Published:Updated:

கொடநாடு க்ளைமாக்ஸ் - மர்ம சான்ட்ரோ... துபாய் போன் கால்... சேலத்து சந்திப்பு

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

இவையெல்லாம் யதார்த்தமாக நடந்தனவா... திட்டமிட்ட சதியா என்பது அரைகுறையாகவே விசாரிக்கப்பட்டது” என்கிறார்கள்.

கொடநாடு க்ளைமாக்ஸ் - மர்ம சான்ட்ரோ... துபாய் போன் கால்... சேலத்து சந்திப்பு

இவையெல்லாம் யதார்த்தமாக நடந்தனவா... திட்டமிட்ட சதியா என்பது அரைகுறையாகவே விசாரிக்கப்பட்டது” என்கிறார்கள்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியை இவ்வளவு பதற்றமாக யாரும் பார்த்ததில்லை. ஆகஸ்ட் 18-ம் தேதி, கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி சட்டமன்றத்துக்குள் வந்தவரின் முகம் இருண்டுபோயிருந்தது. அவையில், “கொடநாடு விவகாரம் குறித்துப் பேச வேண்டும்” என்று பேச்சை ஆரம்பித்தார் எடப்பாடி. சபாநாயகர் அப்பாவு மறுக்க, சபையைவிட்டு ஆவேசத்துடன் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, “சயானிடம் மறு விசாரணை மேற்கொண்டு, இந்த வழக்கில் என்னையும், அ.தி.மு.க-வின் கழகப் பொறுப்பாளர்களையும் சேர்க்கத் திட்டமிடுகிறது தி.மு.க” என்றார். தி.மு.க அரசைக் கண்டித்து, இரண்டு நாள்கள் சபையைப் புறக்கணிப்பதாக அறிவித்ததோடு, தி.மு.க தங்களைப் பழிவாங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அ.தி.மு.க தலைவர்கள் மனு ஒன்றையும் அளித்திருக்கிறார்கள்.

தி.மு.க ஏற்கெனவே எடப்பாடி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது. சாலை ஒப்பந்தங்களில் 4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு புகாரில், நடவடிக்கை எடுக்கும்படி எடப்பாடி பழனிசாமி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கே போட்டது தி.மு.க. அப்போதெல்லாம் பதற்றமடையாத எடப்பாடி, கொடநாடு விவகாரத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பதற்றமாகிறார்? இந்தக் கேள்விக்குள் ஆயிரம் மர்மங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

மர்மம் விலகாத கொடநாடு வழக்கு!

அ.தி.மு.க-வினரால் இரண்டாவது புண்ணியத்தலமாக வணங்கப்பட்ட கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017, ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதை யாராலும் முதலில் நம்ப முடியவில்லை. அதுவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற சமயத்தில், இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. பங்களாவுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், தங்களைத் தடுத்த காவலாளி ஓம்பகதூரை முதலில் கொன்றனர். ஜெயலலிதா, சசிகலா அறைகளிலிருந்து சில ஆவணங்களையும் பொருள்களையும் அள்ளிச்சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல் நிலையத்தில், சில சிசிடிவி கேமரா ஆதாரங்களின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, 11 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவத்துக்கும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜுக்கும் தொடர்பிருப்பதாகச் செய்திகள் கசியத் தொடங்கின. அடுத்த சில நாள்களில் அதாவது, ஏப்ரல் 28-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒரு சாலை விபத்தில் கனகராஜ் மரணமடைந்தார். கனகராஜின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவரது குடும்பத்தினர் சொன்னார்கள். அடுத்த 24 மணிநேரத்தில், மற்றொரு குற்றவாளியான சயான் தன் குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கினார். கொடநாட்டின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். “இவையெல்லாம் யதார்த்தமாக நடந்தனவா... திட்டமிட்ட சதியா என்பது அரைகுறையாகவே விசாரிக்கப்பட்டது” என்கிறார்கள்.

பரபரப்பு கிளப்பிய இந்த வழக்கில், 101 அரசு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, பத்துப் பேர்மீது கோத்தகிரி நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிற்பாடு வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. முதல் சாட்சி கிருஷ்ண தாபா மாயமானது, சாட்சி ஆள்மாறாட்ட சர்ச்சை, வலுவில்லாத சாட்சிகள் என 60 சாட்சிகள் வழக்கிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சை, பத்திரிகையாளர் மேத்யூஸ் வெளியிட்ட ஆவணப்படம் என்று இந்த வழக்கு கடந்துவந்த பாதைகள் ‘திக் திக்’ ரகம். உச்சகட்ட திருப்பமாக, தற்போது குற்றவாளி சயான் அளித்திருக்கும் ரகசிய வாக்குமூலம்தான் எடப்பாடியைக் கலங்கடித்திருக்கிறது.

கொடநாடு க்ளைமாக்ஸ் - மர்ம சான்ட்ரோ... துபாய் போன் கால்... சேலத்து சந்திப்பு
சஜ்ஜீவன், சயான்
சஜ்ஜீவன், சயான்

ஏன் நிகழ்ந்தது கொள்ளை?

கடந்த மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சயான், இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், கூடுதல் விசாரணை செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில் காவல்துறையினர், ஆகஸ்ட் 17-ம் தேதி அவரிடம் வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ், கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோரிடம் சயான் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

சயான் அளித்திருக்கும் வாக்குமூலம் குறித்தும், கொடநாடு வழக்கு குறித்தும் காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “கொடநாடு பங்களாவிலுள்ள ஜெயலலிதாவின் அறையில், பல்வேறு சொத்து ஆவணங்கள், கட்சியினரின் மன்னிப்புக் கடிதங்கள், ராஜினாமா கடிதங்களுடன் வேறு பல முக்கியமான ஆவணங்களும் இருந்தன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்த ஆவணங்களைக் கொள்ளையடிக்க ஓர் அ.தி.மு.க தலைவர் துடித்தார். கொடநாடுக்கு ஜெயலலிதா வரும்போது அவருடைய பொருள்களை பெட்ரூம் வரை எடுத்துச் செல்லும் அதிகாரம், அவரது கார் டிரைவர் கனகராஜுக்கு மட்டுமே இருந்தது. இதையறிந்த அந்த அ.தி.மு.க தலைவர், தன் சகோதரர் மூலமாக கனகராஜை வளைத்தார். கனகராஜ் இந்த விஷயத்துக்கு சஜ்ஜீவனைக் கைகாட்டினார். கொடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகளைச் செய்துகொடுத்த வகையில், அந்த பங்களாவின் 90-க்கும் மேற்பட்ட அறைகளின் வரைபடம் கூடலூர் மர வியாபாரி சஜ்ஜீவனுக்கு அத்துப்படி. பேரத்துக்குப் படிந்த சஜ்ஜீவன், ஒரு மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுத்திருக்கிறார். தன் சகோதரர் சுனிலிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்த சஜ்ஜீவன், யாருக்கும் சந்தேகம் வரக் கூடாதென முன்கூட்டியே துபாய் சென்றுவிட்டார்.

மர்ம சான்ட்ரோ கார்... துபாய் போன் கால்

2017, ஏப்ரல் 23-ம் தேதி இரவு 11:30 மணியளவில், மூன்று கார்களில் கொள்ளையர்கள் கொடநாடுக்கு வந்திருக்கிறார்கள். சயானும் கனகராஜும் ஒரு இன்னோவா காரிலும், கேரளாவிலிருந்து வாளையார் மனோஜ் மூலமாக வந்த கூலிப்படை ஒரு ஃபோர்டு எண்டேவர் காரிலும் வந்திருக்கிறார்கள். ஒரு சான்ட்ரோ காரும் இவர்களுடன் வந்திருக்கிறது. அதிலிருந்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் ‘ஆஃப்’ செய்யப்பட்டிருந்தன.

கனகச்சிதமாக ஜெயலலிதா அறையை உடைத்து, தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். கொள்ளை யடிக்கப்பட்ட ஆவணங்களுடன் சயானும் கனகராஜும் கோவைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். அலங்காரப் பொருள்களை மூட்டை கட்டிக்கொண்டு மற்றொரு கார் கூடலூர் வழியாக கேரளாவுக்கு அதிகாலை 2:30 மணிக்குக் கிளம்பியிருக்கிறது. ஆனால், அந்த மர்ம சான்ட்ரோ கார் எங்கே சென்றது எனத் தெரியவில்லை. கூடலூர் வழியாகக் கொள்ளையர்கள் சென்ற காரை ஒரு போலீஸ் டீம், ஏப்ரல் 24-ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு வழிமறித்திருக்கிறது. விவரமறிந்து அங்கு பதறிவந்த சஜ்ஜீவனின் தம்பி சுனில், உடனடியாக துபாயிலிருந்த சஜ்ஜீவனுக்கு போன் செய்திருக்கிறார். சஜ்ஜீவன் பேசியதும், அந்த வாகனத்தை விட்டுவிட்டது போலீஸ். காவல்துறையிடம் பேசி கொள்ளையர்களை விடுவித்த சம்பவத்தை, சுனில் தனது சாட்சி விசாரணையின்போது நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார். சுனிலிடம் தொடர்ந்து குறுக்கு விசாரணை நடத்தினால், பல உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற‌ பயத்தில், சுனில் உள்ளிட்ட பலரை பலவீனமான சாட்சிகள் என விசாரணையிலிருந்தே எடப்பாடி அரசு தப்பவைத்தது. இப்படி வழக்கை நீர்த்துப்போகச் செய்ய நடந்த பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில், சயான் தற்போது அளித்திருக்கும் ரகசிய வாக்குமூலம், இந்த வழக்கை மீண்டும் உயிர்த்தெழ வைத்திருக்கிறது” என்றார்கள்.

வாளையார் மனோஜ்
வாளையார் மனோஜ்

சேலத்து சந்திப்பு

கொள்ளையை முடித்துக்கொண்டு இன்னோவா காரில் கிளம்பிய கனகராஜ், கோவையில் சயானை இறக்கிவிட்டுவிட்டு, தான் மட்டும் சேலத்துக்குப் புறப்பட்டதாகச் சொல்கிறார்கள். சேலத்தில் யாரையோ சந்தித்து அந்த ஆவணங்களை ஒப்படைத்தவர், அடுத்த சில தினங்களிலேயே மர்ம விபத்தில் இறந்தார். சேலத்தில் அவர் யாரைச் சந்தித்தார்... ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கும் அளவுக்கு உத்தரவிட்டது யார்... கொடநாடு பங்களாவுக்கு காவல் இருந்த 25 போலீஸாரை அங்கிருந்து விலக்கிக்கொள்ள உத்தரவிட்டது யார்? எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களிலேயே மர வியாபாரி சஜ்ஜீவனுக்கு அ.தி.மு.க வர்த்தக அணிச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. ‘எதற்காக இந்தப் பரிசு’ என்பது இன்றுவரை அ.தி.மு.க-வினருக்குப் புரியவில்லை.

இந்த வழக்கைத் தாங்கள் ஆட்சியிலிருந்தபோதே முடித்துவிட அ.தி.மு.க தரப்பில் தீவிரம் காட்டினார்களாம். வழக்கின் முக்கிய சாட்சியான காவலாளி கிருஷ்ண பகதூர் நேபாளத்துக்குச் சென்றதால், அவரது சாட்சியத்தை பதிவுசெய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு நீதிமன்றம் முழுமையாகச் செயல்படவில்லை. அதனால் இந்த வழக்கு விசாரணையும் நீண்டது. இப்போது இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சேலம் அ.தி.மு.க பிரமுகர் இளங்கோவன் ஆகியோரையும் விசாரிக்க முடிவெடுத்திருக்கிறதாம் காவல்துறை.

நெருங்கும் க்ளைமாக்ஸ்!

கொடநாடு வழக்கின் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன், “சயானிடம் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் கூடுதல் விசாரணை என்பது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. இதன் மூலம் இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்” என்றார்.

இது குறித்து சஜ்ஜீவனிடம் விளக்கம் கேட்டோம். “கதை, திரைக்கதை எல்லாமே நீங்கள்தானே எழுதுகிறீர்கள்... எதற்கு என்னிடம் கருத்து கேட்கிறீர்கள். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.

வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் சயானின் ரகசிய வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. “டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாகவே சயான், வாளையார் மனோஜ் இருவரும் குற்றம்சாட்டியிருந்தார்கள். தற்போது, தன் வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சயான் பதிவுசெய்திருந்தால், பழனிசாமிக்குச் சிக்கல் உச்சத்தில் வரும்” என்கிறது விவரமறிந்த வட்டாரம். இதனால்தான், தானாக முந்திக்கொண்டு, ‘தி.மு.க அரசு என்னைப் பழிவாங்குகிறது’ என்று எடப்பாடி பதறுவதாகச் சொல்கிறார்கள். போலீஸ் தரப்பிலிருந்து வரும் தகவல்களைவைத்துப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட வழக்கின் க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

*****

கே.சி.பழனிசாமி, ஆஸ்பயர் ஸ்வாமிநாதன், நாஞ்சில் அன்பழகன், தனபால்
கே.சி.பழனிசாமி, ஆஸ்பயர் ஸ்வாமிநாதன், நாஞ்சில் அன்பழகன், தனபால்

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க முன்னாள் எம்.பி

``அ.தி.மு.க கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியதாக பிப்ரவரி 2020-ல் என்னைக் கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அப்போதைய ஆட்சியாளர்கள் அடைத்தனர். அந்தச் சமயம், சயானும் கோவை சிறையில்தான் இருந்தார். விசிட்டர்ஸ் அறையில் அவர் என்னைச் சந்தித்து, ‘எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் கொடநாடு கொள்ளையில் ஈடுபட்டோம். அவர் முதல்வராக இருக்கும்வரை என்னை வெளியேவிட மாட்டார்கள்’ என்று சொல்ல முற்பட்டார். அதற்கு மேல் அவரிடம் நான் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் பதறுகிறார் என்பது புரியவில்லை. இதில் ஆட்சேபம் இருந்தால், அவர் நீதிமன்றம் சென்றிருக்கலாம். சட்டமன்றத்தில் அரசியலாக்கியது ஏன்?”

ஆஸ்பயர் ஸ்வாமிநாதன், அ.தி.மு.க-விலிருந்து வெளியேறிய நிர்வாகி

“தி.மு.க தன்னைப் பழிவாங்குவதாக எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறு. அவர் முதல்வராக இருந்தபோதே சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் முக்கியப் புள்ளிகளின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டனர். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் தி.மு.க செய்கிறது!”

நாஞ்சில் அன்பழகன், அ.தி.மு.க கலைப்பிரிவு இணைச் செயலாளர்

“அம்மா உயிரோடு இருந்தபோதும், மறைந்த பின்னரும் கொடநாடு எஸ்டேட் முழுவதும் சசிகலா அண்ட் கோ கட்டுப்பாட்டில்தான் இருந்தது; இருக்கிறது. வழக்கில் தொடர்பே இல்லாத எடப்பாடியை விட்டுவிட்டு, சசிகலா மற்றும் தினகரன் இருவரையும் இந்த வழக்கில் இணைத்து விசாரித்தால் மொத்த உண்மையும் வெளிப்படும்!”

தனபால், கனகராஜின் சகோதரர்

“என் தம்பி மரண விவகாரத்தில், ஆரம்பம் முதலாகவே எங்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் மீது சந்தேகம் இருந்தது. ஆனால், அப்போது அவர் முதல்வராக இருந்ததால், அவரின் அதிகாரத்தை மீறி அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. தற்போது அரசாங்கம் மாறியிருக்கிறது. அதனால், எடப்பாடி பழனிசாமியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். என் தம்பியின் மரணத்துக்கு நீதி வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism