அரசியல்
Published:Updated:

“புலி வாலைப் பிடித்துவிட்டீர்கள்!” - கண்டித்த டெல்லி... கைவிட்ட பா.ஜ.க... யூ டர்ன் பின்னணி

ஆளுநர் ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளுநர் ரவி

‘தமிழ், தமிழர், தமிழ்நாடு விஷயமெல்லாம் ரொம்ப சென்சிட்டிவானது. தேவையில்லாம இதையெல்லாம் பேசி சர்ச்சையை உருவாக்குறார் ஆளுநர் ரவி.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே சர்ச்சைதான். ‘சனாதன தர்மத்தால் ஆனது இந்தியா’, ‘திருக்குறள் உரையில் ஆன்மிக நீக்கம் செய்யப்படுகிறது’ என ஆரம்பித்தவர்... ‘இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல’ என்பதுவரை சென்றார். அதற்கான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் குறைவின்றிச் சந்தித்தார். ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டைத் தன்னிச்சையாக நடத்தியது, துறைரீதியாக அரசின் செயல்பாடுகளை அறிய ‘பவர்பாயின்ட்’ விளக்கம் கேட்டது, கோவை குண்டு வெடிப்பு குறித்து தமிழ்நாடு காவல்துறை விசாரித்துவந்தபோதே, ‘என்.ஐ.ஏ விசாரணைக்கு உடனே மாற்றுங்கள்’ என நெருக்கடி கொடுத்தது, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், ‘நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்’ என வீம்புக்கு அறிக்கை அளித்தது, புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவளித்தது என அரசின் கொள்கைகளிலும் நிர்வாகத்திலும்கூட ஆளுநர் ரவி தொடர்ச்சியாக மூக்கை நுழைத்தே வருகிறார். எவ்வளவு விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்தபோதும், இதுவரையிலாக தனது கருத்தில், நடவடிக்கைகளிலிருந்து அவர் பின்வாங்கியதில்லை. ஆனால், முதன்முறையாக அது நடந்திருக்கிறது. என்ன நடந்தது?

‘தமிழ்நாடு - தமிழகம்’ தொடர்பாக ஆளுநர் பற்றவைத்த வெடி, டெல்லியில் பலத்த சத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் பா.ஜ.க தலைவர்கள். “இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றியதை டெல்லி எதிர்பார்க்க வில்லை. ‘தேர்தல் நெருங்கும் சமயத்தில், சர்ச்சைப் பேச்சுகள் ஏன்?’ என டெல்லி கண்டித்ததன் விளைவாகவே, ‘தமிழ்நாடு’ சர்ச்சையில் ‘யூ டர்ன்’ அடித்திருக்கிறார் ஆளுநர்” என்கிறார்கள் அந்த சீனியர்கள். தமிழ்நாடு பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களும், ஆளுநருக்கு எதிரான மனக்குமுறல்களை டெல்லியில் கொட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஆளுநரின் ‘யூ டர்ன்’ பின்னணி குறித்து விசாரித்தோம்...

“புலி வாலைப் பிடித்துவிட்டீர்கள்!” - கண்டித்த டெல்லி... கைவிட்ட பா.ஜ.க... யூ டர்ன் பின்னணி

“தலைநிமிர்ந்த தமிழகம்...” - குட்டையைக் குழப்பிய ஆளுநர்!

ஆளுநர் ரவி கிளப்பிய ‘தமிழ்நாடு’ தொடர்பான சர்ச்சையே, தி.மு.க-வின் பிரசாரத்தை ஒட்டித்தான் தொடங்கியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர்கள் சிலர், “தமிழ்நாட்டில் தி.மு.க அரசு முன்னெடுத்திருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள், மகளிருக்கான பொருளாதார முன்னேற்றங்களை மையப்படுத்தி, ஜனவரி 1-ம் தேதியிலிருந்து ‘தலைநிமிர்ந்த தமிழகம்... மனங்குளிருது தினந்தினம்’ என்கிற பிரசாரத்தை தி.மு.க ஐடி விங் முன்னெடுத்தது. புத்தாண்டையொட்டி கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் செய்யப்பட்ட பூ அலங்காரத்திலும் இந்த வாசகங்கள் இடம்பெற்றன. கழக நிர்வாகிகள் கூட்டத்தில்கூட, ‘ `தலைநிமிர்ந்த தமிழகம்’ பிரசாரத்தைக் கடைக்கோடி வரை கொண்டுசேர்க்க வேண்டும். இதை ஐடி விங் மட்டும் செய்தால் போதாது. கழகத்தின் ஒவ்வோர் அணியினரும், தொண்டர்களும் செய்ய வேண்டும்’ என்றிருந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தப் பிரசாரத்தை உடைப்பதற்காகக் கிளப்பப்பட்ட சர்ச்சைதான் ‘தமிழ்நாடு - தமிழகம்’ அரசியல். அதற்கான ‘ரூட்’டை மயிலாப்பூர் பிரமுகர்தான் ஆளுநருக்குப் போட்டுக்கொடுத்திருக்கிறார்.

ஜனவரி 4-ம் தேதி, காசி தமிழ்ச் சங்கமத்தில் களப்பணியாற்றிய தன்னார்வலர்களுக்குப் பாராட்டுவிழா சென்னை ராஜ் பவனில் நடந்தது. அந்த விழாவில் பேசிய ஆளுநர், ‘தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான சூழல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும், `நாங்கள் திராவிடர்கள்’ எனச் சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால், தமிழ்நாடு அதை வேண்டாம் எனச் சொல்கிறது. `தமிழ்நாடு’ என்று சொல்வதைவிட `தமிழகம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும்’ என சர்ச்சையாகப் பேசினார். ‘தமிழ்நாடு’ என்ற சொல் தமிழர்களுக்கு உணர்வுபூர்வமானது. அதைச் சீண்டும்விதமாக ஆளுநர் பேசியதை யாரும் ரசிக்கவில்லை. குறிப்பாக, ‘தலைநிமிர்ந்த தமிழகம்’ என்ற பிரசாரத்தைத் திட்டமிட்டு உடைத்தார் ஆளுநர் ரவி. அதனால், ‘தலைநிமிர்ந்த தமிழ்நாடு... தனித்துவமான பொன்நாடு’ எனப் பிரசாரத்தையே தி.மு.க மாற்றியது. இந்தச் சூழலில்தான், சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றுவதற்கான தேதியும் வந்தது.

தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரைக்கு முதலில் இசைவு தெரிவித்துவிட்டு, சட்டமன்றத்தில் சில பகுதிகளை விடுத்தும், சில வார்த்தைகளைச் சேர்த்தும் பேசினார் ஆளுநர் ரவி. துரிதமாகச் செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின், ஆளுநரைச் சட்டமன்றத்தில் வைத்துக்கொண்டே, ‘அரசு தயாரித்த ஆளுநர் உரையே செல்லும்’ எனத் தீர்மானம் கொண்டுவந்தார். இதை ஆளுநர் ரவி எதிர்பார்க்கவில்லை. பாதியிலேயே சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார். தி.மு.க-வின் அட்டாக் அதன் பிறகுதான் ஆரம்பமானது. ஆளுநரின் அத்துமீறலைக் கண்டித்து, ஜனவரி 12-ம் தேதி ஜனாதிபதி முர்முவைச் சந்தித்து தி.மு.க எம்.பி-க்கள் புகாரளித்தனர். அந்தப் புகாரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் முர்மு. இதை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எதிர்பார்க்கவில்லை. ஆளுநர் மாளிகையை ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’யின் தலைவர் திருமாவளவன் முற்றுகையிடவும், அரசியல் வெப்பம் அதிகரித்தது.

திருப்பி அடித்த ஸ்டாலின்... - எதிர்பார்க்காத டெல்லி!

இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஜனவரி 13-ம் தேதி டெல்லிக்குப் பறந்த ஆளுநர், உள்துறைச் செயலாளர் அஜய் பல்லாவிடம் சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து மூன்று பக்க அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். மத்திய அரசின் உயரதிகாரிகள் பலரையும் பார்த்து, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதித்திருக்கிறார். மத்திய அரசு தனது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையிலும் பெருமிதத்திலும் சென்னைக்குத் திரும்பினார் ஆளுநர். ஆனால், தமிழ்நாடு பெயர் விவகாரத்தைத் தொட்டதே தவறு. இதில் மேற்கொண்டு டெல்லியிலும் ரவி புகாரளித்ததை முதல்வர் ஸ்டாலின் ரசிக்கவில்லை. ஜனவரி 14-ம் தேதி, தி.மு.க இளைஞரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட சமயத்தில், தான் நடத்திய கூட்டத்தையும், அதில் அண்ணா பேசியதையும் நினைவுகூர்ந்தார். திடீரென டென்ஷனாகி, ‘இன்னைக்கு யாரோ `தமிழ்நாடு’னு சொல்லக் கூடாதுன்னு புலம்பிக்கிட்டு இருக்கானே...’ என வெடிக்கவும், மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. ஆளுநர் ரவியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை வெளுத்து வாங்கிவிட்டார் ஸ்டாலின். இந்த ஆக்ரோஷ பதிலடியை தி.மு.க-வினர் மட்டுமல்ல, டெல்லியும் எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகுதான் அரசியல் சூழலே மாறியிருக்கிறது” என்றனர் விரிவாக.

தி.மு.க சீனியர் அமைச்சர்கள் சொன்னது போல, முதல்வரின் பதிலடிக்குப் பிறகுதான் டெல்லியின் அரசியல் நிலைப்பாட்டில் தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கேற்ப, ஜனவரி 16-ம் தேதி டெல்லியில் நடந்த பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் சிலரும் ஆளுநருக்கு எதிராகக் குமுறியிருக்கிறார்கள். குறிப்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும் ஆளுநர் ரவியின் கருத்துக்கு எதிராக டெல்லியில் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

“அவரை அமைதியாக இருக்கச் சொல்லுங்க...” - கைவிட்ட பா.ஜ.க!

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், “ஆளுநர் என்ன பேசினாலும், செய்தாலும் தமிழ்நாடு பா.ஜ.க-வும் சேர்ந்து பலிகடா ஆகவேண்டியிருக்கிறது. ‘தமிழ்நாடு - தமிழகம்’ சர்ச்சையை ஆளுநர் தொடங்கியிருக்க வேண்டியதே இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு ஆதரவாக, தமிழ்நாடு பா.ஜ.க எப்படி முட்டுக்கொடுக்க முடியும்... அதனால்தான், ‘ஆளுநர் கிளப்பிய தமிழ்நாடு சர்ச்சை தேவையற்றது’ என மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். தொடக்கத்தில் ஆளுநர் ரவிக்கு ஆதரவாகப் பேசிவந்த தமிழிசை செளந்தராஜன், பிற்பாடு நிலையை மாற்றிக்கொண்டு, ‘தமிழ்நாடு என்ற பெயரை இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது’ என்றார். ஆனாலும் சர்ச்சை ஓயவில்லை. பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இந்த மனக் குமுறல்களையெல்லாம் கொட்டியதோடு, தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷிடமும் முறையிட்டிருக்கிறார் அண்ணாமலை. ‘கட்சியைக் கஷ்டப்பட்டு வளர்த்துக்கிட்டு இருக்கோம். ஆளுநர் தேவையில்லாததைப் பேசி பிரச்னையை உருவாக்குறார். இதனால நமக்கு எந்த லாபமும் இல்ல. ‘கட்சிக்கு நான் மாநிலத் தலைவரா... இல்லை அவர் தலைவரா’னு கட்சிக்காரங்களே கேட்கறாங்க. இதுக்கு ஒரு முடிவுகட்டுங்க’ என பி.எல்.சந்தோஷிடம் புலம்பித் தீர்த்திருக்கிறார்.

தமிழிசை தரப்பும் ரவிக்கு எதிராகக் கொந்தளித்திருக்கிறது. ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு விஷயமெல்லாம் ரொம்ப சென்சிட்டிவானது. தேவையில்லாம இதையெல்லாம் பேசி சர்ச்சையை உருவாக்குறார் ஆளுநர் ரவி. தமிழிசையால தமிழ்நாட்டுக்குள்ள போகக்கூட முடியல. அவர்கிட்ட கருத்து கேட்டு, பரபரப்பு அணையாமலிருக்க மீடியாக்கள் முயற்சி செய்யறாங்க. பெயர்லயே தமிழை வெச்சுக்கிட்டு, ரவியின் கருத்துக்கு தமிழிசையால எப்படி சப்போர்ட் பண்ண முடியும்... ரவியைக் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க’ என தமிழிசை தரப்பிலிருந்து வந்த ‘அட்வைஸை’ டெல்லி கவனத்தில் எடுத்துக்கொண்டது” என்றனர்.

“புலி வாலைப் பிடித்துவிட்டீர்கள்!” - கண்டித்த டெல்லி... கைவிட்ட பா.ஜ.க... யூ டர்ன் பின்னணி

“புலி வாலைப் பிடித்துவிட்டீர்கள்!” - கண்டித்த டெல்லி

இந்தப் பரபரப்புகளுக்கு இடையே, ஜனவரி 18-ம் தேதி டெல்லிக்கு அழைக்கப்பட்டார் ஆளுநர் ரவி. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அவருக்கு ‘அப்பாயின்ட்மென்ட்’ கொடுக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்கு முன்னதாகவே, ‘தமிழகம் - தமிழ்நாடு’ தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வர ரவிக்கு டெல்லி உத்தர விட்டதாகச் சொல்கிறார்கள், பா.ஜ.க-வின் மிக மூத்த தலைவர்கள் சிலர்.

நம்மிடம் பேசியவர்கள், “தனக்கு ஆதரவாக டெல்லி இருக்குமென ரவி எதிர்பார்த்திருந்த நிலையில், சில அரசியல் கணக்குகளால், சர்ச்சைக்கு முடிவுகட்டச் சொன்னது டெல்லி. இதை ரவி எதிர்பார்க்கவில்லை. ரவி உருவாக்கிய நிலைமையின் விபரீதத்தை, டெல்லியின் மிக மூத்த அதிகாரி ஒருவர் அவரிடம் விளக்கியிருக்கிறார். சில சீனியர் மத்திய அமைச்சர்களும் ரவியிடம் பேசியிருக்கிறார்கள்.

‘மொழி, இனம், மாநில உரிமை, சுயாட்சி தொடர்பான விஷயங்களைப் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு போன்ற சென்சிட்டிவான மாநிலத்தில் இதையெல்லாம் கவனத்துடன் கையாள வேண்டும். ஆனால் ‘தமிழ்நாடு - தமிழகம்’ எனப் பேசி தேவையில்லாமல் புலி வாலைப் பிடித்துவிட்டீர்கள். உங்களுக்கு எதிராக தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தால், அதே பாணியில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாக வாய்ப்பிருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும். ஜனவரி 16-ம் தேதி டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா வீட்டை முற்றுகையிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும் இதே போராட்ட மனநிலை ஏற்பட்டால், யார் சமாளிப்பது?

“புலி வாலைப் பிடித்துவிட்டீர்கள்!” - கண்டித்த டெல்லி... கைவிட்ட பா.ஜ.க... யூ டர்ன் பின்னணி

“தீப்பந்தம் எடுத்துக் கொடுக்கிறீர்களா..?” - ஆளுநரின் யூ டர்ன் பின்னணி!

பஞ்சாப், கேரளா, தெலங்கானா, பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு எதிரான சூழல் இருக்கிறது. விரைவிலேயே கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுதான் மீதமிருக்கிறது. இந்தச் சூழலில், பா.ஜ.க-வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தைப் பற்றவைப்பதற்கு நீங்களே தீப்பந்தம் எடுத்துக் கொடுக்கிறீர்களா... வரும் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கவிருக்கிறது. அதற்காக 200 நகரங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டங்களை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தால், சர்வதேச அளவில் கட்சிக்கு எவ்வளவு பெரிய டேமேஜ் வரும்... நாகாலாந்தில் உங்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததால்தான் தமிழகத்துக்கு மாற்றப்பட்டீர்கள். அஜித் தோவலுக்கு நம்பிக்கையானவர் என்பதாலேயே தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அந்தக் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டாமா... அமித் ஷாவைச் சந்திக்கும் முன்பாக, இந்தச் சர்ச்சைக்கு விளக்கமளித்து முற்றுப்புள்ளி வையுங்கள்’ எனக் கடுமை காட்டியிருக்கிறது டெல்லி.

இந்தக் கண்டிப்புக்குப் பிறகுதான் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து ‘யூ டர்ன்’ அடித்தார் ரவி. ‘எனது கண்ணோட்டம் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை அல்ல. எனது பேச்சின் அடிப்படை புரியாமல் விவாதப்பொருளாகிவிட்டது’ என விளக்கமளித்திருக்கிறார் அவர். இதற்கு மேல், தமிழ்நாட்டின் அரசியலுக்குள் தேவையற்ற சர்ச்சையைப் பற்றவைக்க வேண்டாம் என ரவியை டெல்லி கண்டித்திருக்கிறது” என்றனர் விரிவாக.

ஆளுநர் ரவி கையிலெடுத்த ‘தமிழ்நாடு’ சர்ச்சை என்பது, ஒரு மாநிலத்தின் உரிமை, சுயச்சார்பு, அடையாளம் சம்பந்தமானது. இந்த விவகாரத்தை வைத்தே, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடியும். பா.ஜ.க-வுக்கு எதிரான பிரசாரத்தைக் கட்டமைக்க முடியும். அதற்கு அடிக்கல் நாட்டுவதைப்போல ஆளுநர் ரவியே நடந்துகொண்டதை டெல்லி துளியும் ரசிக்கவில்லை என்கிறது கமலாலய வட்டாரம். “தி.மு.க Vs பா.ஜ.க என இருக்கவேண்டிய களத்தை, தன்னுடைய சர்ச்சைக் கருத்துகளால், தி.மு.க Vs ஆளுநர் என உருவாக்குகிறார் ஆளுநர் ரவி. இதனால், தமிழ்நாடு பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குத் துளியும் லாபமில்லை. டேமேஜ்தான் அதிகமாகிறது. தன் பேச்சுகளால், ஆட்சிரீதியான விமர்சனங்கள், உட்கட்சிப் பிரச்னைகளிலிருந்து தி.மு.க விடுபடுவதற்கு ஒரு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறார் ஆளுநர்” எனக் கொதிக்கிறார்கள் கமலாலயத்தினர்.

ஆளுநரின் இந்த யூ டர்னைத் தங்கள் எதிர்க்குரலுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறது தி.மு.க. தேர்தல் சூழல், ஜி20 மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலை பரவுவது என எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு ஆளுநர் ரவிக்குத் தற்காலிக வாய்ப்பூட்டு போட்டிருக்கிறது டெல்லி. பூட்டு எத்தனை நாளைக்குத் திறக்கப்படாமல், உடைக்கப்படாமல் நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!