Published:Updated:

கார்ப்பரேட்களுக்குக் கொடுக்கலாம்... ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடாதா?

அரவிந்த் கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11,68,095 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி (Write Off) செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது

கார்ப்பரேட்களுக்குக் கொடுக்கலாம்... ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடாதா?

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11,68,095 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி (Write Off) செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
அரவிந்த் கெஜ்ரிவால்

“இலவச கலாசாரம் தவறானது” என்று பிரதமர் மோடி பேசியதைத் தொடர்ந்து, ‘இலவசங்கள்’ பற்றிய விவாதம் சூடுபறக்கிறது. இன்னொருபுறம், “வரிச்சலுகை, கடன் தள்ளுபடி என்ற பெயர்களில் பல லட்சம் கோடிகளை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்குவது நியாயமா?” என்ற கேள்வியை பிரதமரை நோக்கி எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

‘இலவசங்கள்’ (Freebies) குறித்த தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்குவது நீண்டகால வழக்கம். இதற்கு பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில், ‘இலவச கலாசாரம்’ நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்ற விவாதம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதைத் தொடங்கி வைத்தவர் பிரதமர் மோடி. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “அரசியல்வாதிகள், இலவசங் களைக் கொடுத்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இந்தக் கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும். இலவசங்களை வழங்குபவர்கள், உங்களுக்கு விரைவுச் சாலைகளையோ, புதிய விமான நிலையங்களையோ உருவாக்க மாட்டார்கள்” என்றார். அதையடுத்து, இலவசங்கள் வழங்குவதற்கு எதிரான கருத்துகளை பா.ஜ.க நிர்வாகிகள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அவர்களுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்துவருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே, “2017-18 நிதியாண்டிலிருந்து பா.ஜ.க அரசு தனது நண்பர்களுக்கு (பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்) ரூ.10 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப், “பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையையும், கடன் தள்ளுபடியையும் வழங்குகிற பா.ஜ.க., ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் வழங்கப்படும் இலவசங்களை எதிர்க்கிறது. மேலும், கார்ப்பரேட் வரியை பா.ஜ.க அரசு குறைத்திருப்பதன் மூலமாக, ஓர் ஆண்டுக்கு ரூ. 1.45 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது” என்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11,68,095 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி (Write Off) செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவற்றில் ரூ.10.72 லட்சம் கோடி, மோடி அரசு பொறுப்பேற்ற பிறகான எட்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட கடன் தள்ளுபடி. “2021, மார்ச் மாதம் முடிவடைந்த நிதியாண்டில், கொரோனா பெருந்தொற்றால் நாடு பாதிக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்த் தொழிலாளர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த அந்த நேரத்திலும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.2,02,781 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது” என்று எதிர்க்கட்சியினர் சாடுகிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பல இலவசத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “கல்வி, மின்சாரம், மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதன் மூலம் நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்துகிறோம். இவற்றை ‘இலவசங்கள்’ என்று சொல்ல முடியாது. ஆனால், வங்கிகளில் தன் நண்பர்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பெயர்தான் இலவசங்கள்” என்று மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார்.

இந்தச் சர்ச்சை குறித்து பா.ஜ.க-வின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம்.

“வறுமையிலிருந்து ஏழைகளைத் தூக்கிவிடும் இடைக்கால நிவாரணம்தான் இலவசங்கள். ஆனால், இந்த இடைக்கால நிவாரணத்தை எத்தனை ஆண்டுகளாகக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்... ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து, அவர்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் செயல்படுகின்றன. ஆனால், இலவசங்களைக் கொடுக்காமல் ஏழ்மையிலிருந்து அந்த மக்களை மீட்பதற்கான திட்டங்களை மோடி அரசு செயல்படுத்திவருகிறது. கார்ப்பரேட் களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறார்கள் என்ற தவறான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவருகின்றன. வங்கியில் திருப்பிச் செலுத்தப்படாத கடன் தொடர்பான கணக்கு, வியாபார ரீதியாக முடித்துவைக்கப்படுவது வழக்கம். அதற்கு, தள்ளுபடி என்று அர்த்தம் அல்ல. கடன் பெற்றவர், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும். அப்படி சில லட்சம் கோடி அரசுக்கு திரும்ப வந்திருக்கிறது. இதேபோல கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை தவறு என்று சிலர் விமர்சிக்கிறார்கள். அது, பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிறிய சலுகை. அதன் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபாரமும் லாபமும் அதிகரிக்கும். அதன் விளைவாக, அரசின் வரி வருவாயும், ஜி.டி.பி-யும் அதிகரிக்கும். அது, நாட்டுக்கு லாபம்தானே?” என்கிறார் எஸ்.ஆர்.சேகர்.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

``வரி செலுத்துவோரின் சுமை, தேர்தல் இலவசங்களால் அதிகரிக்கிறது’’ என்கிறார் மோடி. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகைகள் மட்டும், வரி செலுத்துவோரின் சுமையைக் குறைக்கவா செய்கிறது என்பதே கேள்வி!