அலசல்
அரசியல்
Published:Updated:

அகற்றப்பட்ட விளம்பரங்கள்... கடுகடுத்த முதல்வர்... கேள்விக்குறியான ஜி ஸ்கொயர்!

கார்த்திக் - சபரீசன்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திக் - சபரீசன்

முதல்வர் கண்சிவந்ததைத் தொடர்ந்து, தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் எனப் பதறிய கார்த்திக், ஜி ஸ்கொயர் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து தன் குடும்பம் விலகுவதாக உத்தரவாதம் அளித்தார்.

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் தடதடத்த வருமான வரித்துறை ரெய்டுகள், இப்போது சத்தமில்லாமல் இருக்கின்றன. இதுவரை, வருமான வரித்துறையிடமிருந்து அதிகாரபூர்வமாகப் பத்திரிகைச் செய்தி எதுவும் வெளிவரவில்லை. அதேநேரத்தில், “வருமான வரித்துறை வேண்டுமானால் சத்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், தி.மு.க மேலிடத்தில் ஜி ஸ்கொயரை மையப்படுத்தி வேட்டுச் சத்தங்கள் ஒலித்திருக்கின்றன” என்கிறார்கள் மேலிடக் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நிர்வாகிகளாக இருக்கும் அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகன் குடும்பத்தினரிடம் கடும் காரமான வார்த்தைகளை வீசினாராம் முதல்வர். அதோடு, லண்டனிலிருந்து திரும்பிய தன் மருமகன் சபரீசனிடமும் வருத்தத்துடன் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஜி ஸ்கொயர் எதிர்காலம் என்னவாகும்... இந்த ரெய்டுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்ன... விவரமறிய செனடாப் சாலை குடும்பத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்...

ஸ்டாலின்
ஸ்டாலின்

“கட்சியா... பிசினஸா... நீயே முடிவெடு!”

“ஜி ஸ்கொயர் நிறுவனங்களில், எம்.எல்.ஏ மோகனின் மனைவி கீதா, மருமகள் சுருதி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். மோகனின் மகன் கார்த்திக், முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு மிக நெருக்கமானவர். ஆட்சி அமைந்தபோதே, ரியல் எஸ்டேட் பிசினஸில் தி.மு.க தொடர்புடையவர்கள் ஆட்டம்போடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார் முதல்வர். 2011-ல் தி.மு.க ஆட்சி பறிபோனதற்கு, கட்சி நிர்வாகிகள் பலரும் நில அபகரிப்பு புகாரில் சிக்கியது முக்கியக் காரணம். இதை மனதில் வைத்துத்தான், ‘இந்த பிசினஸெல்லாம் நமக்குத் தேவையா?’ எனத் தொடக்கத்திலேயே மோகன் குடும்பத்தினரை எச்சரித்தார். ஆனால், ‘எல்லாமே நியாயமாகத்தான் செய்கிறோம்’ என வாக்குறுதி அளித்து, தி.மு.க-வை வம்பில் சிக்கவைத்துவிட்டனர்.

வருமான வரித்துறை ரெய்டு முடிந்த பிறகு, செனடாப் சாலை வீட்டில் பெரிய விவாதமே நடந்தது. லண்டனிலிருந்து திரும்பிய மாப்பிள்ளை சபரீசனையும் வைத்துக்கொண்டுதான் பேசினார் முதல்வர். அண்ணாநகர் கார்த்திக்கிடம், ‘நீங்க பண்ற வேலையால, கட்சிக்குத்தான் கெட்ட பெயர் வருது. இந்தத் தொழிலெல்லாம் வேண்டாம்னு அப்பவே சொன்னேன். கேட்கலை... பிசினஸ்தான் முக்கியம்னா கட்சியைவிட்டுப் போயிடு. கட்சி வேணும்னா, ரியல் எஸ்டேட் பிசினஸைத் தலை முழுகிட்டு வா. நீயே முடிவெடு’ எனக் கடுகடுத்துவிட்டார்.

கார்த்திக் - சபரீசன்
கார்த்திக் - சபரீசன்

முதல்வரின் நீண்டகால நண்பர்தான் மோகன் என்றாலும், கட்சி இல்லையென்றால் மோகன் குடும்பத்துக்கு முகவரியே இல்லை. 30 வருட நண்பரான ஆவடி நாசரையே அமைச்சரவையிலிருந்து தூக்கி எறிந்துவிட்டார் முதல்வர். நாசரின் மகன் ஆசிம் ராஜா, ரியல் எஸ்டேட் விவகாரங்களில் தலையிட்டு அத்துமீறலில் ஈடுபட்டதால்தான், ஆசிமின் கட்சிப் பதவி பறிபோனது. முதல்வரின் கோபம் எந்த அளவுக்குப் பாயுமென அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

அந்தக் கோபத்தில்தான், மோகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகூடச் சொல்லவில்லை முதல்வர்.

அகற்றப்பட்ட பேனர்கள்... நிலுவையில் பல கோடி... எதிர்காலம் என்னவாகும்?

முதல்வர் கண்சிவந்ததைத் தொடர்ந்து, தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் எனப் பதறிய கார்த்திக், ஜி ஸ்கொயர் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து தன் குடும்பம் விலகுவதாக உத்தரவாதம் அளித்தார். சபரீசனிடமும் தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார் முதல்வர். ‘ஆறு மாசத்துக்கு முன்னாலேயே அழைச்சு கண்டிச்சேன். அந்த நிறுவனத்தோட தொடர்பே இருக்கக் கூடாதுனு கார்த்திக்கிட்ட சொன்னேன்’ என சபரீசன் விளக்கமளித்தாலும், முதல்வரின் கோபம் தணியவில்லை. தன் குடும்பத்தின் பெயரைப் பயன்படுத்தி சிலர் லாபமடைந்ததை லேட்டாகத்தான் புரிந்துகொண்டார் முதல்வர்.

மோகன்
மோகன்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக ‘லேஅவுட்’ போடுவதற்கு ஜி ஸ்கொயர் அளித்திருந்த 17 விண்ணப்பங் களை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக் கிறது ஆட்சி மேலிடம். சென்னைக்குள் ஜி ஸ்கொயர் வைத்திருந்த விளம்பர பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வருவதில்லை. ஆட்சி இயந்திரமும், வருமான வரித்துறையும் ஜி ஸ்கொயருக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றன. அந்த நிறுவனத்தின் எதிர்காலம் அஸ்தமனத்தை நோக்கி நகர்கிறது” என்றனர் விலாவாரியாக. இந்த நிலையில் தமிழகத்தில் நெருக்கடி முற்ற ஹைதராபாத், பெங்களூரு எனப் பக்கத்து மாநிலங்களுக்குத் தொழில் ஜாகையை மாற்றியிருக்கிறது ஜி ஸ்கொயர்.

நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு, ‘லேஅவுட்’ போடுவது ஜி ஸ்கொயரின் பிசினஸ் ஸ்டைல். முதற்கட்டமாகப் பத்து சதவிகிதத் தொகையை வழங்குபவர்கள், பிளாட்டுகள் அனைத்தும் விற்ற பிறகுதான் நிலத்துக்கான முழுத் தொகையையும் அளிப்பார்கள். அப்படி அவர்கள் போட்ட பல ‘லேஅவுட்’கள் முழுதும் விற்பனையாகவில்லை என்கிறது ரியல் எஸ்டேட் வட்டாரம். இந்தச் சூழலில், வருமான வரித்துறை ரெய்டுகள் தடதடத்ததால், ஜி ஸ்கொயர் பிளாட்டுகள் விற்பனை மந்தமாகியிருக்கிறது. மேலும் ரெய்டின்போது, ஜி ஸ்கொயருக்கு நிலங்களை விற்ற உரிமையாளர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அந்த நில உரிமையாளர்கள், தங்கள் நிலத்துக்கு உரிய பல கோடி ரூபாயை உடனே ‘செட்டில்’ செய்யச் சொல்வதால், நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா. இதிலிருந்து ஜி ஸ்கொயர் மீண்டுவருவது கேள்விக்குறிதான்!