Published:Updated:

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

மேற்கு மண்டலத்துக்குப் பொறுப்பானவர், மேலிடத்திலிருந்து வரும் கட்டளைகளைக் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பாஸ் செய்து வேலையை முடிப்பதில் கில்லாடி. அ

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

மேற்கு மண்டலத்துக்குப் பொறுப்பானவர், மேலிடத்திலிருந்து வரும் கட்டளைகளைக் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பாஸ் செய்து வேலையை முடிப்பதில் கில்லாடி. அ

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ஜூலை 19, 2017.

ஆட்சிக்கு வந்த ஜோரில் இந்த நாளை தி.மு.க-வினர் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்கள் மறக்கவில்லை. தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் தமிழகமெங்கும் தாராளமாக விற்கப்படுவதைச் சுட்டிக்காட்ட, அன்றைய தினம் சட்டமன்றத்துக்குள்ளேயே குட்கா பொட்டலங்களை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எடுத்துச் சென்றனர். சட்டமன்றமே அமளி துமளியானது. இதற்காக, ஸ்டாலின் உள்ளிட்ட 23 தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் மீது உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகுதான், இந்த நோட்டீஸ் ரத்துசெய்யப்பட்டது. இந்த விவகாரத்தை அ.தி.மு.க அதோடு விடவில்லை. மீண்டும் 18 பேருக்கு உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கடந்த பிப்ரவரி 10-ம் தேதிதான் அந்த இரண்டாவது நோட்டீஸும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு வெளியானவுடன், தன் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஸ்டாலின், “தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு சென்று காண்பித்தோம். கமிஷன் வாங்கிக்கொண்டு, அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டியிருக்கலாம். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது. கழக ஆட்சியில் குட்கா விற்பனை முழுமையாகத் தடைசெய்யப்படும்” என்று குறிப்பிட்டார். சொன்னபடி ஸ்டாலின் செய்தாரா என்பதுதான் இப்போது கேள்வி.

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

ஆகஸ்ட் 26, 2020 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில், ‘குட்கா வேண்டுமா முதல்வரே?’ என்கிற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையைச் சமூக வலைதளங்களில் தி.மு.க-வினர் வைரலாக்கி, ‘அ.தி.மு.க அரசின் லட்சணத்தைப் பாரீர்...’ என்றனர். முரசொலியிலும் அந்தக் கட்டுரை வெளியாகியிருந்தது. இன்று அதே கேள்வி, தி.மு.க முன்னால் நிற்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததைப்போலவே தற்போது தமிழகமெங்கும் குட்கா விற்பனை கனஜோராக நடைபெறுவது ஜூ.வி-யின் ஆக்‌ஷன் ரிப்போர்ட்டில் தெரியவந்திருக்கிறது. நம் நேரடி ஆய்வில் கிடைத்தத் தகவல்களெல்லாம் பகீர் ரகம்!

“ஒண்ணு, ரெண்டு கொடுங்க...” கோவை குட்கா கோட் வேர்ட்!

கர்நாடகாவில் குட்கா பொருள்களுக்குத் தடையில்லை என்பதால், தமிழகத்துக்குப் பெரிய சப்ளை கேந்திரமாக பெங்களூரு மாறியிருக்கிறது. அங்கேயிருந்து கார், சரக்கு வாகனங்களில் குட்கா பொட்டலங்கள் தமிழகத்துக்குள் வருகின்றன. 50, 100 பாக்கெட் கொண்ட பண்டல்களாக வியாபாரிகளுக்கு 750 - 1500 ரூபாய்களில் விற்கப்படும் குட்கா, நுகர்வோரின் கைகளுக்கு வரும்போது இரு மடங்கு விலையாக ஒரு பாக்கெட் 30 ரூபாயில் ஆரம்பித்து 60 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில், இந்த விலையேற்றம் விண்ணைத் தொட்டதாகக் குறிப்பிடுகிறார்கள் சில சப்ளையர்கள்.

கோவையில் குட்கா நெட்வொர்க்கில் அதிகம் இருப்பது வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். கோவை ரயில் நிலையம், காந்திபுரம் பகுதிகளுக்கு நேரடி விசிட் அடித்தது ஜூ.வி டீம். ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “கடையில் காசைவைத்துவிட்டு, நமக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் ‘ஒண்ணு’ அல்லது ‘ரெண்டு’ என்று கூறினால் போதும். குட்கா கிடைக்கும். கோவையின் புது கோட் வேர்ட் இதுதான்” என்றார். நாமும் அவ்வாறே சில கடைகளில் கேட்க, கைநிறைய குட்கா பொட்டலங்கள் வந்து சேர்ந்தன. டவுன்ஹால் பகுதியிலுள்ள மார்க்கெட்களில் பெரும்பாலான வடமாநிலத்தவர்களின் கடைகளில் குட்கா மொத்தமாகக் கிடைக்கிறது. போலீஸ் ஒருபக்கம் நடவடிக்கை எடுத்துவந்தாலும், கோவையில் குட்கா வியாபாரத்தை முறியடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

நாளொன்றுக்கு 12 லட்சம் ரூபாய் - கல்லாகட்டும் மதுரை!

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, கஞ்சாவைப்போல குட்கா விற்பனைக்கும் மதுரையே மையப்புள்ளி. டெல்லி, ஹைதராபாத், பெங்களூரிலிருந்து ரயில்களில் `கார்மென்ட்ஸ்’ என்று புக் செய்யப்பட்டு வரும் குறிப்பிட்ட சில பார்சல்கள், எந்தவிதச் சோதனையும் இல்லாமல் கைமாறுகின்றன. இவற்றில்தான் குட்கா கடத்திவரப்படுவதாகச் சொல்கிறது காவல்துறை வட்டாரம். நம்மிடம் பேசிய மதுரை மாநகர போலீஸார் சிலர், “போலிப் பெயர்களில் வரும் இந்தப் பார்சல்களை ஏஜென்ட்டுகள் வந்து எடுத்துச் செல்வார்கள். ரயில்வே போலீஸார் சிலரும் இதற்கு உடந்தை என்பதால், குட்கா பார்சல்கள் பெருமளவு மாட்டுவதில்லை. மதுரை மாசி வீதிகளில் இயங்கும் கடைகளிலும், புறநகர்ப் பகுதியிலுள்ள வீடுகளிலும் பார்சல்கள் இருப்புவைக்கப்படும். அங்கேயிருந்து மற்ற மாவட்டங்களுக்கு பார்சல் சர்வீஸ்கள், காய்கறி வண்டிகளில் பிரித்து இவை அனுப்பி வைக்கப்படுகின்றன. டவுன்ஹால் ரோடு, மாசிவீதிகள், தல்லாகுளம், கோரிப்பாளையம், அண்ணா நிலையம், ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், செல்லூர், வில்லாபுரம், அவனியாபுரம், அண்ணாநகர், கூடல்நகர் பகுதிகளிலுள்ள சில கடைகள் குட்கா வியாபாரத்தை மட்டுமே நம்பி இயங்குகின்றன” என்றனர்.

நம்மிடம் பேசிய பெட்டிக்கடைக்காரர் ஒருவர், “கொரோனா ஊரடங்கு நேரத்துல டாஸ்மாக் கடைகளை மூடினதால, குட்கா விற்பனைதான் ஜோரா இருந்துச்சு. ஒரு பாக்கெட் 50 ரூபாய் வரைக்கும் விற்பனையானது. குட்கா வித்தா மட்டுமே கொஞ்சமாச்சும் சம்பாதிக்க முடியும்னு கடைக்காரங்க நினைக்குறாங்க. மதுரையில் இருக்குற சுமார் 600 டீக்கடை, பெட்டிக்கடைகள்ல நாள்தோறும் சராசரியா 2,000 ரூபாய் மேனி குட்கா வியாபாரம் நடக்கும். ஒரு நாளைக்கு 12 லட்சம் ரூபாய். மாசத்துக்கு சுமார் மூன்றரை கோடி. இது போக மொத்த வியாபாரம் தனி” என்று அதிரவைத்தார். தற்போது மதுரையில் ஒரு குட்கா பாக்கெட் 30 ரூபாய் வீதம் விற்கப்படுகிறது. இந்த வியாபாரத்தில் லோக்கல் காவல்துறை, ரயில்வே போலீஸ், உள்ளூர் அரசியல் புள்ளிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எனப் பலருக்கும் பங்கு செல்வதால், ஆட்சி மாறிய நிலையிலும், காட்சி மாறவில்லை என்கிறது மதுரை மாசிவீதி வட்டாரம்.

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

`மாசம் ஒரு கேஸ் கொடுத்தா போதும்!’ - நெல்லை பிசினஸ் மாடல்

நெல்லை மாவட்டத்துக்கு ரயிலிலும், தென்காசி வழியாக கேரளாவிலிருந்து லாரிகள் மூலமாகவும் குட்கா கொண்டுவரப்படுகிறது. இதற்கான பொறுப்பை நெல்லை மாநகருக்குள் வசிக்கும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் கவனித்துக்கொள்கிறார். குட்கா பதுக்கும் குடோன்களைப் பாதுகாப்பு கருதி அடிக்கடி மாற்றிக்கொள்கிறார்கள். லோக்கலில் யாராவது மாட்டிக்கொண்டாலும், சரக்கு சிக்கிவிடக் கூடாது என்பதற்காக இந்த உஷார் நடவடிக்கையாம். நெல்லை மாநகர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் ‘விமல் பான் மசாலா’ என்கிற பெயரில் குட்கா விற்கப்படுகிறது. நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு பகுதியிலுள்ள இஸ்ரோ மைய வளாகம் ஆகிய இடங்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளில், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சப்ளை செய்வதற்காக அங்குள்ள பெட்டிக்கடைகளிலும் குட்கா தங்கு தடையின்றி விற்கப்படுகிறது.

நமக்கு குட்கா விற்ற கடைக்காரர் ஒருவர், “உள்ளூர் காவல் நிலையம் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் குட்கா ஏஜென்ட்டுகள் மாமூல் கொடுத்துவிடுவதால், எங்களிடம் வந்து யாரும் பணம் கேட்பதில்லை. ஆனால், உள்ளூர் காவல்துறைக்கு ஒவ்வொரு கடைக்காரரும் மாதம் ஒரு கேஸ் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் கண்டிஷன். இதையெல்லாம் சரியாகச் செய்துவிட்டால், எந்த பயமும் இல்லாமல் குட்கா விற்கலாம்” என்று தொழில் ரகசியத்தைப் புட்டுப் புட்டு வைத்தார். ஏரியாவுக்குத் தகுந்தாற்போல, 20 ரூபாயில் ஆரம்பித்து 35 ரூபாய் வரை குட்கா நெல்லை மாவட்டத்தில் விற்கப்படுகிறது.

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

ஈரோட்டைக் கலக்கும் புதுவகை போதை குட்கா!

திருச்சியைப் பொறுத்தவரையில் குட்காவின் கூடாரமே ‘ராம்ஜிநகர்’தான். ஈரோடு வழியாகக் கொண்டுவரப்படும் குட்கா, இங்கேயிருந்துதான் திருச்சியின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறது. பெரிய கம்மாளத்தெரு, சங்கிலியாண்டபுரம், பாலக்கரை, பாபு ரோடு ஆகிய ஏரியாக்களில், ஒரு பாக்கெட் குட்கா 20 ரூபாய் வீதம் விற்கப்படுகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ‘கோல்டு’ கடவுள் பெயர் கொண்டவர்தான் இந்த வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். அவர் மூலமாகச் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை விற்பனைக்கு குட்கா பிரித்து அனுப்பப்படுகிறதாம். `மெடிக்கல் எமர்ஜென்சி’ என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டுவரும் சின்ன யானை வாகனங்கள், காய்கறி லோடு ஆட்டோக்களில் பிரித்து அனுப்பப்படும் குட்கா, வியாபாரிகளுக்கு பைக் மூலமாக டோர் டெலிவரி செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியிலிருந்து சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட காய்கறி வாகனங்கள் ஈரோட்டுக்குள் நுழைகின்றன. இப்படி வரும் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைக்கப்பட்டு இறக்குமதியாகிறது. சூரத்திலிருந்து ரயில் மூலம் கொண்டுவரப்படும் ஜவுளி பண்டல்களுக்கு நடுவேயும் மறைத்துவைத்து குட்காவைக் கடத்திவருகிறார்கள்.

ஈரோட்டில் தற்போது புதிவித போதை குட்கா ஒன்று புழக்கத்தில் இருக்கிறது. குறிப்பிட்ட வகை வாசனைப் பாக்குகளுடன், குட்காவையும் சேர்த்து, புது போதை குட்காவாக விற்பனை செய்கிறார்கள். வீடுகள், குடோன்களில் இந்த குட்காக்கள் பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்திரா நகர், கருங்கல்பாளையம், கொல்லம்பாளையம் போன்ற ஏரியாக்களில் குட்கா, பான் மசாலாக்கள் சகஜமாகக் கிடைக்கின்றன.

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

பி.எம்.டபிள்யூ கார், நீச்சல்குள பங்களா விலைபோன உணவுப் பாதுகாப்புத்துறை?!

குட்கா பஞ்சாயத்து தொடங்கிய சென்னை மாநகரில், இன்று குட்கா விற்பனை ஜிவ்வென எகிறிவிட்டது. இன்றளவும் பெங்களூரிலிருந்து கடத்திவரப்படும் குட்கா சரக்குகள், செங்குன்றம் பகுதியிலுள்ள சில குடோன்களில் பதுக்கி விற்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது, சென்னையில் குட்கா பாக்கெட்டின் விலை குறைவு. எம்.டி.எம்., ரெமோ வகை குட்காக்கள் 5 ரூபாயில் ஆரம்பித்து, 15 ரூபாய் வரை ஏரியாவுக்குத் தகுந்தாற்போல விற்கப்படுகிறது. முகலிவாக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய ஏரியாக்களில் நாம் சென்று விசாரித்தபோது, நம்மிடம் கோட் வேர்ட் எல்லாம் யாரும் கேட்கவில்லை. காசை நீட்டியவுடன் பாக்கெட் கைக்கு வந்தது.

சுகாதாரத் துறையின் கீழ் வரும், உணவுப் பாதுகாப்புத்துறை முக்கிய அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசும்போது, “போலீஸைக் காட்டிலும் குட்கா வியாபாரத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பு, உணவுப் பாதுகாப்புத் துறைக்குத்தான் அதிகம் இருக்கிறது. ஆனால், இந்தத் துறையிலுள்ள சிலர் குட்கா மாஃபியாவுடன் கைகோத்துச் செயல்படுவதால், குட்கா விற்பனையைச் சிறிதளவும் தடுக்க முடியவில்லை. பெயருக்குச் சில கேஸ்களைப் போட்டுவிட்டு போலீஸும் கணக்கு காட்டிவிடுகிறது. கடந்த ஆட்சியில், சுத்தமான துறையைக் கையில் வைத்திருந்த அமைச்சருடன் படித்தவர்கள், அவரின் நண்பர்கள் எனச் சுமார் 15 பேர் டெபுடேஷனில் உணவு பாதுகாப்புத்துறைக்கு ‘ஸ்பெஷலாக’ மாற்றப்பட்டனர். அவர்கள் ஆதரவுடன் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் தமிழகத்தில் குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றது. தென் மண்டலத்துக்கு தேசியத் தலைவர் பெயரைக்கொண்ட ஓர் அதிகாரியும், மத்திய மண்டலத்துக்கு அவதாரப் பெயரைக் கொண்டவரும் குட்கா பாதுகாப்பு தளபதிகளாகச் செயல்பட்டனர்.

மேற்கு மண்டலத்துக்குப் பொறுப்பானவர், மேலிடத்திலிருந்து வரும் கட்டளைகளைக் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பாஸ் செய்து வேலையை முடிப்பதில் கில்லாடி. அந்த அதிகாரிக்கு மேட்டுப்பாளையம் அருகே நீச்சல்குளத்துடன் சொகுசு பங்களாவே அன்பளிப்பாகக் கைமாறியது. மாங்கனி மாவட்டத்தின் அதிகாரி ஒருவருக்கு, அவரது ஒத்துழைப்பைப் பாராட்டி, புது பி.எம்.டபிள்யூ கார் ஒன்று குட்கா மாஃபியாவால் பரிசளிக்கப்பட்டது. தி.மு.க ஆட்சி வந்தும்கூட இவர்களில் யார்மீதும் குறைந்தபட்சம் டிரான்ஸ்பர் நடவடிக்கை கூட இல்லை. இன்னமும் இவர்களின் ஆதிக்கம் தொடர்வதுதான் குட்கா விற்பனை கொடிகட்டிப் பறப்பதற்கும், அதைத் தடுக்க முடியாததற்கும் முக்கியக் காரணம்’’ என்றார்.

இங்கு நாம் குறிப்பிட்டிருக்கும் சில மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சிறு கிராமங்கள் வரை ஊடுருவி குட்கா விற்பனை ஜோராக நடக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் சிறு சிறு மாற்றங்களோடு குட்கா நெட்வொர்க் இதேபோல்தான் செயல்படுகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைக் குறிப்பிடும்போதெல்லாம், ‘குட்கா’ பாஸ்கர் என்றும், அ.தி.மு.க ஆட்சியை, `குட்கா அரசு’ என்றும், 2021 தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் கிண்டலடித்தார். இன்று தி.மு.க அரியணை ஏறிவிட்டது. ஆனாலும், குட்கா விற்பனை நிலைமை கொஞ்சமும் மாறவில்லை என்பதையே நமது நேரடி ஆய்வுகள் உணர்த்துகின்றன. குட்கா கிடைக்கிறது என்பதை உறுதிசெய்ய, சட்டமன்றத்துக்குள்ளேயே தி.மு.க எம்.எல்.ஏ-க்களை குட்கா எடுத்துவரச் செய்த ஸ்டாலின்... என்ன செய்யப்போகிறார்?

ஊரெல்லாம் குட்கா விற்கிறது முதல்வரே...