Published:Updated:

தாய்லாந்து முதலீடு... தேர்தல் செலவுக்கு செக்... தங்கமணி ரெய்டு பின்னணி!

தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கமணி

முதல்வர் ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கொடுத்த அழுத்தமே காரணம்’ என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல துவாரபாலகர்களில் ஒருவரான தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பாய்ந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. “என்னைப் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பெயரில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது” என்று வெளிப்படையாகவே வெடித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. தமிழகம் முழுவதும் 69 இடங்களில் டிசம்பர் 15-ம் தேதி நடத்தப்பட்ட இந்த ரெய்டில் சொல்லிக்கொள்ளும்படியாக ஆவணங்கள், பொருள்கள் சிக்கவில்லையென்றாலும், தங்கமணியைச் சிக்கவைப்ப தற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகச் சொல்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம். தாய்லாந்து முதலீடு, கிரிப்டோகரன்சி விவகாரம் என தங்கமணியின் காலைச் சுற்றும் கயிற்றில், தி.மு.க-வின் உள்ளாட்சித் தேர்தல் வியூகமும் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

தாய்லாந்து முதலீடு... தேர்தல் செலவுக்கு செக்... தங்கமணி ரெய்டு பின்னணி!

பத்தாண்டுப் பகை... பழி தீர்த்தாரா செந்தில் பாலாஜி?

இந்த ரெய்டுக்கு, ‘முதல்வர் ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கொடுத்த அழுத்தமே காரணம்’ என்கிறது அ.தி.மு.க வட்டாரம். செய்தியாளர் சந்திப்பின்போது இதை தங்கமணியும் சுட்டிக்காட்டியிருக்கிறார். நம்மிடம் பேசிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர், “பத்தாண்டுக்காலப் பகைங்க இது” என்று அந்தப் பகையின் பின்னணியை விவரித்தனர்...

“2011 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் கோலோச்சினார் செந்தில் பாலாஜி. அப்போது போயஸ் கார்டனில் நல்ல செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அந்தச் சமயத்தில், தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, தனது இல்லத் திருமணவிழா அழைப்பிதழைக் கொடுப்பதற்காக செந்தில் பாலாஜியின் இல்லத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, தங்கமணியை இரண்டு மணி நேரம் காத்திருக்கவைத்தார் செந்தில் பாலாஜி. சீனியரான தன்னை செந்தில் பாலாஜி காத்திருக்கவைத்தது, தங்கமணி மனதில் தீயாகப் பற்றிக்கொண்டது. இதற்கிடையே, தம்பிதுரைக்கும் செந்தில் பாலாஜிக்குமான மோதல் கரூரில் தடதடத்தது. போயஸ் கார்டனுக்குப் போன இந்தப் புகார்களையடுத்து, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியைப் பறித்த ஜெயலலிதா, அவர் வகித்த போக்குவரத்துத்துறையை தங்கமணி வசம் கூடுதலாக அளித்தார். கரூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பொறுப்பும் தங்கமணி வசம் கூடுதலாக அளிக்கப்பட்டது. ‘தனது பதவி பறிபோனதற்கு தங்கமணிதான் பிரதான காரணம்’ என்று செந்தில் பாலாஜிக்கு அன்று ஏற்பட்ட கோபம் இன்றுவரை தணியவில்லை. மேலும், அ.ம.மு.க-வுக்குச் சென்று பிறகு அங்கிருந்து மீண்டும் அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி வர முயன்றபோது, தங்கமணி உடன்படவில்லை. அதன் பிறகுதான், தி.மு.க-வுக்குச் சென்றார் செந்தில் பாலாஜி. இருவருக்கும் இடையிலான இந்தப் பகை பத்தாண்டுகளாகத் தொடர்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில், அமைப்புரீதியாக தி.மு.க-வின் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் வரும் மூன்று தொகுதிகளை அந்தக் கட்சி கைப்பற்றியது. ஆனால், நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்குள் வரும் குமாரபாளையம், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க-வை வீழ்த்த முடியவில்லை. குமாரபாளையத்தில் தங்கமணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தார். தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, கொங்கு மண்டலக் கட்சிப் பொறுப்பு செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டது. பொறுப்பு கைக்கு வந்தவுடன், ‘கொங்கு ஏரியாவில் வேலுமணி, தங்கமணி வீழ்த்தப்படாதவரை தி.மு.க-வை இங்கு வலுவாக்க முடியாது’ என்று ஸ்கெட்ச் போட்டுவிட்டார் செந்தில் பாலாஜி. அதன் ஒரு பகுதியாகத்தான் வேலுமணி மீது ரெய்டு நடத்தப்பட்டது. தற்போது, தங்கமணி மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது” என்றனர்.

தாய்லாந்து முதலீடு... தேர்தல் செலவுக்கு செக்... தங்கமணி ரெய்டு பின்னணி!

தாய்லாந்து ரூட்டு... கிரிப்டோகரன்சி முதலீடு!

டிசம்பர் 15-ம் தேதி காலை 5:30 மணிக்கு ரெய்டு தொடங்கிய நேரத்தில், ஆலம்பாளையம் கிராமத்திலுள்ள தன் வீட்டில்தான் இருந்தார் தங்கமணி. ஆய்வாளர் சந்திரகுமார் தலைமையில், 20 போலீஸார் அவர் வீட்டுக்கு வந்தபோது, சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றிருக்கிறார். இவர் வீடு மட்டுமல்லாமல், களியனூர் பகுதியிலுள்ள தங்கமணியின் சம்பந்தி சிவசுப்ரமணியம் வீடு, அவரின் தம்பி வீடு, நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வாகியான தங்கமணியின் மருமகன் தினேஷுக்குச் சொந்தமான வீடு, ஹோட்டல், ஆண்டிக்காடு பகுதியிலுள்ள தங்கமணியின் சகோதரி நாகரத்தினம் வீடு, சேலத்திலுள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு, இரண்டு கட்டுமான நிறுவனங்கள் என்று மொத்தம் 69 இடங்களில் ரெய்டுகள் தடதடத்தன. ஆனால், எது பற்றியும் பதற்றமில்லாமல் கூலாகச் சோதனையை எதிர்கொண்ட தங்கமணி, வீட்டு வாசலில் குழுமியிருந்தவர்களுக்குத் தண்ணீர் பாட்டில், சுடச்சுட டீ, மதியம் தக்காளி சாதம் வழங்கி ரெய்டை ‘விழாக்கோலம்’ ஆக்கினார். ரெய்டு தொடங்கிய சில மணி நேரத்திலேயே முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், கருப்பணன், கே.வி.ராமலிங்கம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தாமோதரன் என்று கட்சி சீனியர்கள் தங்கமணி வீட்டுக்கு வந்தனர். சென்னையிலிருந்து வழக்கறிஞர்கள் அணியைச் சார்ந்த இன்பதுரை, செல்வம் ஆகியோரும் வந்திருந்தனர். வேலுமணியின் கண்ணசைவில் இயங்கிய தொண்டர்படை, அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தி.மு.க-வை எதிர்த்து கோஷமிட்டது.

ஆலம்பாளையத்தில் கார்கூட புக முடியாத சந்தில்தான் வசிக்கிறார் தங்கமணி. சொந்த ஊரில் இப்படி ‘சிம்பிளிசிட்டி’ காட்டிக்கொண்டாலும், முதலீடுகள் பலவற்றையும் வெளிநாடுகளில் கொட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். ரெய்டு நடத்திய அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “தங்கமணி தரப்பினர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதை எங்களுக்குச் சொன்னதே செந்தில் பாலாஜிதான். சமீபத்தில், கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்து மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆராய்ந்தனர். அப்போதுதான், தங்கமணி தரப்பும் அதில் முதலீடு செய்திருக்கும் தகவல் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அந்தத் தகவலை, தனக்கு நெருக்கமான அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மூலம் தெரிந்துகொண்ட செந்தில் பாலாஜி, விஷயத்தை முதல்வருக்கு பாஸ் செய்திருக்கிறார். அதன் பிறகுதான், எங்களுக்கே இந்த விவகாரம் தெரியவந்தது.

மெய்நிகர் நாணயமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், அதைக் கண்டுபிடித்து நிரூபணம் செய்வது லேசுப்பட்ட காரியமல்ல. தவிர, கிரிப்டோகரன்சிகள் பலவற்றின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ‘புரோக்கர் சூஸர்’ என்கிற ஆய்வுத்தளம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் 10.07 கோடி பயனாளர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர். இந்தியர்கள் முதலீடு செய்திருக்கும் மதிப்பு, பத்து பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்து முன்னேறிச் செல்கிறது. இதிலுள்ள சூட்சுமங்களை அறிந்த தங்கமணி தரப்பு, உறவினர் ஒருவர் மூலமாக தாய்லாந்தில் வைத்து பெரும் தொகையை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருக்கிறது.

தங்கமணி மின்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்துதந்தது. அந்த நிறுவனத்துடன் தங்கமணி தரப்புக்கு நடந்த பரிவர்த்தனைகள், துபாயில் அந்த நிறுவனம் மூலமாகச் செய்திருக்கும் முதலீடுகள் தொடர்பாகச் சில ஆவணங்களைச் சேகரித்திருக்கிறோம். தங்கமணி விவகாரத்தில் விரைவில் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சிக்கவிருக்கிறார். மின்சாரத்துறையில் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி செய்திருந்த முறைகேடுகள் தொடர்பாகச் சில கோப்புகள் சிக்கியிருக்கின்றன” என்றனர்.

தாய்லாந்து முதலீடு... தேர்தல் செலவுக்கு செக்... தங்கமணி ரெய்டு பின்னணி!
தாய்லாந்து முதலீடு... தேர்தல் செலவுக்கு செக்... தங்கமணி ரெய்டு பின்னணி!

ரெய்டு பின்னணி... உள்ளாட்சித் தேர்தல் செலவுகளுக்கு செக்?

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கணக்கில் வராத 2.16 கோடி ரூபாய் பணம், பல வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களின் சாவிகள், கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் தங்கமணிக்குத் தொடர்புடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதோடு, தங்கமணி பயன்படுத்திய ஐபோனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, ரெய்டு தகவலை முன்கூட்டியே தெரிந்துகொண்ட தங்கமணி, சுதாரிப்பாகச் சில வேலைகளைச் செய்துகொண்டார் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலர், “எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பாகச் செலவழிக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் மூவர்தான். எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மற்றும் தங்கமணி. இதில், எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு வழக்கின் விசாரணை தீவிரமாவதாலும், அவருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் மீதே ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாலும், கண்கொத்திப் பாம்பாக அவரின் பரிவர்த்தனைகளை லஞ்ச ஒழிப்புத்துறை கவனிப்பதாலும், நிதியளிக்க முடியாத நெருக்கடியில் எடப்பாடி சிக்கியிருக்கிறார். இதே சிக்கல் வேலுமணிக்கும் இருக்கிறது. அவர் நம்பியிருந்த நிலவுப் பிரமுகர் தற்போது தி.மு.க ஜாகை பார்க்க ஆரம்பித்துவிட்டார். ஏற்கெனவே வேலுமணி மீதும் ரெய்டு நடந்திருப்பதால், செலவு செய்யும் நிலையில் அவர் இல்லை. மீதமிருப்பது தங்கமணிதான். அவரை நம்பி நிதி கொடுப்பதற்குச் சில தொழிலதிபர்களும் தயாராக இருந்தனர். அந்தத் தொழிலதிபர்களை அச்சுறுத்துவதற்காகவும், அ.தி.மு.க தலைமையை நிதிநெருக்கடியில் தள்ளுவதற்காகவும்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் வைட்டமின் ‘ப’வை இறக்கி விளையாட தி.மு.க முடிவெடுத்துவிட்டது. குறிப்பாக, கொங்கு மண்டலத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாநகராட்சிகளில் அந்தக் கட்சியை வெற்றியடையவைப்பது என்பதில் தீர்மானமாக இருக்கிறார் செந்தில் பாலாஜி. தங்களுக்கு நிகராக அ.தி.மு.க செலவழிக்கக் கூடாது, வெற்றிபெறக் கூடாது என்பதற்காகத்தான், தங்கமணி மீது ரெய்டை ஏவியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் அ.தி.மு.க அஞ்சப்போவதில்லை” என்றனர்.

தாய்லாந்து முதலீடு... தேர்தல் செலவுக்கு செக்... தங்கமணி ரெய்டு பின்னணி!

‘ரெய்டு வருவது முன்கூட்டியே தெரிந்து தயாராகத்தான் காத்திருந்தார் தங்கமணி’ என்கிறது இலைக் கட்சி வட்டாரம். ரெய்டிலும் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் கைப்பற்றப்படவில்லை. என்றாலும், ‘தங்கமணியை சிக்கவைக்க எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆவணங்களே போதுமானவை’ என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ‘இது கண்துடைப்பு ரெய்டு’ என்று கிண்டல் செய்கின்றன எதிர்க்கட்சிகள். கடந்த ஆறு மாதங்களில் ஐந்து அமைச்சர்கள் மீது ரெய்டு அஸ்திரம் ஏவப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் இல்லை. உருப்படியான திசையில் ரெய்டுகள் நகராத வரை, இது வெறும் ‘பீதி கிளப்பும் மேஜிக் ஷோ’வாக மட்டுமே பார்க்கப்படும்!

****

“கிரிப்டோகரன்சியா... என்னன்னே தெரியாது!”

தங்கமணி ரெய்டு தொடர்பாகப் பேசியிருக்கும் செந்தில் பாலாஜி, “ஊழல் பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருக்கும் முதல் அரசியல்வாதி தங்கமணிதான். கண் பார்வையிலிருந்து காணாமல்போன நிலக்கரி, கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோகரன்சி இரண்டுக்கும் அவர் முதலில் பதில் சொல்ல வேண்டும்” என்றிருக்கிறார்.

இந்த ரெய்டுகள் குறித்து தங்கமணியிடம் பேசினோம். “இந்த ரெய்டுக்கு செந்தில் பாலாஜிதான் காரணம். தேர்தலுக்கு மூன்று மாசத்துக்கு முன்னால, ஒரு துக்க வீட்டுக்கு எங்க பரமத்தி சேர்மன் போயிருந்தாரு. செந்தில் பாலாஜியும் அங்க வந்திருக்காரு. எங்க சேர்மனைக் கூப்பிட்டு, ‘உங்க மந்திரிகிட்ட போய் சொல்லு. மூணு மாசம் கழிச்சு நான் அந்தத் துறைக்கு மந்திரியா வரப் போறேன். மந்திரி மட்டுமில்லை, அவரோட பையன், மனைவின்னு மூணு பேரையும் கருவறுக்கப்போறேன்’னு சவால் விட்டிருக்காரு. இப்ப அதே மாதிரி எங்க மூணு பேர் மேலதான் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க. அவர் தூண்டுதல்லதான் இதெல்லாம் நடந்துருக்கு. ஆண்டவன் இருக்காரு. சட்டமும் நீதியும் இருக்கு. நிச்சயமா தர்மம் வெல்லும். என் மனைவி பேர்ல ஏதாவது சொத்து இருந்தா பரவாயில்லை. அவங்க பேர்ல 100 ரூபாய்க்குக்கூட எந்தச் சொத்தும் இல்லை. அப்படியிருக்க, என் மனைவி பேரையும் சேர்த்ததை என்னன்னு சொல்றது... அந்த கிரிப்டோகரன்சின்னா என்னன்னே எனக்குத் தெரியாது” என்றார்.

ரெய்டில் தப்பிய தலைகள்!

69 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டாலும், தங்கமணிக்கு நெருக்கமான சிலரைக் குறிவைக்கத் தவறிவிட்டதாம் லஞ்ச ஒழிப்புத்துறை. “கடந்த ஆட்சியில் இலவச வேட்டி சேலை நூல் டெண்டர் எடுத்திருந்த ‘அழகு’ பிரமுகர், ஸ்கூல் யூனிஃபார்ம் டை போடும் பணியை எடுத்திருந்த ‘முருகப்’ பெயர்கொண்டவர், முழுமுதற் கடவுள் பெயரில் இயங்கிய ஸ்பின்னிங் மில் ஆகியோர் அதிகாரிகளின் சோதனையில் தப்பிவிட்டனராம். தங்கமணி தரப்பின் கரன்சிகளை டீல் செய்தவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒருவரும், தங்கமணியின் பி.ஏ-வாக இருந்தவரும் மிக நெருக்கம். அந்த நபர் மூலமாக டாஸ்மாக் நிழல் பிசினஸின் வருமானம் கைக்கு வந்ததாம். சிவபெருமான் பெயர்கொண்ட அந்தத் தொழிற்சங்க நபர்மீது கைவைக்கப்படவில்லை.

கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் மூன்று அதிகாரிகள்தான், மின்துறைக்கு உபகரணங்களை வாங்குதல், மின்தொடர் பாதை அமைப்பு, அனல்மின் நிலைய ஒப்பந்தங்கள், தனியாரிடம் மின்சாரக் கொள்முதல், நிலக்கரி இறக்குமதி எனப் பல விஷயங்களில் முடிவெடுத்தனர். நிலக்கரி இருப்பு குறைந்த விஷயத்தில் மட்டுமே அரசுக்கு சுமார் 375 கோடி ரூபாய் இழப்பு. இந்தப் பிரச்னைகளிலிருந்து மீள இவர்கள் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய ரெடியாக இருக்கிறார்களாம். இவர்கள் மீதும் கைவைக்கப்படவில்லை.

தனியார் சப்ளையர்கள் பலருக்கும் மின்துறை தரவேண்டிய நிலுவைப் பணத்தை முன்னுரிமை என்கிற பெயரில், தங்கமணி மருமகனின் நண்பர் ஒருவர்தான் பெற்றுத்தந்தார். இதற்காக மூன்று சதவிகித கமிஷனை அந்த மூன்றெழுத்துக்கார நண்பர் பெற்றுக்கொண்டார். இந்த நபர்மீதும் கைவைக்கப்படவில்லை. தங்கமணியின் பி.ஏ-வாக இருந்த ஒருவர் மின்துறையின் அதிகாரிகள் மாறுதல் விவகாரங்களைக் கடந்த ஆட்சியில் கையாண்டார். சென்னையிலுள்ள ‘கட்டளை’யான ஏரியாவில்தான் இவரின் சந்திப்புகள் நிகழும். இவர்களை நெருக்கியிருந்தால் பல முறைகேடுகள் வெளியில் வரும். ஆனால், இந்தத் திசையில் லஞ்ச ஒழிப்புத்துறை போகவே இல்லை’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.