Published:Updated:

“என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி

வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி

2016, டிசம்பர் 20-ம் தேதி ஒப்பந்தத்தைத் திறந்து, எனக்குப் பணிகளை ஒதுக்க முடிவெடுத்தார்கள். ஆனால், டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்துவிட்டார்.

“என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி

2016, டிசம்பர் 20-ம் தேதி ஒப்பந்தத்தைத் திறந்து, எனக்குப் பணிகளை ஒதுக்க முடிவெடுத்தார்கள். ஆனால், டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்துவிட்டார்.

Published:Updated:
வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி

நமது அலுவலகத்தின் வரவேற்பாளரிடமிருந்து போன் வந்தது. “கோவையிலிருந்து சிலர் வந்திருக்கிறார்கள். ஜூ.வி செய்திப்பிரிவைச் சந்திக்க வேண்டும் என்கிறார்கள்” என்றார். வாடிய முகத்துடன் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் தன்னை ஒப்பந்ததாரராக அறிமுகம் செய்துகொண்ட திருவேங்கடம் என்பவர், “முன்னாள் அமைச்சர் வேலுமணியால இன்னைக்கு நடுத்தெருவுக்கு வந்துட்டேங்க. என்கிட்ட வாங்கின பணத்துக்கு வேலையும் தராம, பணத்தைத் திருப்பியும் தராம அஞ்சு வருஷமா இழுத்தடிக்குறாருங்க” எனத் தன் மனக்குமுறலை வெடித்துத் தீர்த்தார். அவர் கொட்டிய விவரங்கள், ஆதாரங்கள் அனைத்தும் வேலுமணியின் அஸ்திவாரத்தை அசைப்பவை!

தாமோதரனை வீழ்த்திய வேலுமணி!

2011 சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேலுமணி, வெற்றிபெற்று அமைச்சராகவும் ஆனார். ஆனால், சசிகலாவின் உறவினர் இராவணனுடன் இருந்த தொடர்பு காரணமாக அவரது அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவி அடுத்த சில மாதங்களிலேயே ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டன. அப்போது வேளாண்துறை அமைச்சராக இருந்த கிணத்துக்கடவு தாமோதரனின் கண்ணசைவில்தான் கொங்கு ஏரியாவே நகர்ந்தது. தாமோதரனின் வலதுகரமாக இருந்தவர்தான் இந்த ஒப்பந்ததாரர் திருவேங்கடம். “என்னை வைத்து தாமோதரனை வீழ்த்தி, அமைச்சர் பதவியைப் பிடித்து, கொங்கு மண்டலத்தைத் தன் சுண்டுவிரல் அசைவில் வேலுமணி கொண்டுவந்தது ‘அமைதிப்படை’ சினிமாவையே தூக்கிச் சாப்பிடும் அரசியல் வெட்டாட்டம்” என்றபடி நம்மிடம் தொடர்ந்தார் திருவேங்கடம்.

“தாமோதரனிடம் நான் பணியாற்றியபோது, அவரது அனைத்து அசைவுகளும் எனக்குத் தெரியும். இதைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்த வேலுமணி தரப்பு, ‘நீங்களும் எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பீங்க. முன்னேற வேண்டாமா?’ என்று தூண்டில் போட்டார்கள். அந்தச் சமயத்தில் தாமோதரனுக்கும் எனக்கும் சில மனவருத்தங்கள் இருந்ததால், இந்தத் தூண்டிலில் நான் மாட்டினேன். என்னைவைத்து தாமோதரனுக்கு எதிராக ஒரு புகார்ப் பட்டியலை வேலுமணி தரப்பு எழுதி வாங்கியது. அதை போயஸ் தோட்டத்துக்கு அனுப்பி, தாமோதரனின் அமைச்சர் பதவியைப் பறிக்கவைத்தார்கள். இந்தக் காய்நகர்த்தல்களால், 2014-ம் ஆண்டு மீண்டும் அமைச்சரானார் வேலுமணி. நான் செய்த உதவிக்குப் பிரதிபலனாக, ஊரக வளர்ச்சித்துறையில் சில சிவில் வொர்க் ஒப்பந்தங்களைத் தருவதாக உறுதியளித்தார்கள். இதற்காகவே 30 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒப்பந்தங்களும் தயாராகின.

“என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி

நான் கொடுத்த 1 கோடியே 20 லட்சம்!

ஒப்பந்தங்களை வழங்குவதற்கு வேலுமணி அட்வான்ஸ் பணம் எதிர்பார்த்தார். ஒப்பந்தங்கள் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக, மார்ச் 4, 2016-ல், ஒரு கோடி ரூபாயுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையிலிருந்த வேலுமணியின் அரசு இல்லமான ரோஜா இல்லத்துக்குச் சென்றேன். அங்கு வைத்து அவரின் உதவியாளராக இருந்த பார்த்தீபனிடம் பணத்தைக் கொடுத்தேன். அந்தச் சமயத்தில் 2016 சட்டமன்றப் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால், திட்டமிட்டபடி ஒப்பந்தப் பணிகள் எனக்குக் கிடைக்கவில்லை.

தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அமைச்சரானார் வேலுமணி. உடனே, செலவுக்குப் பணம் வேண்டுமென்று கேட்டதால், அதே வருடம் ஜூலை 15-ம் தேதி 20 லட்சம் ரூபாயை, அதே ரோஜா இல்லத்தில்வைத்து அதே பார்த்தீபனிடம் கொடுத்தேன். அப்போது, ‘என்னையும் கவனிங்கண்ணே’ என்றார் பார்த்தீபன். இதற்காக, அவருக்குத் தனியாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தேன். இரண்டு முறையும் பணம் கொடுத்த விவரங்களை முழுமையாக வேலுமணியிடமும் அவ்வப்போதே சொல்லிவிட்டேன். வேலுமணியின் வலதுகரமாக இருந்தவர் சந்திரசேகர். நான் பார்த்தீபனிடம் பணம் கொடுத்தபோது, சந்திரசேகரின் உதவியாளர் வினோத் என்பவரும் உடனிருந்தார். நான் கொடுத்த பணத்தை வினோத்திடம் பார்த்தீபன் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் சிவில் வொர்க் பணிகளை எனக்கு ஒதுக்குவது எனத் தீர்மானமானது.

அரசியல் சூழலை மாற்றிய ஜெயலலிதா மறைவு!

2016, டிசம்பர் 20-ம் தேதி ஒப்பந்தத்தைத் திறந்து, எனக்குப் பணிகளை ஒதுக்க முடிவெடுத்தார்கள். ஆனால், டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்துவிட்டார். அரசியல் சூழல் மாறியது. அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்களும் அவரவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் டெண்டர்களை அவர்களே தீர்மானிப்பது என்று முடிவெடுத்தார்கள். ஆக, எனக்கு எந்த ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. மனம் நொந்துபோன நான், ஏதாவது ஒப்பந்தம் தாருங்கள் என்று வேலுமணியின் வீட்டுக்கு நடையாக நடக்க ஆரம்பித்தேன். இதோ அதோ... என்றார்களே தவிர, ஒன்றும் நடக்கவில்லை.

“20 நாள் வெயிட் பண்ணுங்க!”

ஓராண்டு உருண்டோடிய பிறகு, 2018-ல் நெஞ்சுவலி காரணமாக வேலுமணியின் பி.ஏ பார்த்தீபன் வேலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். அதுவரையில், நான் கொடுத்த பணத்துக்கு பதிலளிக்கவாவது ஆளிருந்தது. பிறகு உதவியாளர்களாக வந்த சரவணன், ரவி உள்ளிட்ட எவரும் சரியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. சந்திரசேகரின் உதவியாளர் வினோத்தைத் தேடிப்பிடித்து தொடர்புகொண்டபோது, ‘பார்க்கிறேன்’ என்பதோடு தொடர்பைத் துண்டித்துவிட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலுமணி பிஸியாக இருந்ததால் அவரை என்னால் நெருங்கக்கூட முடியவில்லை. என் மனைவியின் நகைகளை அடமானம்வைத்தும், கடன் வாங்கியும்தான் இந்த 1.25 கோடி ரூபாயை அமைச்சர் தரப்புக்கு நான் அளித்திருந்தேன். இந்தக் கடனுக்கான வட்டி என் கழுத்தை நெரித்தது. இதுவரை வட்டி மட்டுமே 75 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறேன். வீடு, நிலம் எல்லாம் அடமானத்துக்குப் போய்விட்டன. இதற்குமேல் வொர்க் ஆர்டர் எடுத்தாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றான பிறகு, 2020 தொடக்கத்திலிருந்து நான் கொடுத்திருந்த பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கினேன்.

கோவையில் வேலுமணி இருக்கும் போதெல்லாம், வீடு தேடி நேராகப் போய்விடுவேன். என்னைப் பார்த்ததும் முகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு வேலுமணி கிளம்பிவிடுவார். இடையில், கொரோனா ஊரடங்கு வந்துவிட்டதால், என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. ஊரடங்குத் தளர்வுகள் வந்த பிறகு, 2021 தொடக்கத்திலிருந்து என் பணத்தை மீட்பதற்காகத் தீவிரமாக முயன்றேன். வேலுமணியின் சகோதரர் அன்பரசனிடமும் பேசினேன். எந்த ரூபத்திலும் எனக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியை இழந்தது. அதன் பிறகுதான் வேலுமணி கோவையில் இருக்கத் தொடங்கினார். கடந்த ஜூன் 20-ம் தேதி, வேலுமணியின் கோவை இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது, ‘உங்க கஷ்டம் புரியுது. அந்த பார்த்தீபன் வேற மாதிரி சொல்றான். நேர்ல வரச்சொல்லி பேசிடலாம்னு நினைச்சேன். ஆனா வர மாட்டேங்குறான். கவலைப்படாதீங்க... 20 நாள் வெயிட் பண்ணுங்க’ என்றார் வேலுமணி.

அப்போது, வட்டி கட்ட முடியாத என் நிலைமையைச் சொல்லி அவரிடம் அழுதேன். அடுத்த நாளே என்னைத் தொடர்புகொண்ட அன்பரசன், ‘வட்டி கட்ட மட்டும் எவ்வளவு பணம் வேண்டும்?’ என்றார். முதற்கட்டமாக ஐந்து லட்சம் ரூபாயைத் தருவதாகவும், இரண்டு பகுதியாக என்னிடம் வாங்கிய பணத்தை அமைச்சர் தரப்பு தந்துவிடும் என்றும் அன்பரசன் உறுதியளித்தார். இதன்படி, ஜூன் 23-ம் தேதி என் வங்கிக் கணக்குக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம் வந்தது. இதை உறுதிப்படுத்துவதற்காக, வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பியதற்கான சான்றை அன்பு எனக்கு அனுப்பினார். அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. செந்தில்குமரன் என்கிற பெயரில் என்னிடம் பேசிய வினோத், பார்த்தீபனுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார். ஜூலை 17-ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரத்தில் நாங்கள் மூவரும் சந்தித்தோம். பேச்சில் எங்களுக்கு இடையே வாக்குவாதமானது. முடிவில், ‘உனக்குப் பணத்தைத் திருப்பித் தர முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க’ என்று இருவரும் சொல்லிவிட்டனர்.

“என்னை யாரும் தொட முடியாது!”

நொந்துபோன நான் அடுத்த நாளே (ஜூலை 18-ம் தேதி) வேலுமணியை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது, அவரது வீட்டில் சுமார் 20 பேர் இருந்தார்கள். எல்லோருமே கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கத்தான் வந்திருந்தார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. அவர்கள் அனைவரிடமும் ‘20 நாள் பொறுத்திருங்கள்’ என்று அதே வாக்குறுதியை அளித்தார் வேலுமணி. ‘என் உதவியாளர்கள் வாங்கிய பணத்துக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்?’ என்றுகூடச் சிலரிடம் கேட்டார். அதாவது, தனக்கும் இந்தப் பணவிவகாரங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல வேலுமணி நடந்துகொண்டார்.

என்னைத் தனியாக அழைத்துச் சென்றவர், ‘இனிமே பணம் கேட்டு இங்க வராதே’ என்றார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ‘உங்களை நம்பித்தானே பணம் கொடுத்தேன். இப்ப இப்படிச் சொல்றீங்களே. நான் சாகுறதைத் தவிர வேறு வழியில்லைண்ணே’ என்றேன். ‘நீ பணமே கொடுக்கலைனு பார்த்தீபன் சொல்றான். வேணும்னா பார்த்தீபன், வினோத் மேல புகார் கொடு. கேஸ் வந்தா நான் பார்த்துக்குறேன்’ என்றார். எனக்குத் தலையே சுற்றிவிட்டது. ‘புகார் கொடுத்தால் உங்க மேலதான் முதல் விசாரணை வரும். என் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்கண்ணே’ என்று கெஞ்சினேன். அதற்கு வேலுமணி, ‘என்னை யாரும் தொடக்கூட முடியாது... மேலிடத்துல பேச வேண்டியவிதத்துல பேசியாச்சு. நீ எங்க போய் புகார் கொடுக்கணுமோ கொடுத்துக்க’ என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நான் பொய் சொல்வதாக இருந்தால், அன்பரசன் மூலமாக எனக்கு ஏன் 5 லட்சம் ரூபாய் அளித்தார் வேலுமணி? நான் ஏற்கெனவே அவரைச் சந்தித்தபோதே, என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கலாமே அல்லது போலீஸில் புகாரளித்திருக்கலாமே?

கடைசி முயற்சியாக, ஜூலை 22-ம் தேதி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது சென்னை வீட்டில் சந்தித்து நடந்ததைச் சொன்னேன். ‘இன்னொரு தடவை கேட்டுப் பாரு. ஒத்துவரலைனா அவங்க சொன்னபடி புகார் கொடுத்துடு. நான் சொல்லி கேட்கற நிலைமையில இங்க யாரும் இல்லைப்பா’ என்றார். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, அவர்களுக்கு எதிராகப் புகாரளிக்கும் தைரியம் வரவில்லை. இப்போது போலீஸில் புகார் அளிக்க முடிவெடுத்திருக்கிறேன். தற்போது, நான் திமுக-வில் கிளைச் செயலாளராக இருக்கிறேன். என் புகார்களை அறிவாலயத்துக்கும் அனுப்பியிருக்கிறேன். எனக்கு உரிய நீதி வேண்டும்!” என்றார் திருவேங்கடம்.

சந்திரசேகர், அன்பரசன், திருவேங்கடம்
சந்திரசேகர், அன்பரசன், திருவேங்கடம்

தி.மு.க தயங்குவது ஏன்?

திருவேங்கடம் நமக்கு அளித்த ஆவணங்கள், ஆடியோ ரெக்கார்டுகளைச் சரிபார்த்தோம். பல்வேறு ஆடியோ உரையாடல்களில் சந்திரசேகர், அன்பரசன், பார்த்தீபன், வினோத் ஆகியோரிடம் தன் பணத்தை மீட்பது தொடர்பாகப் பேசுகிறார் திருவேங்கடம். அவர்களும், ‘அண்ணன்கிட்ட பேசியிருக்கோம். இரண்டு நாள் பொறுங்க’ என்று பதிலளிக்கிறார்கள். ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுத்தது திருவேங்கடம் செய்த தவறு என்றால், அதை வாங்கிக்கொண்டு ஏமாற்றும் அமைச்சர் தரப்பின் செயலை என்னவென்று சொல்வது?

‘மேலிடத்தைச் சரிக்கட்டிவிட்டோம், என்னைத் தொட முடியாது’ என்று இவ்வளவு தைரியமாக வேலுமணி சவால்விடுவதன் பின்னணி என்ன? தனக்கு ஆதரவுக்கரம் நீட்டிய லாட்டரி குடும்பத் தரப்பு, இப்போது கைவிரித்துவிட்டதால், பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு நெருக்கமான க்யூப் ரெடிமிக்ஸ் தொழிலதிபர் ஒருவர் மூலமாக தி.மு.க-வில் சமாதானப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாள்கள் ஆகியும், வேலுமணியை தி.மு.க தொடாமல் வைத்திருப்பதன் மர்மம் என்ன?’ என்று கோவை தி.மு.க-வினரே முணுமுணுக்கிறார்கள்.

திருவேங்கடத்தின் புகார்கள் தொடர்பாக விளக்கமறிய முன்னாள் அமைச்சர் வேலுமணியைத் தொடர்புகொண்டோம். அவர் தொடர்பு எண் ஸ்விட்ச் ஆஃப் நிலையிலிருந்தது. எம்.எல்.ஏ என்கிற வகையில் அவரது அதிகாரபூர்வ இ-மெயிலான mlathondamuthur@tn.gov.in-க்கும் கேள்விகளை அனுப்பியிருக்கிறோம். இந்தச் செய்தி பிரசுரமாகும் வரை எந்த பதிலும் வரவில்லை. சந்திரசேகர், அன்பரசன், வினோத், பார்த்தீபன் ஆகியோரும் நமது அழைப்பை ஏற்கவில்லை. நமது குறுந்தகவல், வாட்ஸ்அப் தகவலுக்கும் பதிலளிக்கவில்லை. அவர்களிடமிருந்து பதில் வரும் பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

இந்த விவகாரத்தில், அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

******

சமீபத்தில் வேலுமணி மீது புகாரளித்திருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத், அடுத்த புகாரையும் கையிலெடுத்திருக்கிறார். “கொரோனா நேரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்களை கோவையிலுள்ள சில நிறுவனங்கள் மூலம் வாங்க வேலுமணி முடிவெடுத்தார். அவற்றின் அதிகபட்ச விலையே 2 லட்ச ரூபாயைத் தாண்டாது. ஆனால், இவர்கள் வாங்கிய ஒவ்வோர் இயந்திரமும் 5.5 லட்ச ரூபாய் என பில் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்களை உள்ளாட்சித் துறை வாங்கியிருக்கிறது. இதில் மட்டுமே சுமார் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதோடு கொரோனா விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ் விளம்பரத்திலும் பெரும் ஊழல் நடந்துள்ளது. விரைவில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளிக்கவிருக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism