்கு எதிராக கவர்னரிடம் கொடுத்திருக்கார். வருமான வரித்துறை எங்கமேல மட்டும் சோதனை நடத்துறதால, தி.மு.க-வுக்குச் சுத்தமா பயமே இல்லாமப் போயிடுச்சு. அவங்க பங்குக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மூலமா எங்களுக்குப் பெரிய குடைச்சல் கொடுக்குறாங்க. எங்களையே அடிக்காம, கொஞ்சம் அவங்களையும் கவனிங்க. அப்பதான் தி.மு.க-வுக்கு பயம் வரும்’ என்றிருக்கிறார். உடனடியாக, அந்தப் புகார்களை விசாரணைக்கு அனுப்புவதாக அமித் ஷாவும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

சுற்றலில்விட்ட டெல்லி... சுதி குறைந்த எடப்பாடி!

“மூணு பேரும் ஒண்ணா வாங்க!” - அழுத்தமாகச் சொன்ன அமித் ஷா

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும் சில நிமிடங்கள் பேசப்பட்டது. ‘கட்சியின் ஒற்றைத் தலைமையா எடப்பாடிதான் வரணும்னு நிர்வாகிகளும் தொண்டர்களும் விரும்புறாங்க. அதன்படிதான் மாற்றம் செஞ்சிருக்கோம்’ என்று வேலுமணி சொன்னதும், இடைமறித்த அமித் ஷா, ‘இந்த மாற்றத்தால தேர்தல் சமயத்தில் நமக்கு லாபம் இருக்கா?’ என்றிருக்கிறார். அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், ‘ஒற்றைத் தலைமையாக இருந்தாத்தான் கட்சியைக் கட்டுக்கோப்பா கொண்டுபோக முடியும்.

அ.தி.மு.க ஒரு வித்தியாசமான கட்சி. உறுதியான தலைமை இருந்தால்தான் வெற்றியைக் கொண்டுவர முடியும். இரட்டைத் தலைமை வேலைக்கு ஆகலை. அதற்காகத்தான் எடப்பாடியை இடைக்காலப் பொதுச் செயலாளராக்கியிருக்கோம்’ என்று விளக்க மளித்திருக்கிறார்.

இந்தக் கருத்துக்கு அமித் ஷா உடன்படவில்லை என்பதைப் புரிந்துகொண்ட வேலுமணி, ‘உங்களுக்கு 10 எம்.பி ஜெயிச்சுத் தரவேண்டியது எங்க பொறுப்பு. தி.மு.க மேல ஏகப்பட்ட கெட்ட பெயர் உருவாகியிருக்கு. நீங்களும் வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை விசாரணைனு வேகம் காட்டினா, தி.மு.க-வோட இமேஜை சரிச்சுடலாம். இதற்கெல்லாம் உங்க ஒத்துழைப்பு அவசியம்’ என்றிருக்கிறார். அமைதியாகச் சில நொடிகள் அவர்களையே பார்த்த அமிஷ் ஷா, ‘எனக்குக் கிடைச்சிருக்கிற ரிப்போர்ட்படி, பிளவுபட்ட அ.தி.மு.க-வால எந்த லாபமும் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இல்லைனு தெரியுது. நீங்க, பன்னீர், சசிகலா எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இருந்தாத்தான், தி.மு.க-வை வீழ்த்த முடியும். உங்களுக்குள்ள நடக்குற சண்டையால வாக்குகள் பிரிஞ்சு போய்விடக் கூடாது. அடுத்த முறை டெல்லிக்கு வரும்போது, மூணு பேரும் ஒண்ணா வாங்க’ என்று அழுத்தமாகச் சொல்லி வழியனுப்பி விட்டார். இதை எடப்பாடியும், அவரோடு சென்றிருந்தவர்களும் துளியும் எதிர்பார்க்க வில்லை.

சுற்றலில்விட்ட டெல்லி... சுதி குறைந்த எடப்பாடி!

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளரான பிறகு, பா.ஜ.க தலைவர்கள் தன்னை வாழ்த்துவார்கள் என எதிர்பார்த்தார் எடப்பாடி. ஆனால், யாரும் அது குறித்துப் பேசவேயில்லை. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவில், மோடியும் எடப்பாடியும் சந்தித்தபோதுகூட பிரதமர் அவரை வாழ்த்தவில்லை. அமித் ஷாவுடனான இந்தச் சந்திப்பில், எடப்பாடியை ஒற்றைத் தலைமையாக அவர் அங்கீகரிக்கவே இல்லை. போதாக்குறைக்கு, ‘மூணு பேரும் ஒண்ணா வாங்க’ என்று அமித் ஷா சொன்னதை எடப்பாடியால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த முறையும் அ.தி.மு.க தலைவர்களுக்குப் பிடிகொடுக்காமல் சுற்றலில் விட்டுவிட்டது டெல்லி” என்றனர் அந்த முன்னாள் அமைச்சர்கள்.

வழக்கமாக, டெல்லி பா.ஜ.க தலைவர்களை எடப்பாடி சந்தித்துவிட்டு வந்தாலே உற்சாகம் அவர் முகத்தில் கொப்பளிக்கும். ஜனவரி, 2021-ல் பிரதமர் மோடியுடனான சந்திப்பை முடித்துவிட்டு, “சசிகலா அ.தி.மு.க உறுப்பினரே இல்லை. அவரைக் கட்சியில் இணைக்கும் வாய்ப்பே இல்லை” என்று ஆவேசமாகப் பேட்டியளித்தார். கட்சியில் ஒற்றைத் தலைமையான பிறகு, பன்னீரைத் தாக்குவதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டதில்லை அவர். ஆனால், அமித் ஷாவுடனான சந்திப்பை முடித்துவிட்டு வந்த எடப்பாடியின் முகத்தில் உற்சாகமில்லை. செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, பன்னீர் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. சுதி குறைந்த குரலில், ‘சாரி... வணக்கம்’ எனக் கேள்விக்கு பதிலளிக்காமல் கிளம்பிவிட்டார் எடப்பாடி.

‘மூணு பேரும் ஒண்ணா வாங்க’ என அமித் ஷா அறிவுறுத்தியிருந்தாலும், மகனின் சகலை விஷயத்தில் நெருக்கடியான நிலையில் இருந்தாலும், கட்சியின் ஒற்றைத் தலைமை நாற்காலியை விட்டுக்கொடுக்க எடப்பாடி தயாரில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். தேர்தல் ஆணையத்தில், எடப்பாடிக்கு ஆதரவாக 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த ஆதரவுக் கடிதத்தைச் சமர்ப்பித் திருக்கிறார் சி.வி.சண்முகம். விரைவிலேயே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திவிட்டு, மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டத் திட்டமிட்டிருக்கிறாராம் எடப்பாடி. இதற்கிடையே, ஒரு லட்சம் தொண்டர்களிடம் ஆதரவுக் கடிதத்தை வாங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கும் பணியில் மும்முரமாகியிருக்கிறது பன்னீர் தரப்பு.

அ.தி.மு.க-வைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அதில் சவாரி செய்யும் முதல் பிளான் ஒத்து வராததால், ‘ஒன்றிணைந்த அ.தி.மு.க’ எனும் பிளான் ‘பி’யைக் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க மேலிடம். டெல்லி பயணம் ஏமாற்றத்தில் முடிந்தாலும், சமரசத்துக்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பே இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. நாடாளுமன்றத் தேர்தல் வரை அ.தி.மு.க தரப்புகளைத் தொடர்ந்து டெல்லி சுற்றலில்விட்டு கிறுகிறுக்கவைக்கும் என்பது மட்டும் தெளிவாகிறது!