Published:Updated:

மொழியா... நிதியா? - உச்சத்தில் குடும்பப் போர்!

மொழியா... நிதியா? - உச்சத்தில் குடும்பப் போர்!
பிரீமியம் ஸ்டோரி
News
மொழியா... நிதியா? - உச்சத்தில் குடும்பப் போர்!

இருவருக்கும் இடையிலான பனிப்போர் வெட்ட வெளிச்சமானது, தான் தலைமையேற்றிருக்கும் கழக மகளிரணிக்கு கனிமொழி அனுப்பியிருந்த ஒரு சுற்றறிக்கையில்தான்

20, மே 2011. அந்த நாளை தி.மு.க தலைவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அன்றைய தினம், 2ஜி வழக்கில் கைதுசெய்யப்பட்டார் கனிமொழி. அந்தச் செய்தி கோபாலபுரத்தை எட்ட, அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி அடைந்த கோபத்தை ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என்பார்கள் அன்று உடனிருந்த தி.மு.க சீனியர்கள். ‘கருணாநிதி மகள்டா... என் பெண்ணையே கைது செய்துட்டாங்களா?’ என்று ஆத்திரத்தோடு தன்னை மறந்து தன் கையிலிருந்த பொருளை கருணாநிதி வீசியடித்ததை விவரித்துச் சொல்வார்கள். அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு என வாரிசுகள் பலர் இருந்தாலும், கனிமொழி மீது அவருக்குக் கடைசிவரை தனிப்பாசம் இருந்தது. அதேசமயம், ‘தலைவர் பொண்ணு...’ என்கிற அடையாளத்தையும் தாண்டி, கட்சிக்குள் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டதோடு, அதை இன்றுவரை தக்கவைத்தும்கொண்டார். கனிமொழி. “அந்த அடையாளம் இப்போது சிலருக்குப் பிரச்னையாகியிருப்பதுதான் ‘தி.மு.க குடும்பத்துக்குள்’ போர் மேகங்களை உருவாக்கியிருக்கிறது” என்கிறது முதல்வர் குடும்பத்துக்கு மிக நெருக்கமான வட்டாரம்!

நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், “முதல்வர் குடும்பத்தின் அடுத்த டார்கெட், உதயநிதியை உச்சத்தில் அமரவைப்பதுதான். இளைஞரணிச் செயலாளர், எம்.எல்.ஏ., என ‘உயர்ந்துகொண்டே’ போகும் உதயநிதியை அமைச்சர், துணை முதல்வர் என அடுத்தடுத்து உயர்த்த, தீவிரமான முயற்சிகள் நடக்கின்றன. அதேநேரம் பல காலமாகக் ‘காத்திருப்பு’ப் பட்டியலிலிருக்கும் கனிமொழியைத் திட்டமிட்டுச் சீண்டவும் சில வேலைகள் நடக்கின்றன. அதுதான், ‘மொழியா… நிதியா? என்கிற குடும்பப் போராகக் கட்சிக்குள் இப்போது கனன்று எரிகிறது” என்றார். முதல்வரின் தங்கை கனிமொழிக்கும், முதல்வரின் மகன் உதயநிதிக்கும் இடையே சத்தமில்லாமல் நடக்கும் இந்தப் பனிப்போர், தி.மு.க-வுக்குள் அனல்பறக்கும் விவாதமாகவும் ஆரம்பித்திருக்கிறது!

மொழியா... நிதியா? - உச்சத்தில் குடும்பப் போர்!

வெடிவைத்த சுற்றறிக்கை!

இருவருக்கும் இடையிலான பனிப்போர் வெட்ட வெளிச்சமானது, தான் தலைமையேற்றிருக்கும் கழக மகளிரணிக்கு கனிமொழி அனுப்பியிருந்த ஒரு சுற்றறிக்கையில்தான். டிசம்பர் மாதம் 26-ம் தேதி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்தச் சுற்றறிக்கையைப் பதிவிட்டார் கனிமொழி. “தமிழகத்தின் மக்கள்தொகையில் சரிசமமான பங்குடையவர்கள் பெண்கள். நமது கழகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளம்பெண்களின் பங்கு இன்றியமையாதது. அந்தவிதத்தில், இன்றிருக்கும் 18-30 வயதுக்குள்ளான இளம்பெண்களை நமது கழகத்தின் ‘மகளிரணி உறுப்பினர்களாக’ இணைத்து, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, 18-30 வயதுக்குட்பட்ட மகளிரை ‘மகளிரணியில்’ மட்டுமே இணைக்க வேண்டும் எனப் பொருள்படுமாறு மேற்கோள் குறியிட்டு, அந்தச் சுற்றறிக்கை வெளியானதுதான் விவகாரத்தைச் சூடாக்கியது.

பொதுவாக தி.மு.க அணிகளின் மாநில நிர்வாகிகள் இது போன்ற கடிதம், சுற்றறிக்கைகளை வெளியிட்டால், அவை ‘முரசொலி’யில் வெளியாவது வழக்கம். ஆனால், இந்தச் சுற்றறிக்கை முரசொலியிலும் வெளியாகவில்லை. ‘உதயநிதியை எதிர்த்து எழுதப்பட்ட இந்தச் சுற்றறிக்கை, அவர் நிர்வாக இயக்குநராக இருக்கும் முரசொலியில் எப்படி வெளிவரும்?’ என்கிறது கனிமொழிக்கு நெருக்கமான வட்டாரம்.

பற்றவைத்த செந்தில் பாலாஜி!

இந்தப் பின்னணி குறித்து தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “2019-ல் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி கொண்டுவரப்பட்டபோது, அதை மனப்பூர்வமாக வரவேற்றவர் கனிமொழி. அண்ணன் மகனின் வளர்ச்சியில் எந்தவிதப் பொறாமையும் இதுவரை அவரிடம் வெளிப்பட்டதில்லை. ஆனால், உதயநிதியைச் சுற்றியிருப்பவர்களிடம் அந்தப் பக்குவமில்லை. தான் கட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், அன்பகத்தில் இளைஞரணியின் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் உதயநிதி. கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், ‘இளைஞரணியில் இளம்பெண்களையும் இணைக்க, தலைமையிடம் நீங்கள் அனுமதி வாங்க வேண்டும்’ என்று கூற, அதற்கு உதயநிதியும் சம்மதித்துவிட்டார். இந்தத் தகவல் கனிமொழிக்கு எட்டியவுடன் மிகவும் வருத்தத்துக்கு உள்ளானவர், உடனடியாக ஸ்டாலினிடம் பேசினார். ‘`மகளிரணி என்று ஒன்று இருக்கும்போது, இளம்பெண்களை இளைஞரணியிலும் சேர்ப்பது நியாயமா... 50 வயதைக் கடந்தவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, என்னை அணியை நடத்தச் சொல்கிறீர்களா?” என்று கடும் விரக்தியில் கனிமொழி முறையிட, இந்த விவகாரம் அப்போதைக்குத் தலைமையால் அமுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், அமைச்சர் செந்தில் பாலாஜி ரூபத்தில் மீண்டும் அந்த விவகாரம் வெடித்திருக்கிறது.

மொழியா... நிதியா? - உச்சத்தில் குடும்பப் போர்!

கடந்த டிசம்பர் 26-ம் தேதி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கோவையில் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், புதிதாக 2,000 இளம்பெண்களை தி.மு.க இளைஞரணிக்குள் சேர்த்தனர். இந்தத் தகவல் கனிமொழிக்குத் தெரிந்தவுடன், ‘நாம இவ்வளவு சொல்லியும் கூட்டம் நடத்தி, பெண்களை இளைஞரணிக்குள் சேர்க்கறாங்கன்னா என்ன அர்த்தம்... சென்னையிலருந்து உத்தரவு வராமல், ஒரு அமைச்சரால தன்னிச்சையாக இப்படிச் செய்ய முடியுமா?’ என்று அவர் வட்டாரத்துக்குள் புகைச்சல் அதிகமானது. அதன் பிறகுதான், அந்தச் சுற்றறிக்கை வெளிவந்தது. அது குறித்து தங்கையிடம் கேள்வி கேட்க முதல்வருக்கும் தயக்கம். ஆனால், சுற்றறிக்கை ஏற்படுத்திய அதிர்வு இன்றுவரை நின்றபாடில்லை. கடந்த சில மாதங்களாகவே கனிமொழியைக் கட்சிக்குள் ஓரங்கட்டும் போக்கு அதிகரித்திருப்பதும், கனிமொழிக்கு எதிராகக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடர்ந்து உள்ளரசியல் செய்துவருவதுமே இந்தச் சுற்றறிக்கை விவகாரம் வெடிப்பதற்கு முக்கியக் காரணம்” என்றனர்.

டெல்லியிலும் முடக்கப்பட்ட கனிமொழி!

கழக வர்த்தக அணிப் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க-வில் பத்துக்கும் மேற்பட்ட சார்பு அணிகள் உள்ளன. அவற்றில் ஓர் அணிதான் மகளிரணி. இந்தச் சார்பு அணிகள் தனியாக உறுப்பினர் சேர்க்கையோ, வங்கிக் கணக்கோ வைத்துக்கொள்ள முடியாது. ஆனால், இது போன்ற கட்டுப்பாடுகள் இளைஞரணிக்குக் கிடையாது. தனியாக உறுப்பினர்களைச் சேர்க்கலாம், வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ளலாம். ஸ்டாலின் அந்த அணியை உருவாக்கி, செயலாளராகவும் இருந்ததால் அந்த அணிக்கு அந்தச் சலுகைகள் வழங்கப்பட்டன. அந்த அதிகாரத்தைக் கையிலெடுத்துத்தான் தன் அத்தைக்கு எதிராகவே யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி.

கனிமொழி மீது தி.மு.க சீனியர்கள் பலருக்கு அளப்பரிய பாசம் எப்போதும் உண்டு. குறிப்பாக, தலைவரின் மறைவுக்குப் பிறகு, இந்த அபிப்ராயம் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஜனவரி 5-ம் தேதி, கனிமொழியின் 54-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத நிலையிலும், துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், பெரியகருப்பன், நாசர் என 15 அமைச்சர்கள் சி.ஐ.டி காலனிக்கு வந்து வாழ்த்து சொன்னார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷாகூட அந்நாளில் வாழ்த்தினார். ‘ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கனிமொழிக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்’ என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. இந்த எண்ணம்தான் உதயநிதி தரப்புக்குப் பிடிக்கவில்லை. மாநிலத்துக்குள் அரசியல் செய்ய விரும்பிய கனிமொழியை, குடும்பத்துக்குள் அரசியல் செய்து எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பிவைத்தனர். கருணாநிதி இருந்தவரையில், டெல்லியின் முகமாக முரசொலி மாறனுக்குப் பிறகு கனிமொழிதான் இருந்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் எந்நேரம் வேண்டுமானாலும் பேசக்கூடிய தொடர்புகளோடு அவர் பணியாற்றினார். அதனால்தான் கருணாநிதி உடல்நிலை குன்றியிருந்தபோது, அவரைப் பார்க்க மோடி கோபாலபுரம் வீட்டுக்கே வந்தார். அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது கனிமொழிதான். இது அப்போதே குடும்பத்துக்குள் சிலரின் கண்களை உறுத்தியது. அகில இந்தியத் தொடர்பும், ஆங்கிலத்தில் சிறப்பாகப் பேசுவதும், கருணாநிதியைப்போல இலக்கியத்தில் ஆளுமைகொண்டிருப்பதும் எதிர்காலத்தில் தங்களுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று குடும்பத்துக்குள்ளேயே கணக்கு போட்டனர் சிலர். இதனாலேயே, ராஜ்ய சபா தி.மு.க குழுத் தலைவராக இருந்த கனிமொழிக்கு, நாடாளுமன்றக்குழுவின் துணைத் தலைவர் என்கிற பதவியை மட்டும் வழங்கி டெல்லியிலும் அவரை முடக்கிவிட்டார்கள்.

இப்போது, தி.மு.க மகளிரணியினர் நடத்தும் கூட்டங்களில், ‘உதயநிதியின் படமும் பேனர்களில் இடம்பெற வேண்டும்’ என்று தலைமையிலிருந்தே ‘அன்புக் கட்டளை’ இடப்படுகிறது. இதேபோல, இளைஞரணிக் கூட்டத்தில் மகளிரணிச் செயலாளர் என்று கனிமொழி படம் இடம்பெறுமா? ‘மகளிரணியில் நிர்வாகிகள் நியமனம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் ஒப்புதலுடனேயே நடக்க வேண்டும்’ என்கிறார்கள். மாவட்டச் செயலாளர்களோ, உதயநிதியிடம் நிர்வாகிகள் பட்டியலைக் காட்டிய பிறகே கனிமொழிக்கு அனுப்புவதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கனிமொழியால் எப்படிப் பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியும்?” என்றார்கள்.

மொழியா... நிதியா? - உச்சத்தில் குடும்பப் போர்!

சங்கமத்திலும் சங்கடம்!

‘சென்னை சங்கமம்’ என்கிற பெயரில் 2007-ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகள் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் கனிமொழி. மறைந்துகொண்டிருக்கும் கிராமியக் கலைகளுக்கு உயிரூட்டும்விதமாக இருந்ததால், அந்த நிகழ்ச்சிக்குப் பெரும் வரவேற்பும் இருந்தது. அ.தி.மு.க-வின் பத்தாண்டு ஆட்சிக்குப் பிறகு, மீண்டும் இப்போது தி.மு.க அரியணை ஏறியிருக்கும் நிலையில், சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்தக் கோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கைவைத்தனர். ஆனால், தி.மு.க தலைமையில் வேறு கணக்கு போடப்பட்டது. சங்கமம் நிகழ்ச்சியை நடத்தினால் கனிமொழியை உள்ளே கொண்டுவர வேண்டும் என்பதால், அதே நிகழ்ச்சியை ‘நம்ம ஊரு திருவிழா’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, அந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டாலும், அடுத்த ஆண்டு மாவட்டவாரியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, தன்னை ஓரங்கட்டுவதற்காகவே தனி ட்ராக்கில் முன்னெடுக்கப்படுவதாக நினைக்கிறார் கனிமொழி.

கனிமொழியின் தீவிர ஆதரவாளர்களிடம் பேசினோம். “கட்சி ரீதியான சங்கடங்களை எப்போதும் அமைதியாகவே கடப்பவர் கனிமொழி. ஆனால், தன்னுடைய அதிகாரத்தைக் கட்சிக்குள் மட்டுப்படுத்துவதுபோல உதயநிதி செயல்படுவதைத்தான் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சற்குண பாண்டியன் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு கனிமொழிக்கு வந்திருக்க வேண்டும். பெண்ணுரிமை, சமநீதி எனப் பேசுபவர்கள் இதைச் செய்திருக்க வேண்டும். கனிமொழிக்கு அந்தப் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதில் சிலர் குறியாக இருந்து, ஜெயித்தும்விட்டனர். ஆனால், இந்த முறை கனிமொழி அமைதியாக இருக்கப்போவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அந்தச் சுற்றறிக்கை. தன் அப்பா, தனக்குக் கொடுத்த பொறுப்பில் யாரும் குறுக்கிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் அவர்.

பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தாங்கள் விரும்பிய துறை கிடைக்காத வேதனையில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், நாடாளுமன்றம் வரை உதயநிதி புராணம் பாடுவதும், அன்பில் மகேஷின் கருத்துக்கு வழிமொழியச் சொல்வதும் சீனியர் அமைச்சர்களையே முகம் சுளிக்க வைத்திருக்கிறது. தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்த முடியாமல் பலரும் மென்று விழுங்கிய நிலையில், கனிமொழி வெளியிட்ட `பொளேர்’ அறிக்கை பலரையும் வியக்கவைத்திருக்கிறது. உதயநிதி தன் கையில் மொத்தமாகக் குவிக்க முயலும் அதிகாரத்துக்கு எதிராக, கனிமொழி உயர்த்திய போர்க்கொடியாகவே பலரும் இதைப் பார்க்கிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவிப்பதன் அடையாளமாகவே ஜனவரி 5-ம் தேதி சி.ஐ.டி காலனியில் கூடிய மாண்புமிகுக்களின் கூட்டத்தைக் கருதுகிறார்கள் உடன்பிறப்புகள்.

மொழியா... நிதியா? - உச்சத்தில் குடும்பப் போர்!

தங்கையா, மகனா?

உதயநிதி அரசியலுக்குள் வந்து எத்தனை காலம் ஆகிறது... அதற்குள் ஏன் இவ்வளவு அங்கீகாரங்கள்? உதயநிதியை அமைச்சராக்கும் கோரிக்கையை உரக்கச் சொல்ல பல அமைச்சர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். துணை முதல்வராக்கச் சொல்லி ஒலிக்கிற குரல்களுக்கும் குறைவில்லை. கருணாநிதியின் மகனாக இருந்தாலும், ஸ்டாலின் படிப்படியாகத்தான் வளர்ந்தார். பலவிதமான போராட்டங்களைத் தாண்டித்தான் அங்கீகாரத்தைப் பெற்றார். ஆனால், அதில் துளியளவு போராட்டமோ, கஷ்டமோ இல்லாத உதயநிதியைக் கண்ணாடித் தொட்டி மீனாக ஸ்டாலின் பார்த்துக்கொள்வதுதான் ஆச்சர்யம். இந்த அக்கறையில் துளியளவைக்கூட கனிமொழியின் வளர்ச்சியில் ஸ்டாலின் காட்டாதது ஏன்? கலைஞர் தொலைக்காட்சியின் பங்கில் 60 சதவிகித பங்கு வைத்திருந்தவர் தயாளு அம்மாள். ஆனால், 20 சதவிகித பங்கு மட்டுமே வைத்திருந்த கனிமொழி, 193 நாள்கள் ஏன் திகார் சிறைவாசம் அனுபவித்தார் என்பது ஸ்டாலினுக்குத் தெரியாதா... அந்தச் சிறைவாசமும் நெருக்கடியும் கட்சிக்கான தொண்டு இல்லையா... மகளிரணியை டம்மியாக்கி, உதயநிதியின் இளைஞரணியை வலுப்படுத்த நடக்கும் முயற்சிகள் கனிமொழியைத் திட்டமிட்டுச் சீண்டத்தானே... உதயநிதி அடையத் துடிக்கும் பதவிகளுக்கு, நாற்காலிக்கு கனிமொழி தகுதியானவர் இல்லையா?” என்றனர் ஆற்றாமையுடன்.

‘பெரிய எதிர்பார்ப்புகளின்றி, தலைமை கொடுக்கும் பணிகளில் மட்டும் கவனம் செலுத்திவருபவர் கனிமொழி. ஆனால், அவர் எதிர்காலத்தில் போட்டியாக வந்துவிடுவாரோ என்கிற அச்சத்தில், அவருக்கு உதயநிதி தரப்பு தொடர்ந்து பல்வேறு மறைமுகச் சங்கடங்களைக் கொடுத்துவருகிறது. பொறுமை கடந்து, முதன்முறையாக மௌனம் கலைத்திருக்கிறார் கனிமொழி. சங்கடங்கள் தொடரும் பட்சத்தில், கனிமொழி `கணீர்’மொழியாக ஓங்கி ஒலிக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தங்கைக்கும் மகனுக்கும் இடையிலான பனிப்போரில், ஸ்டாலின் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார் என்பதுதான் தமிழக அரசியலின் அனல் கேள்வி!