Published:Updated:

மூக்கை நுழைத்த கவர்னர்... முதுகை வளைத்த தலைமைச் செயலர்... ‘கடுகடு’ முதல்வர்!

ஒவ்வொரு மாத இறுதியிலும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய அரசுத் துறைகளில் என்னென்ன நடைபெற்றன என்பதை பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்கள் அறிக்கையாகக் கொடுப்பது வழக்கம்.

பிரீமியம் ஸ்டோரி

சமீபத்தில், அரசுத் துறை செயலாளர்களுக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அனுப்பிய ஒரு கடிதம் அரசியல் களத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. “தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆளுநரிடம் விளக்கும் வகையில் பவர்பாயின்ட் விளக்கத்துக்கான தயாரிப்புகளைச் செய்யுங்கள்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் இறையன்பு. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தபோதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. “தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே இவரை மத்திய அரசு நியமித்துள்ளது” என்று அரசியல் கட்சிகள் ஆரூடம் சொல்லின. அதற்கு ஏற்றாற்போல, அக்டோபர் 12-ம் தேதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளுநர் ரவியைச் சந்தித்து, தி.மு.க அரசின் மீதான புகார்களை அளித்தார். மறுதினமே ஆளுநரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்ததால், ‘ஆளுநரைப் பார்த்து தி.மு.க பம்முகிறதோ?’ என்கிற விமர்சனங்கள் எழுந்தன. இந்த இக்கட்டைப் பெரிதாக்கியிருக்கிறது தலைமைச் செயலாளரின் கடிதம்.

மூக்கை நுழைத்த கவர்னர்... முதுகை வளைத்த தலைமைச் செயலர்... ‘கடுகடு’ முதல்வர்!

கடிதம் உருவாக்கியிருக்கும் அனலால், தமிழக அரசியல் களத்திலும் சரவெடிகள் வெடிக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரிடமிருந்து ஆளுநருக்கு எதிரான கண்டன அறிக்கைகள் வந்திருக்கின்றன. ‘அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் பெற ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறதா?’ என்கிற கேள்வியும் விவாதத்தைச் சூடாக்கியிருக்கிறது.

“விளக்கம் கேட்பது முதன்முறை!”

இந்த விவகாரத்தில், ஆளுநரின் அதிகாரம் குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளைக் கையாளும் மூத்த வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “ஒவ்வொரு மாத இறுதியிலும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய அரசுத் துறைகளில் என்னென்ன நடைபெற்றன என்பதை பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்கள் அறிக்கையாகக் கொடுப்பது வழக்கம். அதே போன்றுதான் மாநில ஆளுநர்கள் அந்தந்த மாநில அரசின் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ளலாம். அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையைக் கேட்டுப்பெற ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. எதிர்க்கட்சிகளின் புகார்கள் குறித்து அரசிடம் விளக்கம் கேட்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்பதால்தான், ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் புகாரளிப்பது வழக்கமாக இருக்கிறது” என்றார்.

மூக்கை நுழைத்த கவர்னர்... முதுகை வளைத்த தலைமைச் செயலர்... ‘கடுகடு’ முதல்வர்!

ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் ஒருவர், “பொதுவாக ஆளுநர்கள் யாரும் ஒட்டுமொத்த துறையைப் பற்றியும் விளக்கம் கேட்பது கிடையாது. சில துறைகளில் நடக்கும் விஷயங்களைப் பற்றிக் கேட்டால், அதற்குரிய பதிலைச் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் மூலமாக அளிப்பதுதான் வழக்கம். அதேநேரம், ஓர் ஆளுநருக்கு மாநிலத்தில் நடக்கும் நிர்வாக விவகாரங்களை அறிந்துகொள்ளும் அதிகாரம் இருக்கிறதுதான். ஆனால், ஒட்டுமொத்த அரசின் செயல்பாடுகளைக் கேட்டிருப்பது இதுதான் முதன்முறை. இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது” என்றார்.

‘இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163(1)-ன்படி, முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் கூட்டு ஆலோசனையின்படிதான் ஆளுநர் செயல்பட முடியும். அதேநேரத்தில், ஆளுநருக்குச் சில தன்னிச்சை அதிகாரங்கள் இருப்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது அந்தச் சட்டப் பிரிவு. இதைவைத்துத்தான், அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைக்கப் பார்க்கிறார் ஆளுநர்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மூக்கை நுழைத்த கவர்னர்... முதுகை வளைத்த தலைமைச் செயலர்... ‘கடுகடு’ முதல்வர்!

“மூக்கை நுழைத்த கவர்னர்!”

பொது நிர்வாகவியல் வல்லுநர் கணேஷ் சுப்பிரமணியம் நம்மிடம் பேசுகையில், “ஆளுநரின் தன்னிச்சை அதிகாரங்கள் எவை என்பதை அரசியலைப்புச் சட்டம் முழுமையாக விவரிக்கவில்லை. இதனால், இது குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163(1)-ன்படி, ஆளுநருக்குச் சில தன்னிச்சை அதிகாரங்கள் இருந்தாலும், அது அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைப்பதற்கு வழியாகாது. ஒரு மாநில முதல்வரின் கடமைகள் என்னென்ன என்பதைச் சட்டப் பிரிவு 167 விரிவாகக் கூறுகிறது. இதன்படி, அரசின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுநருக்கு என்னென்ன கேள்விகள் எழுந்தாலும், அவற்றை விளக்கவேண்டியது முதல்வரின் கடமைதான். அந்தவகையில் ஆளுநர் தனக்கெழும் சந்தேகங்களை முதல்வரிடம்தான் கேட்டு விளக்கம் பெற வேண்டும். இதன்படி, முதல்வருக்குத்தான் அவர் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால், தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதி, மாநில அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்திருக்கிறார் ஆளுநர்” என்றார் விளக்கமாக.

கணேஷ் சுப்பிரமணியம்
கணேஷ் சுப்பிரமணியம்

‘ஆளுநர் ஆரம்பித்த இந்த விவகாரத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு தனது அவசரத்தாலும், நடைமுறை அரசியல் புரிதல் இல்லாததாலும் தடுமாறிவிட்டார்’ என்கிறது கோட்டை வட்டாரம். கடந்த அக்டோபர் 26-ம் தேதி காலை இந்தக் கடித விவகாரம் வெடித்துக்கொண்டிருந்த நேரத்தில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இருந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில் இறையன்புவும் இருந்தார். கடித விவகாரம் மீடியாக்களில் வெளியாகி சர்ச்சையானது காதுக்கு எட்டியதும், டென்ஷனாகிவிட்டாராம் முதல்வர்.

“முதுகை வளைத்த தலைமைச் செயலாளர்... ‘கடுகடு’ முதல்வர்!”

ஆய்வுக் கூட்டம் முடிந்ததும், தலைமைச் செயலாளரிடம் இது குறித்து முதல்வர் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு இறையன்பு, “இப்படி கம்யூனிகேஷன் செய்வது வழக்கமான நடைமுறைதான்” என்று விளக்கமளிக்க, உஷ்ணமான முதல்வர், “எது நடைமுறை.. இப்படி ஓப்பனாகக் கடிதம் எழுதிச் சிக்கலில் ஆழ்த்துவதா? ஒரு நோட் போட்டுச் சொல்லியிருக்கலாமே...” என்று கடிந்துகொண்டாராம். அதன் பிறகுதான், “அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் எழுதிய கடிதம் விவாதப்பொருளாக மாறியிருப்பதாக அறிகிறேன். புதிதாகப் பொறுப்பேற்ற ஆளுநர், அரசின் திட்டங்களை அறிந்துகொள்ள ஏதுவாகத் தகவல் திரட்ட அறிவுறுத்தும் பொருட்டே இந்தக் கடிதம் எழுதப்பட்டது. அலுவலக விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்” என்கிற விளக்க அறிவிப்பு இறையன்புவிடமிருந்து வெளிவந்திருக்கிறது.

தலைமைச் செயலகத்திலுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசியபோது, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், மாவட்டவாரியாக ஆய்வுக்குச் சென்றார். அதை எதிர்த்து அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க பெரிய போராட்டங்களை நடத்தியது. 2018, ஜூன் 23 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திய ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது வழக்கும் பதியப்பட்டது. வெகுண்டெழுந்த ஆளுநர் மாளிகை, ‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆளுநர்களின் பணிகளைத் தடுப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க, சட்டத்தில் இடமுள்ளது’ என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே மாநில உரிமை பறிபோவதாக வெடித்த ஸ்டாலின், தலைமைச் செயலாளரின் இந்தக் கடிதச் சர்ச்சை குறித்து இதுவரை வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அதேபோல, ஆளுநரின் தலையீட்டை எதிர்க்கவும் இல்லை. இது முதல்வர்மீது விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது” என்றார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக முதல்வர் வீட்டில் ஒரு டிஷ்கஷனே நடந்திருக்கிறது. மூத்த அமைச்சர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “முதல்வருக்கு இந்த விவகாரத்தில் ரொம்பவே வருத்தம்தான். தனக்கு நெருக்கமான வடமாவட்ட அமைச்சரிடம், ‘தேவையில்லாம நம்மைச் சிக்கலில் இழுத்துவிட்டுவிட்டார் இறையன்பு. எளிமையாக முடிந்திருக்கவேண்டிய விஷயத்தை ஆவணப்படுத்தி, சர்ச்சையாக்கிவிட்டார். மாநில சுயாட்சி... மாநில உரிமைனு நாம மேடைக்கு மேடை பேசிக்கிட்டிருக்கோம். இந்த நேரத்துல ஆளுநரின் அதிகார ஏவலை ஏத்துக்கிட்ட மாதிரி அவசரப்பட்டுவிட்டார் தலைமைச் செயலாளர்” எனக் கடுகடுத்திருக்கிறது முதல்வர் தரப்பு. இதை ஆமோதித்த மூத்த அமைச்சரும், ‘மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுநிலையைப் புரிந்துகொண்டு இறையன்பு செயல்பட்டிருக்க வேண்டும். அவர் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தால், பா.ஜ.க-வுக்கு தி.மு.க அடிபணிந்துபோகிறதோ என்கிற பிம்பம் உருவாகிவிடாதா? நமக்குப் பின்புலமாக உள்ள சிறுபான்மையினர் நம்மைச் சந்தேகப் பார்வை பார்க்க மாட்டார்களா?’ என்று தன் பங்குக்குத் தூபம் போட்டிருக்கிறார். இப்படி முதுகு வளைத்து தலைமைச் செயலாளர் எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தி.மு.க-வை டோட்டல் டேமேஜ் செய்திருக்கிறது!” என்றார்.

அச்சத்தில் தி.மு.க?

கடந்த டிசம்பர், 2020-ல் அ.தி.மு.க அமைச்சர்களைப் பற்றிய ஊழல் புகார்களை ஆளுநரிடம் அளித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் 2018, பிரிவு 17(ஏ)-ன்படி, ஒரு மாநிலத்தின் முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வந்தால், அந்தப் புகாரை மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு நேரடியாக அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறது. அதைப் பயன்படுத்தும்படி ஆளுநரிடம் நாங்கள் கேட்டுள்ளோம்” என்றார். ‘ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுத்த ரூட்டில், தற்போதைய ஆளுநர் ரவி பயணித்தால், அறிவாலயமே ஆட்டம் கண்டுவிடும்’ என்று அரண்டுபோயிருக்கிறதாம் ஆட்சி மேலிடம். ஏற்கெனவே, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகப் புகார்களை பா.ஜ.க-வினர் எழுப்பிவரும் நிலையில், தாங்களே குழிபறித்துக்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறதாம் தி.மு.க.

தமிழக காவல்துறை டி.ஜி.பி-யிடமிருந்து நாள்தோறும் சட்டம், ஒழுங்கு குறித்த டி.எஸ்.ஆர் ரிப்போர்ட் ஆளுநர் மாளிகைக்கு இன்றும் செல்கிறது. அந்த நோட்டில் குறிப்பிட்டுள்ள பல விவரங்களுக்கு டி.ஜி.பி-யிடம் விளக்கம் கேட்க ஆரம்பித்திருக்கிறதாம் ஆளுநர் மாளிகை. தமிழகத்தில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையின்போது கிடைத்த விவரங்களையும் ஆளுநர் அலுவலகம் கேட்டிருக்கிறது. ‘இதெல்லாம் நல்லதுக்கு இல்லை’ என்று நினைக்கிறதாம் தி.மு.க. நாளுக்கு நாள் ஆளுநரின் பிடி இறுகும் சூழலில், ‘மாநில சுயாட்சி, மாநில உரிமை’ என்றெல்லாம் வெளிப்படையாக ராஜ்பவனுடன் மோதும் மனநிலையில் அறிவாலயம் இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தக் கடிதச் சர்ச்சையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தோழமைக் கட்சிகளைப் பேசவைத்து ஆளுநருக்கு மறைமுக அழுத்தத்தையும், எதிர்ப்பையும் காட்ட முயல்கிறது தி.மு.க.

தலைமைச் செயலாளர் சறுக்கியிருந்தாலும், ஆளுநர் மாளிகை அத்துமீறி மூக்கை நுழைத்தாலும், ராஜ்பவனின் ஆக்டோபஸ் கரங்கள், தனது அதிகார எல்லைக்குள் படர்ந்துவிடாமல் தடுக்க முயல்கிறார் முதல்வர். மத்திய, மாநில அரசுகளின் பனிப்போர் ஆளுநர் - முதல்வர்களுக்கிடையே வெடியைப் பற்றவைத்திருக்கிறது. இது சரவெடியாக வெடிக்குமா... புஸ்வாணமாகுமா?

*****

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மூக்கை நுழைத்த கவர்னர்... முதுகை வளைத்த தலைமைச் செயலர்... ‘கடுகடு’ முதல்வர்!

“தி.மு.க-வைப் பொறுத்தவரை அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குவதும், அமைச்சரவையின் ஒப்புதலுடன் மாநிலத் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதும் மட்டுமே ஆளுநரின் அதிகார வரம்பு என்பதில் தெளிவாக இருக்கிறோம். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல், அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னிச்சையாகச் செயல்பட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதுபோல இப்போது நடந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடுதான் தோழமைக் கட்சிகளும் தலைமைச் செயலாளரின் அறிக்கையை அணுகியுள்ளன. மாநிலத்துக்குள் ஆய்வு செய்வதற்கோ, அதையொட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிடவோ ஆளுநருக்கு அதிகாரமில்லை என்பதில் தி.மு.க தெளிவாக இருக்கிறது. நேரடியாக அதிகாரிகளை ஆளுநர் சந்திக்க மாட்டார். அதை தி.மு.க-வும் அனுமதிக்காது!”

- இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

மூக்கை நுழைத்த கவர்னர்... முதுகை வளைத்த தலைமைச் செயலர்... ‘கடுகடு’ முதல்வர்!

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரங்கள் இருக்கின்றன என்றாலும், மாநில அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆளுநருக்குத் தெரிவிக்கவேண்டியது முதலமைச்சரின் கடமை. இதை இந்திய அரசியல் சட்டத்தின் 167-வது பிரிவு கூறுகிறது. எனவே, தலைமைச் செயலாளரிடமோ, துறைச் செயலாளர்களிடமோ துறைவாரியான செயல்பாடுகள் குறித்து விளக்கங்களைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோரியிருந்தால், அது அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதே ஆகும். ஆளுநருக்கான அதிகார வரம்பை மீறி ரவி செயல்படவில்லை. தி.மு.க அரசு நேர்மையாக, வெளிப்படையாகச் செயல்படும் அரசாக இருந்தால் எதற்கும் அஞ்சத் தேவையில்லை!”

- ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர், பா.ஜ.க

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு