அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

ஈரோடு கவுன்ட்டவுன் ஸ்டார்ட்... முறுக்கி நிற்கும் எடப்பாடி... பதற்றத்தில் பா.ஜ.க!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டங்களில், ‘பா.ஜ.க-வினர் தனித்தே தேர்தலைச் சந்திக்கத் தயாராக வேண்டும்’ எனப் பேசிவருகிறார் அண்ணாமலை.

பொங்கல் பண்டிகை குதூகல மூடிலிருந்து, ரணகள மூடுக்கு மாறியிருக்கிறது தமிழ்நாடு அரசியல் களம். காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா-வின் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டப்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்கு எடப்பாடி - பன்னீர் இருவருமே உரிமை கோருகிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக வரப்போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடுமென்றாலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைப் பஞ்சாயத்தும் களைகட்டியிருக்கிறது. இதற்கிடையே, ‘தனி ரூட்தான் பலன் தரும்’ என மாநில பா.ஜ.க நிர்வாகிகள் கொண்டுபோன ஐடியாக்களையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்ட டெல்லி, பதற்றத்தில் இருக்கிறது. அ.தி.மு.க - பா.ஜ.க என இரண்டு கட்சிகளும் இப்போது ஈரோட்டை நோக்கி!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

“எல்லாரும் கறுப்புக்கு மாறுங்கய்யா...” - சட்டமன்றத்தில் கடுகடு!

அ.தி.மு.க-விலிருந்து பன்னீர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடமிருந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வசம் ஒப்படைத்தார் எடப்பாடி. இந்த மாற்றம் தொடர்பாக சபாநாயகருக்கு இரண்டு முறை எடப்பாடி கடிதம் எழுதியும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையிலிருந்து பன்னீரை எழுப்பவில்லை சபாநாயகர் அப்பாவு. இந்த முறை சட்டமன்றம் கூட்டப்பட்டபோது, எடப்பாடி பக்கத்தில் அமரும் எதிர்பார்ப்போடு வந்திருந்தார் ஆர்.பி.உதயகுமார். ஆனால், இந்த முறையும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான சீட் அவருக்கு அளிக்கப்படவில்லை. இதில், உதயகுமாரைவிட எடப்பாடிதான் அதிகமும் வெடித்ததாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், “பன்னீருக்கு அருகில் அமர எடப்பாடி துளியும் விரும்பவில்லை. ஆனால், அப்படியொரு தர்மசங்கடத்தைத் திட்டமிட்டே உருவாக்குகிறது தி.மு.க. சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றியபோது, எடப்பாடியும் பன்னீரும் அருகருகே அமரும் சூழல் உருவானது. இதை அவையிலிருந்த தி.மு.க அமைச்சர்கள் பலரும் சிரித்தபடியே நக்கலாக ரசித்தனர். அமைச்சர்கள் துரைமுருகனும் பொன்முடியும், ‘கண்கொள்ளாக் காட்சியா இருக்குதே’ எனக் கிண்டலடிக்கவும் எடப்பாடிக்குக் கோபம் உச்சிக்குப் போனது. பன்னீர் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை அவர். அடுத்த நாள் காலையில், ‘எல்லாரும் கறுப்புச் சட்டைக்கு மாறுங்கய்யா. பன்னீர் பக்கத்துல சிரிச்சுக்கிட்டு உட்கார முடியாது’ என்று உறுப்பினர்களுக்கு ஆர்டர் போட்டார் எடப்பாடி.

இதைத் தொடர்ந்துதான் ‘எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை’ தொடர்பான சபாநாயகரின் தாமதத்தைக் கண்டித்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கறுப்புச் சட்டையுடன் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றோம். ‘சட்டமன்ற மசோதாக்கள்மீது உடனடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பேசும் சபாநாயகர், நாங்கள் அளித்திருக்கும் மனுவில் மட்டும் காலம் தாழ்த்துவது சரியா... இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட ‘ஆடிட் ரிப்போர்ட்’-டை இந்திய தேர்தல் ஆணையமே ஏற்றிருக்கிறது. இதன் மூலம், கடந்த ஆண்டு, ஜூலை 11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழுத் தீர்மானங்களையும் மறைமுகமாக ஏற்றிருக்கிறது. இதனடிப்படையிலேயே சபாநாயகர் முடிவெடுக்க முடியும். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் இப்படியொரு குழப்பம் நீடிப்பதை தி.மு.க விரும்புகிறது. சட்டப்பேரவையிலேயே, ‘பொதுச்செயலாளர் பன்னீர்’ எனக் கிண்டலடிக்கிறார்கள் தி.மு.க-வினர். அதை பன்னீரும் ரசித்து, சிரிக்கிறார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு எப்படி எங்களால் அமைதியாக இருக்க முடியும்?” என்றனர் கோபமாக.

இந்தக் கோபம் எடப்பாடிக்குச் சற்று அதிகமாகவே இருக்கிறதாம். டெல்லியின் அசைவுகள் நாணல்போல எடப்பாடி பக்கமும், பன்னீர் பக்கமும் இஷ்டத்துக்கு வளைவதால், செம கடுப்பில் இருக்கிறாராம் அவர்.

ஈரோடு இடைத்தேர்தல்... கவுன்ட்டவுன் ஸ்டார்ட்!

இந்தச் சூழலில், ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட, இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளத் தீர்மானித்திருக்கும் எடப்பாடி, அ.தி.மு.க வேட்பாளரை இந்த முறை ஈரோடு கிழக்கில் களமிறக்க முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்.

நம்மிடம் பேசியவர்கள், “2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஈரோடு கிழக்குத் தொகுதி, கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் வசம் அளிக்கப்பட்டது. வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் த.மா.க வேட்பாளர் யுவராஜ் தோல்வியைத் தழுவினார். இந்த முறை இடைத்தேர்தல் வரும்போது, அ.தி.மு.க மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கத்தை வேட்பாளராகக் களமிறக்கத் தீர்மானித்திருக்கிறார் எடப்பாடி. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இரட்டை இலைச் சின்னத்துக்குக் கையெழுத்திடும் உரிமை அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆனால், பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதைக் காரணமாகக் காட்டி இரட்டை இலைக்கு பன்னீரும் உரிமை கோருகிறார். யார் பக்கம் இரட்டை இலை செல்கிறது என்பதை இந்த இடைத்தேர்தல் தீர்மானித்துவிடும். அதற்கான கவுன்ட்டவுன் ஈரோட்டிலிருந்து ஆரம்பித்திருக்கிறது.

கே.வி.ராமலிங்கம்
கே.வி.ராமலிங்கம்

உறவா... முறிவா... முறுக்கி நிற்கும் எடப்பாடி!

சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டவுடன், ஈரோடு அ.தி.மு.க நிர்வாகிகளைத் தேர்தல் பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி. அதன்படி, ஜனவரி 12-ம் தேதி ஈரோடு மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணிமனைகளைத் திறப்பது, பூத் கமிட்டிகளைச் சரிப்படுத்துவது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தொடர்பாக கொங்கு ஏரியா முன்னாள் அமைச்சர்கள் இருவரிடம் எடப்பாடி கலந்தாலோசித்தபோது, ‘இந்த இடைத்தேர்தலில் ஜெயித்து நாம் ஆட்சியைப் பிடிக்கப்போவதில்லை. ஆனால், பா.ஜ.க நம் பக்கம் இருக்குமா, இருக்காதா என்பது தெரிந்துவிடும். ஏனென்றால், 2024 தேர்தல் வரை நம் கட்சி விவகாரத்தை ஜவ்வாக இழுத்து விளையாடும் மனநிலையில்தான் இருக்கிறது பா.ஜ.க. அதற்கு ஒரு முடிவு காண நல்வாய்ப்பாக நமக்கு இந்த இடைத்தேர்தல் வந்திருக்கிறது. ஒருவேளை இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டால், தனிச் சின்னத்தில் களமிறங்குவோம். அதற்கு மேல் பா.ஜ.க-வுக்கு நம்முடன் வேலையில்லை. அவர்கள் தனித்தே செல்லட்டும். சின்னம் கிடைத்தால், அவர்களை கெளரவமாக நடத்தலாம். உறவா, முறிவா அவர்களே முடிவெடுக்கட்டும்’ என்றார்.

எடப்பாடி இப்படி முறுக்கி நிற்பதற்குக் காரணமும் இருக்கிறது. புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தான செயல் விளக்கக் கூட்டம் ஜனவரி 16-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் கடிதத்தில், பன்னீரை ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் பதிவுசெய்திருக்கிறது. இந்தக் கடிதத்தை அ.தி.மு.க பெறாமல் திருப்பி அனுப்பிவிட்டது. எடப்பாடி மட்டும் கையெழுத்திட்ட ‘ஆடிட் ரிப்போர்ட்’டை ஏற்ற தேர்தல் ஆணையம், பன்னீரையும் கட்சியின் ஒரு தலைவராக ஏற்றுக் கடிதம் அனுப்பியதை அ.தி.மு.க-வினர் யாரும் ஏற்கவில்லை. ஜனவரி 12-ம் தேதி ராஜ் பவனில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எடப்பாடியும் பன்னீரும் கலந்துகொண்டனர். அப்போது, வம்படியாக பன்னீரையும் எடப்பாடியையும் ஒரே டேபிளில் அமரவைத்திருக்கிறார் ஆளுநர். முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், ஆளுநர் மாளிகை சட்டை செய்யவில்லை. அந்த ஆத்திரத்தில் பன்னீர் வெளியேறிச் சென்ற பாதையைக்கூட பயன்படுத்தாமல், வேறு பாதையில் கவர்னர் மாளிகையிலிருந்து வெளியேறினார் எடப்பாடி. இது போன்ற குழப்பங்களுக்கு டெல்லி நினைத்தால், ஒரு நொடிப்பொழுதில் தீர்வுகாண முடியும். ஆனால், கண்ணைக் கட்டிவிட்டு கண்ணாமூச்சி ஆடுகிறது டெல்லி. இந்த ஆட்டத்துக்கு முடிவுகட்டும்விதமாகத்தான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பயன்படுத்தப் பார்க்கிறார் எடப்பாடி” என்றனர் விலாவாரியாக.

தனி ரூட் பலன் தருமா... பதற்றத்தில் பா.ஜ.க!

இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க சார்பிலும் காய்கள் நகர்த்தப்படுகின்றன. நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் நிர்வாகிகள், “தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டங்களில், ‘பா.ஜ.க-வினர் தனித்தே தேர்தலைச் சந்திக்கத் தயாராக வேண்டும்’ எனப் பேசிவருகிறார் அண்ணாமலை. அவர் தரப்பு நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரைத் தனித்தே களமிறக்க ஆயத்தப்படுத்துகிறார்கள். டெல்லியிடம், ‘நம் பலத்தைக் காட்டுவதற்கு இந்த இடைத்தேர்தல்தான் நல்ல சான்ஸ். இடைத்தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர்கள் பலரையும் பிரசாரத்துக்குக் களமிறக்கலாம். இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தில் ஐந்தாக உயரும். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டால், சின்னம் இல்லாத எடப்பாடியின் பலம் என்னவென்பது தெரிந்துவிடும்’ எனக் கணக்கு போட்டுக் கொடுத்திருக்கிறது அண்ணாமலைத் தரப்பு. இந்த தனி ரூட் எந்த அளவுக்குப் பயனளிக்கப் போகிறதெனத் தெரியவில்லை.

ஈரோடு கவுன்ட்டவுன் ஸ்டார்ட்... முறுக்கி நிற்கும் எடப்பாடி... பதற்றத்தில் பா.ஜ.க!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில், நான்கில் அ.தி.மு.க வென்றிருக்கிறது. மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க-வின் சரஸ்வதி வெற்றிபெற்றிருக்கிறார். அந்த வெற்றிகூட அ.தி.மு.க கூட்டணியில்தான் சாத்தியமானது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் கண்டதுபோல, இந்த இடைத்தேர்தலிலும் தனித்துக் களமிறங்கி பலத்தை நிரூபிக்கப் பார்க்கிறார் அண்ணாமலை. அவரது ஆர்வம் வரவேற்கக்கூடியதுதான் என்றாலும், டெபாசிட்கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டால், கட்சிக்குப் பெரிய அவமானமாகிவிடும். உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தை அடிப்படையாக வைத்து, ஈரோடு கிழக்கில் வெற்றியைக் கணக்கிட முடியாது. இந்தத் தனி ரூட் கணக்கை டெல்லி, கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை.

‘சின்னம் கிடைக்காமல் போனால் எடப்பாடி நிச்சயம் கழற்றிவிட்டுவிடுவார்’ என்கிற பதற்றம் டெல்லியிடம் நன்றாகவே ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜுரம் இன்னும் சில மாதங்களில் ஆரம்பித்துவிடும். இந்தச் சூழலில், அ.தி.மு.க போன்ற பெரிய கட்சியின் அனுசரணையை இழக்க டெல்லி விரும்பவில்லை. தனி ரூட் கதையெல்லாம் கடைசி நேரத்தில் பஸ்பமாகி, அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிக்கும் சூழல்தான் உருவாகும். தமிழகத்திலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் எம்.பி-க்களைப் பெற வேண்டுமென்பதுதான் டெல்லியின் எண்ணமாக இருக்கிறது” என்றனர்.

அ.தி.மு.க-வுக்குள்ளும், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள்ளும் மீண்டும் மேகம் கருக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இடைத்தேர்தல் மூலமாகத் தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வுகாண வியூகம் வகுக்கிறார் எடப்பாடி. டெல்லிக்கும் எடப்பாடிக்கும் இடையிலான யுத்தத்தில், தனக்கு மருந்து கிடைக்குமாவெனப் பார்க்கிறார் பன்னீர். ‘எனக்கு லாபம் இல்லையென்றால், யாருக்கும் லாபம் இல்லை’ என்கிற கத்தியை டெல்லியை நோக்கி வீசியிருக்கிறார் எடப்பாடி. இனி சண்டை செய்வதா, சமாதானமாகப்போவதா என முடிவெடுக்கவேண்டியது டெல்லிதான். டெல்லியின் நிலையையும் மனநிலையையும் பார்த்தால், எடப்பாடிப் பக்கம்தான் காற்றடிக்கும்போலத் தெரிகிறது!

வாதமும் பிரதிவாதமும்!

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கின் வாத, பிரதிவாதம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வைத்தியநாதனும் முகுல் ரோஹத்கியும், “நான்தான் அ.தி.மு.க என பன்னீர் உரிமை கோரினால், அவர் செல்லவேண்டிய இடம் தேர்தல் ஆணையம்தான். ஆனால், தன் பக்கம் நிர்வாகிகள் இல்லாததால்தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை பொதுக்குழுதான் அதிகாரம்கொண்ட அமைப்பு. கட்சியின் நலன் கருதி `ஒற்றைத் தலைமை வேண்டும்’ எனப் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரியதால், பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தை பன்னீர் தரப்பினர் தாக்கியதால்தான், பொதுக்குழு உறுப்பினர் களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரும், அவரைச் சேர்ந்தவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்” என்று வாதிட்டனர்.

பன்னீர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித்குமார், “இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி ராஜினாமா செய்ததால்தான் கட்சி முடங்கும் சூழல் ஏற்பட்டது. பொதுக்குழுவைக் கூட்ட அவைத்தலைவருக்கு அதிகாரமே இல்லை. இந்தப் பொதுக்குழுவே சட்டவிரோதமானது” என வாதிட்டார். இரு தரப்பின் எழுத்துபூர்வமான வாதங்களை ஜனவரி 16-ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கைத் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருக்கிறது.

வி.பி.துரைசாமி, அய்யப்பன், ஜெயக்குமார்
வி.பி.துரைசாமி, அய்யப்பன், ஜெயக்குமார்

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“எங்களுக்கும் அ.தி.மு.க-வுக்குமான உறவில் எந்தச் சிக்கலும் இல்லை. அது சுமுகமாகத் தொடர்கிறது. ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்த, இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒப்புதல் வாங்க வேண்டும், தேதி குறிப்பிட வேண்டும். அதன் பிறகுதான் அறிவிப்பு வெளியாகும். அதற்குள் எந்த முடிவையும், எந்தக் கட்சியும் எடுக்காது. எனவே, சிலரின் கருத்துகளை மட்டும் வைத்து பா.ஜ.க - அ.தி.மு.க இடையே மோதல் இருப்பதாகச் சொல்ல முடியாது.” - வி.பி.துரைசாமி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என்பதும், கட்சியின் தலைமை யார் என்பதும் நீதிமன்றம் எடுக்கவேண்டிய முடிவு. விசாரணை முடிந்திருக்கிறது. தீர்ப்பு வரும்போது அது குறித்துப் பேசலாம். மக்களின் இயக்கமாக இருந்த கட்சியை, எடப்பாடி ஒருவர் மட்டும் அபகரிக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது. நான்கு ஆண்டுகள் பதவிக்காக இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொண்டபோது இனித்தது; இப்போது கசக்கிறதா..? புரட்சித்தலைவர், அம்மாவின் ஆன்மாக்கள் அவரை மன்னிக்காது!” - அய்யப்பன், பன்னீர் ஆதரவாளர், உசிலம்பட்டி எம்.எல்.ஏ

“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி என்பது எங்களின் உரிமை. அது பறிக்கப்படும்போது அதற்காகச் சண்டை செய்யத்தானே செய்வோம்... ஆனால், இப்போது நடக்கும் தி.மு.க ஆட்சிக்கு மரபு, மாண்பு என்றால் என்னவென்றே தெரியாது என்பதால், அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரைத் தேர்ந்தெடுத்த பிறகும், அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். கூட்டணியைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க இணைந்திருப்பதாக அண்ணாமலைதான் சொல்லிக்கொண்டிருக்கிறாரே தவிர நாங்கள் இதுவரை அப்படிச் சொல்லவில்லை. அது தேர்தல் நேரத்தில் எடுக்கவேண்டிய முடிவு. பா.ஜ.க எங்களின் நட்புக் கட்சிதான். எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதை எப்படி அணுகுவது என நாங்கள்தான் முடிவெடுப்போம்.” - ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க