Published:Updated:

என்ன ஆனது மக்கள் நீதி மய்யம்?

மூணு தேர்தலைச் சந்தித்த கட்சியோட தலைவர், தேர்தல் முடிவு பத்தின எந்த அக்கறையும் இல்லாம இருக்கார். தேர்தல்ல எங்கள் கட்சி சார்புல யாரும் ஜெயிக்கலை.

பிரீமியம் ஸ்டோரி

1984 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர். அப்போது அவருக்கு பதிலாக ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளியாகச் சுற்றுப்பயணம் செய்தார். அ.தி.மு.க கூட்டணி அந்தத் தேர்தலில் 195 இடங்களைப் பிடித்து மகத்தான வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆர் இல்லாமலேயே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது அ.தி.மு.க. அந்தக் கட்சியில் அப்போது ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இருந்தும், ஜெயலலிதாவின் பிரசாரமே தேவைப்பட்டது. ஜெயலலிதா நடிகையாகவும், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவராகவும் இருந்ததால் அவரின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபட்டது!

திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதிலுள்ள ப்ளஸ் இதுதான். அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போதே அந்த ப்ளஸ்ஸுடன் வந்தவர்தான் நடிகர் கமல்ஹாசன். ஆனால், கட்சி ஆரம்பித்தபோது மக்கள் அவருக்கு அளித்த ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து, அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் வெளியேறி, இப்போது கமலின் கட்சி எங்கே எனத் தேடும் நிலைக்கு வந்து நிற்கிறது. சின்னச் சின்னக் கட்சிகளைப்போல ம.நீ.ம-வைப் புறந்தள்ள முடியாது. கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே தேர்தலைச் சந்தித்து, கிட்டத்தட்ட நான்கு சதவிகித வாக்குகளைப் பெற்றது ம.நீ.ம. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயேகூட கோவை தெற்குத் தொகுதியில் கமல் தோற்றபோது, கட்சி பேதமின்றி பெரும்பாலான மக்கள் அவரது தோல்விக்கு வருந்தினர். அப்படியான கட்சிக்கு என்னதான் ஆனது?

என்ன ஆனது மக்கள் நீதி மய்யம்?

“இன்னும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலை. அதற்கான அறிவிப்புகள்கூட இன்னும் வெளியாகலை. ஆனா பாருங்க, உள்ளாட்சித் தேர்தல்ல வெற்றிபெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறாரு நடிகர் விஜய். ஆனா, கட்சி ஆரம்பிச்சு மூணு வருஷம் ஆகிடுச்சு. 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், இப்போ நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்’னு மூணு தேர்தலைச் சந்தித்த கட்சியோட தலைவர், தேர்தல் முடிவு பத்தின எந்த அக்கறையும் இல்லாம இருக்கார். தேர்தல்ல எங்கள் கட்சி சார்புல யாரும் ஜெயிக்கலை. ஆனா, தோல்விக்கான காரணம் குறித்து ஒரு கூட்டத்தையாவது கூட்டியிருக்கலாம்’’ என ஆதங்கத்தோடு கட்சியிலுள்ள பிரச்னைகள் குறித்துப் பேசத் தொடங்கினார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

என்ன ஆனது மக்கள் நீதி மய்யம்?

“2006-லயே கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்தா இருக்கட்டும், ஏன் இனிமே கட்சி ஆரம்பிக்கப்போறதா சொல்ற விஜய்யா இருக்கட்டும், கொஞ்சம் கொஞ்சமா தங்களோட அரசியலுக்கான வேலைகளைத் தொடங்கினாங்க. விஜயகாந்த் 2000-ம் ஆண்டிலிருந்தே அதற்கான வேலைகளைத் தொடங்கிட்டாரு. 2001-ல அவங்க மன்றம் சார்பா உள்ளாட்சித் தேர்தல்ல போட்டி போட்டு ஜெயிச்சாங்க. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போனார் விஜயகாந்த். கட்சி ஆரம்பிச்ச முதல் தேர்தல்லயே தனக்கான வாக்குவங்கியை நிரூபிச்சு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரைக்கும் வந்தாரு. ஆனா, எங்க தலைவர்... கட்சி ஆரம்பிக்குறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும்கூட அவருக்கு அந்த எண்ணம் இல்லை. விஜய் எதிர்காலத்துக்கான வேலைகளை இப்பவே தொடங்கிட்டாரு. ஏன், கட்சி ஆரம்பிக்காத ரஜினிகூட அறிவிப்பு வெளியிட்ட அப்புறம் பூத்வாரியா ஆட்களை ரெடி பண்ணினாரு. ஆனா, எங்க தலைவர் இன்னைக்கு வரைக்கும் அதற்கான எந்த வேலையையும் துரிதப்படுத்தாம இருக்காரு. அவருக்கும் நிர்வாகிகளுக்கும் இருக்குற இடைவெளி, சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையிலான இடைவெளின்னா, கட்சி நிர்வாகிகளுக்கும் மக்களுக்குமான இடைவெளி சென்னைக்கும் டெல்லிக்குமான இடைவெளியா இருக்கு. தமிழ்நாட்டோட கடைக்கோடி கிராமத்துலகூட எங்கள் தலைவரை ஒரு நடிகனாத் தெரியுது. ஆனா, `கமல்ஹாசன் கட்சிவெச்சுருக்காரா?’னு கேட்குற நிலைமைதான் இருக்கு. சீமானை திரைப் பிரபலமா யாருக்கும் தெரியலை. ஆனா, அவர் கட்சி இருக்குறது எல்லாருக்கும் தெரியுது. கட்சித் தலைமையும் சரி, மாநில அளவிலான நிர்வாகிகளும் சரி... கட்சியில கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கணும். ஆனா, இவங்க ரிப்போர்ட் கார்டுவெச்சு அவங்களை மிரட்டிக்கிட்டு இருக்காங்க. இதையெல்லாம் சரிசெய்யாம எத்தனை தேர்தல்ல நின்னாலும் வேலைக்கு ஆகாது’’ என்றார்கள் ஆதங்கத்தோடு.

அரசியல் விமர்சகர்கள் பேசும்போது “சந்தித்த முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை வாங்கிய கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அதைவிட போட்டியிடுவதற்கு வேட்பாளர்களே இல்லை. முதல் தேர்தலில் கட்சிக்குக் கட்டமைப்பு இல்லை என்று காரணம் சொல்லலாம். ஆனால், மூன்று தேர்தலுக்குப் பிறகும் இந்தக் காரணத்தைச் சொல்வதை ஏற்க முடியாது. மற்ற கட்சிகளைப்போல அடாவடியாகப் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், மக்களுக்குப் புரியும் வகையிலாவது கமல்ஹாசன் பேச வேண்டும். கமல்ஹாசன் எனும் நடிகனின் திறமை குறித்து யாருக்கும் எந்தக் கேள்வியும் இல்லை. திரைத்துறையில் இன்னும் அவருக்கான தேவை இருக்கிறது. ஆனால், அரசியலில் இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. கிராமசபைக் கூட்டங்களைப் பற்றி உரக்கப் பேசும் கமல்ஹாசன், உள்ளாட்சித் தேர்தலில் தன் கட்சியைக் கரைசேர்க்க ஒன்றுமே செய்யவில்லை. கடைசி நேரத்தில், கட்சி நிர்வாகிகளுக்குக் காலக்கெடு விதித்தால் மட்டும் வேலைகள் நடந்துவிடுமா? கட்சி நிர்வாகிகளிடம் அவரின் இத்தகைய அணுகுமுறைதான் கட்சியிலிருந்து பலரை வெளியேறச் செய்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குள் அவர் இவற்றையெல்லாம் சரிசெய்துகொள்ளா விட்டால், கண்டிப்பாக அந்தக் கட்சி காணமால்போகும்’’ என எச்சரிக்கிறார்கள்.

இன்னும் காலமிருக்கிறது கமல்ஹாசன்... மக்களை மய்யப்படுத்தி களப்பணி ஆற்றுங்கள். தேர்தலில் உங்கள் உழைப்புக்கான நீதியை மக்கள் வழங்குவார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு