Published:Updated:

உ.பி-யில் மீண்டும் அரியணை ஏறும் பா.ஜ.க! - 2024-ல் மோடிக்கு மாற்று யோகியா?

மோடி, யோகி
பிரீமியம் ஸ்டோரி
மோடி, யோகி

உ.பி-யில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், முதல் மூன்று கட்டங்களில் சமாஜ்வாடி கட்சியின் கைகளே ஓங்கியிருந்ததாகத் தெரிகிறது.

உ.பி-யில் மீண்டும் அரியணை ஏறும் பா.ஜ.க! - 2024-ல் மோடிக்கு மாற்று யோகியா?

உ.பி-யில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், முதல் மூன்று கட்டங்களில் சமாஜ்வாடி கட்சியின் கைகளே ஓங்கியிருந்ததாகத் தெரிகிறது.

Published:Updated:
மோடி, யோகி
பிரீமியம் ஸ்டோரி
மோடி, யோகி

ஐந்து மாநிலத் தேர்தலில் அதிக கவனம்பெற்றது உத்தரப்பிரதேசம்தான்! இந்தியாவிலேயே அதிக தொகுதிகள்கொண்ட (403) உ.பி-யின் தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதுதான் இதற்குக் காரணம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உ.பி தேர்தல் களத்தில், மீண்டும் ஒருமுறை கொடியேற்றியிருக்கிறது பா.ஜ.க. கடந்த முறைபோல 312 இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றாவிட்டாலும், அங்கு தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. `தேர்தலில் முறைகேடு செய்துவிட்டனர், வாக்கு இயந்திரத்தை மாற்றிவிட்டனர்’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க மீது குற்றம்சாட்டினாலும் உ.பி-யில் மீண்டும் யோகி ஆதித்யநாத் ஆட்சி உறுதியாகிவிட்டது. இந்த வெற்றியை எப்படி சாத்தியமாக்கியது பா.ஜ.க? 2024-ல் தேசிய அரசியலில் யோகியின் இடம் என்னவாக இருக்கும்?

பலம்பெற்ற சமாஜ்வாடி... விழித்துக்கொண்ட பா.ஜ.க!

உ.பி-யில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், முதல் மூன்று கட்டங்களில் சமாஜ்வாடி கட்சியின் கைகளே ஓங்கியிருந்ததாகத் தெரிகிறது. மூன்று கட்ட வாக்குப் பதிவுக்குப் பின்னர், பா.ஜ.க-வினர் தொகுதிவாரியாக மேற்கொண்ட ஆய்வுகளில், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி, இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெரிதாகப் பிரிக்கவில்லை என்பதும், ஓ.பி.சி பிரிவினர் மற்றும் இஸ்லாமியர்கள் வாக்குகளை சமாஜ்வாடி கட்சி கணிசமாகப் பெற்றிருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக, விவசாயிகளின் ஆதரவுபெற்ற ராஷ்டிரிய லோக் தளம் கட்சியோடு கூட்டணி அமைத்தது, சமாஜ்வாடிக்குச் செல்வாக்கை அதிகப்படுத்தி யிருப்பதும் தெரிந்தது.

இந்த ஆய்வு முடிவுகளால் விழித்துக்கொண்ட பா.ஜ.க, அதிரடி திட்டங்களை வகுத்தது. குறிப்பாக, ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலிருக்கும் பெண் வாக்காளர்களைக் கவர்வதற்கான வேலைகளில் அந்தக் கட்சி ஈடுபட்டது. கடைசி நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில் டெல்லியின் அதிகாரமும் பணபலமும் பா.ஜ.க-வுக்கு பெருமளவு கைகொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுதான் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்திருக்கிறது. அதேசமயம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள், காசி விஸ்வநாதர் ஆலயம் சீரமைப்பு, மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி பற்றிய பிரசாரங்கள்... என பா.ஜ.க செய்த மத அரசியலுக் கும் நல்ல அறுவடை கிடைத்திருக்கிறது.

உ.பி-யில் மீண்டும் அரியணை ஏறும் பா.ஜ.க! - 2024-ல் மோடிக்கு மாற்று யோகியா?

எழுச்சிபெற்ற அகிலேஷ்!

ஒருகட்டத்தில், உ.பி-யில் சமாஜ்வாடி தலைமையில் ஆட்சி அமையும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்தை மட்டுமே பெற்றிருக்கிறது அந்தக் கட்சி. கடந்த தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்றிருந்த சமாஜ்வாடி, இந்த முறை சிறு சிறு பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 120 இடங் களுக்கு மேல் வென்றிருக்கிறது. கடந்தமுறை 21.82 சதவிகிதமாக இருந்த அந்தக் கட்சியின் வாக்கு வங்கி சுமார் 32 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதையடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் எந்த அணியின் பக்கம் நிற்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன.

காணாமல்போன காங்கிரஸ்... வலுவிழந்த பகுஜன் சமாஜ்!

உ.பி-யில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திணறிவருகிறது காங்கிரஸ். அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள், தலைநகர் லக்னோவிலிருந்து மட்டுமே அரசியல் செய்ததுதான் இதற்குக் காரணம். அதைச் சரிசெய்ய கட்சித் தலைமையால் களமிறக்கப்பட்ட பிரியங்கா காந்தி, மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தார். முக்கிய பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னார். அதில் சிலரை வேட்பாளர்களாகவும் அறிவித்தார். ஆனாலும், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது காங்கிரஸ். உ.பி-யில், பாரம்பர்யம் மிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் காணாமல் போய்விட்டது என்பதைத்தான், இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

உ.பி-யை நான்கு முறை ஆட்சி செய்த மாயாவதியால், இன்று இரண்டு இடங்களில்கூட வெற்றிபெற முடியவில்லை. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ், தலித் மக்களிடம்கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. கட்சியில் மாயாவதி குடும்பத்தாரின் கைகள் ஓங்கியதால், முக்கியத் தலைவர்களையும் நிர்வாகிகளையும் இழந்தது பகுஜன் சமாஜ். கட்சியைத் தோற்றுவித்த கன்சிராமின் குடும்பத்தினரே மாயாவதிக்கு எதிராகக் குரல் கொடுக்க, அவரின் சாம்ராஜ்யம் சுக்குநூறாகி விட்டது.

உ.பி-யில் மீண்டும் அரியணை ஏறும் பா.ஜ.க! - 2024-ல் மோடிக்கு மாற்று யோகியா?

மோடிக்கு மாற்று யோகியா?

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக் கிறார் யோகி. தேர்தலுக்கு முன்பாகவே, `உ.பி-யில் யோகி மீண்டும் அரியணை ஏறினால், 2024-ல் மோடிக்கு மாற்றாக பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்’ என்ற பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் யோகி, உ.பி-யில் ஆட்சியைத் தக்கவைத்திருப்பதால் மீண்டும் பிரதமர் வேட்பாளர் பற்றிய விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், ``2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் யோகியின் பெயரும் இருக்கலாம். ஆனால், அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. மோடி பிரதமர் வேட்பாளர் ஆக்கப்பட்டபோது `குஜராத் மாடல்’ என்பதை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டார்கள். `குஜராத்தின் ஒரு பகுதியை மட்டுமே படம்போட்டுக் காட்டி மோடி வென்றுவிட்டார்’ என்ற குற்றச்சாட்டுகள் தற்போதுவரை இருக்கின்றன. ஆனால், உ.பி-யில் அப்படிப் படம்போட்டுக் காட்டக்கூட யோகிக்கு ஒரு பகுதியும் இல்லை. பல்வேறு விஷயங்களிலும் உ.பி பின்தங்கியிருப்பது நாடறிந்த விஷயம்... இது யோகிக்குப் பெரிய மைனஸ்.

பீகார், உ.பி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலத்தவர்கள் யோகியைப் பிரதமர் முகமாக ஏற்றுக் கொள்வார்களா என்பதும் சந்தேகமே. அது மட்டுமல்லாமல் எந்த மாநிலத்தில் பா.ஜ.க வெற்றிபெற்றாலும், மோடி அலைதான் காரணம் என்பதை பா.ஜ.க-வினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். மேலும், உலக அரங்கில் நடக்கும் பிரச்னைகளுக்கும் மோடியையே கதாநாயகனாகக் காட்டுகின்றனர். அதனால், அடுத்த தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளராக இருக்கலாம் என்று தோன்றுகிறது’’ என்றவர்கள், 2024-ல் மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான சாத்தியங்கள் பற்றியும் பேசினார்கள்...

2024-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழுமா?

``உ.பி-யில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத்து விட்டதால், 2024-ல் மத்தியிலும் மீண்டும் பா.ஜ.க ஆட்சியே அமையும் என்று சொல்லிவிட முடியாது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, உ.பி-யில் பா.ஜ.க-வின் செல்வாக்கை ஓரளவுக்கு அசைத்துப் பார்த்திருக்கிறார் அகிலேஷ். எனவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு வலுவான கூட்டணி அமைத்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு இப்போதிலிருந்தே வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் தொடங்க வேண்டும்... உத்தரப்பிரதேசத் தேர்தல் முடிவுகளும் இதையே உணர்த்துகின்றன” என்கிறார்கள்.

தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில், நான்கு மாநிலங்களைத் தன்வசப்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. பஞ்சாப்பில் மாபெரும் வெற்றியை அறுவடை செய்திருக்கிறது ஆம் ஆத்மி. காங்கிரஸின் பலவீனத்தைப் பயன்படுத்தி, பா.ஜ.க-வும், ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதைத்தான் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன!

உ.பி-யில் மீண்டும் அரியணை ஏறும் பா.ஜ.க! - 2024-ல் மோடிக்கு மாற்று யோகியா?

பஞ்சாப்... அரியணையேறும் ஆம் ஆத்மி!

பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகளில், 92 தொகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் டெல்லியைத் தாண்டி பஞ்சாப்பிலும் அரியணை ஏறுகிறது ஆம் ஆத்மி. பஞ்சாப் மக்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த `டெல்லி மாடல்’ பிரசாரம் பெருமளவு எடுபட்டிருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பஞ்சாப் காங்கிரஸின் உட்கட்சிப்பூசல்களும், ஆட்சி மீதான அதிருப்தியும் ஆம் ஆத்மிக்குக் கைகொடுத்திருக்கிறது. காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் தோல்வி அடைந்திருக்கிறார். பல காங்கிரஸ் அமைச்சர்களும், சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர்களும் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள்.

ஆட்சியிலிருந்த காங்கிரஸுக்கு 18 இடங்களே கிடைத்திருக்கும் நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும், ``பா.ஜ.க-விலிருந்து நம் கட்சிக்குத் தாவிய நவ்ஜோத் சிங் சித்து, முதலில் அமரீந்தரை கட்சியைவிட்டு அனுப்பினார். இப்போது நம்மை ஆட்சியைவிட்டே அனுப்பிவிட்டார்’’ என்று கொந்தளிக்கிறார்கள். பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு விழவேண்டிய பட்டியல் சமூகத்தினரின் வாக்குகளை, சிரோமணி அகாலி தளம் கூட்டணியிலிருந்த பகுஜன் சமாஜ் கட்சி பிரித்துவிட்டதாகவே தெரிகிறது. ஒருகாலத்தில் விவசாயிகளின் ஆதரவைப் பெற்றிருந்த சிரோமணி அகாலி தளமும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஆக மொத்தத்தில், மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியிலிருந்த காங்கிரஸின் கைகளிலிருந்து மேலும் ஒரு மாநிலம் நழுவிச் சென்றுவிட்டது!

உத்தரகாண்ட்... ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமிருக்கும் 70 தொகுதிகளில் 47 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது பா.ஜ.க. இதன் மூலம் உத்தரகாண்டிலும் பா.ஜ.க தனது ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் தாக்கூர், பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க பக்கம் நின்றதே, இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சில முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.க-விலிருந்து காங்கிரஸுக்குத் தாவியதால், கடந்த தேர்தலைவிட (11) சற்று முன்னேறி 19 இடங்களில் வென்று தனது எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொண்டது காங்கிரஸ்.

உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த சிறுபான்மையினரின் வாக்குகளை ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பிரித்ததும் காங்கிரஸின் தோல்விக்கு முக்கிய காரணம்!

மணிப்பூர்... பெரும்பான்மையைப் பிடித்த பா.ஜ.க!

மணிப்பூரில் மொத்தம் இருக்கும் 60 தொகுதிகளில் 32 இடங்களில் வென்றிருக்கிறது பா.ஜ.க. பெரும்பான்மையைப் பிடித்துவிட்ட நிலையில், ஒருவேளை சிறிய சறுக்கல் ஏற்பட்டாலும் மாற்றுக் கட்சியிலிருந்து சிலரை இறக்கி, ஆட்சியைத் தக்கவைக்கும் திட்டத்திலிருக்கிறது பா.ஜ.க. இந்தமுறை தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க, கடந்த தேர்தலைவிட வலுப்பெற்றிருக்கிறது. இடதுசாரிகள் உள்ளிட்ட ஆறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸுக்கு, ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது. மாநிலக் கட்சியான தேசிய மக்கள் கட்சி, தனித்துப் போட்டியிட்டு, 7 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.

கோவா... பா.ஜ.க-வுக்கே சாதகம்!

கோவாவில் மொத்தமிருக்கும் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றிபெற்று, அங்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது பா.ஜ.க. கடந்தமுறை பெரும்பான்மைக்கு 8 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையிலேயே ஆட்சியமைத்த பா.ஜ.க-வுக்கு, ஒரு எம்.எல்.ஏ என்பது பெரிய விஷயமில்லை. எனவே, கோவாவும் பா.ஜ.க வசம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 11 தொகுதிகளில் வென்றிருக்கும் காங்கிரஸ், கோவாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. கோவாவின் மாநிலக் கட்சியான மகாராஷ்டிரவாடி கோமன்தாக் கட்சியோடு கூட்டணி அமைத்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டு இடங்கள் கிடைத்திருக்கின்றன. ஆம் ஆத்மி இரண்டு இடங்களில் வென்று, முதல்முறையாகக் கோவா விலும் தனது கணக்கைத் தொடங்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism