Published:Updated:

தேர்தல் காலம் தொடங்குது ஏலம்! ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்...

தேர்தல் காலம் தொடங்குது ஏலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் காலம் தொடங்குது ஏலம்!

- குரு

ஊர்த் திருவிழாக்களில் பார்த்திருப்பீர்கள். கீரி - பாம்பு சண்டை என வித்தை காட்டுபவர்கள், சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்கள், ராட்டினம் சுற்றுபவர்கள் என்று ஒரு கும்பலே திருவிழாத் திடலை ஆக்கிரமித்திருக்கும். இன்னும் சிலரோ சோப்பு, சீப்பு, சென்ட், ஜமுக்காளம் போன்றவற்றை `ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்...’ என்று ஏலம் விட்டுக்கொண்டிருப்பார்கள். திருவிழா முடிந்தவுடனோ இந்தக் கும்பல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மீண்டும் அடுத்த திருவிழாவுக்குத்தான் கடையை விரிப்பார்கள். அப்படித்தான் இப்போது தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களத்துக்கு என்ட்ரி கொடுக்கத் தயாராகின்றன சில கட்சிகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லாவிட்டாலும், கையில் வேல் ஏந்தியபடி ஊர் ஊராக வலம்வருகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் தங்கள் கொள்கையைத் தமிழகத்தில் நிறுவிவிட முயல்கிறது பா.ஜ.க. சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடங்கி புயல் வரை மக்களை பாதிக்கும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், தனது கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் கமல்ஹாசன். கொரோனா காலத்திலும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, நடப்பு அரசியலில் தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் காலம் தொடங்குது ஏலம்! ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்...

‘நாம் தமிழர்’ சீமானின் தற்சார்பு பொருளாதாரம் எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை... ஆனாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதே வீராவேசம் குறையாமல் பேசிவருவதுடன், தேர்தல் முன் தயாரிப்புகளிலும் மும்முரமாக இருக்கிறார். இவர்கள் மட்டுமல்ல... இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் தங்களுடைய தளத்தில் எப்போதுமே தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க ஆகிய கட்சிகளும், அவர்களின் தலைவர்களும் தேர்தல் சமயத்தில் மட்டுமே டிமாண்ட்களை வைப்பதுடன், சீட் பேர அரசியல் நடத்துகிறார்கள் என்கிற விமர்சனம் சமீபகாலமாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது. மேற்கண்ட கட்சிகளில் பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகள் ஆரம்பகாலத்தில் பல்வேறு போராட்டங்களை வீரியமாக முன்னெடுத்தவைதான். ஆனால், ஆட்சியதிகாரத்தைச் சுவைத்த பின்னர் கொள்கைகளை மறந்தவர்கள், எந்தப் பந்தியிலும் கை நனைக்கத் தயங்குவதில்லை என்பதுதான் அந்தக் கட்சித் தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது.

குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதம் இவர்களிடம் இருப்பதால், தேர்தல் முடிவுகளில் இவர்களால் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்த முடிகிறது. இதை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் சதுரங்க ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல... காலையில் அ.தி.மு.க., மாலையில் தி.மு.க., இன்டர்வெல்லில் மூன்றாவது அணி என்று மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இப்படி, தரையில் கால் பாவாமல் தேர்தல் நேர காலத்தில் மட்டும் களத்தைச் சூடாகவைத்திருக்கும் கட்சிகளைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள் மக்கள். இனி இந்தக் கட்சியுடன் கூட்டணியே வைக்கமாட்டோம் என்று சத்தியம் செய்தவர்கள் வாய்மாறிப் பேசி, விருந்துண்டு மகிழ்ந்த காட்சிகளும் அரங்கேறியிருக்கின்றன. இதோ இப்போதும் இந்தக் கூத்துகளுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன.

தேர்தல் காலம் தொடங்குது ஏலம்! ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்...

டாக்டர்களின் டேக் டைவர்ஷன்!

தமிழகத்திலேயே சீட் பேரத்தில் ‘கைராசி, நாணயம், நீண்ட வரலாறு’ கொண்ட கட்சியென்றால், அது பா.ம.க-தான் என்கிறது அந்தக் கட்சியின் கடந்தகாலக் கூட்டணி வரலாறு. ஒரு கூட்டணியில் இருந்துகொண்டே, மற்றொரு கட்சியிடம் கூட்டணி பேரம் பேசுவதெல்லாம் ‘மருத்துவர்’களின் அன்றாட ஆபரேஷன்களில் ஒன்று. அதிலும், தேர்தல் வந்துவிட்டால் போதும்... எதையாவது ஒரு போராட்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவார் மூத்த மருத்துவர். அறிக்கைப்போர் மூளும்; இவர்களை நம்பிக் கூட்டமும் திரளும். ஆட்சியாளர்கள் மிரண்டுவிட்டால், அதை வைத்தே கூட்டணியில் டிமாண்டை எகிற வைத்துவிடுவார்.

“கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார்கள். தூக்கத்தில்கூட ‘அன்புமணியாகிய நான்... முதல் நாள் முதல் கையெழுத்து’ என்று பேசுமளவுக்கு மாறிப்போனார் அன்புமணி. ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட அந்தக் கட்சி வெற்றிபெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. அடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அமைதியாக இருந்த அந்தக் கட்சி, மெதுவாக பேரத்தைத் தொடங்கியது. ‘பா.ம.க-வுடன் கூட்டணிவைப்பதற்குக் கட்சிகள் முட்டி மோதுகின்றன. நாங்கள் இல்லையென்றால், பிரதமராக யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது’ என்கிற லெவலுக்கு பிம்பத்தைக் கட்டமைத்தார்கள்.

பெரிய மருத்துவரின் வியூகம் புரியாமல், அ.தி.மு.க-வை வறுத்தெடுப்பதற்கு ஸ்க்ரிப்ட் ரெடி செய்துகொண்டிருந்தார் சின்ன மருத்துவர். கண்ணாடி முன்னால் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தவரை, ‘தம்பி டேக் முடிஞ்சுருச்சு. வா...’ என்று அழைத்துக்கொண்டு, அ.தி.மு.க-வுடன் கூட்டணிபோட்டார் ராமதாஸ். முதல்நாள் வரை ‘டயர் நக்கிகள்’ என்று பகிரங்கமாகக் கிண்டலடித்துவிட்டு, மறுநாள் அவர்களுடனேயே கைகுலுக்கியதில் கட்சியின் தொண்டர்களுக்கு வேண்டுமானால் சங்கோஜம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ‘மருத்துவர்கள்’ அதற்கெல்லாம் அசரவேயில்லை.

இப்போதெல்லாம் மருத்துவர்கள் இருவரையும் வெளியிலேயே பார்க்க முடிவதில்லை. ‘கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தால்தான் வெளியே வருவேன்’ என்று சொன்ன ரஜினிகூட வெளியே வந்துவிட்டார். எம்.பி தேர்தலுக்குப் பிறகு மெளனம் கலைத்துவிட்டு, இப்போதுதான் அன்புமணி தலைமையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இனி என்னென்ன காட்சிகள் மாறி மாறி அரங்கேறப்போகின்றனவோ என்பதைப் பேரங்களே முடிவு செய்யும்!” என்றார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

தேர்தல் காலம் தொடங்குது ஏலம்! ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்...

“இப்ப எந்தக் கொடி?”

அரசியல் கட்சித் தலைவர்களிலேயே ஜி.கே.வாசனின் கார் டிரைவராக இருப்பவருக்குத் தான் ஏகத்துக்கும் சிக்கல் என்பார்கள். எந்த கலர் கொடியை காரில் கட்டுவது என்பதில் குழப்பம் வந்துவிடுமாம். சைக்கிள், கை சின்னம், மீண்டும் சைக்கிள், மீண்டும் கை சின்னம், இப்போது தென்னந்தோப்பு என்று தேர்தலுக்குத் தேர்தல் தனி ரூட் போட்டு பயணிக்கிறார் வாசன். ‘கூட்டணியில கிழியாத கொடி ஏது?’ என்று கதறுகிறார்கள் தொண்டர்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொள்கையை ‘ஒரேயொரு மத்திய அமைச்சர் பதவி... அதுவும் ராஜ்சபா ரூட்டில்’ என்று ஒற்றைவரியில் சுருக்கிவிடலாம். இதைத் தாண்டி அவர்கள் யோசித்ததும் இல்லை, பேசியதும் இல்லை. இப்போதும்கூட, த.மா.கா எந்த அணியில் இருக்கிறது என்கிற குழப்பம் அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கே உண்டு என்கிறது த.மா.கா வட்டாரம். “கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை போராட்டங்களை அந்தக் கட்சி நடத்தியிருக்கிறது, தமிழகத்தின் பல்வேறு ஜீவாதாரப் பிரச்னைகளில் அந்தக் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன, இதைப் பற்றியெல்லாம் ஜி.கே.வாசனுக்கு ஏதாவது ஐடியா இருக்கிறதா?” என்று கேட்கிறார்கள் ஒருகாலத்தில் அந்தக் கட்சியின்மீது நம்பிக்கையுடன் இருந்தவர்கள்!

ஒரு துண்டுக்குள் இரு பேரம்!

கிராமச் சந்தைக்குச் சென்றிருந்தால் பார்த்திருப்பீர்கள். மாட்டை விற்பவர்கள், தாங்கள் பேசும் விலை வெளியே தெரியாதபடி, கையில் துண்டைப் போர்த்திக்கொண்டு விரலைப் பிடித்து விலையைக் குறிப்பிடுவார்கள். ஒரே சமயத்தில், அங்கிட்டும் இங்கிட்டுமாக இரண்டு கைகளிலும் துண்டைப் போர்த்திக் கொண்டு, இரண்டு தரப்பினரிடமும் பேரம் பேசுவதில் கில்லி தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா. இதை நாம் சொல்லவில்லை... கடந்த காலங்களில் அந்தக் கட்சியின் செயல்பாடுகளே இதை நிரூபிக்கின்றன. உண்மையில், அந்தக் கட்சியின்மீது ஆரம்பகாலங்களில் கணிசமான மக்கள் மரியாதை வைத்திருந்தார்கள்.

இது பற்றிப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், “கடந்த 2005, செப்டம்பர் 14-ல் தே.மு.தி.க-வின் முதல் மாநாட்டை விஜயகாந்த் மதுரையில் கூட்டியபோது, அரசியல் கட்சிகளெல்லாம் அரண்டுபோயின. விஜயகாந்த் பின்னால் இளைஞர்கள் திரள்வதைப் பார்த்துவிட்டு, 2007-ம் ஆண்டுக்குப் பின்னால் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள்கூட இளைஞர் பாசறைமீது கவனம் செலுத்தத் தொடங்கின. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

சட்டமன்றத்துக்குள் ஜெயலலிதாவையே சத்தத்தால் அடக்கிய விஜயகாந்தையே, சமீபத்தைய தேர்தல் காலங்களில் கொலுபொம்மையாக உட்காரவைத்து, ஏலத்தை ஆரம்பிக்கிறார் பிரேமலதா. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் தே.மு.தி.க பேச்சுவார்த்தை நடத்திய காட்சிகளைக் கண்டு அந்தக் கட்சியின் தொண்டர்களே வேதனையில் மூழ்கினார்கள். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த துரைமுருகன், தனக்கே உரிய நக்கல் பாணியில் அந்த பேரக் காட்சிகளை மீடியாக்களிடம் உடைத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த தே.மு.தி.க-வினர் காட்பாடியிலுள்ள துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதெல்லாம் தே.மு.தி.க வரலாற்றில் அழிக்க முடியாத கறைகள்.

இவ்வளவுக்குப் பிறகும் சமீபத்தில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்துகொண்டே எதிர்முகாமிடம் இவர்கள் வைத்த டிமாண்டைக் கேட்டு ஏகத்துக்கு ஆடிப்போயிருக்கிறது தி.மு.க-வின் வாரிசு தரப்பு. இந்தப் பேர அரசியல் விஜயகாந்தை மட்டுமல்ல, ஒருகாலத்தில் மாற்று அரசியலுக்கான மையப் புள்ளியாக இருந்த தே.மு.தி.க என்கிற இயக்கத்தையே அதல பாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கிறது” என்றார்கள்.

தேர்தல் காலம் தொடங்குது ஏலம்! ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்...

ட்வென்டி ருபீஸ் தினகரன்!

தினகரன் இருபது ரூபாய் நோட்டை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கையாண்ட விதத்தைப் பார்த்து ரிசர்வ் வங்கியே ஜெர்க் ஆகிப்போனது. இப்படியாக, தமிழகமெங்கும் ‘ட்வென்டி ருபீஸ் தினகரன்’ என்று பெயரெடுத்த பெருமை அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரனையே சாரும். கொரோனாவைக் காரணம் காட்டி புதுச்சேரியில் பதுங்கிய தினகரன், இன்றுவரை கட்சி நிர்வாகிகளைக்கூட சந்திக்க வில்லை; தன்னை வெற்றிபெறவைத்த ஆர்.கே.நகர் தொகுதிப் பக்கமும் எட்டிப் பார்க்கவில்லை. மழை வெள்ளத்தால் அந்தத் தொகுதி மக்கள் தத்தளித்த போதும் எங்கே 20 ரூபாய் டோக்கனுக்கு மக்கள் கணக்கு கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியேகூட வரவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.

“நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வாக்குவங்கியை அ.ம.மு.க தக்கவைத்துக்கொண்டது. இதை வைத்துக்கொண்டு, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி போடலாம் என்பதே தினகரனின் எண்ணமாக இருக்கிறது. ‘அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம்’ என்பதெல்லாம் ஒரு கொள்கை... அதற்காக ஒரு கட்சி, அந்தக் கட்சிக்கு ஒரு தலைவர்... இரண்டு வருடங்களுக்கும் மேலாக அதையும் நம்பவைத்து ஒருவர் வண்டி ஓட்டுகிறார்... இவையெல்லாம் தமிழகத்தில் மட்டுமே நடக்கும் அவலம்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மேற்கண்ட தலைவர்கள் தனித்து நின்றால், வெற்றிபெறுவது கடினமாக இருக்கலாம். ஆனால், கணிசமாக இவர்கள் வாங்கும் ஓட்டுகளே ஆட்சியதிகாரங்களைத் தீர்மானிக்கின்றன. இப்படி இவர்கள் வாங்கும் ஒவ்வோர் ஓட்டும், இவர்கள்மீது தொண்டர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் குறியீடே. அந்தவகையில், ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களுக்கு ஓட்டுப்போடும் தொண்டர்களுக்கு நம்பிக்கை துரோகத்தை இழைக்கிறார்கள். நாற்றமெடுக்கிறது பேர அரசியல். மக்கள் மட்டுமல்ல... சொந்தக் கட்சியின் தொண்டர்களே மூக்கைப் பொத்திக்கொண்டுதான் நகர்கிறார்கள்!