அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“அன்பு மலர்களே..!” - நெகிழும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

‘இவ்வளவு நடந்த பிறகும் சமாதானம் பேசச் சொல்றீங்கல்ல... சரி, ஒற்றைத் தலைமையை பன்னீர் ஏத்துக்கிட்டா நானும் சமாதானத்துக்கு ரெடி’ என்றவர், விருட்டெனக் கிளம்பிவிட்டார்.

ஒரு திரைப்படத்தில், நடிகர் ‘என்னத்த’ கண்ணையாவின் குதிரையை நடிகர் வடிவேல் திருடிக்கொண்டு போய்விடுவார். ஆனால் பதற்றப்படாமல் வெற்றிலையை மடித்தபடியே, “அது எங்க போகும். எங்க போனாலும் திரும்ப இங்கதான் வந்தாகணும்” என்று அசால்ட்டாகச் சொல்வார் கண்ணையா. அவர் சொன்னபடியே, குதிரையும் திரும்பி வந்துவிடும். அ.தி.மு.க-வின் இன்றைய நிலையும் அதுதான். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், பிரதமர், உள்துறை அமைச்சருடனான சந்திப்பு எனக் கன்னா பின்னாவென வட்டமடித்த அ.தி.மு.க குதிரை, மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துசேர்ந்திருக்கிறது. “பிரிந்திருக்கும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் ‘இணைந்த கைகளாக’ ஒன்றுபடப்போகிறார்கள். தர்மயுத்தம் 2.0 கேன்சல்” என்கிற பேச்சு, கழகத்துக்குள் பட்டாசைக் கொளுத்திப்போட்டிருக்கிறது. `படபட’ சத்தத்துக்கு நடுவே நாம் செய்திகளைச் சேகரித்தோம்!

“அன்பு மலர்களே..!” - நெகிழும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

பறந்த சமாதானப் புறா!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிப் பஞ்சாயத்தில் தொடங்கி, வழக்குகள், தேர்தல் ஆணைய மனுக்கள் வரை எடப்பாடியும் பன்னீரும் தொடர்ந்து முட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். “எதிரும் புதிருமாக இருக்கும் இருவரும் ஒன்றுசேரப்போகிறார்கள்” என்கிற தகவல் நமக்கும் ஆச்சர்யத்தைத்தான் ஏற்படுத்தியது.

நம்மிடம் பேசிய பன்னீருக்கு மிக நெருக்கமான மூத்த கட்சி நிர்வாகிகள் சிலர், “சமீபத்தில், பன்னீரின் மைத்துனரும், எடப்பாடி பழனிசாமியின் உறவினரும் மதுரையில் ரகசியமாகச் சந்தித்தனர். சமாதானப் பேச்சுவார்த்தைதான் நடந்தது. பன்னீருக்கு ‘இணைப் பொதுச்செயலாளர்’ பொறுப்பை ஒதுக்குவதாக எடப்பாடி தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. அதோடு, ‘உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற வேண்டும்’ என்கிற கோரிக்கையையும் முன்வைத்தது எடப்பாடி தரப்பு. அதை பன்னீர் தரப்பில் ஏற்கவில்லை.

‘இரட்டை இலைச் சின்னத்துக்குக் கையெழுத்திடும் அதிகாரம் வேண்டும்’ என்பதில் தெளிவாக இருக்கிறார் பன்னீர். மேலும், ‘கட்சியில் அவைத்தலைவர் பொறுப்பை, தலைவர் பொறுப்பாக மாற்றி பன்னீருக்கு வழங்க வேண்டும்’ என்றும் அவர் தரப்பில் சொல்லப்பட்டது. கடந்த சில மாதங்களாக, தன் அணியில் மாவட்டம், ஒன்றியம், பேரூர் கழகங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துவருகிறார் பன்னீர். இரண்டு அணிகளும் ஒன்றிணையும் பட்சத்தில், அந்த நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க-வில் உரிய பதவிகள் அளிப்பது குறித்தும் பேசப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் எடப்பாடி தரப்பிலிருந்து எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை.

“அன்பு மலர்களே..!” - நெகிழும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

பேச்சுவார்த்தைக்கு பன்னீர் தயாராக இருக்கிறார். அதனால்தான், தேவர் குருபூஜைக்கான தங்கக் கவச விவகாரத்தில் சுமுக முடிவு ஏற்பட, எடப்பாடிக்குச் சாதகமாகக் கடிதம் கொடுக்கவும் தயாரானார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக, இந்தத் தகவலும் எடப்பாடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டு வந்தபோது, எடப்பாடி குறித்து தவறாக எதுவும் பன்னீர் பேசவில்லை. சமாதானத்தைக் குறிப்பதற்காக, அக்டோபர் 17-ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் இல்லத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் சமாதானப் புறாவைப் பறக்கவிட்டார் பன்னீர். சமாதானமாகப் போவதைத் தவிர பன்னீருக்கு வேறு வழியில்லை. சட்டப் போராட்டங்களால், இரட்டை இலைச் சின்னத்தை வேண்டுமானால் பன்னீர் முடக்கலாமே தவிர, தேர்தல் அரசியலில் அதனால் அவருக்கு எந்த லாபமும் ஏற்படப்போவதில்லை. இனி எடப்பாடிதான் முடிவெடுக்க வேண்டும்” என்றனர்.

“அன்பு மலர்களே..!” - நெகிழும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

“சிவசேனா ரூட்ல நம்மளை முடக்கிடுவாங்கண்ணே..!”

சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க பெரியகுளத்திலிருந்து கிளம்பியபோதே, தன் ஆதரவாளர்களிடம், “எனக்கு எடப்பாடியோட ஒண்ணா சட்டசபையில உட்கார்றதுல எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டு பேருமே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்தானே... நேர்ல பார்த்தாக்கூட, ‘என்னண்ணே நல்லா இருக்கீங்களா?’னுதான் கேட்பேன். கட்சியோட சட்ட விதிகளை மாற்றாமல் இருந்தால், சமாதானத்துக்கு நான் தயார்” என்றபடிதான் வண்டியேறியிருக்கிறார் பன்னீர்.

பன்னீரின் ‘டிமாண்ட்’ குறித்து, அக்டோபர் 16-ம் தேதி ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், சீனியர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, கட்சியின் இணைப்பை வரவேற்று நிர்வாகிகள் பேசவும் கூட்டத்தில் பரபரப்பு எழுந்திருக்கிறது.

நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் சிலர், “கட்சி இரண்டு துண்டாக இருப்பதை நிர்வாகிகள் யாருமே விரும்பவில்லை. பலருக்குக் கட்சிமீதான பிடிப்பும், சிலருக்கு மத்திய அரசின் ரெய்டுகள் மீதான பயமும்தான் இந்த இணைப்பைப் பற்றி எடப்பாடியிடம் பேசவைத்திருக்கின்றன. முன்னாள் அமைச்சர் தங்கமணியே, ‘ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் இணைச்சுக்கலாம்ணே. அதிகாரம் கம்மியான டம்மி பதவியைக் கொடுக்கலாம்’ என்று சொன்னார்.

தங்கமணி
தங்கமணி

உட்கட்சிப் பிரச்னையால் சிவசேனா கட்சியின் பெயரும், சின்னமும் முடக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கோடிட்டுப் பேசிய நிர்வாகிகள், ‘பா.ஜ.க பக்கமிருக்கும் ஏக்நாத் ஷிண்டேவிடம்தான் பெரும்பான்மை நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் தேர்தல் கமிஷன், கட்சியின் சின்னத்தை முடக்கியது. இதே ரூட்ல நம்மளையும் முடக்கிடுவாங்கண்ணே. சின்னம் இல்லைன்னா, நமக்கு வெற்றி சாத்தியம் இல்லை. ஏற்கெனவே, டெல்லிக்கு என்னைய ஏன் கூட்டிட்டுப் போகலைனு தம்பிதுரை ஒருபக்கம் முறுக்க ஆரம்பிச்சுருக்காரு. கே.பி.முனுசாமிக்கும் சி.வி.சண்முகத்துக்கும் இடையே, ‘யார் வன்னியர் தலைவர்... யார் டெல்லி முகம்?’னு முட்டிக்குது. இந்த நிலையில, சின்னமும் முடங்கிடுச்சுன்னா, நம்ம பக்கம் யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க கொஞ்சம் இறங்கி வாங்கண்ணே. நிலைமை சரியான பிறகு, நாம நினைச்சதைச் சாதிச்சுக்கலாம்’ என்றனர்.

ஆனால், அவர்களின் ஆலோசனையைக் கேட்கும் மூடில் எடப்பாடி இல்லை. ‘இவ்வளவு நடந்த பிறகும் சமாதானம் பேசச் சொல்றீங்கல்ல... சரி, ஒற்றைத் தலைமையை பன்னீர் ஏத்துக்கிட்டா நானும் சமாதானத்துக்கு ரெடி’ என்றவர், விருட்டெனக் கிளம்பிவிட்டார். ஒற்றைத் தலைமையை விட்டுத்தர எடப்பாடி விரும்பவில்லை என்றாலும், கட்சி பிளவுபட்டுவிடக் கூடாது என்பதில் நிர்வாகிகள் தெளிவாக இருக்கிறார்கள். பலரும் இணைப்பை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றனர் விரிவாக.

போட் கிளப் ரகசியச் சந்திப்பு!

இந்த நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக்கொண்டு, சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களுடன் சென்று சந்தித்திருக்கிறார். சென்னை போட் கிளப் ஏரியாவில், பொள்ளாச்சி தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமாக பிரமாண்ட பங்களா இருக்கிறது. அதில்தான் இரு தரப்பும் ரகசியமாகச் சந்தித்திருக்கின்றன.

நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவர், “எடப்பாடியின் நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், அவருக்குச் சகலவிதங்களிலும் உதவியவர்தான் பியூஷ் கோயல். எடப்பாடிக்கு எதிராகப் பல்வேறு அஸ்திரங்கள் எய்யப்பட்டபோது அவருக்கு உதவியவர். கடைசியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரமும் அவர்தான் வாங்கிக் கொடுத்தார். பொள்ளாச்சி தொழிலதிபர் பங்களாவில் நடந்த சந்திப்பில், ‘டெல்லிகிட்ட நீங்கதான் சமரசம் பேசித் தரணும். என் பக்கம்தான் நிர்வாகிகள் இருக்காங்க. கட்சியும் இருக்குது. என் கையில சின்னமும் கட்சியும் இருக்குற மாதிரி செஞ்சு கொடுங்க. தேர்தல் ஆணையம், வழக்குகளால எனக்கு எந்த வம்பும் வந்துவிடக் கூடாது’ என்றிருக்கிறார் எடப்பாடி. ஆனால், எடப்பாடி விரும்பிய பதிலை பியூஷ் கோயல் சொல்லவில்லை.

“ஒண்ணா சேர்ற வழியைப் பாருங்க!”

‘2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல உங்களுக்குள்ள அடிச்சுக்கிறதால யாருக்கு என்ன லாபம்... எங்களுக்கு எம்.பி-க்கள் தேவை. அது, நீங்கல்லாம் ஒண்ணா இருந்தா மட்டும்தான் சாத்தியம். 2021 சட்டமன்றத் தேர்தல்ல, டி.டி.வி.தினகரன் தனியா போனதால, நீங்க ஆட்சியையே பிடிக்க முடியாம போச்சுல்ல... அப்ப நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையிலகூட, ‘தினகரனை பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கவெச்சு, அவருக்கு உள் ஒதுக்கீடா நாங்களே சீட் தந்துடுறோம்’னு சொன்னோம். அதை நீங்க கேட்கலை. ‘150 தொகுதியில ஜெயிப்பேன்’னு சொன்னீங்க. ஆனா, என்ன நடந்தது... இப்ப பன்னீரும் தனியாப் போனா நான்கு சதவிகித வாக்குகள் வெளியே போகுதுனு வெச்சுக்குவோம். அதனால யாருக்கு நஷ்டம்... நீங்க, பன்னீர், தினகரன், சசிகலா எல்லோரும் ஒண்ணா சேர்ந்து வரணும்கிறதுதான் டெல்லியோட விருப்பம். அதற்கெதிராக நான் எதுவும் பேச முடியாது. எல்லோரும் ஒண்ணா சேர்ற வழியைப் பாருங்க. இல்லைன்னா, உங்களுக்குத்தான் சிரமம்’ எனத் தெளிவாகப் பேசியிருக்கிறார் பியூஷ் கோயல். இதை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை.

சமீபத்தில், நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் பாண்டித்துரை எடுத்த டெண்டர் தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறை கைப்பற்றிருக்கிறது. இந்த பாண்டித்துரை, எடப்பாடிக்கு நெருக்கமானவர். நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எடப்பாடி பதவியேற்றவுடன், அவரது சேலம் வீட்டை இலவசமாக மராமத்து செய்துகொடுத்தவர் பாண்டித்துரை. அதைத் தொடர்ந்து, வருடத்துக்கு பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நெடுஞ்சாலைப் பணிகள் பாண்டித்துரைக்குத் தொடர்ச்சியாகத் தரப்பட்டன. இதன் நதிமூலத்தையெல்லாம் வருமான வரித்துறை தோண்ட ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் யாரைக் குறிவைத்திருக்கிறார்கள், ஏன் வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாதவரல்ல எடப்பாடி. டெல்லியின் விருப்பத்துக்கு மாறாக, தான் பயணித்தால், விளைவு என்னவாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்” என்றார்.

“அன்பு மலர்களே..!” - நெகிழும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

“அன்பு மலர்களே...” பாடுவாரா எடப்பாடி?

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைப்பு என்பது, தற்போது பேச்சுவார்த்தையில் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. இரட்டை இலைக்கான கையெழுத்தை விட்டுத் தர பன்னீர் தயாராக இல்லை. அவரிடம் பேனாவைக் கொடுக்க எடப்பாடி தயாராக இல்லை. நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் டெல்லி பிரதிநிதி ஒருவர், “இருவருமே விட்டுத் தரவில்லையென்றால், சின்னத்தை முடக்கிவிட்டு, தங்களுக்கென தனி ரூட்டை எடுக்க பா.ஜ.க தயாராகிவருகிறது. எதிர்க்கட்சி இடத்தைப் பிடிக்க தீவிரமாகக் காய்நகர்த்துகிறது அந்தக் கட்சி. இந்தச் சூழலில், மனமாச்சர்யங்களை மறந்து பன்னீரும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே கட்சிக்கு நல்லது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், வேறெந்தக் கட்சிக்கும் அ.தி.மு.க தொண்டர்களும் நிர்வாகிகளும் செல்லவில்லை. இந்தக் கட்சிக்கும் சின்னத்துக்கும் விசுவாசமாக இருக்கிறார்கள். அந்த விசுவாசத்தை பன்னீரும் எடப்பாடியும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களும் அப்படியான விசுவாசத்தையும் பக்குவத்தையும் வெளிப்படுத்த வேண்டும்” என்றார் தெளிவாக.

‘நாளை நமதே’ படத்தில், எம்.ஜி.ஆரின் குடும்பத்துக்கென ‘அன்பு மலர்களே... நம்பி இருங்களேன்...’ எனத் தொடங்கும் ஒரு குடும்பப் பாடல் இருக்கும். அந்தப் பாடலைப் பாடித்தான் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். அந்தப் பாடலில் இடம்பெறும், ‘தாய்வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று... நேர் வழி சென்றால்... நாளை நமதே’ என்கிற வரிகளை அவ்வப்போது பன்னீரும் தன் அறிக்கைகளிலும் பேச்சிலும் குறிப்பிடுவார். அந்தப் பாட்டை இப்போது மீண்டும் பன்னீர் பாட ஆரம்பித்திருக்கிறார். எடப்பாடி பக்கமிருக்கும் நிர்வாகிகளும்கூட முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எடப்பாடி மட்டும்தான் பாக்கி. ‘எடப்பாடியும் பாட ஆரம்பித்துவிட்டால், பிரிந்த அ.தி.மு.க குடும்பம் ஒன்று சேர்ந்துவிடும்’ என்கிற எதிர்பார்ப்பு கட்சியில் எழ ஆரம்பித்திருக்கிறது.

பாடுவாரா எடப்பாடி?