Published:Updated:

சீல் வைப்பு... சின்னம் முடக்கம்... போட்டிப் பொதுக்குழு - ரணகள அ.தி.மு.க!

ரணகள அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
ரணகள அ.தி.மு.க!

அம்மாவால் ‘ச்சீ... போ... துரோகி’ என்று துரத்தப்பட்டவர்தான் ஓ.பி.எஸ். பிறகு, நாங்கள் எல்லோரும் சிபாரிசு செய்துதான் அவரை மீண்டும் அம்மாவிடம் சேர்த்தோம்

சீல் வைப்பு... சின்னம் முடக்கம்... போட்டிப் பொதுக்குழு - ரணகள அ.தி.மு.க!

அம்மாவால் ‘ச்சீ... போ... துரோகி’ என்று துரத்தப்பட்டவர்தான் ஓ.பி.எஸ். பிறகு, நாங்கள் எல்லோரும் சிபாரிசு செய்துதான் அவரை மீண்டும் அம்மாவிடம் சேர்த்தோம்

Published:Updated:
ரணகள அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
ரணகள அ.தி.மு.க!

அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக, இடைக்காலப் பொதுச்செயலாளராக அரியணை ஏறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்குகள், அதிரடித்த ரெய்டுகளுக்கு மத்தியில், சவால்களையெல்லாம் கடந்து எடப்பாடி, தன்னை ஒற்றைத் தலைமையாக நிறுவிக்கொண்டிருப்பது அவரது அரசியல் பாதையில் சாதனைதான். அதேநேரம் கட்சிக்குள் கலவரம் வெடித்து, தலைமைக் கழகம் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பதிலுக்கு எடப்பாடியையும் கே.பி.முனுசாமியையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் பன்னீர். அதோடு, நடந்து முடிந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனுவும் அளித்திருக்கிறார். சட்டரீதியிலான எதிர்த் தாக்குதலுக்கு பன்னீர் தயாராவதால், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படலாம் என்றே அவர் தரப்பிலிருந்து செய்திகள் வருகின்றன. `இனி என்னவாகும் அ.தி.மு.க?’ என்பதுதான் தமிழ்நாடு அரசியலில் முதன்மையான கேள்வி!

சீல் வைப்பு... சின்னம் முடக்கம்... போட்டிப் பொதுக்குழு - ரணகள அ.தி.மு.க!
சீல் வைப்பு... சின்னம் முடக்கம்... போட்டிப் பொதுக்குழு - ரணகள அ.தி.மு.க!

‘தலைமைக் கழகம் செல்வோம்...’ - முன்பே முடிவெடுத்த பன்னீர்!

`அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க முடியாது’ என ஜூலை 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவுடனே, மளமளவென வேலைகளை ஆரம்பித்துவிட்டது எடப்பாடி தரப்பு. திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் பெஞ்சமினிடம் மீண்டும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. பொதுக்குழுவில் எடப்பாடியின் படங்கள் மட்டும் அதிகமாக இருக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையே, பொதுக்குழு நடத்த தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்குத் தன் உத்தரவைக் கூறுவதாக அறிவித்தார். அன்றுதான் பொதுக்குழு நடத்தவும் தேதி குறிக்கப்பட்டிருந்தது என்பதால், அ.தி.மு.க-வில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

ஜூலை 10-ம் தேதி இரவே, தென்மாவட்டங்கள், டெல்டாவிலிருந்து வந்திருந்த பன்னீரின் ஆதரவாளர்கள் அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் குழுமத் தொடங்கினர். ‘உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, தங்களுக்குச் சாதகமாக இருக்காது’ என்கிற பேச்சும் அவர்களிடம் பரவத் தொடங்கியது. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய பன்னீர், ‘பொதுக்குழுவைப் புறக்கணிப்பது. தீர்ப்பு வருவதற்கு முன்னரே தலைமைக் கழகத்துக்குச் செல்வது’ என முடிவெடுத்தார். ‘பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தலைமைக் கழகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது’ என்று திட்டமிட்டது பன்னீர் தரப்பு. இதற்காக, காலையிலேயே வைத்திலிங்கத்தின் ஆட்கள் தலைமைக் கழகத்துக்குச் சென்று கன்ட்ரோல் எடுப்பதெனவும் முடிவானது.

அதேநேரத்தில், எடப்பாடி முகாமிலும் ஏற்பாடுகள் தடதடத்தன. ‘காலை 9 மணிக்கு ராகுகாலம் முடிந்தவுடன் பொதுக்குழு ஆரம்பித்துவிடும். கோர்ட் தீர்ப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 7 மணிக்கெல்லாம் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்துவிட வேண்டும்’ என்று பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவுறுத்தப்பட்டனர். தலைமைக் கழகத்துக்கு பன்னீர் வரப்போகும் தகவல் கசிந்ததால், சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், விருகை ரவி, வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, கே.பி.கந்தன் தலைமையில், தலைமைக் கழகத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதென முடிவானது. அன்றிரவே தலைமைக் கழகம் பூட்டப்பட்டது.

சீல் வைப்பு... சின்னம் முடக்கம்... போட்டிப் பொதுக்குழு - ரணகள அ.தி.மு.க!
சீல் வைப்பு... சின்னம் முடக்கம்... போட்டிப் பொதுக்குழு - ரணகள அ.தி.மு.க!

போர்க்களமான ராயப்பேட்டை... எடப்பாடியின் பட்டாபிஷேகம்!

ஜூலை 11-ம் தேதி அதிகாலை வரை எடப்பாடி வீட்டில் யாகம் நடத்தப்பட்டது. பூஜையை முடித்துவிட்டு, நெற்றியில் கறுப்பு மையுடன் பிரசார வாகனத்தில் காலை 6:45 மணியளவில் பொதுக்குழுவுக்குப் புறப்பட்டார்.

அதேசமயம், 8 மணியளவில் தலைமைக் கழகம் வந்த வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள், அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்களிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர். வாய்த் தகராறு வீரியமாகி, கல்வீச்சில் முடிந்தது. இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர் மாளிகை அமைந்திருக்கும் ராயப்பேட்டை ஏரியாவே போர்க்களமானது. 10 பேருக்கு மேல் பலத்த காயத்துடன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர் மாளிகை தன் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, ரூட் கிளியர் என்கிற தகவல் கிடைத்தவுடன், தொண்டர்கள் படைசூழத் தலைமைக் கழகம் புறப்பட்டார் பன்னீர். அதேநேரத்தில், ஸ்ரீவாரு மண்டபத்தில் எடப்பாடியின் பட்டாபிஷேக ஏற்பாடுகள் எந்தத் தொய்வும் இல்லாமல் நடந்தன. எடப்பாடி மேடை ஏறவும், ‘பொதுக்குழுவுக்கு எந்தத் தடையுமில்லை’ என்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வெளியாகவும் நேரம் சரியாக இருந்தது.

பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் எட்டு தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், மீதித் தீர்மானங்களை ஓ.எஸ்.மணியனும் வாசித்தனர். முந்தைய பொதுக்குழுவில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து, பத்திரிகைகள் மீது தி.மு.க ஏவும் அடக்குமுறைக்குக் கண்டனம், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது, திராவிட மாடல் போர்வையில் நாடகமாடும் தி.மு.க-வுக்குக் கண்டனம் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானங்கள் ஜூலை 11 பொதுக்குழுவில் கொண்டு வரப்படவில்லை. ‘கழகத்தின் சட்டவிதிகள் மாற்றப்பட்டு, பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்படுகிறது. இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படுகிறார்’ எனப் பொதுக்குழுத் தீர்மானங்களை உதயகுமார் உணர்ச்சிப் பெருக்குடன் வாசித்தபோது, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

“தூக்கிப் போடணும்...” - கொதித்த சண்முகம்!

கட்சிக்கு பன்னீர் செய்த துரோகங்களாக மேடையில் ஒரு பட்டியலையே வாசித்தார் நத்தம் விசுவநாதன். “அம்மாவால் ‘ச்சீ... போ... துரோகி’ என்று துரத்தப்பட்டவர்தான் ஓ.பி.எஸ். பிறகு, நாங்கள் எல்லோரும் சிபாரிசு செய்துதான் அவரை மீண்டும் அம்மாவிடம் சேர்த்தோம். ஓ.பி.எஸ்-ஸின் மற்றொரு முகம் உங்களுக்குத் தெரியாது. துரோகம் நிறைந்த கொடூர முகம் அது. சூழ்ச்சி, பொறாமை, சராசரி மனிதப் பண்பு இல்லாதவர். உடம்பெல்லாம் நடிப்பு... இப்படிப்பட்டவர் இந்தக் கட்சிக்குத் தேவையா?” என்று ஆவேசமாகப் பேசவும், கூட்டத்திலிருந்து, “பன்னீரை நீக்குங்கள்” என்ற குரல் அதிர்ந்தது. முகம் சிவந்த எடப்பாடி, கே.பி.முனுசாமியை அழைத்து, “ஒரு சீனியர் இப்படித்தான் பேசுறதா... ஏற்கெனவே நாமதான் திட்டமிட்டு பாட்டிலை பன்னீர் மேல வீசியெறிஞ்சதா பேசுறாங்க. இந்த நிலையில, இந்தப் பேச்செல்லாம் தேவைதானா... நத்தத்தை அமைதியா பேசச் சொல்லுங்க. வேணும்னா, பன்னீரை நீக்குறதுக்குக் கூட்டம் முடிந்தவுடன் சிறப்புத் தீர்மானம் கொண்டுவரலாம்” என்றார். நத்தத்தைச் சாந்தப்படுத்திய முனுசாமி, மற்றொரு மைக்கில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, கழகத்தின் வரவு செலவுக் கணக்கை சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். ‘எடப்பாடியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரைப் பார்ப்பதுபோலிருக்கிறது’ என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது, மேடையிலிருந்தவர்களே சிரித்துவிட்டனர்.

பொதுக்குழுவில் நவரசங்களும் நிகழ்ந்த வேளையில், ராயப்பேட்டை ஏரியாவில் போலீஸ் தடியடி நடத்தியும்கூட கல்வீச்சு நிற்கவில்லை. தலைமைக் கழகத்துக்கு பன்னீர் வந்த பிறகும் கலவரம் நின்றபாடில்லை. தலைமைக் கழகத்திலிருந்த மேனேஜர் மகாலிங்கத்தின் அறைக்குள் புகுந்த சிலர், அங்கிருந்த கோப்புகளை அள்ளி பன்னீரின் வாகனத்தில் வைத்தனர். அவர் அலுவலகத்திலிருந்த லேப்டாப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. விவகாரம் சீரியஸ் ஆனதால், வருவாய்த்துறை ஆர்.டி.ஓ., காவல்துறை இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைப்பதென முடிவானது. இந்தத் தகவலை, பொதுக்குழுவில் அமர்ந்திருந்த எடப்பாடியிடம் கொண்டுபோனார் முன்னாள் எம்.பி மைத்ரேயன். உடனடியாக, சி.வி.சண்முகத்தையும் வேலுமணியையும் அழைத்த எடப்பாடி, ‘கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்போறாங்களாம். என்ன பண்ணலாம்?’ என்றார்.

ஆவேசமான சண்முகம், ‘இவ்வளவுக்கும் காரணம் அந்த பன்னீர்தான். உடனே அந்தாளை கட்சியிலிருந்து தூக்கிப் போடணும்’ என்று ஆவேசமாகக் கத்தினார். இடைமறித்த முனுசாமி, “பண்ணலாம்ப்பா. கூட்டம் முடிந்த பிறகு அறிவிப்போம்” என்று சொல்லவும், சண்முகம் டென்ஷனாகிவிட்டார். மேடையிலேயே கையை நீட்டி, “இப்பவே தூக்கணும். நீங்க என்ன அந்தாளுக்கு சப்போர்ட்டா?” என்று கத்தவும், உடனடியாக பன்னீரை நீக்க சிறப்புத் தீர்மானம் ரெடியானது. அடுத்த பத்தாவது நிமிடத்தில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப் பட்டதாகப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. தான் பேசும்போது, `துரோகி, சுயநலக்காரர், தி.மு.க-வின் கைக்கூலி’ என பன்னீரை ஏக வசனத்தில் விளாசித் தள்ளினார் எடப்பாடி.

சீல் வைப்பு... சின்னம் முடக்கம்... போட்டிப் பொதுக்குழு - ரணகள அ.தி.மு.க!

சீல் வைப்பு... போட்டிப் பொதுக்குழு!

கலவரத்தால் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்படுமென யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகாரிகளின் சீல் நடவடிக்கையைக் கண்டித்து சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்ட பன்னீர், பிறகு வீட்டுக்குப் புறப்பட்டார். `தி.மு.க-வுடன் கைகோத்துக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சிக்கு துரோகம் செய்கிறார்’ என எடப்பாடி வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவுக்கு விவகாரம் முற்றியிருக்கிறது. கட்சியிலிருந்து எடப்பாடி, கே.பி.முனுசாமியை நீக்குவதாகத் தன் பங்குக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் பன்னீர்.

நம்மிடம் பேசிய பன்னீர் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் சிலர், “பன்னீருக்கு எதிராக, அவரது சமுதாயத்தைச் சேர்ந்த உதயகுமார், ஓ.எஸ்.மணியன், நத்தம் விசுவநாதன், சி.விஜயபாஸ்கர் ஆகியோரையே காட்டமாகப் பேசவைத்திருக்கிறார் எடப்பாடி. கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு பன்னீர் காரணமல்ல. அமைதியாகத் தலைமைக் கழகம் வந்த எங்களை, எடப்பாடியின் ஆட்கள் திட்டமிட்டே தடுத்ததால்தான் பிரச்னை பெரிதானது. ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க-தான் உண்மையான கட்சி. கழக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் முறைப்படி நடைபெற்றிருப்பதால், ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பன்னீரை யாராலும் நீக்க முடியாது. இதுவரை பணிவான பன்னீராக இருந்தவர், இனி அரசியல்வாதி பன்னீராக அவதாரம் எடுக்கப்போகிறார். மாவட்டம்தோறும் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும், சென்னையிலேயே போட்டிப் பொதுக்குழு நடத்தவும் பன்னீர் தயாராகிறார். அவர் அழைத்தால், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் வரப்போவதில்லை என்பது நிஜம்தான். ஆனால், தேர்தல் ஆணையத்தில் தன் தரப்பு ஆவணமாகச் சமர்ப்பிக்க இந்தப் போட்டிப் பொதுக்குழு பயன்படும்.

2017-ம் ஆண்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இதேபோலத்தான் கட்சி இரண்டு அணிகளாகப் பிளவுபட்டு நின்றது. இரட்டை இலைச் சின்னத்துக்கு சசிகலா, பன்னீர் இருவருமே உரிமை கோரினர். பெரும்பாலான நிர்வாகிகள் சசிகலா பக்கம் இருந்தும், அவருக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை. சின்னம் முடக்கப்பட்டது. அது போன்ற நிலை மீண்டும் வரப்போகிறது. இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் அதிகாரத்தை பன்னீர் ஒருபோதும் விட்டுத்தர மாட்டார். என்னதான் சட்டத் திருத்தம் செய்து, கழகத்தின் பொதுச் செயலாளராகத் தன்னை எடப்பாடி அறிவித்துக்கொண்டாலும், அது நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது. ஆட்டமே இனிதான் ஆரம்பம்” என்றனர்.

இதற்கிடையே, `எங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆலங்குளம், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலைக் கொண்டு வரலாமா?’ என்று மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் பன்னீரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

சீல் வைப்பு... சின்னம் முடக்கம்... போட்டிப் பொதுக்குழு - ரணகள அ.தி.மு.க!

சின்னம் முடக்கம்? - காய் நகர்த்தும் டெல்லி!

‘இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், இரட்டை இலைச் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது எனப் பிரச்னை எழும். தானாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும். நாம் தனியாகப் போட்டியிட்டு, வென்று பலத்தை நிரூபிப்போம். சசிகலா செய்யத் தவறியதை நாம் செய்வோம்’ என்றிருக்கிறார்கள். அமைதியாகக் கேட்டுக்கொண்ட பன்னீர், அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லையாம். ‘பிரச்னையைச் சட்டரீதியாகச் சந்திப்போம்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

“கட்சியின் அலுவலகத்திற்கு சீல் வைத்திருப்பது பன்னீரின் பலே திட்டம்தான். அனைத்து வகையிலும் சட்டச் சிக்கலை ஏற்படுத்துவதுதான் அவரின் ஒரே நோக்கம்” என்கிறது எடப்பாடி தரப்பு. இந்த நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை முறைப்படி நடத்தி, தன்னைப் பொதுச்செயலாளராக நிறுவத் தயாராகிறார் எடப்பாடி. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்களாவது கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும். 20 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு வேண்டும். பன்னீர் ஒருவேளை பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பினாலும், இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் பன்னீருக்குச் சாதகமாக இல்லை.

இந்த விவகாரத்தில், ‘பா.ஜ.க-வின் முடிவென்ன?’ என்பதில்தான் பல்வேறு மர்ம முடிச்சுகள் புதைந்திருக்கின்றன. நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர்கள் சிலர், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிளவுபட்ட அ.தி.மு.க-வால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை. இவர்கள் இருவரும் மீண்டும் ஒருபோதும் ஒன்றுசேரப் போவதில்லை என்பதை டெல்லி உணர்ந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ‘சசிகலா, தினகரனையும் இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கலாம். ஆட்சியை மீண்டும் தக்கவைக்க முடியும்’ என்று அமித் ஷாவே ஆலோசனை கூறியபோது, ‘அவர்களெல்லாம் வேண்டாம். 150 தொகுதிகளில் நிச்சயமாக ஜெயிப்போம்’ என்று சவடால் விட்டார் எடப்பாடி. ஆனால், அது பொய்த்துப்போனது. இப்போது, காங்கிரஸ் கட்சியுடன் மறைமுகக் கூட்டணியைப் போட்டுக்கொண்டு, பா.ஜ.க-வைக் கைவிடத் திட்டமிடுகிறார். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா... இரட்டை இலைச் சின்னம் இருக்கும் வரையில்தான் எடப்பாடிக்கு அதிகாரமெல்லாம். பன்னீரை அவர் புறக்கணித்திருப்பதால், அந்தச் சின்னமே முடங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சின்னம் முடக்கப்பட்டால், கட்சியின் வாக்குவங்கி கடுமையாக பலவீனமடையும். எனவே, பன்னீர் தலைமையில் திரளும் ஓர் அணி, டி.டி.வி.தினகரன், தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து, ஒரு புதிய கூட்டணியை பா.ஜ.க கட்டமைக்கலாம். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை” என்றனர்.

மாரத்தான் ஓட்டப்பந்தயமாக நெடுநாள் ஓடிய அ.தி.மு.க-வின் ‘ஒற்றைத் தலைமை’ பஞ்சாயத்தில் முதல் சுற்று முடிந்திருக்கிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில், கோப்பையைப் பெற்றிருக்கிறார் எடப்பாடி. ஆனால், இனிமேல்தான் அவருக்கு அதிரடியான நெருக்கடிகள் வரவிருக்கின்றன. டெல்லியின் கணக்கையும் தாண்டி, தன் பதவியைத் தக்கவைப்பதில்தான் அவரது ஆளுமையே இருக்கிறது. போட்டி அ.தி.மு.க நடத்த பன்னீரும் தயாராவதால், அ.தி.மு.க-வில் இனி ரணகளக் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது!