Published:Updated:

பணப் பட்டுவாடா... பரிசு மழை... உச்சகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

பணப் பட்டுவாடா
பிரீமியம் ஸ்டோரி
பணப் பட்டுவாடா

‘என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. சிவகாசி மேயர் பதவியை நாம கைப்பற்றியாகணும். இருநூறு, முந்நூறெல்லாம் செட் ஆகாது.

பணப் பட்டுவாடா... பரிசு மழை... உச்சகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

‘என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. சிவகாசி மேயர் பதவியை நாம கைப்பற்றியாகணும். இருநூறு, முந்நூறெல்லாம் செட் ஆகாது.

Published:Updated:
பணப் பட்டுவாடா
பிரீமியம் ஸ்டோரி
பணப் பட்டுவாடா

தமிழகத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் அரசியல் அனல் பறக்கிறது. வாக்காளர்களைக் குளிர்விக்க பணப் பட்டுவாடா, பரிசு மழை என கரன்சி யுக்தியை வேட்பாளர்கள் கையிலெடுத்திருப்பதால், உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது உள்ளாட்சித் தேர்தல் களம்!

தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கழகங்களும் வியூகம் அமைத்து, பட்டுவாடா பணியில் இறங்கியிருக்கின்றன. ஒருசில வார்டுகளில் கழகங்களுக்கே ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும்விதமாக, சுயேச்சை வேட்பாளர்களும் கோதாவில் குதித்திருக்கிறார்கள். சென்னை வேளச்சேரியில் பணப் பட்டுவாடா புகார் எதிரொலியாக, அ.தி.மு.க-வைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். “அ.தி.மு.க-வை மட்டுமே குறிவைத்துக் கைதுசெய்கிறார்கள். தி.மு.க-வினரின் பரிசுப் பொருள்கள், கரன்சி விநியோகத்தை போலீஸார் கண்டுகொள்வதில்லை. தேர்தல் விதிகள் பல இடங்களில் மீறப்படுகின்றன” என அ.தி.மு.க தரப்பில் புகார் வாசிக்க, தேர்தல் களத்தில் உச்சகட்ட காட்சிகள் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன.

இந்தச் சூழலில், ‘கரன்சி மழை’ குறித்த புகார்கள் நமது அலுவலகத்துக்கும் வரிசைகட்டவே, விசாரணையில் இறங்கியது ஜூ.வி டீம்...

பணப் பட்டுவாடா... பரிசு மழை... உச்சகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

“அண்ணனுக்கு ஒரு ரோஸ் மில்க் பார்சல்!”

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரன்சி மழையில் நனைவது சென்னையை அடுத்துள்ள ‘பீரங்கி’ மாநகராட்சிதான். துணை மேயர் பதவியைக் குறிவைத்து, ‘வளமான’ அமைச்சரின் மகன் அங்கு போட்டியிடுகிறார். மிகச்சிறிய வார்டு இது என்பதால், புத்தாண்டிலிருந்தே வாக்காளர்களுக்கு ‘கவனிப்பை’ நடத்தியது அமைச்சர் தரப்பு. அப்போதே காலண்டர், இனிப்புகள் வீடு வீடாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். “இந்த ஒரு வார்டுக்கு மட்டும் 6.5 கோடி ரூபாய் இறக்கியிருக்காங்க. எம்.எல்.ஏ எலெக்‌ஷனுக்குக்கூட இவ்வளவு காச இறக்கலீங்க... `என்ன செஞ்சாவது 21 மாநகராட்சிகளையும் பிடிச்சாகணும்’னு கட்சித் தலைமை கறாரா சொல்லியிருக்கிறதால பண மழை கொட்டுதுங்க” என்று அங்கலாய்க்கிறார்கள் கூட்டணிக் கட்சியினர். தி.மு.க-வின் அதிரடிக்கு முன்னால், அ.தி.மு.க பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டதைத்தான், பீரங்கி மாநகராட்சியில் பார்க்க முடிகிறது. ஆனால், மற்ற ஏரியாக்களில் எகிறி அடிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் தி.மு.க-வுக்கு நிகராகக் கச்சை கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க தரப்பு. ஒரு ஓட்டுக்கு இரண்டு சாக்லேட்டுகள் கொடுக்க தி.மு.க தயாராகிவரும் நிலையில், அ.தி.மு.க-வினரும் அதேயளவு இனிப்பைக் கொட்டத் தீர்மானித்திருக்கிறார்கள். “முன்னாள் மேயர் மருதராஜின் மகள்தான் அ.தி.மு.க மேயர் வேட்பாளர். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் துணை மேயர் வேட்பாளர். ஒரு ஓட்டுக்கு ஒரு ‘ரோஸ் மில்க்’ அடிச்சாலே போதும், ஓட்டு வந்துடும்” என்று கண் சிமிட்டுகிறது அ.தி.மு.க தரப்பு. இவர்களுக்கு இடையே 17-வது வார்டில் களமிறங்கியிருக்கும் சுயேச்சை வேட்பாளர் வெங்கடேஷ் தரப்பு, “அண்ணன் கவுன்சிலரா ஜெயிச்சா, வார்டுல இருக்குற எல்லாருக்கும் 6 லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டித் தருவாரு” என்கிற சவடாலோடு வலம்வருகிறது. மணல் பிரமுகர் சர்வேயர் ரத்தினத்தின் மகன்தான் இந்த வெங்கடேஷ். வாக்காளர்களிடம், “அண்ணனுக்கு ஒரு ரோஸ் மில்க் பார்சல்” என்று கூவிக் கூவி பிரசாரம் பறப்பதால், திண்டுக்கல் மாநகராட்சி இனிப்பு மழையில் தித்திக்கிறது.

“இருநூறு, முந்நூறெல்லாம் செட் ஆகாது!”

திருச்சி மேயர் வேட்பாளர் ரேஸிலிருக்கும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான அன்பழகன், அன்பில் மகேஷின் ஆதரவாளர் மதிவாணன் ஆகிய இருவரின் தரப்பு மட்டும், ஸ்வீட் பாக்ஸ்களோடு வலம்வருகின்றன. ‘கடைக்கோடி வரை சாக்லேட்டுகள் சென்றடைய வேண்டும்’ என்பதில் நேரு தெளிவாக இருப்பதால், ஸ்கெட்ச் போட்டு வேலை பார்க்கிறது திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு, அ.தி.மு.க சார்பில் திருச்சி மேயராகிவிடும் கனவில் இருப்பதால், வாக்காளர் களுக்குத் தன் பங்குக்கும் இனிப்பு வழங்கத் தீர்மானித்து ஸ்வீட் பாக்ஸ்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார் வெல்லமண்டி.

“இந்த உள்ளாட்சித் தேர்தலைத் தன் கெளரவப் பிரச்னையாகப் பார்க்கிறார் ராஜேந்திர பாலாஜி. திருத்தங்கல் தன் சொந்த ஊர் என்பதால், அந்த வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை அழைத்து சமீபத்தில் கூட்டம் போட்ட ராஜேந்திர பாலாஜி, ‘என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. சிவகாசி மேயர் பதவியை நாம கைப்பற்றியாகணும். இருநூறு, முந்நூறெல்லாம் செட் ஆகாது. ஆயிரம் கொடுத்தாத்தான் சரிப்பட்டு வரும்’ என்று ஒரே போடாகப் போட, வேட்பாளர்களெல்லாம் விக்கித்துவிட்டனர். ‘சாக்லேட்டை யார் கொடுப்பது?’ என்கிற விவாதம் சிவகாசியில் களைகட்டுகிறது” என்றார் அ.தி.மு.க மாவட்டப் பிரமுகர் ஒருவர்.

பணப் பட்டுவாடா... பரிசு மழை... உச்சகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

‘விளக்கு முதல் அரிசி மூட்டை வரை’ - பரிசு மழையில் வாக்காளர்கள்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் பதவிக்குக் குறிவைத்திருக்கிறார், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் அக்கா மகன் ஆர்.ஜி.குமார். அதே பதவிக்குக் குறிவைத்திருக்கும் தி.மு.க-வின் சோழராஜன் தரப்பினர், “வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகத் தங்க நாணயம், காமாட்சி விளக்கு, வெண்கல அர்ச்சனைக் கூடை என விதவிதமாகப் பட்டியல் தயாரித்திருக்கிறார்கள். நாம் என்ன செய்வது?” என்று மாவட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவரிடம் புலம்பியிருக்கிறார்கள். “அவங்க விளக்கு கொடுத்தா, நாம ரோஸ் மில்க் கொடுப்போம். பயப்படாதீங்கய்யா..!” என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார் அந்த அமைச்சர்.

நகராட்சி அந்தஸ்திலிருந்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது அந்தத் தொழில் நகரம். அதனால், ‘முதல் மேயர் பதவியைக் கைப்பற்றுவது யார்?’ என்று இரண்டு பிரதான கட்சிகளும் முஷ்டியை முறுக்குகின்றன. தேனாம்பேட்டை கட்சியில் இரண்டாயிரம் ரூபாய் வரை வழங்கத் தீர்மானித்திருக்கிறார்கள். அதோடு வேட்டி, புடவை எனப் பரிசுப்பொருள்களும் ஏரியாவில் வந்து குவிந்திருக்கின்றன. அமைச்சர் ஒருவரின் தம்பிதான் இந்த விநியோகத்தையெல்லாம் மேற்பார்வை செய்கிறார். இதற்காகத் தொழிலதிபர்களிடம் வசூல் வேட்டையும் நடந்திருக்கிறது. “எம்.எல்.ஏ எலெக்‌ஷனுக்கு வாங்கின பணத்தையே இன்னும் திருப்பித் தரலை. மறுபடியும் வசூல்ல இறங்கிட்டாங்களே” என நொந்துபோயிருக்கிறார்கள் தொழிலதிபர்கள். அரசு அதிகாரிகளின் வாகனங்களில் பணத்தைக் கொண்டுபோவது, மளிகை, காய்கறிக் கடைகள் மூலமாக பணப் பட்டுவாடா செய்வது எனப் பக்காவாக வியூகம் வகுத்திருக்கிறது தேனாம்பேட்டை தரப்பு. இதற்குப் போட்டியாக, ராயப்பேட்டை கட்சித் தரப்பிலும் ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்தத் தொழில் நகரத்தில் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அதிகம் என்பதால், அவர்கள் மூலமாகப் பணப் பட்டுவாடா செய்ய தீர்மானித்திருக்கிறது ராயப்பேட்டை தரப்பு.

வடமாவட்டத்திலும் பரிசு மழைக்குப் பஞ்சமில்லை. கள்ளக்குறிச்சி நகராட்சியின் 11-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சர்புதீன், வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கியிருக்கிறார். 50 சதவிகித அரிசி மூட்டைகள் வழங்கப்பட்ட நிலையில், விநியோகிக்க வைத்திருந்த 150 மூட்டைகளைப் பறக்கும் படையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். பட்டுக்கோட்டை நகராட்சியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குப் பரிசளிக்க ஹாட் பாக்ஸ் மொத்தமாகக் கொள்முதல் செய்தனர். இரண்டு வார்டுகளில் விநியோகத்தை முடித்துவிட்டு, 17-வது வார்டில் ‘ஹாட் பாக்ஸ்’ விநியோகம் நடைபெற்ற நிலையில், தேர்தல் பறக்கும் படை வந்து மொத்தமாகப் பறிமுதல் செய்துவிட்டது. கொதிப்பான அ.தி.மு.க-வினர், “பரிசெல்லாம் இனி வேலைக்கு ஆகாது. சாக்லேட்டை அடிச்சுவிட வேண்டியதுதான்” என்று பொருமிக்கொண்டிருக்கிறார்கள்.

‘ஹாட் பாக்ஸ், ரீ சார்ஜ்’ - 150 கோடி பட்ஜெட்!

தமிழகத்திலேயே உள்ளாட்சித் தேர்தல் சூட்டை அதிகம் சந்தித்திருப்பது கோவை மாவட்டம்தான். “கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்... இந்த நாலு மாநகராட்சிகளையும் பிடிக்கலைன்னா, உங்க அமைச்சர் பதவியை மறந்துடுங்க” என முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு காட்டியிருப்பதால், மாவட்டங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் பீதியோடு பணியாற்றுகிறார்கள். கோவை மாநகராட்சிக்கு மட்டுமே இரண்டு கட்சிகளும் தலா 100 ஸ்வீட் பாக்ஸுகளை இறக்கியுள்ளன என்கிறார்கள். “தேனாம்பேட்டைக்காரங்க எவ்வளவு கொடுத்தாலும் சரி... அதுக்கும் மேல 500 பக்கோடா அதிகமா கொடுப்போம்” என ராயப்பேட்டை தரப்பு சூளுரைத்து வேலை பார்க்கிறதாம்.

வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி
வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி

நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சி மாவட்டப் பிரமுகர் ஒருவர், “கோவை மாவட்டத்தில் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சராசரியாக ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சி, 33 பேரூராட்சிகளில் கடந்த தேர்தலில் பதிவான வாக்கின் அடிப்படையில் பார்த்தால், மாவட்டம் முழுவதற்கும் குறைந்தபட்சம் 15 லட்சம் பேருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் எனக் கணக்கிட்டால்கூட பட்ஜெட் 150 கோடி ரூபாய் வந்துவிடுகிறது. தேனாம்பேட்டை கட்சியைப் பொறுத்தவரை, பட்டுவாடாவுக்கு கரூர் நெட்வொர்க்கைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வார்டுக்குமே 10-20 பேர் வரை கரூரிலிருந்து களமிறக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை கட்சியைப் பொறுத்த வரை, தேனாம்பேட்டை தரப்புக்கு நிகராக நிதியில் தாராளம் காட்டுகின்றனர். ஒரு ஓட்டுக்கு ஒரு ரோஸ் மில்க் தயாராகிறது. பதிலடியாக, பரிசுப்பொருள் விநியோகத்தைக் கையில் எடுத்திருக்கும் தேனாம்பேட்டை தரப்பு, இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கான ரீ சார்ஜ் செய்து தருவது, குத்துவிளக்கு அளிப்பது என அஸ்திரங்களை ஏவுகிறார்கள். பொள்ளாச்சியில் ‘குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை’ என போலி விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டதில், தி.மு.க-வினரின் பெயர் ரிப்பேர் ஆகியிருக்கிறது. அதேபோல, கோவை மாநகராட்சியில் அதிமுக-வினர் QR Code முறையில் பணப் பட்டுவாடா செய்வதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்தக் களேபரங்களுக்கு இடையே சமீபத்தில், வேலுமணி வீடு அமைந்திருக்கும் சுகுணாபுரம் ஏரியாவில் தி.மு.க-வினர் ஹாட் பாக்ஸ் விநியோகித்ததை அ.தி.மு.க-வினர் கையும் களவுமாகப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து, கல்லெறிதல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. மாநகராட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டும் எனத் தீர்மானமாக இருக்கிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அ.தி.மு.க-வின் நெட்வொர்க்கைத் தடுப்பதற்கு தி.மு.க அதிகாரத்தைக் கையில் எடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. இதனால், இங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது” என்றார்.

பணப் பட்டுவாடா... பரிசு மழை... உச்சகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

“தேர்தல் முடிந்தவுடன் கச்சேரி!” - உத்தரவிட்ட மேலிடம்!

அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் வழியாகப் பட்டுவாடாவை ஆளுங்கட்சி துரிதப்படுத்தியிருக்கும் நிலையில், எதிர்த்தரப்புக்குப் படியளக்கும் நபர்களைக் கண்காணிக்கவும் கோட்டை உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரும் பங்கேற்றிருந்தனர். உள்ளாட்சித் தேர்தல் குறித்த சட்டம், ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் எனச் சொல்லப்பட்டாலும், அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகம் குறித்துத்தான் தீவிரமாக அலசியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், “கொங்குமண்டலத்தில் தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பதில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது. கொங்குமண்டல மூத்த அமைச்சர் ஒருவர்மீது ஏற்கெனவே ரெய்டு அஸ்திரம் பாய்ந்திருப்பதால் தன் பணத்தை எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். ஆனால், அவர் அறிவுறுத்தலின்பேரில், கோவையிலுள்ள இரண்டு முக்கியத் தொழிலதிபர்களும், திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்திவரும் மூன்று பேரும் கொங்கு மண்டலத்துக்கான செலவை கவனித்துக்கொள்கிறார்கள். அதேபோல, சேலம் பகுதியில் எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக, கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலரோடு தொழிலதிபர்களும் பட்டுவாடாவைக் கையிலெடுத்துள்ளனர். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஒருவரே நேரடியாகக் களமிறங்கியிருக்கிறார். நாகர்கோவில், திருநெல்வேலியில் மாஜிக்கள் உத்தரவின்பேரில் சில தொழிலதிபர்கள்தான் செலவுப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். இப்படிப் பொறுப்பேற்றவர்களின் பட்டியலைத் தயார்செய்யச் சொல்லி ஆட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்குத் தனியாகக் கச்சேரி நடக்கவிருக்கிறது” என்றார்.

பணப் பட்டுவாடா, பரிசு மழைப் புகார்கள் தமிழகமெங்கும் ஒலிப்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பிப்ரவரி 12-ம் தேதி சந்தித்த அ.தி.மு.க-வினர், தி.மு.க மீதும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீதும் புகாரளித்திருக்கின்றனர். “எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்மீது பொய் வழக்கு போடுகிறது தி.மு.க அரசு. குதிரைப் பேரம் நடைபெறவும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் தலையிட்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டும்” என்று அ.தி.மு.க குமுறியிருக்கிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் அ.தி.மு.க சார்பில், ஜானகி ராமன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டார். “தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று எதிர்த் தரப்பினர் மிரட்டிய காரணத்தால், மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார்” என ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் காவல்துறையில் புகாரளித்துள்ளார். அந்த வார்டில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையும் முன்வைத்து ஆளுநரிடம் புகாரளித்திருக்கிறது அ.தி.மு.க.

பணப் பட்டுவாடா... பரிசு மழை... உச்சகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

“அதிகாரத்தை வைத்து அ.தி.மு.க-வை முடக்கப் பார்க்கிறது தி.மு.க. பதிலுக்கு, ஆளுநர் மூலமாக தி.மு.க-வுக்கு செக் வைக்க முனைகிறது அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே இந்தத் தேர்தல் ரிசல்ட்டை கௌரவப் பிரச்னையாகப் பார்க்கின்றன. ‘அதற்காக என்ன விலை கொடுத்தாலும் சரி’ என இரு தரப்பும் கரன்சி கட்டுகளோடு களத்தில் குதித்திருப்பதால், உள்ளாட்சியில் யுத்தம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மாநிலத் தேர்தல் ஆணையம் இந்த விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே சாமானிய வாக்காளனின் எதிர்பார்ப்பு.

****

தலைநகர் காட்சிகள் என்னென்ன?

* சென்னை மாநகராட்சியில் வார்டுக்குத் தகுந்தாற்போல, ஒரு சாக்லேட் தருவதற்கு தி.மு.க திட்டமிட்டிருக்கிறதாம். அ.தி.மு.க-வில் தொகுதிக்கு ஒரு வார்டில் மட்டுமே ஓட்டுக்கு ஒரு சாக்லேட்டை இறக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

* 138-வது வார்டில் போட்டியிடும் ஒரு பிரமுகர் தற்போதே 3 கோடி ரூபாயைத் தயார் செய்திருக்கிறார். ஒரு ஓட்டுக்கு ஒரு சாக்லேட் கொடுப்பது திட்டமாம்.

* “வழக்கமாக வாரத்துக்கு 5 கோடி ரூபாய் வரைதான் தாம்பரம் பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம்-களில் டெபாசிட் செய்யப்படும். ஆனால், கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 10 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பண விநியோகம் செய்யப்படுவதால்தான், இந்த அளவுக்குப் பணம் எடுக்கப்படுகிறது” என்கிறார் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பணியாளர் ஒருவர்.