Published:Updated:

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

செய்தது கைப்பேசி அளவு... செய்யாதது வாஷிங் மெஷின் அளவு!

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

செய்தது கைப்பேசி அளவு... செய்யாதது வாஷிங் மெஷின் அளவு!

Published:Updated:
அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

‘ஒருத்தனை ஏமாத்தணும்னா... முதல்ல அவன் ஆசையைத் தூண்டணும்.’ தமிழகக் கட்சிகளின் பரபரப்பான தேர்தல் அறிக்கைகளை, வாக்குறுதிகளைக் கவனிக்கும்போது, பிரபலமான இந்த சினிமா வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ஐந்து ஆண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற, ஆறே கால் கோடி வாக்காளர்களைக் குறிவைத்து தூண்டில் வீசுகின்றன அரசியல் கட்சிகள். இலவசப் பொருள்கள், வேலைவாய்ப்புகள், தள்ளுபடிகள், மானியங்கள், புதிய புதிய கவர்ச்சிகரமான திட்டங்கள் எனக் கட்சிகள் சொல்வதெல்லாம் உண்மையிலேயே சாத்தியமாகும் வாக்குறுதிகள்தானா அல்லது பரஸ்பரம் கட்சிகளே தங்களுக்குள் விமர்சித்துக்கொள்வதுபோல எல்லாம் வெற்று வாய்ச்சவடால்தானா... என்னதான் சொல்கின்றன கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்?

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

செய்தது கைப்பேசி அளவு... செய்யாதது வாஷிங் மெஷின் அளவு!

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

ஆட்சியில் பத்து ஆண்டுகளை நிறைவுசெய்யும் அ.தி.மு.க-வின் 2021-ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையை அலசும் முன்பாக, அ.தி.மு.க-வின் 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை கவனிக்க வேண்டும்.

‘ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவச கைப்பேசி வழங்கப்படும்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், நிறைவேற்றவில்லை. ‘பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்களில் இலவச வைஃபை வசதி செய்துதரப்படும்’ என்பதும் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலின்போது ‘மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்’ என்று அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை தொட்டிருந்தது. இதுவரை 10 சதவிகிதக் கடைகள்கூட மூடப்படவில்லை. ‘அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் அரசு ஊழியர்கள் பலமுறை இதற்காகப் போராடியும் எந்தப் பலனும் இல்லை. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பயிற்சி மையம் அமைக்கப்படும், வேலை இல்லாதவர்களின் கல்விக் கடனை அரசே செலுத்தும் போன்ற வாக்குறுதிகளும் அறிவிப்புகளுடன் நின்றுபோயின. ‘கோ ஆப்டெக்ஸில் பொங்கல் பண்டிகைக்குத் துணி வாங்க ஐந்நூறு ரூபாய்க்கு டோக்கன் வழங்கப்படும், செறிவூட்டப்பட்ட ஆவின் பால் விலை லிட்டர் 23 ரூபாய்க்கு விற்கப்படும்’ போன்ற அறிவிப்புகளை ஆட்சியாளர்கள் மறந்தே போய்விட்டார்கள். அதேநேரம், கடந்த ஐந்தாண்டில்தான் பால் விலையேற்றம் உச்சத்துக்குச் சென்றது. எல்லாக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும் ‘லோக் ஆயுக்தா அமைக்கப்படும்’ என்கிற வாக்குறுதியும் அ.தி.மு.க-வின் 2016-ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது ஆனால் அமைக்கப்படவில்லை.

2016 அறிக்கையில் குறிப்பிட்டவற்றில், ‘100 யூனிட் இலவச மின்சாரம்’ என்கிற அறிவிப்பை ஜெயலலிதா பதவியேற்றதுமே நிறைவேற்றினார். மானிய விலையில் மகளிருக்கு ஸ்கூட்டர் என்கிற திட்டத்தை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நிறைவேற்றினார்கள். இவற்றில், பயிர்க்கடன் தள்ளுபடியையும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கடந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வற்றில் சில மாற்றங்களை மட்டும் செய்து, இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் அறிக்கையில் ‘வேலை கிடைக்கும் வரை கல்விக் கடனை அரசு செலுத்தும்’ என்று குறிப்பிட் டிருந்தனர். அதையே கொஞ்சம் மாற்றி ‘கல்விக்கடன் தள்ளுபடி’ என்று இப்போது குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த அ.தி.மு.க-வே இப்போதைய அறிக்கையில் ‘குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. சென்ற முறை ‘இலவச செல்போன், வைஃபை’ என்று அறிவித்து அதைச் செய்யாதவர்கள், இம்முறை ‘கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா’ என்று அறிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்து, இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வேலை வழங்காத அ.தி.மு.க அரசுதான், ‘வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி’ என்று இந்தத் தேர்தல் அறிக்கையில் நீட்டி முழக்கியிருக்கிறது. அம்மா வாஷிங் மெஷின், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவிகிதம் கட்டணச் சலுகை, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் சூரிய சக்தியில் செயல்படும் அடுப்பு, விலையில்லா கேபிள் டி.வி இணைப்பு ஆகியவை மக்களைக் கவரும் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை, வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு, மாதந்தோறும் மின்கணக்கீடு ஆகியவற்றை நல்ல முன்னெடுப்பு என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். 2016 போலவே ‘படிப்படியான மதுவிலக்கு’ கோஷத்தை இந்த அறிக்கையிலும் போகிறபோக்கில் கொடுத்திருக்கிறது அ.தி.மு.க. “கடந்த பத்தாண்டுகளில் செய்யாததை இனிமேல் மட்டும் செய்வீர்கள் என்று எப்படி நம்புவது?” என்கிற மக்களின் விமர்சனக் குரல் நியாயமானதே!

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

வெற்றுச் சிப்பிகளா... முத்தான முத்துக்களா?

தி.மு.க தேர்தல் அறிக்கை

2016-ம் ஆண்டின் தேர்தல் அறிக்கையிலுள்ள பலவற்றையும் இம்முறையும் தொட்டுச் சென்றிருக்கிறது தி.மு.க. 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளிலும் இலவசங்களுக்குப் பஞ்சம் இல்லை. கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான ‘மாநில சுயாட்சி’யைத் தேர்தல் அறிக் கையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். தி.மு.க-வின் கனவுத்திட்டமாக இருந்த ‘சேது சமுத்திரத் திட்ட’த்துக்கு மீண்டும் உயிரூட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். சேது சமுத்திரத் திட்டத்தில் தி.மு.க திக்குமுக்காடிய கதையை மறந்து விட்டார்கள்போல. கடந்த தேர்தலில் குறிப்பிட்டது போன்றே ஆவின் பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலைக்குறைப்பு போன்ற வாக்குறுதிகள் இம்முறையும் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பம் முதலே நிலைப்பாடு கொண்டுள்ள தி.மு.க., ‘சட்டமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கான தடைச்சட்டம் நிறைவேற்றப்படும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பிரதானமாக இடம்பெற்றிருந்த ‘பூரண மதுவிலக்கு’ இம்முறை பெயரளவுக்குக்கூட இடம்பெறவில்லை. முதல் தலைமுறைப் பட்டதாரிக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற வாக்குறுதிகள் பாசிட்டிவாகப் பார்க்கப்படுகின்றன. இதைச் சாத்தியமாக்க ‘நீர்நிலைகள், வனங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அரசு ஊதியம் அளிக்கும்’ என்கிற திட்டத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள். ‘அம்மா உணவகம்’ என்ற ஒன்று ஏற்கெனவே மக்களிடம் கவனம் பெற்றிருக்க, புதிதாக ‘கலைஞர் உணவகம்’ என்ற ஒன்றைப் போட்டிக்கு அறிவித்துள்ளார்கள். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் கவனிக்க வேண்டிய ஒன்று, ‘கனிமவளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் அமைக்கப்படும்’ என்கிற அறிக்கை. தமிழக நிதி நிலையைச் சீரமைக்க இது உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ‘ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் அறிக்கை, விரைவில் வெளியிட ஆவன செய்யப்படும்’ என்கிற அறிவிப்பு அ.தி.மு.க-வினருக்கு வைத்த செக் என்றே பார்க்கப்படுகிறது.

ஒருசில வாக்குறுதிகள் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் ஒரே மாதிரி இடம் பெற்றுள்ளன. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் ‘நகர்ப்புறப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்’ என்றால், அ.தி.மு.க-வோ ‘நகர்ப்புறப் பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவிகிதக் கட்டணம் தள்ளுபடி’ என்று இருக்கிறது. அதேபோல அ.தி.மு.க., தன் கடைசிச் சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்த சிறு, குறு விவாயக் கடன்கள் தள்ளுபடி என்கிற அறிவிப்பை, தி.மு.க தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ‘நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் அமைக்கப்படும்’, ‘100 நாள் வேலைத்திட்டத்தின் நாள்கள் 150 நாள்களாக அதிகரிக்கும்’ உள்ளிட்ட சில அறிவிப்புகள் இரண்டு அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளன.

சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு, மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதங்களாக அதிகரிப்பு, கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை என்று தி.மு.க-வின் அறிக்கையிலும், பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால், மானிய விலையில் பசுமை ஆட்டோ, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன் என்று அ.தி.மு.க-வின் அறிக்கையிலும் உள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையே. இவர்களுக்கு இடையே மார்ச் 16-ம் தேதிதான் ‘நாம் தமிழர் ஆட்சி வரைவை’ வெளியிடுகிறார் சீமான்.

தமிழக அரசு கடனில் தத்தளிக்கும் சூழலில் இதையெல்லாம் எப்படிச் செய்ய முடியும்? ‘கனிம வளங்களை வைத்தும், பொதுத்துறை நிறுவனங்களை ஒழுங்குபடுத்தியும் செய்வது சாத்தியம்’ என்கிறது தி.மு.க தேர்தல் அறிக்கை. அ.தி.மு.க அதைக்கூடச் சொல்லவில்லை. ‘தேர்தல்கால வாக்குறுதிகளைக் கொடுக்கும் கட்சிகள், அவற்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் பற்றியும் அறிவிக்க வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையம் நெறிமுறை வகுத்திருக்கிறது. வாக்குறுதிகள் என்ற பெயரில் ஆசைத் தூண்டிலை வீசும் கட்சிகளுக்குக் கடிவாளம் போட வேண்டியது தேர்தல் ஆணையம். அது வேடிக்கை மட்டுமே பார்க்கிறது!

***

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

சாத்தியமா..?

அ.ம.மு.க தேர்தல் அறிக்கை

அ.ம.மு.க தேர்தல் அறிக்கையில், எடுத்த எடுப்பிலேயே மத்திய அரசை வசைபாடியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். மதுவிலக்கு, மது ஆலைகள் படிப்படியாக மூடப்படும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, இரண்டு லட்சம் வாக்காளர் களுக்கு ஒரு தொகுதி எனக் கூடுதல் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்படும், நீர்ப்பாசனத்துக்குத் தனித்துறை, திருநங்கைகளுக்கு இலவச விடுதி மற்றும் அரசு வேலை, இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்துதல், காவல்துறைக்கு 8 மணி நேர வேலை மற்றும் வார விடுமுறை, தனியார் நிறுவன ஊழியர்களுக்குத் திருமணத்துக்கு 2 லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் போன்ற அறிவிப்புகள் அ.ம.மு.க அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. திட்டங்களெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், அதைச் செயல்படுத்தும் சாத்தியம் குறித்துத்தான் மற்றவர்களைப்போல அ.ம.மு.க-வும் சொல்லவில்லை!

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

தி.மு.க-வின் அறிக்கை வெற்று அறிவிப்பே!

“ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்திவரும் திட்டங்களை ‘ஆட்சிக்கு வந்தால் செய்வோம்’ என்று தி.மு.க அறிவித்திருக்கிறது. ‘அம்மா உணவகத்துக்கு’ மாற்றாக ‘கலைஞர் உணவகம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். ‘மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்கிற அறிவிப்பை தி.மு.க எப்படி நிறைவேற்றும்... அதை மாநில அரசு செய்ய முடியாது என்று தெரியாதா? மத்திய அரசு, உச்ச நீதிமன்றமெல்லாம் ஏற்கெனவே முடிவெடுத்து நடந்துகொண்டிருக்கும் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று சொல்வ தெல்லாம் கேலிக்கூத்து. ‘குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை’ என்கிறார்கள். கருணாநிதி ஆட்சிக் காலத்தில், முதல் தலைமுறை பட்டதாரிக்குச் சலுகைகள் அறிவித்தார். ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்தது. ‘இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்கிறார்கள். இந்தக் கொடுமையெல்லாம் நடந்தபோது, தமிழகத்தில் தி.மு.க ஆட்சிதானே இருந்தது?”

- பேராசிரியர் டாக்டர்.ராஜலட்சுமி, தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

அ.தி.மு.க சொல்வது சாத்தியமே இல்லை!

“ ‘இழப்பதற்கு ஏதுமில்லை... அள்ளிவிடுவோம்’ என்கிற அளவுக்குத்தான் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை உள்ளது. உதாரணத்துக்கு, `வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை’ என்கிறார்கள். ஏற்கெனவே மோடி ‘இரண்டு கோடிப் பேருக்கு வேலை’ என்றார். அவர் பிரதமராகி ஏழு வருடங்கள் ஆகியும் செய்ய முடியாத ஒன்றை அவர் சொல்வதைக் கேட்டு நடக்கும் கூட்டணிக் கட்சி அறிவிப்பது வேடிக்கை. `வீட்டுக்கு ஆறு சிலிண்டர் தருவோம்’ என்கிறார்கள். இதைச் செய்ய இரண்டு மாதங்களுக்கு ரூ.1,600 கோடிக்கு மேல் நிதி தேவை. எங்கே போவார்கள்? வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு கொடுப்பதாகச் சொல்கிறார்கள். தமிழக அரசு நிர்வாகத்தில் 5 லட்சம் கோடி ரூபாயும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாயும் கடன் உள்ளது. இந்தத் திட்டத்துக்கெல்லாம் சாத்தியமே இல்லை.

- ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர்

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

ஆறு துறைசார் வாக்குறுதிகள்... ஏழு செயல்திட்டங்கள்!

‘தேர்தல் அறிக்கை’ என்ற பெயரில் இதுவரை மக்கள் நீதி மய்யத்திலிருந்து எதுவும் வெளியாகவில்லை. சுற்றுச்சூழல், தொழில்துறை, கிராமப்புற உள்ளாட்சி, மகளிர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு உள்ளிட்ட ஆறு துறை சார்ந்த வாக்குறுதிகளோடு, ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் ஏழு செயல்திட்டங்களையும் அறிவித்துள்ளனர். ஐம்பது லட்சம் புதிய வேலை வாய்ப்புகள், சீருடைப் பணியில்

50 சதவிகிதப் பெண்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல், ஆன்லைன் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல அம்சங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன. மிக முக்கியமாக, குடும்பத் தலைவிகளுக்கு மதிப்பூதியத் திட்டத்தை முதன்முதலில் முன்வைத்ததே கமல்ஹாசன்தான்!

கட்சிகளின் கடைசித் தூண்டில்! - வாக்குறுதியா... வாய்ச் சவடாலா?

“தேர்தல் அறிக்கை என்ற பெயரில் ஆடி ஆஃபர்கள்போல ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகளை அறிவிக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை ஏதாவதொன்றைச் சொல்லி ஓட்டு அறுவடை செய்ய வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். எந்தக் கட்சியும் தாங்கள் செய்த சாதனையைச் சொல்லி வாக்கு கேட்பதே இல்லை. இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை இந்தக் கட்சிகள் எத்தனை சதவிகிதம் நிறைவேற்றியிருக்கின்றன என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்!”

- கீர்த்தி, குடும்பத் தலைவி

``இலவச வாஷிங் மெஷின், மாநகரப் பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம்னு இலவச அறிவிப்பை போட்டி போட்டு அறிவிச்சிருக்காங்க. அதுக்கு ஒதுக்குற நிதியைவெச்சு பயனுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். ஒருபக்கம் அரசு நிறுவனங்களெல்லாம் தனியார்மயமாக்கப்பட்டு வர்றப்ப ‘குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலை’ங்கறாங்க. எப்படி முடியும்னு தெரியலை. பெட்ரோல், டீசல் விலை ஏறுது. அதனால அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏறிக்கிட்டே போகுது. சாமானிய மக்கள் வாழ முடியாத இந்த நிலைக்கு என்ன விடிவுன்னு தெரியலை!”

- சுரேஷ், ஆட்டோ டிரைவர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism