அலசல்
சமூகம்
Published:Updated:

“கொடியை ஆட்டிக்கிட்டு வராதீங்க!” - கூட்டணி ‘குய்யோ... முய்யோ’

கூட்டணி ‘குய்யோ... முய்யோ’
பிரீமியம் ஸ்டோரி
News
கூட்டணி ‘குய்யோ... முய்யோ’

தறிப்பட்டறை வைத்திருப்போரிடம் மின்கட்டண உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள்தான் எதையும் வெளிப்படையாகப் பேச முடியாத தர்மசங்கடத்தில் இருக்கிறோம்.

இடைத்தேர்தல் சூடு ஈரோட்டில் எகிற ஆரம்பித்திருக்கிறது. வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களை நடத்தி, இரண்டு பெரிய கட்சிகளும் களத்தில் தீவிரமாகிவிட்டன. ஆனால், அவர்களின் கூட்டணிக்குள்தான் குழப்ப குஸ்திகள் ‘குய்யோ முய்யோ’ சத்தத்தை எழுப்பியிருக்கின்றன. “பிரசாரத்தில் உங்க கொடியை ஆட்டிக்கிட்டு வராதீங்க...” என காங்கிரஸ் கட்சியினருக்கு தி.மு.க நிர்வாகிகள் ‘அன்பு’க் கட்டளை போட்டிருப்பதால், கதர்கள் கதறுகிறார்கள். இதேநிலைதான் அ.தி.மு.க கூட்டணியிலும். “நல்லாப்போற பிரசாரத்துல உங்க கொடியைக் காட்டிக்கிட்டு தயவுசெய்து வந்துறாதீங்கப்பா. கிடைக்குற ஓட்டும் கிடைக்காது...” என தாமரைச் சொந்தங்களை நோகாமல் நோகடிக்கிறார்கள் இலைக் கட்சி நிர்வாகிகள். பிரசாரத்தின் தொடக்கத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் ஈகோ மோதல், பூத் கமிட்டி நியமனங்களில் நிலவிய குழப்பங்கள் ஓரளவுக்குச் சரியான நிலையில், தற்போது கூட்டணிக் குழப்பங்கள் இரண்டு கூட்டணிகளிலுமே சூடுபறப்பதுதான் தேர்தல் களத்தை வெப்பமயமாக்கியிருக்கிறது!

“கட்சிக்கொடியைக் கொண்டுவராதீங்கப்பா..!”

ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள் காங்கிரஸ் கொடியைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. எங்கும் தி.மு.க கொடிதான். காலை 8 மணிக்கெல்லாம் தி.மு.க-வினரின் பிரசாரம் ஆரம்பித்துவிடுகிறது. பிரசாரத்துக்கு காங்கிரஸ்காரர்கள் விருப்பப்பட்டு வந்தாலும், “வேட்பாளர் வரும்போது பிரசாரத்துக்கு வந்தால் போதும். ஏன் வெயில்ல அலையுறீங்க...” என நாசுக்காகக் கழற்றிவிடுகிறார்கள் தி.மு.க-வினர்.

நம்மிடம் பேசிய காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் சிலர், “களத்தில் தி.மு.க மட்டுமே இருக்க வேண்டுமென்பதில் அந்தக் கட்சி நிர்வாகிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். பிரசாரத்துக்கு காங்கிரஸ் கொடியோடு நாங்கள் சென்றால், ‘கட்சிக்கொடியையெல்லாம் கொண்டு வராதீங்கப்பா. இது தளபதி ஸ்டாலின் முன்னின்று சந்திக்கிற தேர்தல். நாங்கதான் செலவு பண்றோம், களப்பணி செய்யறோம். தி.மு.க கொடிதான் எல்லா இடத்துலயும் இருக்கணும். நீங்க போயிட்டு, வேட்பாளர் வரும்போது வாங்க... எங்க பின்னாடியே வந்து தொல்லை பண்ணாதீங்க. இந்த ஏரியாவை நாங்க பார்த்துக்குறோம்’ என விரட்டாத குறையாக வெளியேறச் சொல்கிறார்கள். இதனால், தேர்தல் பணிக்காக வெளியூரிலிருந்து வந்திருந்த காங்கிரஸ்காரர்கள் பலரும் அவமானத்தைச் சந்திக்க முடியாமல் சொந்த ஊருக்கே புறப்பட்டுவிட்டனர்.

கட்சியின் தன்மானம் பறிபோவதைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் கவலைப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, வேட்பாளர் அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு நாள்கள் மட்டுமே ஈரோட்டில் இருந்தார். அதன் பிறகு அவர் இந்தப் பக்கம் வரவே இல்லை. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியோ, ‘எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பிரசாரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை’ என டெல்லிக்கே கடிதம் அனுப்பிவிட்டு ஓய்வில் இருக்கிறார். சீனியர் தலைவர்களான தங்கபாலு, கிருஷ்ணசாமி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் ஈரோட்டில் என்ன நடக்கிறது என்பதைக்கூட தெரிந்துகொள்ள விரும்பாமல் ஒதுங்கியிருக்கிறார்கள்.

“கொடியை ஆட்டிக்கிட்டு வராதீங்க!” - கூட்டணி ‘குய்யோ... முய்யோ’

பட்டியலினத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பலமுறை பேசியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்பதால், அப்பகுதி பட்டியலின மக்கள் “இளங்கோவனை பிரசாரத்துக்கு எங்கள் பகுதிக்குள் அழைத்து வந்துவிடாதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயம் இளங்கோவனை அப்செட் ஆக்கியிருக்கிறது. அந்த வருத்தத்தில், இரண்டு நாள்கள் பிரசாரத்துக்குக்கூட அவர் வரவில்லை. வீட்டில் ரெஸ்ட் எடுத்தபடியே ‘தொண்டை சரியில்லை. நீங்களே வாக்குச் சேகரியுங்கள்’ என்று சொல்லிவிட்டார் அவர். சீனியரான இளங்கோவனே விமர்சனங்களுக்காகச் சுணங்கிவிட்டால், காங்கிரஸ் தொண்டர்கள் என்ன செய்வார்கள்... ‘தி.மு.க-வினர் எங்களை மதிப்பதில்லை’ என காங்கிரஸ் தலைவர்களிடம் புகாரளித்தாலும்கூட, ‘செலவு பண்றது அவங்க... இந்த வெற்றிக்குக் காரணம் அவங்கன்னு சொல்ல விரும்புறாங்க. சொல்லிட்டுப் போகட்டுமே... நமக்கு வெற்றிதானே முக்கியம்... விட்டுட்டுப் போய் மத்த வேலைகளைப் பாருங்க. அவங்களைத் தொந்தரவு செய்யாதீங்க. கூட்டணிக்குள்ள சலசலப்பு வேண்டாம்’ என்று எங்கள் தலைவர்களே கூலாகச் சொல்கிறார்கள். வெற்றி தோல்வியெல்லாம் அப்புறம். ஒரு தேசியக்கட்சியை இப்படிப் போகிறபோக்கில் அவமானப்படுத்துவதைத் தலைவர்கள் யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தல் சீட் பங்கீட்டில் அழுததுபோல, நிச்சயமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் சீட்டுக்கு அழவேண்டி வரும் என்று இப்போதே புரிகிறது. இதை யாரிடம் சொல்லி அழுவது...” எனப் புலம்பித் தீர்த்தார்கள்.

“தி.மு.க வெற்றியா... கூட்டணி வெற்றியா..?” கூட்டணிக்குள் குஸ்தி!

தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க உள்ளிட்டோருடனும் தி.மு.க நிர்வாகிகள் இதே போன்ற இறுக்கமான போக்கையே கடைப்பிடிப்பது, கூட்டணிக்குள் மனக்கசப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நம்மிடம் பேசிய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிலர், “தறிப்பட்டறை வைத்திருப்போரிடம் மின்கட்டண உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள்தான் எதையும் வெளிப்படையாகப் பேச முடியாத தர்மசங்கடத்தில் இருக்கிறோம். ஆனாலும், அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நாங்கள் பிரசாரத்துக்கு வர விருப்பப்பட்டால்கூட, தி.மு.க-வினர் எங்களை வரவேற்பதில்லை. ‘இவங்க நம்மோடு வந்தா மக்களுக்கு நாம செய்யாமல்விட்டதெல்லாம் ஞாபகம் வந்துடும்ப்பா. கம்யூனிஸ்ட்டுங்களும் சும்மா சும்மா கேள்வி கேப்பாங்க. நமக்குச் சரிப்பட்டு வராது’ என ஒதுக்கிவிடுகிறார்கள். செயல்வீரர்கள் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொண்டதோடு சரி... அதன் பிறகு, தி.மு.க-தான் தேர்தலை நடத்துகிறது. இந்தத் தேர்தல் வெற்றியை, முழுவதும் தி.மு.க வெற்றியாகக் கொண்டாட நினைக்கிறார்கள். அதற்காகக் களத்தில் எங்களை உதாசீனப்படுத்துவதுதான் வேதனையளிக்கிறது” என்றனர்.

சமீபத்தில், மெரினாவில் கருணாநிதி நினைவாக பேனா சிலை வைப்பது தொடர்பான கேள்விக்கு, “நினைவுச்சின்னம் அமைப்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நிதி நெருக்கடியான சூழலில் இதற்குக் கூடுதலான பணம் செலவு செய்ய வேண்டுமா என்ற கேள்வி வருகிறது” எனப் பேசினார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு, “ஈரோட்டுக் கசப்பின் வெளிப்பாடுதான் இப்படி விமர்சனமாக வெளிவருகிறது” என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

“கொடியை ஆட்டிக்கிட்டு வராதீங்க!” - கூட்டணி ‘குய்யோ... முய்யோ’

பெயர் குறிப்பிட வேண்டாமென்கிற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர், “மக்களிடம் அரசுக்கு எதிரான மனநிலை பெரிய அளவில் இல்லை. ஆனால், மக்களுக்கு இன்னும் இந்த அரசின்மீது பெரிய அளவில் பிடிப்பும் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விவகாரம், தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தம், தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகளின் அட்ராசிட்டிகள் உள்ளிட்டவையெல்லாம் களத்தில் விரிவாகப் பேசப்படுகின்றன. ஆனால், தி.மு.க-வினர் ஒரு குருட்டு தைரியத்திலும், முரட்டு நம்பிக்கையிலும் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால், ‘நீங்கள் பிரசாரத்துக்கு வரவே வேண்டாம். நாங்களே வெற்றியை ஈட்டித் தருகிறோம்’ என முதல்வரிடம் சொல்லும் அளவுக்கு இருக்கிறார்கள். ஆனால் ‘கள யதார்த்தம் அப்படி இல்லை’ என நாங்களும் உளவுத்துறையும் சற்று அழுத்தமாக எச்சரித்த பிறகுதான், இரண்டு நாள்கள் ஈரோட்டில் பிரசாரம் செய்ய முடிவெடுத்தார் முதல்வர்” என்றார் விரிவாக.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன்தான் தேர்தல் பணிக்குழுவை கவனிக்க நியமிக்கப்பட்டார். ஆனால் ‘அவரின் செயல்பாடுகளில் திருப்தியில்லை’ என தி.மு.க நிர்வாகிகள் ரிப்போர்ட் அளிக்கவே, தற்போது திருமாவளவனே நேரடியாகக் களத்தில் இறங்குகிறாராம். “நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குப் பின்பாக, பிப்ரவரி 13-ம் தேதிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தில் திருமாவளவன் கலந்துகொள்ளவிருக்கிறார்” என்கிறார்கள் சிறுத்தைகள்.

தி.மு.க தரப்பில் பேசிய அமைச்சர் ஒருவர், “ஒன்றை முதலில் சொல்ல வேண்டும். இது தி.மு.க-வுக்கான தேர்தல். முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 20 மாத ஆட்சிக்கு மக்கள் தரப்போகும் மரியாதை. இதில் எங்கள் பலத்தால் முழுமையாக வெல்ல நினைக்கிறோம். வெற்றியை பாதிக்கும் துரும்பைக்கூட நாங்கள் விலக்கிவைக்கவே நினைக்கிறோம். அந்த வகையில், காங்கிரஸின் கோஷ்டி அரசியல் நிச்சயம் எங்கள் இலக்குக்குத் தடைதான். எங்களை மென்மையாகவேணும் தொடர்ந்து விமர்சித்துவருகிறவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்களை அளவோடு இணைத்துக்கொள்ளத்தான் செய்கிறோம். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை சிந்தனைச் செல்வன் சரியாகப் பணியாற்றவில்லை. அதைத் தாண்டி, களத்தில் அவர்களுடன் பணியாற்றுவதில் எங்களுக்குச் சிக்கல் ஒன்றும் இல்லை” என்றார் கூலாக.

“கொடியை ஆட்டிக்கிட்டு வராதீங்க!” - கூட்டணி ‘குய்யோ... முய்யோ’

“ஏம்ப்பா, நீங்க வராதீங்க... உங்க கொடியைப் பார்த்தாலே ஓட்டு போயிடும்..!”

தி.மு.க-வில் மட்டுமல்ல, அ.தி.மு.க-வுக்குள்ளும் குழப்ப கும்மியின் சத்தம் நாளுக்கு நாள் கூடுகிறது. கிட்டத்தட்ட இலைக் கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பா.ஜ.க., மீண்டும் வம்படியாக வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. ‘தாமரை - இலை’ நெருக்கத்தை டெல்லி விரும்பினாலும், களத்தில் அ.தி.மு.க-வினர் அதைக் கொஞ்சமும் விரும்பவில்லை என்பதைத்தான் கள நிலவரங்கள் சொல்கின்றன.

பா.ஜ.க-வின் கொங்கு மண்டல சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம். “தேர்தல் என்று அறிவித்தபோதே, எங்களைக் கலந்தாலோசிக்கவில்லை.வேட்பாளரையும் அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி, அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க-வினர், எங்களிடம் சிடுசிடுவெனவே இருந்தனர். ஆர்வமாக, ‘பிரசாரத்துக்கு எப்போது வர வேண்டும்?’ என நாங்கள் கேட்டபோது, ‘நீங்க வரவே வராதீங்க... உங்க கொடியைப் பார்த்தாலே வர்ற ஓட்டும் வராமப் போயிடும்’ என நேரடியாகவே முகத்திலடித்ததுபோலக் கூறினார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். தவிர, அவர்களின் பிரசாரப் பதாகைகளில், பேனர்களில், மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, அண்ணாமலை ஆகியோரின் படங்களை முற்றிலுமாகத் தவிர்க்கிறார்கள். நாங்கள் அ.தி.மு.க சீனியர்களிடம் இது குறித்து முறையிட்ட பிறகு, இப்போது ஒருசில இடங்களில் மோடியின் படத்தை மட்டும் வைக்கிறார்கள்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியினர் தொடர்ந்து எல்லை மீறிவருகிறார்கள். ‘இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு’ என மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்த ட்வீட்டுக்குக் கீழே, பின்னூட்டங்களில் கண்டபடி விமர்சிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். ‘போங்கய்யா உங்களிடம் இப்போது யார் ஆதரவு கேட்டது...’, ‘நீங்க தயவுசெய்து ஆதரவு கொடுக்காதீங்க... அதுதான் எங்களுக்கு நல்லது’, ‘நீங்க சும்மா இருந்தா போதும், அதுவே எங்களுக்கு வெற்றியாக அமையும்’ என்பதுபோலத் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். இதையெல்லாம் இலைக் கட்சி சீனியர்கள் கண்டுகொள்வதே இல்லை. உளவியல்ரீதியாக எங்களை ரொம்பவே அட்டாக் செய்வதைப்போலவும், கிண்டல் செய்வதுபோலவும் பேசுகிறார்கள். நாங்களும் பதிலடி கொடுத்தால் அது சண்டையில் போய் முடியும். எனவே, கூட்டணி தர்மப்படி அமைதி காக்கிறோம். எங்களுடன் நெருக்கமாக இருப்பதால் ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன் உள்ளிட்டோருக்கும் இதுபோல நெருடலை ஏற்படுத்தியிருக்கின்றனர் அ.தி.மு.க-வினர்” என்று குமுறினார்கள்.

இளங்கோவன், அழகிரி, திருமாவளவன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன்
இளங்கோவன், அழகிரி, திருமாவளவன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன்

‘பாரத் மாதா கி ஜெய்’ - வீம்புக்கு வம்பிழுக்கும் பா.ஜ.க?

அ.தி.மு.க தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் தலைவர்கள் சிலர், “நாங்கள் ஏ.சி.சண்முகத்திடம் ஆதரவு கேட்டபோதும், இங்கிருந்தால் தேவையற்ற சர்ச்சை ஏற்படும் என ரஷ்யாவுக்குப் போய்விட்டார். மேலும், எங்களைக் குறிப்பிடாமல் ‘பா.ஜ.க-வுக்கு ஆதரவு’ எனவும் சொன்னார். ஜான் பாண்டியனும் உடனே எங்களை ஆதரிக்காமல், கமலாலய முடிவுக்காகக் காத்திருந்தார். ஆனால், அடுத்தடுத்த காட்சிகளால் அ.தி.மு.க-வின் பலம் என்னவென்பதை பா.ஜ.க உணர்ந்தது. வேறு வழியின்றி எங்களுக்கு ஆதரவும் அளித்தது. அவர்களைப் பின்பற்றி சண்முகம், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோரும் எங்களுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். ஆனால், தொடக்கத்தில் இவர்கள் நடந்துகொண்டவிதம் அ.தி.மு.க தொண்டர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது உண்மை. அதனால்தான் களத்தில் இணைந்து பணியாற்றுவதில் இன்னும் தயக்கம் நிலவுகிறது.

பா.ஜ.க-வினரைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது பெரும் ஆபத்தாகத் தெரிகிறது. கடந்த முறை யுவராஜ் இந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது, சிறுபான்மையினர் பகுதிக்குள் பிரசாரத்துக்குப் போனபோதெல்லாம், பா.ஜ.க கொடியை வீம்புக்கு உயர்த்தி ‘பாரத் மாதா கி ஜெய்’ எனக் கத்தினார்கள். இவர்களின் சவுண்டுக்கு, கிடைக்கும் ஓட்டும் கிடைக்காமல் போய்விடும். எங்களின் வெற்றிக்காக பா.ஜ.க வேலை செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எடப்பாடி ஒற்றைத் தலைமையாக வந்துவிடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க., எடப்பாடியார் வெற்றிபெறுவதை எப்படி விரும்பும் என்கிற கேள்வியும் இருக்கிறது. இது தவிர, சிறுபிள்ளைத்தனமாக லோக்கலில் சின்னம் வரைவதற்காக வைத்திருந்த பல இடங்களைக் கைப்பற்றிக்கொண்டு, ‘நாங்க மோடி ஜி, அண்ணாமலை ஜி படம் வரைவோம்’ என வம்பு செய்கிறார்கள்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சிறு, குறு நிறுவனங்களும், அவற்றில் பணியாற்றுபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு மூலம் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். சிறுபான்மையினர் வாக்குகளும் இங்கு அதிகமாக இருக்கின்றன. இந்த வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே, பூனையை மடியில் கட்டிக்கொண்டு எங்களால் தேர்தல் பணி செய்ய முடியாது” என்றனர் காட்டமாக.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட யாருக்கும் தேர்தல் பரப்புரைக்கான தேதியை அ.தி.மு.க தரப்பிலிருந்து இன்னும் ஒதுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு வந்துவிட்டுச் சென்ற பின்னரே ஈரோடு தேர்தல் களத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறாராம் அண்ணாமலை. “அவர் தேர்தல் முடிந்த பிறகு களத்துக்கு வரட்டும். அதுதான் அவருக்கும் நல்லது... எங்களுக்கும் நல்லது” என்கிறது இலைக் கட்சி வட்டாரம்.

இரண்டு கூட்டணியிலும் குழப்ப குஸ்திகள் கனஜோராக நடந்துவருகின்றன. இரண்டு முகாம்களிலும் ‘குய்யோ முய்யோ’ சத்தம் பலமாகக் கேட்கிறது. இரு திராவிடக் கட்சிகளிடமும் கடுமையாகச் சொல்லடி வாங்கினாலும், வலித்தாலும் வலிக்காததுபோல பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு தேசியக்கட்சிகளும் வேறு வழியின்றி முனகிக்கொண்டிருக்கின்றன. இந்தக் குழப்பங்கள், மனக்கசப்புகள், அவமானங்கள், கோபங்களெல்லாம் தேர்தலில் யாருக்குச் சாதகமாக... பாதகமாக அமையுமோ?