Published:Updated:

அ.தி.மு.க டெல்லி காவடி பின்னணி - “காப்பாத்துங்க!”

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

முன்னாள் அமைச்சர்கள் சிலரின் கோபம்தான் இந்த டெல்லி பயணத்துக்கு அச்சாரம் போட்டதாம்.

அ.தி.மு.க டெல்லி காவடி பின்னணி - “காப்பாத்துங்க!”

முன்னாள் அமைச்சர்கள் சிலரின் கோபம்தான் இந்த டெல்லி பயணத்துக்கு அச்சாரம் போட்டதாம்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்குத் தெரியும்... நெருக்கடிகள் உச்சமாகும்போது, பரிகாரமாகச் சில தலங்களைக் குறிப்பிட்டு, “அங்கே போயிட்டு வாங்க. எல்லாம் சரியாகிடும்” என்று ஜோதிடர்கள் ஆலோசனை சொல்வார்கள். தி.மு.க-வின் ரெய்டுகள், சசிகலாவின் அழுத்தம், கொங்கு நாடு அரசியல் என அ.தி.மு.க-வை நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், கிட்டத்தட்ட அதே போன்றதொரு பயணத்தை டெல்லி நோக்கி நடத்தித் திரும்பியிருக்கிறது அ.தி.மு.க முகாம். ஜூலை 26-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க தலைவர்கள் சந்தித்ததில் ஆயிரம் விவகாரங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அ.தி.மு.க டெல்லி காவடி பின்னணி - “காப்பாத்துங்க!”

அ.தி.மு.க தலைவர்களின் இந்த டெல்லி பயணத் திட்டமே திடீரெனத்தான் முடிவாகியிருக்கிறது. பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் உறுதி செய்யப்பட்டவுடன், ஜூலை 25-ம் தேதி காலை டெல்லிக்கு முதல் ஆளாகக் கிளம்பினார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இந்தத் திடீர் பயணத்துக்கு, “பன்னீரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி-யாக இருப்பதால், அவருக்கு அரசு வீடு ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புது வீட்டில் பால் காய்ச்சுவதற்காகக் குடும்பத்துடன் செல்கிறார் பன்னீர்” என்று விளக்கமளித்தது அ.தி.மு.க வட்டாரம். ஆனால், தி.மு.க-வுக்குப் பால் காய்ச்சத்தான் பன்னீர் டெல்லி சென்றார் என்பதைப் பின்னர்தான் கழக நிர்வாகிகளே உணர்ந்துகொண்டனர். விமான நிலையத்தில் தன்னை அழைத்துச் செல்வதற்காக வந்த டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் வாகனத்தில் ஏறாமல், மகனுடன் வேறொரு காரில் ஏறினார் பன்னீர். விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு இல்லம் வரும் வரை, இருவரும் சில அரசியல் நகர்வுகளை காரிலேயே பேசியிருக்கிறார்கள். அரசு வாகனத்தில் பயணித்தால் தமிழ் தெரிந்த டிரைவர் ஓட்டுவார், விஷயம் லீக் ஆகிவிடும் என்பதற்காக இந்த சுதாரிப்பாம். அன்றைய தினம் இரவே கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி சகிதம் கோவையிலிருந்து டெல்லி கிளம்பினார். மொத்த அ.தி.மு.க வட்டாரமும் பரபரப்பானது.

“கட்சி மாறுவதைத் தவிர வேறு வழியில்லை!” - ஆடிப்போன தலைமை

முன்னாள் அமைச்சர்கள் சிலரின் கோபம்தான் இந்த டெல்லி பயணத்துக்கு அச்சாரம் போட்டதாம். நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர்கள் சிலர், “முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டைக் கண்டித்து அ.தி.மு.க தலைமை வெறும் கண்டன அறிக்கை மட்டுமே வெளியிட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட சீனியர்களுக்கு வருத்தம். ‘அ.தி.மு.க தொண்டர்கள், அவரவர் வீட்டின் முன்பு அடையாளத்துக்காக ஜூலை 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தலாம்’ என்கிற அறிவிப்பு வெளியானவுடன் டென்ஷனாகிவிட்டார் சி.வி.சண்முகம். ‘உங்களுக்கு உருப்படியா ஆர்ப்பாட்டம் நடத்த விருப்பம் இல்லைன்னா விட்டுடுங்க. நானே தனியா நடத்திக்குறேன்’ என்று ஆவேசமாகிவிட்டார் சி.வி.சண்முகம்.

கட்சித் தலைமையிடம் சில முன்னாள் மாண்புமிகுக்கள் ஆக்ரோஷமாக, ‘அறிக்கையை மட்டும் நீங்க கொடுத்துட்டுப் போயிடுவீங்க. நாளைக்குச் சிக்கல் வந்தா யார் சமாளிக்கறது? இதே நிலைமை நீடிச்சா, எங்களைக் காப்பாத்திக்க கட்சி மாறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று எகிறியிருக்கிறார்கள். ஆடிப்போன தலைமை அதன் பிறகே டெல்லி பயணத் திட்டத்துக்கு ஏற்பாடு செய்தது” என்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, முதல்வர் தரப்பிலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு உத்தரவு சென்றதாகக் கூறப்படுகிறது. ‘முன்னாள் அமைச்சர்கள் மீது சரியான ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுங்கள். அவர்கள் மீது போடப்படும் அனைத்து வழக்குகளும் விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுதரத் தேவைப்படும் அத்தனை பாயின்ட்டுகளோடும் வழக்குகளை அழுத்தமாகக் கொண்டு செல்லுங்கள்’ என்று உத்தரவு பறந்ததாம். இந்தத் தகவல்தான் அ.தி.மு.க வட்டாரத்தை கிலியில் ஆழ்த்தியிருக்கிறது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அறையில், ஜூலை 26-ம் தேதி காலை 11:30 மணிக்கு, அ.தி.மு.க தலைவர்கள் பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி, வேலுமணி ஆகியோர் ஒரு காரிலும், மற்றொரு காரில் தளவாய் சுந்தரம், தம்பிதுரை, மனோஜ் பாண்டியன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரும் சென்றனர். பெரிய உற்சாகத்துடன் பிரதமர் இவர்களை வரவேற்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரதமருடனான இந்தச் சந்திப்பு விவரங்கள் குறித்துக் கட்சியின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

சசிகலாவுக்கு உதவும் அதிகாரி! - போட்டுக்கொடுத்த எடப்பாடி

‘‘பிரதமரைச் சந்தித்தவுடன், தான் கையோடு எடுத்து வந்திருந்த ஃபைலிலிருந்து சில பேப்பர்களை எடுத்தார் எடப்பாடி. அதைப் பிரதமரிடம் அளித்தவர், ‘இந்தத் தகவல்ல இருக்குற ஐ.ஆர்.எஸ் அதிகாரி, 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்துல தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டவர், இப்போது டெல்லியில் பணிபுரிகிறார். சென்னையில இருக்குற சில ஊடகக்காரங்களோட சேர்ந்துக்கிட்டு, சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். சசிகலாவுக்கு தொடர்புள்ள சுமார் 1,700 கோடி ரூபாய் பெருமானமான சொத்துகள் இப்போ வருமான வரித்துறை பிடியில இருக்கு. முறைப்படி விசாரிச்சு தண்டனையளித்தால், சசிகலா அபராதத் தொகையோட பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்குச் செலுத்த வேண்டியிருக்கும். அதனால, இந்தச் சொத்துகளையெல்லாம் குறைச்சு மதிப்பிட்டு தர்றதாகவும், சசிகலாவுக்குத் தேவைப்படும் நிதி உதவிக்கு ஏற்பாடு பண்றதாவும் இந்த அதிகாரி சசிகலா தரப்போட இப்ப டீல் பேசிக்கிட்டு இருக்கார். அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, தன் அரசியல் ஆட்டத்தை ஆடலாம்னு சசிகலா நினைக்குறாங்க. அதுக்கு நிறைய நிதி தேவைப்படுது. அதற்காக, இந்த அதிகாரி வருமான வரித்துறைக்குள்ளேயே சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு லாபி உருவாக்கி உதவுறார். இதுல நீங்க நடவடிக்கை எடுக்கணும்.

அ.தி.மு.க டெல்லி காவடி பின்னணி - “காப்பாத்துங்க!”

அம்மா இறந்த பிறகு, நீங்கதான் சசிகலா பிடியில் இந்தக் கட்சி சிக்காம இருக்க நடவடிக்கை எடுத்தீங்க. 2021 தேர்தலின்போதும், உங்க உதவியாலதான் கட்சி கட்டுக்கோப்பாக நின்னுச்சு. இப்ப மறுபடியும் சசிகலா குழப்பம் பண்றாங்க. ஆடியோ, டி.வி பேட்டிகள் மூலமாகக் கட்சிக்குள் பிரச்னையை உண்டு பண்றாங்க. நீங்கதான் கண்டிச்சுவெக்கணும்’ என்றிருக்கிறார் எடப்பாடி. அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட பிரதமர், அ.தி.மு.க கட்டமைப்பு விதிகள் மாற்றம் தொடர்பாக நிலுவையிலிருக்கும் வழக்குகள் குறித்துக் கேட்டிருக்கிறார். டெல்லியிலும் சென்னையிலும் நடைபெறும் இந்த வழக்குகளின் நிலை குறித்து பிரதமருக்குத் தெளிவுபடுத்தியது அ.தி.மு.க டீம்.

தி.மு.க வழக்குகளை வேகப்படுத்துங்கள்... காப்பாத்துங்கள்!

எடப்பாடியைத் தொடர்ந்து பேசிய பன்னீர், தி.மு.க-வின் ரெய்டு பிளான்கள் குறித்து பிரதமரிடம் விளக்கியிருக்கிறார். ‘எங்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். இந்த விவகாரத்தில் நீங்கள்தான் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும். அ.தி.மு.க பிரமுகர்களுக்கு எதிராக எதுவும் நடவடிக்கை பாய்ந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றதோடு, தி.மு.க மீது நடவடிக்கை எடுக்கவும் பேசியிருக்கிறார்கள்.

2 ஜி வழக்கு, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் தொடர்பான வருமான வரித்துறை வழக்கு, ஜெகத்ரட்சகன் மீதுள்ள வழக்குகளை மத்திய அரசு வேகப்படுத்த வேண்டும். அப்போதுதான் தி.மு.க-வுக்கு ஒரு பயம் வரும்’ என்று அ.தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின் முடிவில் பிரதமர் எந்த பாசிட்டிவ் சிக்னலையும் அளிக்கவில்லை” என்றனர்.

உத்தரவாதம் அளிக்காத பிரதமர் - அப்செட்டில் அ.தி.மு.க தலைவர்கள்

2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம், அதைத் தொடர்ந்து விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் குறித்த வழக்குகளை தி.மு.க-வினர் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் புதிதாக மூன்று பேரை விசாரிக்க அனுமதி தந்துள்ளது ஊட்டி நீதிமன்றம். அப்படி விசாரணை வளையத்தில் சிக்குபவர்களில் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனும் ஒருவர். இதனால், எடப்பாடி தரப்பு கடும் அப்செட் என்கிறார்கள். இப்படி வழக்குகளை வைத்து நடக்கும் அரசியலை மோடியிடம் தீவிரமாக விளக்கியிருக்கிறது அ.தி.மு.க டீம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, “நான் என்னவென்று விசாரிக்கிறேன்” என்பதை மட்டும் சொல்லி வழியனுப்பியிருக்கிறார். எனர்ஜி ஏற்றும்விதமாக பிரதமரிடமிருந்து எந்த உத்தரவாதமும் கிடைக்காததால், டெல்லி வரை காவடி எடுத்த அ.தி.மு.க தரப்பு, டோட்டல் அப்செட் என்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “100 சதவிகிதம் அ.தி.மு.க-வில் இனி சசிகலாவுக்கு இடமில்லை. அவர் கட்சியிலேயே இல்லை” என்று தடாலடியாகக் கூறினார். அந்தக் கருத்துக்கு பிரதமரின் பக்கபலம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் கச்சிதமாக உருவாக்கினார். அதுபோல, இந்தமுறை பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்து எடப்பாடி எதையும் பேசவில்லை. பிரதமர் எந்த உத்தரவாதமும் அளிக்காத அப்செட்டில்தான், சசிகலா குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது எந்த பதிலும் சொல்லாமல் எடப்பாடி நழுவியிருக்கிறார். அதேபோல, பிரதமரிடம் பாசிட்டிவாக முகக்குறிப்புகள் தென்படாததால், கொங்கு அரசியல் பற்றியும் வாய் திறக்கவில்லையாம் எடப்பாடி.

காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம், தமிழ்நாட்டுக்குத் தடுப்பூசி என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரைப் பார்த்திருப்பதாக அ.தி.மு.க வட்டாரம் விளக்கமளித்தாலும், போனதென்னவோ நெருக்கடி தாங்காமல்தான். ‘காப்பாத்துங்க...’ என்று டெல்லி வரை காவடி தூக்கியும் பிரதமரிடமிருந்து பாசிட்டிவ் சிக்னல் வராததால், வேறு ஏதாவது ஒரு சேனலில் பிரதமரின் மனதைக் கரைக்கவும் எடப்பாடி தரப்பிலிருந்து மூவ் ஆரம்பித்திருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத் தலைவர் மூலமாக, பிரதமர் அலுவலகத்துக்கு ரூட் போடுகிறதாம் அ.தி.மு.க தலைமை. “காவடி எடுத்தவுடன் கடவுள் வரம் தந்துவிடுவாரா... பொறுமையாக இருங்கள்” என்று நம்மிடம் கண்சிமிட்டுகிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

வரம் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

‘‘டீலுக்கு டீல்!’’ - பா.ஜ.க-வுக்குப் பிடித்த பிளான்!

பிரதமருடனான சந்திப்பில் அ.தி.மு.க தங்களுக்காக வைத்த கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பா.ஜ.க-வுக்குப் பயன் தரும் ஒரு விஷயத்தையும் பேசியிருக்கிறது. அது, தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்று மாநிலங்களவை இடங்கள் தொடர்பான விஷயம். “இந்த மூன்று இடங்களுக்குத் தனித்தனியாகத் தேர்தல் வைக்க வேண்டும் என்று தி.மு.க கேட்கிறது. மூன்றுமே வெவ்வேறு பதவிக்காலம் உள்ள இடங்கள் என்பதால், தேர்தல் விதிகள்படி அப்படித்தான் நடத்த வேண்டும். அப்படிச் செய்தால் அது தி.மு.க-வுக்குச் சாதமாகிவிடும். ஆனால், தேர்தல் ஆணையம் நினைத்தால் கொரோனா சூழலைக் காரணம் காட்டி, ஒரே தேர்தலாக நடத்த முடியும். அப்படிச் செய்தால் ஒரு இடத்தை அ.தி.மு.க பெற வாய்ப்புள்ளது. அதை பா.ஜ.க-வுக்கு நாங்கள் தருகிறோம்’’ என்று கூறியுள்ளனர். இந்த டீல் பா.ஜ.க-வுக்குப் பிடித்துவிட்டதாம்.

அ.தி.மு.க டெல்லி காவடி பின்னணி - “காப்பாத்துங்க!”

‘‘வேடிக்கையை மட்டும் பாருங்கள்!’’ -புதிர்போடும் சசி

சசிகலா தரப்பும் தொடர்ந்து டெல்லிக்குச் சமாதான தூது அனுப்பிவருகிறதாம். “தினகரன் அரசியலிருந்து ஒதுங்கியிருப்பார். நானும் அ.ம.மு.க நிர்வாகிகளும் அ.தி.மு.க-வில் இணைவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சசிகலா தரப்பிலிருந்து இறுதியாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்து, “இரண்டு வாரங்கள் வரை பொறுமையாக இருங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும்” என்று உறுதியளித்திருக்கிறாராம் ஒரு வி.ஐ.பி. இந்தத் தகவலுக்குப் பிறகுதான் மதுசூதனன் உடல்நலன் விசாரிப்பு முதல், வளர்மதி தாயார் இறப்பு குறித்து துக்கம் விசாரித்தது வரை சசிகலாவின் மூவ் வேகமெடுத்திருக்கிறது என்கிறது விவரமறிந்த வட்டாரம். “எனக்கு எதிராகவுள்ள மாஜி அமைச்சர்கள் இனி வழக்குகளை எதிர்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். அமைதியாக இருந்து வேடிக்கையைப் பாருங்கள்” என்று தன்னைச் சந்தித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் சசிகலா சமீபத்தில் சொல்லியிருக்கிறார். இது எடப்பாடி தரப்பை வெறுப்பேற்றியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism