அலசல்
சமூகம்
Published:Updated:

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
News
தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்

அவரின் பிரதான நோக்கம் ஒன்றிணைவதுதான், அதேசமயத்தில் ரொம்பவும் இறங்கிப்போய்விட முடியாது. எனவேதான் ‘தனித்துப்போட்டி’, ‘பா.ஜ.க-வுக்கு ஆதரவு’ எனவும் தன் தரப்பில் உறுதியாக இருந்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட ஜனவரி 18-ம் தேதியிலிருந்தே பரபரப்பாகிவிட்டது தமிழக அரசியல் களம். ‘தொகுதி காலியாகி இரண்டே வாரங்களில் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டார்களே..?’ என்கிற ஆச்சர்யத்தோடும், ‘என்ன பிளானோ?’ என்கிற சந்தேகத்தோடும்தான் தொடங்கின தேர்தல் கணக்குகள். எந்தப் பதற்றமும் இல்லாமல் கூலாக, `காங்கிரஸுக்குத்தான் தொகுதி’ எனச் சொல்லிவிட்டு அடுத்த நாளே பிரசாரக் களத்தில் குதித்துவிட்டது தி.மு.க. ஓரிரு நாள்களில் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டார். ஆனால், அ.தி.மு.க முகாமோ ஈகோ யுத்தத்தில் தகிக்கிறது. எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இரண்டு தரப்பும் தனித்து வேட்பாளர்களைக் களமிறக்கவும், அதற்கான ஆதரவு திரட்டவும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்குப் படையெடுத்தன. கூட்டணிக் குழப்பம் ஒரு பக்கம் கும்மியடிக்கும் நிலையில், ‘சின்னம் என்னவாகும்?’ என்ற கேள்விக்கு விடை தெரியாத இரு தரப்பும், விருப்ப மனுக்களைப் பெற்றுவருகின்றன. அ.தி.மு.க இரண்டுபட்டு பலவீனமாகி நிற்கும் சூழலைப் பயன்படுத்தி, இடைத்தேர்தலில் போட்டியிட்டுத் தாங்கள் வளர்ந்துவிட்டதான பிம்பத்தைக் கட்டமைக்கும் வியூகத்திலும், ஆதரவு மட்டும் கொடுத்துவிட்டு எச்சரிக்கையாக விலகி நின்றுவிடலாம் என்கிற மனநிலையிலும் ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ கதையாகக் குழம்பி நிற்கிறது பா.ஜ.க. நொடிக்கு நொடி நிலைப்பாடுகள் மாறும் சூடான சூழலால் தீப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது ஈரோடு அரசியல். புகைச்சல்களுக்கு நடுவே என்னதான் நடக்கிறது என விசாரணையில் இறங்கினோம்...

அ.தி.மு.க கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட த.மா.கா., தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது. `இந்த முறை, ஒரு தேசியக்கட்சியாக நாம் போட்டியிட வாய்ப்பு கேட்கலாம்’ என்ற எண்ணத்தில், தேர்தல் பணிக்குழுவை அமைத்து வேலைகளைத் தொடங்கியது பா.ஜ.க. ஆனால், அ.தி.மு.க-வே போட்டியிடப்போவதாக எடப்பாடி தரப்பில் அதிரடியாக அறிவித்ததோடு, விருப்ப மனு விநியோகம் வரை சென்றுவிட்டதால், கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தல் கணக்கில் தி.மு.க மீது ஒரு கண் வைத்திருக்கும் இன்னொரு கூட்டணிக் கட்சியான பா.ம.க ‘யாருக்கும் ஆதரவில்லை’ என ‘உஷாராக’ அறிவித்துவிட்டது. ராகுலுடன் நெருக்கம் காட்டிவரும் ம.நீ.ம-விடம் ஆதரவு கேட்டிருக்கிறது காங்கிரஸ். இதற்கிடையே நா.த.க-வும், தே.மு.தி.க-வும், அ.ம.மு.க-வும் தனித்துப்போட்டி என கோதாவில் குதித்திருக்கின்றன.

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க

சின்னத்தை ஒதுக்கினால் நல்லது... இல்லையா, ரொம்ப ரொம்ப நல்லது!

இந்தப் பின்னணிகள் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் இருவர், “இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே பா.ஜ.க சார்பில் எங்களிடம் பேசினார்கள். அப்போது ‘அ.தி.மு.க-வுக்குள் உட்கட்சி விவகாரம் உச்சத்திலிருக்கும் இந்தச் சமயத்தில் எடப்பாடி ஒருவரை நிறுத்தினால், போட்டிக்கென பன்னீரும் இறக்குவார். இதனால், இரட்டை இலைச் சின்னம் முடங்கும் சூழல் உருவாகும். இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கே எப்போதும் சாதகமாக இருக்கும். இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் அ.தி.மு.க வெற்றிபெறுவது சாத்தியமில்லை. எனவே, இரட்டை இலைக்கு அடுத்தபடியாக, எங்களின் தாமரைச் சின்னம் பிரபலம். தமிழ்நாட்டில் இப்போது எங்களுக்கென்று கணிசமாக வாக்குவங்கியும் உருவாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டால் டெல்லியிருந்தும் உதவி கிடைக்கும். எனவே, எங்களுக்காக நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டார்கள்.

தமிழ்நாட்டில் வேறெந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருந்தாலும், நாங்கள் விட்டுக்கொடுத்திருப்போம். ஆனால், ஈரோடு கிழக்குத் தொகுதி எங்களின் கோட்டை. 2008-ல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு, நடந்த இரண்டு தேர்தல்களிலும் அடுத்தடுத்து நாங்கள்தான் வெற்றிபெற்றோம். அதுவும் 2011-ல் கூட்டணியிலிருந்த தே.மு.தி.க வேட்பாளரை நிறுத்தி 53 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றோம். 2021 தேர்தலில்கூட வெறும் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திருமகன் ஈ.வெ.ரா-விடம் தோற்றோம். அதற்குக் காரணமும்கூட ஈரோடு உட்கட்சிப் பிரச்னைதான். இந்த முறை அதையும் சரிசெய்துவிட்டோம். எனவே, எங்களுக்கு வெற்றி உறுதி. எல்லாவற்றுக்கும் மேலாக, அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை எடப்பாடிதான் என்பதை நிறுவவும், இரட்டை இலைச் சின்னத்தை மீட்கவும் கிடைத்திருக்கும் வாய்ப்பாக இதை நாங்கள் பார்க்கிறோம். எனவேதான் நாங்கள் போட்டியிடுவதில் உறுதியாக நிற்கிறோம்.

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க

ஒருவேளை கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க தனித்துப்போட்டியிட்டால், எங்கள் சின்னம் சிக்கலுக்கு உள்ளாகலாம். அதையும் நாங்கள் அறியாமலில்லை. இன்றைய நிலைமையில், தேர்தல் ஆணையம் வேறு, பா.ஜ.க வேறு என்று நாங்கள் பார்க்கவில்லை. அதற்கு மகாராஷ்டிரா போன்ற உதாரணமும் இருக்கிறது. ஒருவேளை சின்னத்தை முடக்கினால், அதற்கு முழு முதற்காரணம் பா.ஜ.க என்பதைச் சொல்லியே நாங்கள் பிரசாரம் செய்வோம். அதற்கு ஓ.பி.எஸ்-ஸும் உடந்தை என்பதை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்வோம். இரட்டை இலைச் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கினால் நல்லது. இல்லையென்றால், ரொம்ப ரொம்ப நல்லது. இத்தனை காலம் தூக்கித் திரிந்த பா.ஜ.க எனும் சுமையை இந்த இடைத்தேர்தலில் இறக்கிவைத்துவிடுவோம். இதனால், நாங்கள் இழந்த 20 சதவிகிதச் சிறுபான்மையினர் வாக்குகளையும் மீட்டெடுப்போம். ஈரோடு கிழக்கில், பா.ஜ.க பெற்ற அதிகபட்ச வாக்குகளே 5,549-தான். எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும். எனவே, தொகுதியை பா.ஜ.க-வுக்குக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்கள் உறுதியாக.

பேக் ஃபயரான பன்னீரின் பேச்சு... பயன்படுத்திக்கொண்ட பா.ஜ.க!

இந்த விவகாரங்கள் குறித்து பன்னீருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ ‘இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு போட்டியிடும்’ என்று அறிவித்த ஜனவரி 20-ம் தேதி இரவு, பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, ‘தேர்தலில் போட்டியிடுவது பெரிய காரியமில்லை. ஆனால் எடப்பாடி தரப்பைவிட அதிக வாக்குகள் வாங்க முடியுமா, அந்த நம்பிக்கை இருக்கிறதா...’ என்ற பேச்சு எழுந்தது. மேலும், நமது இலக்கு கட்சியை ஒன்றிணையச் செய்வதுதான். எனவே, ‘சின்னத்துக்கான படிவத்தில் கையெழுத்திடத் தயார் என்று அழைப்பு விடலாம்’ என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 21-ம் தேதி காலை 8 மணிக்கே பிரஸ் மீட் வைத்து, ‘சின்னத்துக்குக் கையெழுத்து போடத் தயார்’ எனத் தனது தரப்பின் நிலைப்பாட்டை அறிவித்தார் பன்னீர். அவரின் பிரதான நோக்கம் ஒன்றிணைவதுதான், அதேசமயத்தில் ரொம்பவும் இறங்கிப்போய்விட முடியாது. எனவேதான் ‘தனித்துப்போட்டி’, ‘பா.ஜ.க-வுக்கு ஆதரவு’ எனவும் தன் தரப்பில் உறுதியாக இருந்தார். ஆனால், ‘தனித்துப்போட்டி’ என்று பன்னீர் கூறியது மட்டுமே ஹைலைட் ஆகிவிட்டது. இந்த நிலையில், எடப்பாடி தரப்பு கூட்டணித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டதாலும், போட்டியிடுவது குறித்து பா.ஜ.க தரப்பில் இறுதி முடிவு தெரியாததாலும் ஓ.பி.எஸ்-ஸும் ஆதரவு கேட்டு கூட்டணிக் கட்சிகளின் படியேற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பா.ஜ.க-வை வைத்து எடப்பாடியை எதிர்க்க வேண்டும் என்ற பன்னீரின் பிளான் தற்போது, பன்னீரை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் பா.ஜ.க-வின் பிளானாக மாறிவிட்டது. ஆனாலும், தனித்துக் களம் கண்டு எங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை வாக்குகளால் நிரூபிப்போம். பா.ஜ.க எங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்” என்றனர் விரிவாக.

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க

பன்னீரின் செயல்பாடுகளை விமர்சித்து நம்மிடம் பேசிய எடப்பாடி முகாம் முன்னாள் அமைச்சர் ஒருவர், “எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருப்பதைப் பார்த்துத்தான், பா.ஜ.க-வினர் பன்னீரைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். அவரும், `தனித்துப்போட்டியிடுவோம்’, `பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவிப்போம்’, `சின்னம் முடங்கக் காரணமாக இருக்க மாட்டோம்’, `சின்னத்தைப் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறோம்’, `எடப்பாடியுடன் சமாதானம் பேசவும் தயார்’ என இஷ்டத்துக்குக் குழப்பியடித்தார். எடப்பாடியுடனான ஈகோ-வினாலேயே பன்னீர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ‘மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை’ என எடப்பாடி க்ளியராகச் சொல்லிவிட்டார். ஆனால், பன்னீர் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். தனக்குக் கிடைக்காதது எடப்பாடிக்கும் கிடைக்கக் கூடாது என இறுதியில் தனித்துப்போட்டி என இறங்கி, பா.ஜக-வின் கைப்பிள்ளையாகச் செயல்பட்டுவருகிறார் பன்னீர்” என்றார் கொதிப்புடன்.

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க

எடப்பாடியின் நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கும் பன்னீர் தரப்பு நிர்வாகிகளோ, “முழுக்க முழுக்க எடப்பாடி எனும் தனிநபரின் சுயநல முடிவு இது. இதனால், கட்சிக்குத்தான் பாதிப்பு. கூட்டணி மாண்பையும் சீரழிக்கிறார். இது கட்சியின் அடுத்தடுத்த தேர்தல்களில் பிரதிபலிக்கும் என்பது அவருக்குப் புரியவில்லை. பொன்விழா கண்ட சின்னம் முடங்கிவிட வாய்ப்பிருப்பது பற்றித் துளியளவும் கவலை இல்லை அவருக்கு. கட்சியின் நலனுக்காக எவ்வளவு தூரம் இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி கட்சி இணைப்புக் காகப் பேசி வருகிறார் பன்னீர். ஆனால், தனது ஈகோவால் அனைத் தையும் சிதைத்து தி.மு.க-வுக்கு வெற்றியைத் தேடித் தரும் செயலில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி. அம்மாவின் ஆன்மா அவரை மன்னிக்காது” என்றனர் கோபமாக.

வியூகம் - குழப்பம்... ‘க்’ வைத்த அண்ணாமலை!

நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஒருவர், “இடைத்தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்ற மனநிலையில் பா.ஜ.க இல்லை. ஆனால், கூட்டணிக் கட்சியில் இருக்கும் தேசியக் கட்சியான எங்களிடம் கலந்தாலோசிக்காமல், இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக எடப்பாடி தரப்பு தன்னிச்சையாக அறிவித்தது சரியல்ல. அதில் எங்களுக்கு வருத்தம்தான். அவர்களுக்கு எங்களின் தேவையைப் புரியவைக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்தான், எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதப்படுத்தினோம். அவர்களும் எங்களைத் தேடி வந்தார்கள். இன்னும்கூட பல விஷயங்களில் அவர்களுக்கு எங்களின் சப்போர்ட் தேவை.

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க

அ.தி.மு.க பிளவுபட்டு பலவீனமானாலும், ஒன்றுபட்டு வலிமையாக மாறினாலும் இரண்டுமே எங்களுக்குச் சாதகம்தான். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, இந்தக் களத்தில் எங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் கடந்தகாலத் தேர்தல் முடிவுகள், தி.மு.க., அ.தி.மு.க-வின் பலம் உள்ளிட்டவை யதார்த்தத்தில் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக இல்லை. ஒருவேளை குறைவான வாக்குகளைப் பெற்றால், இதுநாள் வரை கட்டியெழுப்பியதற்குச் சரிவாக மாறிவிடும். அதுவும் காங்கிரஸிடம் தோற்றால், அது தேசிய அரசியல் வரை எதிரொலிக்கும். எனவே, டெல்லியைப் பொறுத்தவரை 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான் இலக்கு. அதற்கு, வலிமையான ஒருங்கிணைந்த அ.தி.மு.க தேவை. அதற்காகத்தான் பல வியூகங்களை டெல்லி வகுத்துவருகிறது. ‘நாம் தனித்து நின்றால் என்ன தவறு?’ என்று தலைமைக்குப் பின்னாலிருக்கும் ஒரு சிலர் ஆர்வத்தோடு கேட்கிறார்கள். ஆனால், அடிப்படைக் கட்டமைப்பு இல்லாமல் இடைத்தேர்தலில் நிற்பது தற்கொலைக்குச் சமம். அதேநேரத்தில் பன்னீருக்கு ஆதரவு கொடுப்பதா, எடப்பாடிக்கு ஆதரவு கொடுப்பதா என்பதிலும் பா.ஜ.க-வுக்குள் குழப்பம் நீடிக்கிறது” என்றார்.

இடைத்தேர்தல் விவகாரத்தில், முதலில் எந்தக் கருத்தும் சொல்லாமலிருந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘அவசர கோலத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என்றார். அடுத்த சில மணி நேரத்தில் ‘அ.தி.மு.க ஒரு பெரிய கட்சி; ஜெயித்த கட்சி. அவர்களிடமும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். தி.மு.க-வை வெல்வதற்கு வலுவான வேட்பாளர் வேண்டும். அவருக்குப் பின்னால் எல்லோரும் அணிவகுத்து நிற்க வேண்டும்’ என்றார். இதில், ‘அவர்களிடமும்’ என்ற வார்த்தையிலும், ‘எல்லோரும்’ என்ற வார்த்தையிலும் ‘க்’ வைத்துப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. எனவே, அடுத்தடுத்த நாள்களில் பா.ஜ.க-வின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பது புரிகிறது.

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்... கூல் தி.மு.க?

“அ.தி.மு.க-விலும் பா.ஜ.க-விலும் இவ்வளவு பரபரப்புகள் நடந்துகொண்டிருக்க, தி.மு.க தரப்போ தன்னை கூலாகக் காட்டிக்கொள்கிறது. பெரியாரின் குடும்பத்திலிருந்துதான் வேட்பாளர் வரவேண்டும் என்பதில் தி.மு.க உறுதியாக இருந்தது. ஆனால், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா-வின் இளைய சகோதரர் சஞ்சய் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். திருமகனின் மனைவியும் அரசியலில் ஆர்வமில்லை என்று தவிர்த்துவிட்டார். காங்கிரஸில் வேறு யாருக்கும் சீட் போய்விடக் கூடாது என்கிற நோக்கத்தில்தான் ஸ்டாலின் இதில் தலையிட்டார். அவரின் அன்புக் கட்டளையின் பேரில்தான் தற்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்பது ஃபார்முலாவாக இருந்தாலும், அ.தி.மு.க-வின் வாக்குவங்கி குறித்த அச்சம் தி.மு.க-விடம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான், தேதி அறிவித்த அடுத்த நாளே அமைச்சர்களை ஈரோட்டில் களமிறக்கி, பிரசாரத்தை ஆரம்பித்தது. கே.என்.நேரு தலைமையில், பன்னிரண்டு அமைச்சர்களை உள்ளடக்கிய 32 நிர்வாகிகளை நியமித்து, தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணிக்குள் நிலவும் குழப்பங்கள் சாதகமாக இருந்தாலும், இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய நெருக்கடியில் இருக்கிறது தி.மு.க. அதேசமயம், அரசு ஊழியர்களுக்கு தி.மு.க-மீது எழுந்திருக்கும் விமர்சனம், மின்கட்டண உயர்வால் ஈரோடு சிறு, குறு தொழிலாளர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் அதிருப்தி போன்றவை பாதகமாக அமையவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, கூலாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் கொஞ்சம் அச்சத்தில்தான் இருக்கிறது தி.மு.க” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தீப்பிடிக்கும் ஈரோடு அரசியல்! - ஈகோ அ.தி.மு.க, வியூக பா.ஜ.க, கூல் தி.மு.க

இந்தத் தேர்தலை கௌரவப் பிரச்னையாகக் கருதும் அ.தி.மு.க, உண்மையில் களத்தில் தி.மு.க-வுக்கு வெற்றியை எளிமையாக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது. அடுத்த ஒரு மாதக் காலத்தில் தி.மு.க-வுக்கு எப்படி அ.தி.மு.க டஃப் கொடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே, ஈரோடு கிழக்கில் கட்சிகள் பெறும் வாக்கு சதவிகிதங்கள் அமையும்!