
ஓவியங்கள்: சுதிர்
தேர்தல் பணிமனைகளைத் திறந்து, சூட்டோடு சூடாக ஈரோடு இடைத்தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியிருக் கின்றன தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள். இவ்விரு கட்சிகளின் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களும் களத்தில் தீவிரமாக வாக்கு வேட்டையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், கமலாலயத்தில் தான் ஏக குழப்பம். கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து தன் நிலைப்பாட்டைத் தொடர்ந்து மாற்றிப் பேசி, குழப்பியடிக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. “இடைத்தேர்தல் தொடர்பாக டெல்லியில் பேசியிருக்கிறோம். இன்னும் நேரமிருக்கிறது’’ என்று தொடக்கத்தில் ஏதோ பெரிதாகச் செய்யப்போவதுபோல் பில்டப் கொடுத்துப் பேசிவந்தவர், அடுத்த சில தினங்களில் அப்படியே அந்தர் பல்டி அடித்து, “அ.தி.மு.க-தான் பெரிய கட்சி. இந்த இடைத்தேர்தல் பா.ஜ.க-வுக்கானது அல்ல’’ என்று குபீர் கிளப்பினார். “அண்ணாமலையின் அவசரகதியிலான மாறுபட்ட கருத்துகள், கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் கடும் குழப்பங்களை விளைவித்திருக்கின்றன” என்கிறார்கள் தாமரைக் கட்சியின் சீனியர்களே. மற்றொருபுறம், திக்குத் தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். “பா.ஜ.க போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளித்து, வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்று கணக்கு போட்டார் பன்னீர். ஆனால், கமலாலயம் அவர் காலை வாரிவிட்டது. இப்போது, தனியே வேட்பாளரைப் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். அவரை அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டனர்” என விசும்புகிறது பன்னீர் வட்டாரம். எதையோ பிடிக்கப் போய், ஏதோ கிடைத்த கதையாகிவிட்டது இருவருக்கும்!
“நாம வளர்ந்துட்டோம்... வளர்ந்துட்டோம்...” - செயற்குழுவில் குதித்த ஆதரவாளர்கள்!
‘தமிழகத்தில் தி.மு.க-வுக்குப் பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க-தான்’ எனத் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார் அண்ணாமலை. அவரது ஆதரவாளர்களும் இதே கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அ.தி.மு.க-வைச் சீண்டிவந்தனர். இந்தச் சீண்டல், எடப்பாடியின் ஈகோவைக் கிளறிப் பார்க்கும் வரை போனது. இந்தச் சூழலில்தான் ஈரோடு இடைத்தேர்தலை பா.ஜ.க-வின் ‘டெஸ்ட் பாயின்ட்’டாகக் கட்சிக்குள் முன்வைத்தது அண்ணாமலை தரப்பு. ‘குழப்பமே இதிலிருந்துதான் தொடங்கியது’ என்கிறது பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் வட்டாரம்.
நம்மிடம் பேசிய கொங்கு ஏரியா பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் சிலர், “பா.ஜ.க-வின் பெயரும் செயல்பாடுகளும் தற்போது கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கட்சிக் கட்டமைப்புரீதியாக பா.ஜ.க இன்னும் வலுவாகவில்லை. இது புரியாமல் அண்ணாமலை டீமைச் சேர்ந்த சில மாநில நிர்வாகிகளும், மாவட்டத் தலைவர்களும் ‘ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க களமிறங்க வேண்டும்’ எனப் பேசினார்கள். ஜனவரி 20-ம் தேதி கடலூரில் நடைபெற்ற பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்திலும் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, நம்முடைய வாக்குவங்கி 15 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. நாம வளர்ந்துவிட்டோம்... சின்னம் கிடைக்காது எனத் தெரிந்தும், தன்னுடைய தலைமையை நிரூபிப்பதற்குத் தனி ஆளாகக் களமிறங்குகிறார் எடப்பாடி. அந்தத் துணிச்சல் நமக்கு வேண்டாமா... நமக்கு தாமரைச் சின்னம் இருக்கிறது. தேவைப்பட்டால், மத்திய அமைச்சர்களையே பிரசாரத்தில் ஈடுபடுத்தலாம். நாமும் களமிறங்கினால்தான், கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்’ எனப் பேசினார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். அண்ணாமலையின் மனநிலையும் அதுவாகத்தான் இருந்தது. அதுதான் ஆதரவாளர்களின் கருத்தாகச் செயற்குழுவில் எதிரொலித்தது.
தன்னுடைய வருகைக்குப் பிறகு, கட்சி வளர்ச்சி பெற்றிருப்பதாக டெல்லியிடம் நிரூபிக்கப் பார்க்கிறார் அண்ணாமலை. அதற்கு ஈரோட்டைக் களமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடுகிறார். அதனால்தான், ‘டெல்லியிடம் எங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறோம். எங்களின் நிலைப்பாட்டை விரைவில் தெரிவிப்போம்’ என்றார். அவரின் தீவிர ஆதரவாளரான ஏ.பி.முருகானந்தத்தை பா.ஜ.க வேட்பாளராக முன்னிறுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அண்ணாமலை உத்தரவுப்படி, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் ஆசி பெற டெல்லியில் முகாமிட்டார் முருகானந்தம். அண்ணாமலையின் இந்த அவசரக்குடுக்கை நடவடிக்கைகளில் கட்சி சீனியர்களுக்குத் துளியும் உடன்பாடில்லை. ஆரம்பத்திலிருந்தே சீனியர்களிடம் எதையும் கலந்துகொள்ளமால், வாய்த்துடுக்குத்தனமாகப் பேசுவதும், சூடுபட்டவுடன் பின்வாங்குவதும் அண்ணாமலைக்கு வாடிக்கையாகிவிட்டது. அதேதான் ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கருத்துகளிலும் நடந்தது. கட்சி 15 சதவிகிதம் அளவுக்கு வளர்ந்துவிட்டதாக என்ன அளவுகோலில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7 சதவிகிதம் வாக்குகளையே பா.ஜ.க பெற்றது. கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப்போட்டியிட்டு இதே வாக்கு சதவிகிதத்தைப் பெற்றிருந்தால் ஏற்கலாம். ஆனால், யதார்த்தம் அது இல்லை. அது அண்ணாமலைக்குப் புரிந்தும் புரியாததுபோல நடிக்கிறார்” என்றனர்.

“நடுத்தெருவுல நிறுத்தப் பார்க்குறாரு...” - கொந்தளித்த சீனியர்கள்... அந்தர் பல்டி அண்ணாமலை!
அண்ணாமலையின் வேகத்துக்குத் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டைபோடப் பார்த்திருக்கிறார்கள் கட்சி சீனியர்கள். அவர் உதாசீனப்படுத்தியதால்தான், விவகாரம் டெல்லி வரை பஞ்சாயத்தாகியிருக்கிறது.
நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் தலைவர் ஒருவர், “தேர்தலைச் சந்திக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள் 34 மாநகராட்சி வார்டுகள் வருகின்றன. இந்த வார்டுகளில் வாக்கு சேகரிக்க மட்டுமே 11 அமைச்சர்களைக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க. பெரும்பாலான வார்டு கவுன்சிலர்கள் தி.மு.க-வினர்தான். மற்றொருபுறம், தேர்தல் பொறுப்புக்கு 106 கட்சி நிர்வாகிகளை நியமித்திருக்கிறது அ.தி.மு.க. இரு கட்சிகளுமே ‘ரோஸ் மில்க்’ தாள்களை மழையாகப் பொழியத் தயாராகின்றன. இவர்களுக்கு மத்தியில் கட்டமைப்பு வலுவில்லாத பா.ஜ.க என்ன செய்ய முடியும்... வாக்காளர்களுக்குக் கொடுக்கத் தாள்கள் தயாராக இருந்தாலும்கூட, கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு ஆட்கள் எங்கே இருக்கிறார்கள்?
இதைத் தொடக்கத்திலேயே பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்கள் அண்ணாமலையிடம் எச்சரித்தனர். ‘இது நமக்கான யுத்தம் அல்ல. நாம் போட்டியிட்டால், டெபாசிட்கூட வாங்க முடியாது. தவிர, அ.தி.மு.க-வில் எடப்பாடி, பன்னீர் இருவருமே நம்மிடம் ஆதரவு கேட்டிருக்கிறார்கள். ஒருத்தருக்கு ஆதரவளித்துவிட்டு, மற்றொருவரைப் புறக்கணித்தால் கண்டிப்பாகப் பிரச்னை ஏற்படும். சின்னம் முடங்கினால், அதற்குக் காரணமும் நாம்தான் எனக் குற்றம்சாட்டுவார்கள். பேசாமல் இடைத்தேர்தலைப் புறக்கணித்து விடலாம். இதுவும் ஒரு வியூகம்தான்’ என்றனர். ஆனால், அண்ணாமலை அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தேர்தல் புறக்கணிப்பு என்பதை கெளரவக் குறைச்சலாக எடுத்துக்கொண்டார். அதன் பிறகுதான் பஞ்சாயத்து டெல்லிக்குப் போனது.

‘இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த அளவு வாக்குகள் கிடைக்காமல் போனால், நாம் கட்டிவைத்திருக்கும் பிம்பமெல்லாம் உடைந்து சுக்கு நூறாகிவிடும். இந்த விஷப்பரீட்சை தேவைதானா... ஈரோடு கிழக்கில் 35,000 சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன. பா.ஜ.க போட்டியிடும் பட்சத்தில், அந்த வாக்குகளெல்லாம் அணி திரண்டு தி.மு.க-வுக்குப் போக வாய்ப்பிருக்கிறது. தன்னை நிரூபிப்பதற்காக, நம் கட்சியையே நடுத்தெருவில் நிறுத்தப் பார்க்கிறார் அண்ணாமலை. தமிழ்நாட்டிலேயே கொங்குப் பகுதிதான் பா.ஜ.க-வுக்கு பாசிட்டிவான பகுதி. அங்கேயே சொதப்பி கட்சியை பலவீனமாக்கும் வேலையைத்தான் அண்ணாமலை பார்க்கிறார்’ என டெல்லி சீனியர்களிடம் விளக்கியிருக்கிறது தமிழக பா.ஜ.க சீனியர்கள் தரப்பு.
நடைபெறவிருக்கும் மூன்று மாநிலச் சட்டமன்றத் தேர்தலில்தான் டெல்லியின் முழு கவனமும் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால், பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குப் பெரிய ஏற்றமெல்லாம் வரப்போவதில்லை. சீனியர்களின் விளக்கத்தைத் தொடர்ந்து அண்ணாமலையிடம் கடுகடுத்துவிட்டது டெல்லி. அதன் பிறகுதான் அந்தர் பல்டி அடித்தார் அண்ணாமலை. ‘இந்த ஒரு இடைத்தேர்தலால் தி.மு.க-வின் ஆட்சி மாறப்போகிறதா... இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் 80 சதவிகிதம் ஆளுங்கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. இது பா.ஜ.க-வுக்கான தேர்தல் அல்ல. எங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டவேண்டிய அவசியம் கிடையாது. கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சி அ.தி.மு.க-தான்’ என சம்மர் ஷாட் அடித்தார் அண்ணாமலை. இந்த முடிவை அவர் முன்னரே எடுத்திருந்தால், இவ்வளவு தூரம் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது” என்றார் விரிவாக.
டெல்லியின் அறிவுறுத்தலால், ‘தேர்தல் புறக்கணிப்பு’ நிலைப்பாட்டை கமலாலயம் எடுக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதேநேரம், பி.எல்.சந்தோஷ் மூலமாகக் கடைசி அஸ்திரத்தை எய்து பா.ஜ.க-வை ஈரோடு கிழக்கில் களமிறக்கவும் அண்ணாமலை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ரணகளத்துக்கு இடையே, ஓ.பி.எஸ் எடுத்த வியூகங்கள்தான் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.
“ஜி பேச்சைக் கேட்க மாட்டீங்களா..?” - ட்விஸ்ட்டான பன்னீர் வியூகம்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், செய்தியாளர்களை அவசரமாக அழைத்த பன்னீர் இரண்டு விஷயங்களைப் பேசினார். முதலாவது, “கட்சி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ‘பி ஃபார்ம்’-ல், எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டால், ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திடத் தயார். என்னால் இரட்டை இலைச் சின்னம் முடங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார். இதோடு அவர் முடித்திருந்தால், அ.தி.மு.க தொண்டர்களிடம் அவருக்கு மதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், இரண்டாவதாக அவர் பேசியதுதான் பிரச்னையானது.

நம்மிடம் பேசிய பன்னீரால் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் சிலர், அவர்மீதே வருத்தங்களை முன்வைத்தனர். “இடைத்தேர்தலில் தன்னுடைய அணியின் சார்பிலும் வேட்பாளரைக் களமிறக்குவோம் என்ற ஓ.பி.எஸ்., ‘ஒருவேளை பா.ஜ.க போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவளிப்போம்’ என்றும் அறிவித்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கக் கூடாது. பா.ஜ.க வெற்றி பெறவா அ.தி.மு.க என்கிற கட்சி இயங்குகிறது... கமலாலயத்துக்கு ஓ.பி.எஸ் சென்றபோது அவரை யாரும் மதிக்கக்கூட இல்லை. மூன்று முறை முதல்வர், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரான அவரை வரவேற்க அண்ணாமலை வெளியில்கூட வராமல் அவமானப்படுத்தினார். ‘ஆதரவு கேட்கிறீர்கள்... டெல்லியில் கேட்டுத்தான் சொல்ல முடியும்’ என அலட்சியமாகப் பேசியதோடு, கமலாலய வாசலில் ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, கிளம்பிப் போய்விட்டார் அண்ணாமலை.
சி.பி.ராதாகிருஷ்ணன்தான் எங்களை வழியனுப்பினார். ஆனால், இந்த அவமானத்தைக் கொஞ்சம்கூட ஓ.பி.எஸ் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஏ.சி.சண்முகத்திடம் பேசிவிட்டு வெளியே வந்த ஓ.பி.எஸ்., ‘அ.தி.மு.க ஒன்றுபட வேண்டுமென்பதே பிரதமர் மோடியின் விருப்பம். அதற்கு யார் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்’ என்றார். அதாவது, மோடிக்கு எதிராக எடப்பாடி செயல்படுவதைக் குறிப்பிட்டு ‘ஜி-யின் பேச்சைக் கேட்க மாட்டீங்களா?’ என எடப்பாடியை பா.ஜ.க-வுடன் மோதவிடப் பார்த்தார். ஆனால், அது பூமராங் ஆகிவிட்டது. ‘மோடியா, லேடியா எனக் கேட்ட கட்சி அ.தி.மு.க. இந்தக் கட்சியின் உள்விவகாரத்தில் தலையிட மோடி யார்?’ என எடப்பாடி அணியினர் எழுப்பும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இருக்கும் நிலையில், அந்தப் பதவிக்கேற்ற வகையில்தான் அவர் பேசியிருக்க வேண்டும். தேவையில்லாமல் பா.ஜ.க-வுக்கு ஆதரவளிப்பேன் எனப் பேசி, இப்போது அவர்கள் பின்வாங்கிக்கொண்ட சூழலில் அவமானப்பட வேண்டியதாகிவிட்டது” என்றனர்.
“வேட்பாளருக்கு என்னய்யா பண்றது?” - அந்தரத்தில் பன்னீர்!
பா.ஜ.க காலை வாரிவிட்டதால், தன் தரப்பில் சுயேச்சையாக வேட்பாளரைப் போடுவதற்குக்கூட தடுமாறிப்போயிருக்கிறாராம் பன்னீர். கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தன் அணி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “வேட்பாளருக்கு என்னய்யா பண்றது?” எனக் கேட்டிருக்கிறார் பன்னீர். சாய்ஸுக்குப் பெயர்களைச் சொல்லக்கூட ஆளில்லாமல் சுற்றியிருந்தவர்கள் தவித்திருக்கிறார்கள். கடைசியாக, முருகானந்தம் என்பவரின் பெயர் அலசி எடுக்கப்பட்டிருக்கிறது.

பன்னீர் ஆதரவு மாவட்டச் செயலாளர் ஒருவர், “ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க பொருளாளராக இருந்த முருகானந்தம், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் எங்கள் பக்கம் வந்தார். எங்கள் அணியில், அவருக்கு ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் அவரையே வேட்பாளராக நிறுத்தத் தீவிரமாகியிருக்கிறார் ஓ.பி.எஸ். ஈரோடு கிழக்கில் எங்கள் பக்கம் இருப்பதில் ஓரளவுக்குப் பிரபலமானவர் அவர்தான். ஆனால், ‘என்னால் செலவு செய்ய முடியாது. நீங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்’ என்று சொல்லிவிட்டார் முருகானந்தம். வேட்பாளரைப் பிடிப்பதற்கே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கவேண்டியதாகிவிட்டது. இனி, செலவுக்கு என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை. பா.ஜ.க குழப்பியதாலும், ஓ.பி.எஸ்-ஸின் அவசரத்தாலும் அவரோடு சேர்ந்து நாங்களும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். எங்களால் விருப்ப மனுவைக்கூடப் பெற முடியவில்லை, அதற்கு முறையாக ஓர் இடம்கூட இல்லை என்பதுதான் யதார்த்த நிலை.
ஓ.பி.எஸ்-ஸின் வீட்டில் வைத்தா விருப்ப மனுவை வாங்க முடியும்?
தேனி நாடாளுமன்றத் தேர்தலில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஓ.பி.ரவீந்திரநாத். அதே இளங்கோவனை எதிர்த்துதான், எடப்பாடி களமிறங்குகிறார். இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி தோற்றால், ‘பார்த்தீர்களா... என் மகன் எதிர்த்து நின்று வென்ற இளங்கோவனிடம் தோற்றுப்போயிருக்கிறார் எடப்பாடி. இரட்டைத் தலைமை, இரட்டை இலை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா... அ.தி.மு.க தோற்றதற்கு எடப்பாடிதான் காரணம்’ எனப் பேசத் திட்டமிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த இடைத்தேர்தலே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாணியில் ரத்தாகிவிடும் என்கிற கணக்கும் பன்னீருக்குள் இருக்கிறது. அதிகப்படியான பட்டுவாடாப் புகார்கள் எழுந்தால், கண்டிப்பாக இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்துவிடும். அப்படி நடந்தாலும் தனக்கு லாபம்தான் எனக் கணக்கு போடுகிறார் ஓ.பி.எஸ். இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில், சூழலின் விபரீதம் புரியாமல் கூலாக அவர் ஊருக்குக் கிளம்பிவிட்டார். ஜனவரி கடைசியில்தான் சென்னைக்கு வருகிறார். அதன் பிறகுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றனர் ஆற்றாமையுடன்.
இடைத்தேர்தலை முன்வைத்துத் தன் பலத்தை நிரூபிக்கப் பார்த்த அண்ணாமலை, கட்சி சீனியர்களின் எச்சரிக்கையால் பின்வாங்கியிருக்கிறார். அதற்குள் அவர் அடித்த அவசர பல்டிகளால் அவர் மூக்கு மட்டுமல்ல, கட்சியின் இமேஜும் டேமேஜ் ஆகிவிட்டது. எடப்பாடியைக் கோத்துவிடுவதாக நினைத்து, பா.ஜ.க-வுக்குக் கொடிபிடிக்க கச்சைகட்டிய பன்னீரை பா.ஜ.க-வே அந்தரத்தில் விட்டுவிட, வேறு வழியில்லாமல் வேட்பாளரை நிறுத்தியே ஆகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் பன்னீர். அந்த வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறாமல் போனாலும், டெபாசிட் பறிபோனாலும் பன்னீரின் இமேஜ் மொத்தமாக பஸ்பமாகிவிடும். யாருக்கு ஆதரவு என அறிவிப்பதில் அண்ணாமலைக்கு இன்னும் பிரச்னை இருக்கிறது. வேட்பாளரை நிறுத்துவது தொடங்கி, ரிசல்ட் வரை பன்னீருக்குத் திரும்பிய பக்கமெல்லாம் சிக்கல்தான். பரபரக்கும் ஈரோடு தேர்தல் அரசியலில், இனி ஆக்ஷன் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது!