Published:Updated:

பா.ம.க ‘வாக்அவுட்...’ பா.ஜ.க-வுக்கு ‘ஜாக்பாட்...’ கைகழுவப்பட்ட காங்கிரஸ்!

தி.மு.க கூட்டணி
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க கூட்டணி

உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீடு...

பா.ம.க ‘வாக்அவுட்...’ பா.ஜ.க-வுக்கு ‘ஜாக்பாட்...’ கைகழுவப்பட்ட காங்கிரஸ்!

உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீடு...

Published:Updated:
தி.மு.க கூட்டணி
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க கூட்டணி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் முடிந்து, களம் சூடுபிடித்திருக்கிறது. அதே சூட்டோடு தேர்தல் பிரசாரத்திலும் களமிறங்கியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சீட் பங்கீடு விவகாரத்தில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொங்கி நிற்பதுபோல அல்லாமல், அ.தி.மு.க கூட்டணியில் குறிப்பிடத்தக்க பங்கீட்டைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க. இதையடுத்து, அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க கழன்றுகொண்டதால், பா.ஜ.க-வுக்கு ஜாக்பாட் அடித்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மாவட்டத்துக்கு இரண்டு சீனியர்கள் வீதம் ஒன்பது மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது பா.ஜ.க. ஆரம்பத்தில் அ.தி.மு.க தரப்பிலிருந்து சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பா.ஜ.க-வினர் இது குறித்து எடப்பாடியிடம் முறையிடவே, அவர் மாவட்டச் செயலாளர்களைக் கண்டித்திருக்கிறார். அதன் பிறகே, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகள் பா.ஜ.க-வுக்குப் பிரித்துத் தரப்பட்டிருக்கின்றன. இதையடுத்து சீட் பங்கீடு திருப்திகரமாக முடிவடைந்ததாகக் கூறும் பா.ஜ.க சீனியர்கள் சிலர் நம்மிடம், ‘‘தேர்தலைச் சந்திக்கும் ஒன்பது மாவட்டங்களில், கள்ளக்குறிச்சியைத் தவிர பிற மாவட்டங்களில் சீட் பங்கீடு சுமுகமாக முடிந்துவிட்டது. அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 சதவிகித இடங்களைப் பெற்றிருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் பத்து சதவிகிதத்துக்கும் குறையாமல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடங்களைப் பெற்றிருக்கிறோம். பா.ம.க கூட்டணியில் இல்லாததால், அவர்களுக்கு ஒதுக்க உத்தேசித்திருந்த இடங்களில் சிலவற்றை அ.தி.மு.க எங்களுக்கு அளித்திருக்கிறது. ஒருவகையில் இது எங்களுக்கு லாபம்தான்.

பா.ம.க ‘வாக்அவுட்...’ பா.ஜ.க-வுக்கு ‘ஜாக்பாட்...’ கைகழுவப்பட்ட காங்கிரஸ்!

சீட் பங்கீடு முடியாத கள்ளக்குறிச்சியிலும்கூட, வேட்புமனு வாபஸ் வாங்கும் நாள் வரை கால அவகாசம் இருக்கிறது. இரண்டு தரப்பிலும் அங்கு வேட்புமனு தாக்கலாகியிருக்கிறது. பேச்சுவார்த்தை சுமுகமானால், அங்கும் எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று நம்புகிறோம். கிராமப்புற மக்களுக்காக வீடுகட்டும் திட்டம், டாய்லெட் வசதி, காஸ் சிலிண்டர் வசதி, முத்ரா வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பா.ஜ.க அரசு செய்திருக்கிறது. அதைச் சொல்லி வாக்கு கேட்போம்.

இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலைவிட வரவிருக்கும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்தான் எங்களுக்கு முக்கியம். ஓசூர், வேலூர், நாகர்கோவில், தாம்பரம் ஆகிய நான்கு மாநகராட்சிகளை பா.ஜ.க எதிர்பார்க்கிறது. அ.தி.மு.க-வுக்கு இப்போது நாங்கள் விட்டுக்கொடுப்பது, பிறகு எங்களுக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறோம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஓரங்கட்டப்பட்டுவிட்டது. அதோடு ஒப்பிடும்போது எங்களுக்கு உரிய மரியாதையை அ.தி.மு.க கொடுத்திருக்கிறது’’ என்றார்கள்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைக் கிட்டத்தட்ட கைகழுவிவிட்டது தி.மு.க. போனால் போகட்டும் என்று திருநெல்வேலியில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடத்தையும், தென்காசியில் மூன்று மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடங்களையும் ஒதுக்கியிருக்கிறார்கள். வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என கணிசமான வாக்குவங்கி இருப்பதால், அந்தப் பகுதியில் மட்டும் வி.சி.க-வுக்கு மாவட்ட கவுன்சிலர் சீட்களை சிறு பங்கீடாகத் தந்திருக்கிறது அறிவாலயம். கம்யூனிஸ்டுகளுக்கு இந்தப் பங்கீடும் தரப்படவில்லை என்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் செஞ்சட்டைக்காரர்கள் தனித்தே களமிறங்க வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அ.ம.மு.க-வினர் நிலைமைதான் மோசம். தன் மகளின் திருமணத்தைத் தற்போதுதான் முடித்திருப்பதால், தேர்தலில் தினகரனால் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார்கள் அ.ம.மு.க வட்டாரத்தில். அந்தந்த மாவட்டங்களில் சொந்தச் செல்வாக்கு இருப்பவர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து, தேவையான தேர்தல் ஆலோசனையை வழங்குவதற்குக்கூட ஆட்கள் இல்லை என்பதுதான் அ.ம.மு.க-வினரின் புலம்பலாக இருக்கிறது. இன்னொரு பக்கம் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க-வினரை விலைக்கு வாங்க தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சியினருமே போட்டியிடுகிறார்கள். பணம் ஏகத்துக்கும் விளையாடுகிறது.

பா.ம.க ‘வாக்அவுட்...’ பா.ஜ.க-வுக்கு ‘ஜாக்பாட்...’ கைகழுவப்பட்ட காங்கிரஸ்!

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தைச் சூட்டோடு சூடாக ஆரம்பித்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஒருசில இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் மூலமாக அதைச் சரிசெய்யச் சொல்லியிருக்கிறார் அவர். திருப்பத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், ‘‘நம் வேட்பாளர்களை தி.மு.க-வினர் விலை கொடுத்து வாங்கப் பார்ப்பார்கள். தேர்தல் நியாயமாக நடப்பதற்கு அவர்கள் முயல்வதாகத் தெரியவில்லை. கவனமாக இருங்கள்” என்று எச்சரித்திருக்கிறார். தேர்தல் நாளில் தி.மு.க தரப்பு ஏதாவது தில்லுமுல்லு செய்தால், செல்போனில் படமெடுத்து அதை வாட்ஸ்அப்பில் வைரலாக்கவும் அ.தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. ‘குடும்பப் பெண்களுக்கு 1,000 ரூபாய் நிதியுதவி கொடுக்காதது, நகைக்கடன் தள்ளுபடிக்குக் கெடுபிடி’ என்று தி.மு.க நிறைவேற்றாத வாக்குறுதிகளை பிரசாரத்தில் ஆயுதமாகப் பயன்படுத்தவிருக்கிறது அ.தி.மு.க.

சமீபத்தில் பா.ம.க மாநில துணைத் தலைவர் ஏழுமலை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். இந்த அட்டாக்கை பா.ம.க எதிர்பார்க்கவில்லை. இதனால் டென்ஷனான தைலாபுரம் தலைமை, “நம்மளைக் கிள்ளுக்கீரைனு நினைச்சுட்டாங்களா... நம்ம ஆளுங்களை இழுத்து பயம் காட்டப் பார்க்குறாங்களா? விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பா.ம.க அதிக இடங்கள்ல ஜெயிச்சாகணும்” என்று கட்சியினருக்குக் கட்டளையிட்டிருக்கிறதாம்.

வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் செப்டம்பர் 25-ம் தேதி என்பதால், கூட்டணி சீட் பங்கீடு விஷயத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.