Published:Updated:

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்... கழகத்துக்குள் நடந்த களேபரங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்
ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியுடன் கூட்டணி அமைத்து கதிர் ஆனந்த் எம்.பி செயல்பட்டதாகக் கட்சித் தலைமைக்குப் புகார் சென்றிருக்கிறது

பிரீமியம் ஸ்டோரி

விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க-வினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றிருந்தார்கள். இருந்தாலும், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளைக் கைப்பற்ற கட்சியினருக்குள் நடந்த உள்ளடி வேலைகள், வாக்களித்து வெற்றிபெறச் செய்த பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்தது!

உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்பதைக் கட்சித் தலைமை அறிவித்ததால், இதற்கு முன்பு அதிக அளவில் பிரச்னைகள் வந்ததில்லை. ஒருசில இடங்களில் மட்டுமே கட்சி அறிவித்த வேட்பாளரை எதிர்த்து சொந்தக் கட்சிக்காரரே போட்டியிடுவார். ஆனால், இம்முறை கட்சியிலிருந்து எந்த அறிவிப்பும் வராததால், அந்தப் பகுதிகளில் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தலைவர், துணைத் தலைவராகும் வாய்ப்புகளைப் பெற்றார்கள். அதிலும், கூவத்தூர் பாணியில் ஆள்கடத்தல் வேலைகளும் ஜரூராக நடந்தன.

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்... கழகத்துக்குள் நடந்த களேபரங்கள்!

மரக்காணம் மல்லுக்கட்டு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 26 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 17 இடங்களைப் பிடித்திருந்தது. அ.தி.மு.க மற்றும் சுயேச்சைகள் தலா மூன்று இடங்களிலும், பா.ம.க இரண்டு இடங்களிலும், வி.சி.க ஒரு இடத்திலும் வென்றிருந்தன. ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை தி.மு.க சுலபமாகக் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தபோதிலும், கோஷ்டிப்பூசல் உக்கிரமாக இருந்தது. தி.முக-வைச் சேர்ந்த தயாளன், மரக்காணம் மத்திய ஒன்றியச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைவருக்கான ரேஸில் இருந்தார்கள். ‘‘20 ஆண்டுகளாக கண்ணன் ஒன்றியச் செயலாளராக இருந்தபோதிலும், கட்சியில் சேர்ந்து இரண்டே ஆண்டுகள் ஆன தயாளனுக்கு தன் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்துக்காக அமைச்சர் மஸ்தான் ஆதரவளிக்கிறார்’’ என்று தி.மு.க-வினர் ஆதங்கத்தில் இருந்தார்கள். பல ஆண்டுகளாக கட்சியில் இருந்த காரணத்தால், கண்ணனுக்கு அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தது. ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் கண்ணன் வெற்றிபெறும் சூழல் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடந்த இடத்தில் இரு தரப்பும் சூடாக இருந்ததால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தார்கள். உடனடியாக தன் ஆதரவு கவுன்சிலர்களை வேனில் அழைத்துக்கொண்டு சென்ற கண்ணன், ‘தேர்தலை உடனே நடத்த வேண்டும்’ என்று கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டார். அதையடுத்து, கட்சித் தலைமையால் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வெற்றியைக் கோட்டைவிட்ட அ.தி.மு.க!

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 27 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களில் அ.தி.மு.க-வில் 11 பேரும், தி.மு.க-வில் 10 பேரும் வெற்றிபெற்றிருந்தார்கள். பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், சுயேச்சைகள் ஆகியோர் தலா இரு இடங்களில் வென்றிருந்தார்கள். இந்த ஊராட்சி ஒன்றியத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் அ.தி.மு.க-வினர் காத்திருந்தார்கள். பா.ம.க மற்றும் ஒரு சுயேச்சை ஆதரவு இருந்ததால், அ.தி.மு.க சார்பாக ஒன்றியத் தலைவர் தேர்தலுக்குத் தயாராகிவந்த ஜமுனா சதீஷ்குமார், தன் ஆதரவு கவுன்சிலர்களை எப்போதும் தன்னுடனே வைத்துக்கொண்டு கொடைக்கானல், பழநி, திருச்சி என வலம்வந்தார். துணைத் தலைவர் பதவி தருவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிடிகொடுக்காததால் அதிருப்தியடைந்த பா.ம.க மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள், திடீரென வெளியேறிச் சென்றதால் அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்தார்கள். அதனால், பெரும்பான்மையைக் கையில் வைத்திருந்த அ.தி.மு.க தோல்வியைச் சந்தித்தது. தி.மு.க-வின் உஷா முரளி ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்வாகிவிட்டார்.

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்... கழகத்துக்குள் நடந்த களேபரங்கள்!

பவுன்சர்கள் பாதுகாப்பில் வந்த கவுன்சிலர்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஆறு ஒன்றியத் தலைவர் பதவிகளையும் தி.மு.க-வே கைப்பற்றியிருக்கிறது. கூவத்தூர் ஸ்டைலில் ரிசார்ட்களில் தங்கவைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்கள், பவுன்சர்கள் பாதுகாப்பில் வந்து ஓட்டுப் போட்டார்கள். சில இடங்களில் கவுன்சிலர்களை வரவிடாமல் தடுப்பதற்கான வேலைகளும் நடைபெற்றன. திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளர் தேவராஜி, தன் மருமகள் காயத்ரி பிரபாகரனை ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக்குவதற்காக முயன்றார். அதற்கான கைமாற்று வேலைகள் முன்கூட்டியே முடிந்துவிட்டபோதிலும், கடைசி நேரத்தில் தி.மு.க எம்.பி-யான கதிர் ஆனந்தின் ஆதரவாளரான சங்கீதா வெற்றிபெற்றார். அ.தி.மு.க மற்றும் பா.ம.க கவுன்சிலர்களின் துணையுடன் இந்த வெற்றி சாத்தியமானது. இந்த அதிரடி மாற்றம் காரணமாக தி.மு.க-வினருக்குள் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் வேட்டியை மடித்துக்கொண்டு கோதாவில் குதித்துச் சட்டையைக் கிழித்துக்கொண்டார்கள்.

கட்சித் தலைமையின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றதால், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராக வெற்றிபெற்ற பிரியதர்ஷினியின் கணவர் ஞானவேலன், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்ற சங்கீதாவின் கணவர் பாரி, மாவட்ட கவுன்சிலர் முனிவேல் ஆகியோர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியுடன் கூட்டணி அமைத்து கதிர் ஆனந்த் எம்.பி செயல்பட்டதாகக் கட்சித் தலைமைக்குப் புகார் சென்றிருக்கிறது. குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திலும் தி.மு.க., அ.தி.மு.க கூட்டணி அமைத்துச் செயல்பட்ட விவகாரம் தொடர்பாக ஆறு நிர்வாகிகள் தி.மு.க-விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்... கழகத்துக்குள் நடந்த களேபரங்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி, திடீரென பெண்களுக்கு மாற்றப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க கவுன்சிலர் மனோகரன் வழக்கு தொடர்ந்தார். ‘நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, மறைமுகத் தேர்தல் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும். அனைத்துப் பிரிவினரும் போட்டியிடலாம்’ என்று தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்திருக்கிறார்.

சேலையை இழுத்து அராஜகம்!

ஊராட்சிமன்றத் தேர்தல் அரசியல் சார்புடன் நடப்பதில்லை என்றபோதிலும், தென்காசி மாவட்டம், புளியரை ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பதவிக்கு நடந்த மறைமுகத் தேர்தலில், தி.மு.க சார்பாக குருமூர்த்தியும் அ.தி.மு.க ஆதரவாளரான சரவணனும் போட்டியிட்டார்கள். இதில் தகராறு ஏற்பட்டபோது, பெண் கவுன்சிலர் சகாயமேரியின் சேலையை இழுத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சகாயமேரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

நடந்த சம்பவம் பற்றி நம்மிடம் விளக்கிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரான செல்லப்பன், ‘‘எங்கள் தரப்பு வேட்பாளருக்கு எட்டு கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தது. அவர்களுக்கு மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தார்கள். எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டதால், தேர்தலை நடத்தவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டினார்கள். எங்கள் தரப்பு வேட்பாளர் சரவணன் கொடுத்த வேட்புமனுவை, எதிர்த்து போட்டியிட்ட குருமூர்த்தி கிழித்து எறிந்திருக்கிறார். இப்படி அராஜகம் செய்ததால் நாங்கள் தட்டிக் கேட்டோம். எங்களை விரட்டிய தி.மு.க-வினர், பெண் கவுன்சிலர் சகாயமேரியின் சேலையைப் பிடித்து இழுத்தார்கள். காவல்துறை முன்பாகவே இந்தச் சம்பவம் நடந்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் நடத்திய அராஜகத்துக்கு இந்த ஒரு சம்பவமே உதாரணம்’’ என்று கொந்தளித்தார்.

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்... கழகத்துக்குள் நடந்த களேபரங்கள்!

பெண் கவுன்சிலரின் சேலை இழுக்கப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டு, அங்கு வந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான கிருஷ்ணமுரளி, செங்கோட்டை-கேரளா சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் பேசியபோது, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டார்கள். இருந்தும் நான் அதைப் பெரிதுபடுத்தாமலேயே இருந்துவந்தேன். ஆனாலும், ஒரு பெண்ணின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்ட பிறகும் மௌனம் காக்க முடியாது என்பதால், நியாயம் கேட்டு ரோட்டுக்கு வந்திருக்கிறேன். அதிகாரிகள் முன்பாக நடந்த இந்த அராஜகத்தைச் செய்தவர்களைக் கைதுசெய்ய வேண்டும். நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்” என்றார் காட்டமாக.

‘‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றியைக் கைப்பற்றியபோதிலும் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக எழுந்த புகார்கள் காரணமாகக் கட்சியின் பெயருக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது’’ என்று உடன்பிறப்புகளே வருத்தப்படுகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு