Published:Updated:

கடிவாளம் இல்லாத கவர்னர்!

ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.என்.ரவி

மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் ஒரு பாலமாக கவர்னர் இருப்பார். மாநில அரசு தவறான முடிவுகள் எதையாவது எடுத்தால், கேள்வி கேட்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்க வேண்டும்

கவர்னர் என்றோர் இனமுண்டு (எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்), தனியே அவர்க்கொரு குணமுண்டு. அதுதான் அவர்களை மாநில அரசு அனுப்பும் மசோதாக்களில் கையெழுத்து போடாமல் காலம் கடத்த வைக்கிறது. பொது மேடைகளில் மாநில அரசைக் குற்றம் சாட்டிப் பேசவைக்கிறது. தமிழே தெரியாவிட்டாலும், `திருக்குறளை காலனியாதிக்க மனப்பான்மையுடன் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டார்' என்று சர்ச்சையைக் கிளப்பச் சொல்கிறது. `தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்' என்று யோசனை கூற வைக்கிறது.

ஜெயலலிதா-சென்னா ரெட்டி மோதல் ஒரு விதிவிலக்கு. மற்றபடி, கவர்னர்களும் முதல்வர்களும் இணக்கமாக இருக்கும் மாநிலமாகவே தமிழ்நாடு இருந்துவந்திருக்கிறது. கவர்னர் தனக்கென தனியாக உயர்கல்வி ஏரியாவில் ஒரு ராஜ்ஜியத்தை நடத்துவதை மாநில அரசு கண்டும் காணாமல் இருக்கும். இதற்குப் பிரதியுபகாரமாக மாநில அரசு என்ன கேட்டாலும் கையெழுத்து போடுகிறவராக கவர்னர் இருந்துவிடுவார். இரண்டு தரப்பும் அப்படி இல்லாததே, மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவி உரசலுக்குக் காரணம். தமிழ்நாடு சட்டப் பேரவையிலிருந்து முதல்முறையாக கவர்னர் பாதியில் வெளியேறிய வரலாறும், கவர்னருரை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வரலாறும் நிகழ்ந்திருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியும் கவர்னர் ஜெகதீப் தன்கரும் மோதிக்கொண்டதைத் தாண்டி இனி எங்கும் நடந்துவிடப்போவதில்லை. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்- தமிழிசை சௌந்தரராஜன் மோதல் எல்லாம் அத்துடன் ஒப்பிடும்போது சாதாரணம். தமிழ்நாட்டு மோதலும் சாதாரணமே!

ஆரம்பத்தில் ஸ்டாலினும் ரவியும் இணக்கமாகவே இருந்தார்கள். இப்படிப்பட்ட மோதல்களுக்கான அறிகுறிகளை ராஜ்பவன் காட்டவில்லை. ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் பல தீர்மானங்களை அப்படியே கவர்னர் கிடப்பில் போட ஆரம்பித்ததும் பிரச்னை வெடித்தது. 2022 பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை சுவரில் அடித்த பந்துபோல கவர்னர் திருப்பி அனுப்பினார். விடாப்பிடியாக திரும்பவும் அதை நிறைவேற்றி அனுப்பியது தமிழ்நாடு சட்டப்பேரவை. அதை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் அப்படியே வைத்திருக்க, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி கவர்னர் தந்த தேநீர் விருந்தைப் புறக்கணித்தார் முதல்வர்.

அதன்பின் மோதல் இன்னும் உக்கிரமானது. ஏப்ரல் 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் தமிழ்நாடு துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்தினார் கவர்னர் ரவி. மாநில அரசுக்குத் தகவலே சொல்லவில்லை. இதுபோன்ற ஒரு மாநாட்டை 2021-ம் ஆண்டு மேற்கு வங்காள கவர்னர் ஏற்பாடு செய்தபோது முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட, ஒரே ஒரு துணைவேந்தர்கூட மாநாட்டுக்குப் போகவில்லை. கவர்னர் தனியறையில் உட்கார்ந்து புலம்ப வேண்டியதாயிற்று. ஆனால், தமிழ்நாடு அரசு அப்படி முடிவெடுக்கவில்லை. துணைவேந்தர்கள் எல்லோரும் போய் வந்தார்கள். கல்வி நிலையங்களில் கவர்னர் தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டி தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிதான், அதன்பின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தார்.

கடிவாளம் இல்லாத கவர்னர்!

கடந்த ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் ராஜ்பவனுக்குச் சென்று, 21 மசோதாக்கள் கவர்னரின் கையெழுத்துக்காக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு வந்தார். அதன்பின் கோவை கார் குண்டுவெடிப்பு தொடங்கி, ‘தமிழ்நாடு’ சர்ச்சை வரை கவர்னர் அவ்வப்போது ஏதாவது பேசுவது தொடர்கதை. சூழலைப் பொறுத்து தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளோ, தி.மு.க அமைச்சர்களோ அதைக் கண்டித்துப் பேசுவார்கள். அல்லது கூட்டணிக்கட்சிகளின் கூட்டறிக்கை வரும். கடுமையாகக் கண்டிக்க வேண்டிய சூழலில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு பெயரில் அறிக்கை வெளியாகும்.

யோசித்துப் பார்த்தால், கவர்னர்-மாநில அரசு மோதலுக்கும் நேருவே காரணம் என்று குற்றம் சுமத்த வேண்டியிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அதிகாரம் பொருந்திய கவர்னர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் செய்த அழிச்சாட்டியங்களைப் பார்த்தவர்கள்தான் நம் தலைவர்கள். அதனால்தான் அரசியல் நிர்ணய சபை விவாதங்களில், மாநிலங்களுக்கு கவர்னர்கள் தேவையா என்ற கேள்வி எழுந்தது. மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படாத, மத்திய அரசால் நியமிக்கப்படும் ஒருவருக்கு அரசியல் சட்ட அதிகாரங்களைக் கொடுத்து, அவர் பெயரால்தான் மாநில நிர்வாகமே இயங்கும் என்கிற அளவுக்கான அந்தஸ்தைக் கொடுப்பது சரியா என்ற விவாதம் பெரிதாக இருந்தது. ஒடிசாவைச் சேர்ந்த விஸ்வநாத் தாஸ், ‘‘மத்தியில் ஆளும் கட்சி ஒன்றாகவும், மாநிலத்தில் ஆளும் கட்சி வேறொன்றாகவும் இருந்தால், மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர் எப்படி மாநில அரசுடன் இணக்கமாகப் பணியாற்றுவார்?'' என்று கேட்டார்.

நேரு, கே.எம்.முன்ஷி, பி.எஸ்.தேஷ்முக் போன்றவர்கள் இதை மறுத்தனர். ‘‘மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் ஒரு பாலமாக கவர்னர் இருப்பார். மாநில அரசு தவறான முடிவுகள் எதையாவது எடுத்தால், கேள்வி கேட்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்க வேண்டும்'' என்றனர்.

ஒப்பீட்டளவில் இந்திய ஜனாதிபதியைவிட மாநில கவர்னருக்குக் கூடுதல் அதிகாரம் உண்டு. என்றாலும், அது ஒருவகையில் மாநில அரசையும் கவர்னரையும் சமன் செய்ததாகவே இருக்கிறது. அரசியல் சட்டத்தின் பிரிவு 163(1)-ன்படி, மாநில அமைச்சரவை பரிந்துரையின்படியே கவர்னர் செயல்பட வேண்டும். எனினும், மாநில நலன் கருதி அவர் மாறுபட்ட முடிவையும் எடுக்கலாம். அப்படி அவர் எடுக்கும் முடிவு இறுதியானது என்கிறது பிரிவு 163(2). என்றாலும், இது அவருக்கு வானளாவிய அதிகாரத்தைக் கொடுத்துவிடவில்லை. மாநில அரசின் செயலாக்க அதிகாரம் கவர்னரின் பெயரால் நடந்தாலும், அது அரசியல் சட்டப்படியே நடக்க வேண்டும் என்று பிரிவு 154(1) கூறுகிறது.

இப்படி சட்டங்கள், விதிமுறைகள் இருந்தாலும், இரண்டு தெருவிளக்குகளின் வெளிச்சப்பரப்புக்கு நடுவே சிறிய நிழல் இருப்பதுபோல, அரசியல் சட்டத்தில் தெளிவற்ற சில ஏரியாக்கள் இருக்கின்றன. அதை வைத்துதான் எல்லோரும் விளையாடுகிறார்கள். சமயங்களில் நீதிமன்றத்திடம் குட்டும் வாங்குகிறார்கள். 2015-ம் ஆண்டு அருணாசலப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது ஆட்சி மாறியது. அப்போது ஏற்பட்ட குழப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார், கவர்னர் ஜோதிபிரகாஷ் ராஜ்கோவா. உச்ச நீதிமன்றம் இதை அரசியல் சட்டத்துக்கு விரோதமான முடிவு என்று அறிவித்தது. வேறுவழியின்றி கவர்னர் பதவி விலக வேண்டியதாயிற்று.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒருவகையில் மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரியை நினைவுபடுத்துகிறார். முன்னாள் பா.ஜ.க தலைவரான கோஷியாரி, மகாராஷ்டிரா கவர்னராக இருந்தபடி மராத்தியர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவார். ‘‘மகாராஷ்டிராவிலிருந்து ராஜஸ்தானிகளும் குஜராத்திகளும் போய்விட்டால், மாநிலத்தில் பணமே இருக்காது. நாட்டின் பொருளாதாரத் தலைநகரம் என்ற அந்தஸ்தை மும்பை இழந்துவிடும்'' என்றார் ஒரு தடவை. இன்னொரு முறை, ‘‘வீரசிவாஜியைவிட மத்திய அமைச்சர் நிதின் கட்காரியே எல்லோரும் முன்னுதாரணமாகப் பார்க்க வேண்டிய மனிதர்'' என்றார். மாநில பா.ஜ.க கூட அவரை ஆதரிக்க முன்வரவில்லை. தமிழ்நாடு, தமிழ், பொருளாதார வளர்ச்சி என்று பல விஷயங்களில் ரவி சர்ச்சை கிளப்பினாலும், அந்த நேரங்களில் தமிழக பா.ஜ.க அவரை ஆதரிக்கிறது என்பதுதான் ஒரே வித்தியாசம்.

மாநில முதல்வர் எடுக்கும் பதவிப் பிரமாணத்துக்கும் கவர்னரின் பதவிப் பிரமாணத்துக்கும் வித்தியாசம் உண்டு. ‘அரசியல் சட்டப்படி நடப்பேன்' என முதல்வர் உறுதிமொழி எடுப்பார். ஆனால், ‘அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன், சட்டத்தையும் முழுமனதாகக் காப்பேன். மாநில மக்களின் நலனுக்காக சேவையாற்றுவேன்' என்று சட்டப்பிரிவு 159-ன்படி கவர்னர் பதவிப் பிரமாணம் எடுக்கிறார். இந்த வகையில் ஒரு மாநிலத்தில் அவர்தான், அரசியல் சட்டத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவர். ஆனால், ‘சனாதன தர்மமே இந்தியாவைக் காக்கிறது. அரசியல் சட்டம் அல்ல' என்றும், ‘இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். இந்தியாவும் விதிவிலக்கல்ல' என்றும் அரசியல் சட்டத்துக்கே முரணாகப் பேசுவதும் அவர்தான்.

ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், கவர்னரும் தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளின் அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்றக் கடமைப்பட்டவர்கள். இருவரும் மோதிக்கொண்டிருந்தால், அது நல்லாட்சிக்கான அழகு அல்ல. முதிர்ச்சியான அணுகுமுறையை மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

கவர்னர்கள்... கலவரங்கள்!

`நம் கவர்னர் எவ்வளவோ பரவாயில்லை' என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கும் அளவுக்கான சில சம்பவங்கள்:

* கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து அம்மாநில கவர்னர் ஆரிஃப் முகமது கானை விமர்சனம் செய்தார். ‘கவர்னரின் விருப்பத்தின் பேரில்தான் அமைச்சர் பிந்து பதவியில் இருக்கிறார். கவர்னர் தன் விருப்பத்தை விலக்கிக்கொள்ள நினைக்கிறார்' என்று கவர்னர் மாளிகை அறிவிப்பு செய்தது. நல்லவேளையாக சட்ட நிபுணர்கள் தலையிட்டு, ‘மாநில முதல்வரின் பரிந்துரை இல்லாமல் அப்படியெல்லாம் நீங்கள் செய்ய முடியாது' என்று கவர்னருக்கு அணை போட்டனர். சமீபத்தில் முதல்வர் பினராயி விஜயன் ஓர் அமைச்சரை புதிதாக நியமித்தபோது, ‘அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க எனக்கு இஷ்டமில்லை. நான் மறுக்கலாமா' என்றும் சட்ட ஆலோசனை கேட்டார். ‘அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை' என்று சொன்னபிறகு வேண்டா வெறுப்பாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சில பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை திடீரென அவர் ராஜினாமா செய்யச் சொன்னதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோர்ட் தலையிட்டு அவர்களைக் காப்பாற்றியது.

ஆரிஃப் முகமது கான்,  வி.கே.சக்சேனா, அனுசுயா உகே
ஆரிஃப் முகமது கான், வி.கே.சக்சேனா, அனுசுயா உகே

* டெல்லி மாநகராட்சியை பா.ஜ.க-விடமிருந்து முதல்முறையாகக் கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. மாநகராட்சியில் நியமன உறுப்பினர்களாக 10 பேரை நியமிக்கும் உரிமை டெல்லி கவர்னருக்கு உண்டு. மாநகராட்சி நிர்வாகத்தில் சிறப்பு அறிவும் அனுபவமும் கொண்டவர்களே நியமன உறுப்பினராக முடியும் என விதி இருந்தாலும், பா.ஜ.க-வினர் 10 பேரை நியமித்து, ஆம் ஆத்மிக்குக் குடைச்சல் கொடுத்திருக்கிறார் கவர்னர் வி.கே.சக்சேனா. அது மட்டுமல்ல, டெல்லி அரசு விளம்பரங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கான விளம்பரங்கள் போல பயன்பட்டதாகக் குற்றம் சாட்டி, அந்தக் கட்சியிடமிருந்து 97 கோடி ரூபாயை வசூலிக்குமாறு டெல்லி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். மோடி படத்துடன் மத்திய அரசு செய்துவரும் விளம்பரங்களுக்கான தொகையை பா.ஜ.க வழங்கியதும், தங்கள் கட்சியும் பணம் தரும் என்று பதிலடி தந்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

* சத்தீஸ்கர் கவர்னர் அனுசுயா உகே, தாங்கள் அனுப்பும் மசோதாக்களில் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்துவதாக காங்கிரஸ் கட்சி முதல்வர் பூபேஷ் பாகல் போராடிவருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘பாஞ்சஜன்யா' இதழின் ஆசிரியராக இருந்த பல்தேவ் பாய் சர்மா என்பவரை சத்தீஸ்கர் அரசின் குஷாபாவ் தாக்கரே பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக நியமித்துள்ளார் கவர்னர்.